கீற்றில் தேட...

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” “திராவிடம் மாயை” என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றியபோதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார். அப்போது விடுதலையில் “ம.பொ.சிக்கு பதவியா?” என்று கேள்வி எழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது. சுதாரித்துக் கொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச் சொல்லி பதவி தர மறுத்துவிட்டார்.

kamarajar rajaji maposi

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கிண்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார். அதில் “இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா! ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா! நீ மட்டும் போயிட்டியே” என்று புலம்புவார் நடிகவேள். இதைக் கேட்டு மக்கள் கை தட்டும் ஒலியில் அரங்கமே அதிரும். ம.பொ.சியின் துரோகம் திராவிட இயக்கத்தினரிடையே அந்தளவு எதிர்ப்பை உண்டாக்கியிருந்தது

பார்ப்பனர்களின் கைத்தடி!

1925ல் நடைபெற்ற சென்னை மாகாணப் பொதுத்தேர்தலில் பார்ப்பனரல்லாதார் நலனுக்காக துவங்கப்பட்ட நீதிக்கட்சி, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்காருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தவர் ம.பொ.சி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. காங்கிரசில் ஒரு அங்கமாக இருந்த சுயராஜ்யக் கட்சியினர் பெரும்பான்மை பலம் பெற்றிருந்தாலும், அனைத்திந்திய காங்கிரஸ் தலைமை, அரசின் எந்தப் பதவியிலும் அங்கம் வகிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி விட்டதால் அவர்களால் ஆட்சியை கைப்பற்ற இயலாத நிலையிருந்தது. எக்காரணம் கொண்டும் நீதிக்கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்த சீனிவாச அய்யங்காரோடு சேர்ந்துகொண்டு சுயேச்சையாக வெற்றிபெற்ற ப.சுப்பராயனை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேலை செய்தார் ம.பொ.சி.

தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட சத்தியமூர்த்தி அய்யரை 'நாவலர்', 'தீரர்' என வானளாவப் புகழ்ந்தவர். சத்தியமூர்த்தி மேயராவதற்கு முன்னரே திட்டமிடப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்திட்டத்தினை, சென்னை மக்களுக்கு சத்தியமூர்த்தி தந்த சொத்து எனச் சொல்லி அவருக்கு மகுடம் சூட்டியவர். அவர் மறைந்தபோது தமிழக அரசியலிலே ஒரு சூன்யம் விழுந்து விட்டது என்று எழுதினார் .

1927ம் ஆண்டு ஆங்கிலேய அரசு சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆலோசனை வகுக்க இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று அறிவித்தது. காங்கிரசோ இந்தக் குழுவில் இந்தியர்கள் எவரும் இடம் பெறவில்லை எனக் காரணம் சொல்லி அந்தக் குழுவை கடுமையாக எதிர்த்தது. ஆனால் பார்ப்பன சங்கங்கள் கூடி சைமன் குழுவை பகிஷ்கரிக்கக் கூடாது என்று அவர்களுக்குள் முடிவெடுத்தனர். எம்.கே.ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் அங்கத்தினர்களாக இருந்த இந்த சபைகள் சைமன் கமிஷனுக்கு ஒத்துழைக்கவும், தீர்மானங்கள் அனுப்பவும் தயார் நிலையில் இருந்தன.

விஜயராகவாச்சாரியார், சீனிவாச அய்யங்கார், ஏ.ரெங்கசாமி அய்யங்கார் போன்ற தேசியப் பார்ப்பனத் தலைவர்களும் தங்கள் கோரிக்கையை அச்சிட்டு சைமன் கமிஷனுக்கு கிடைக்கும்படி செய்திருந்தார்கள். பார்ப்பனர்களின் இரட்டை வேஷத்தை புரிந்து கொண்ட பெரியார், சைமன் குழுவை எதிர்க்க முடிவெடுத்திருந்த நீதிக்கட்சியினரிடம் "பார்ப்பன அரசியல் தந்திரத்தைப் பின்பற்றுவது பார்ப்பனரல்லாத சமூகத்தின் தற்கொலைக்குச் சமம்" என்று எச்சரித்தார். 1929ம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் "பார்ப்பனரல்லாதார் சைமன் குழுவினரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றினார். இந்தத் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த ம.பொ.சி பார்ப்பனரல்லாதார் இயக்கம் 'தேசத்துரோகம்' செய்து விட்டதாக பிரச்சாரம் செய்தார். ஆனால் சைமன் குழுவினரைச் சந்தித்த பார்ப்பனர்களைக் காட்டிக் கொடுக்காமல் மறைத்தது அவரது பார்ப்பனப் பாசத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

சுயநிர்ணய உரிமை!

1927ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நேரு கேட்டுக் கொண்டதோ பிரிட்டீஷ் பேரரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய குடியேற்ற நாடு அந்தஸ்து. ஆனால் அதே தீர்மானத்தை திரித்து இந்தியாவிற்கு முழுமையான விடுதலை வேண்டி பூர்ண சுயராஜ்ய தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டதாகப் புளுகினார் ம.பொ.சி. அதேபோன்று இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்றும் முதலில் கோரிக்கை வைத்தது காங்கிரசே என்று கூறியவரும் இவரே. காங்கிரஸ் தனது கட்சி நிர்வாக வசதிக்காக தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர காங்கிரஸ் கமிட்டி என பிரித்து வைத்ததைத் தவிர வேறு எதையும் மாநில சுயாட்சி தொடர்பாக செய்யவில்லை என்பதை பேராசிரியர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் தனது சுயமரியாதை சமதர்மம் என்ற நூலில் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளார். மேற்படி நூலில் காங்கிரஸ் தீர்மானம் பிரிட்டீஷ் பேரரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய குடியேற்ற நாடு அந்தஸ்தையே கோரியது என்பதையும் நிறுவியுள்ளார்.

 மாகாண அமைப்பிற்கு சுயாட்சி வேண்டும் என்றும், மாகாண அரசுகள் தாமாக முன்வந்து அளிக்கும் அதிகாரங்களைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என முதலில் ஆலோசனைகளை வைத்தவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயரே. உண்மை இவ்வாறிருக்க ம.பொ.சி.யாரையே தங்கள் தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி எனக் கூறி அண்டப்புளுகில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்றைய நவீன தமிழ்த் தேசிய திலகங்கள்.

நாகாலாந்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்க சட்டம் இயற்றிய பொழுது, பாரத ஒருமைப்பாட்டிற்கு இது உகந்ததல்ல என்றும், நாகாலாந்தின் இந்த முடிவு நாளை அது பாரதத்திலிருந்து பிரிந்து போவதற்கான துக்க நிகழ்ச்சியாகும் என்றார் ம.பொ.சி.

சரியாகச் சொல்ல வேண்டுமானால் திராவிடர் இயக்க எதிர்ப்பையே குறிக்கோளாகக் கொண்டிருந்த ம.பொ.சி., அதன் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல் தமிழர் சுயநிர்ணய கோஷத்தை முன்னெடுக்கப் போவதாகச் சொல்லி தமிழரசுக் கழகத்தைத் துவக்கினார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதைக்கூட அவரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. பூரண மாகாண சுயாட்சிக்காக தமிழரசு கழகத்தைத் துவக்கியதாகச் சொன்ன ம.பொ.சி, கலை – கலாச்சாரம் - கடவுள் நம்பிக்கை ஆகியவற்றிற்கு ஆக்கம் தரும் வகையில் துவேஷம் – நாத்திகம் - பிளவு ஆகியவற்றிற்கு இடம் தராத செயல் திட்டம் வகுக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.

ம.பொ.சி யின் இந்தப் போக்கை கிண்டலடித்து விடுதலையில் 1953லேயே எழுதினார் குத்தூசி குருசாமி .

உயர்திருவாளர் ம.பொ.சி அவர்களைப்பற்றி இந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது. அதற்கு பதில் தரும் வகையில் ம.பொ.சி அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய இந்து இதழில் வெளிவந்திருக்கிறது.

"நான் 'சுதந்திரக் குடியரசு' தேவையென்று கூறியிருப்பதாக நிருபர் கூறுகிறார். தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது. இந்த மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக் கழகம் துவக்கப்பட்டது. இந்த விவகாரம் மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்கட்கும், இந்த மாகாணத்து காங்கிரஸ்காரர்கட்கும் நன்றாகத் தெரியும்.இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகாணம் ஏற்பட வேண்டுமென்ற கொள்கையை காங்கிரசும் ஒப்புக் கொள்கிறது என்பதை மட்டும்தான் என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன்."

இதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில்.

மதிப்பிற்குரிய ராஜாஜியை தமக்கு சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரம் வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை நமது வீரபாண்டியன் ம.பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் வெட்கித் தலைகுனிந்தே தீர வேண்டும். கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடிபணிகிறார் என்று அவர் சீடர்களே நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம்.

என்று எழுதினார்.

இந்திப் பற்று!

1938ல் தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய போது அதில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுத்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார், ஆங்கிலேய அரசு கொண்டுவந்த ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். தாளமுத்து, நடராஜன் போன்றோர் சிறையிலேயே மாண்டனர். போராட்டத்தை ஒடுக்க நினைத்து தொண்டர்கள் சந்திக்க இயலாத வகையில் தந்தை பெரியாரை பெல்லாரி சிறையில் அடைத்தார். அதன் விளைவு "தமிழ்நாடு தமிழருக்கே!" என்ற முழக்கம் தமிழகம் எங்கும் ஓங்கி ஒலித்தது!. எழுச்சி மிகுந்த அந்த கால கட்டத்தில் இந்தி எதிர்ப்பைக் கண்டித்து இராஜாஜிக்கு ஆதரவுக் குரல் எழுப்பியவர் ம.பொ.சி.

“இந்தி எதிர்ப்பானது தமிழ்மொழியைக் காப்பதற்காக அல்லாமல், தேசவிடுதலைக்குப் பாடுபட்டு வந்த ஒரே அமைப்பாகிய காங்கிரசுக் கட்சியை வீழ்த்துவதற்காகவும், அப்போதுதான் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த ஜஸ்டிஸ் கட்சிக்குப் புத்துயிரளிப்பதற்காகவுமே நடைபெறுகிறது என்று நாங்கள் கருதியதால், அந்த எதிர்ப்பை முறியடிக்க முயன்றோம். சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டியின் சார்பில் பொதுக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தினேன். மற்றும் வட்டந்தோறும் அமைந்திருந்த காங்கிரசுக் கமிட்டிகள், தேசிய மன்றங்கள் சார்பிலும் கூட்டங்களும், ஊர்வலங்கள் நடத்தத் தூண்டுதலாக இருந்தேன். வடசென்னையைப் பொருத்த வரையில் நான் தான் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாதலால், இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டி நடந்த பிரச்சாரத்திலே நான் பெரும் பங்கு கொண்டேன். இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பு காட்டும் அரசியல் பிரச்சாரத்திலே நான் எல்லை கடந்த ஆர்வங் காட்டினேன். சென்னை நகரில் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலும் சுற்றுலா சென்று வந்தேன்”

என்று 'எனது போராட்டம்' என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

1952ல் இரயில் நிலையங்களில் இடம் பெற்றிருக்கும் இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்து நடத்திய போது தனது கட்சிக்காரர்களை விட்டு மண்ணெண்ணெய் கொண்டு மீண்டும் அந்த இந்தி எழுத்துகள் தெரியும்படி செய்வேன் எனக் கூறி இந்தி மொழி மீதான தன் விசுவாசத்தைக் காட்டிகொண்டார் ம.பொ.சி.

இந்தியைப் பயிலுவதற்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்து வடிவத்தில் பாடப்புத்தகங்களை தயாரிக்க வேண்டும் என்று அரசுக்கே யோசனை சொன்னவர்.

“தனித்தமிழ்நாடு கோருவோர் வேண்டுமானால் இந்தியை எதிர்க்கலாம். இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்கும் நாம் இந்தியை எப்படி புறக்கணிக்க முடியும்?” என்று கேட்டார்.

“இந்தி ஒழிக என்பது அறியாமை! அனாச்சரம்!” என்றதோடு, “தமிழரசு கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்தியை கட்டாயப் பாடமாக்குவோம்” என்றார். இந்தியோடு சமஸ்கிருதத்திற்கும் சேர்த்து வால் பிடித்தவரே ம.பொ.சி.

"பெரியார் தேசியக்கொடி எரிக்கும் போராட்டத்தை கையிலெடுத்த போது அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது காங்கிரஸ் அல்ல. மாறாக பிரிவினை சக்திகளுக்கு எதிராக போராடி வருவது தமிழரசு கழகமே. தேசியத்தின் வாரிசாக, காந்தியத்தின் காவலனாக தன் கடமைகளை செய்துவருவது தமிழரசு கழகமே" என்று சொல்லி தனது துரோக வரலாற்றுக்கு தனக்குத் தானே நற்சான்று கொடுத்துக் கொண்டவர்தான் இந்த ம.பொ.சி.

அரசியல் சட்டப்படி நாம் இன்னும் சூத்திரர்களாகவே வைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்ன பெரியார், பார்ப்பனரல்லாத மக்களை இழிவு படுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை கொளுத்தும் போராட்டத்தை 1950ல் அறிவித்தார்.

அந்த நேரத்தில் "திராவிட இயக்க எதிர்ப்புப் பிரச்சாரம் புயற்காற்று வேகத்தில் தமிழ்நாட்டில் பரவியதாகவும், தமிழரசுக் கழகம் திராவிட இயக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்டாலும், தி.க, தி.மு.க விற்கு இருந்த கொள்கை உடன்பாடு காரணமாக இரண்டையும் சேர்த்தே எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டதாகவும், காங்கிரசில் இருந்த நிலப்பிரபுக்களும், தொழில் அதிபர்களும் திராவிட இயக்க எதிர்ப்பு இயக்கத்தை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினர்" என்றும் எழுதினார்.

தோழர்களே! மாவீரர் ம.பொ.சி யின் துரோகச் சரித்திரம் நீண்டதொரு வரலாறு. அவை இன்றளவும் தொடர்வதுதான் தமிழர்களுக்கு பெரும் கேடு!