பேப்பர் - பென்சில் சகிதம் இதைப் படியுங்கள்! அல்லது படித்த பிறகாவது பத்திரப்படுத்தி வையுங்கள்! அவ்வளவு சிறந்த உண்மைகளை உதிர்த்துக் கொட்டப் போகிறேன்!

kuthoosi gurusamy 268சிறந்த தத்துவம் அல்லது புதிய கருத்து அல்லது முதிர்ந்த நீதி வேண்டுமானால் குறள், குரான், பைபிள், பவுத்தம் - ஆகிய ஆதாரங்களைத் தேடுவார்கள், படித்தவர்கள்!

தண்ணீர் குடித்தால் தாகும் தீரும்!

உண்ணுதல் மூலம் பசியைத் தீர்க்கலாம்!

கண்கள் இருப்பது பார்க்கும் பொருட்டே!

பெண்கள் என்பவர் ஆண்களல்லர்!

- இவைகள் நான் அருளிய “ஒன்றை வேந்தன்” என்று கூறினால் நீங்கள் சிரிப்பீர்கள்!

“என்னப்பா நீ அதிசயமான சங்கதியைக் கூறி விட்டாய்?” என்று கேட்பீர்களல்லவா?

ஆனால் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,” என்று கொன்றை வேந்தனில்” அவ்வையார் பாடியிருக்கிறார், என்றால் அதற்குத் தனி மதிப்புத்தான்.

நெல்லுக்குள் இருப்பது அரிசி என்ப;

பல்லுக்கு வேலை கடிப்பதேயாம்!

- இது என்னுடைய ‘கிறள்’ என்றால், “பலே பிரகஸ்பதி” என்பீர்கள்! இதையே திருவள்ளுவர் சொல்லியிருந்தாலுங் கூட அவரை யாரும் மதிக்க மாட்டார்கள்!

அன்னம் பஹூகுர்வித தத்வ்ரதம்

ந கஞ்சன வஸதௌ

ப்ரத்யாச க்ஷீத தத்வ்ரதம்

தஸ்மாத் யயாக யாச விதயா

பஹ்வன்னம் ப்ராப்னுயாத்!

 - மீண்டும் 2-3 தடவை படித்தால் கட்டாயம் புரிந்து விடும்! “ஆரியனாவது - திராவிடனாவது” என்று கேட்கின்ற திராவிடக் குஞ்சுகளுக்கு மட்டும் மேற்படி சுலோகத்தின் கருத்து உடனே விளங்கியிருக்கலாம்! இது யாரோ மனுஷன் பாடியதல்ல! தைத்ரேய உபநிஷத்தின் திருவாசம்! என்று அறிக!

இதன் பொருள் என்கொலோ என்று கடாவுவார்க்கு விடை தருவோம்!

“ஏராளமாக உணவு உற்பத்தி செய். இதை ஒரு புனித விரதமாகக் கொள். விருந்தினராக வருகின்ற எவரும் உணவளிக்கப்படாமல் திரும்பலாகாது.” - இதுதான் மேற்படி ஆரிய மொழியின் கருத்து.

உயர் திரு. ராஜாஜி ‘கிராமக் கல்யாணம்’ என்னும் பொருள் பற்றி இம்மாத ஆரம்பத்தில் சென்னை வானொலியில் பேசும்போது திருவாய் மலர்ந்தருளியதுதான் இந்த உபநிஷத் வாக்கியம்.

உணவை உற்பத்தி செய். விருந்தினருக்கு உணவளி.

இது யாருக்குத்தான் தெரியாது? இதற்குத் தைத்ரேய உபநிஷத்தும் வேண்டாம்! தக்காளிக்காய் உபநிஷத்தும் வேண்டாம்!

யார் உணவை உற்பத்தி செய்வது? யார் அதை உண்டு கொழுப்பது? வயலில் இறங்கிப் பாடுபடுகிறவன் ஒரு இனம்! அப்படிப் பாடுபடுவதே பாவம் என்பது மற்றொரு இனம்! பட்டாளிக்குக் கஞ்சிக்கே லாட்டரி! இந்த லட்சணத்தில் விருந்தினருக்கு உணவளிப்பது எப்படி?

“கையது கொண்டு மெய்யது பொத்தி” வாழ்கிறவன் ஏராளமாக உணவு உற்பத்தி செய்ய வேண்டும்! ‘காலது கொண்டு தலையதில் உதைப்பவன்’ உல்லாசமாக உண்டு களிக்க வேண்டுமா?

நல்ல குப்பைத் தொட்டி உபநிஷத் அப்பா இது!

“உழைப்பவனுக்கே உடைமையில் உரிமை! உழைக்காத

வனுக்குச் சோறு கிடையாது.”

- இது மார்க்ஸ்ரேய உபநிஷத்!

பாட்டாளியே உயர் ஜாதி; ஏமாற்றிப் பிழைப்பவன் மிருக ஜாதி!”

இது ஈரோட்ரேய உபநிஷத்!!

குத்தூசி குருசாமி (29-10-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It