பெரியார் தமிழனப் பகைவரா? (பகுதி 7)
1949-இல் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராகச் சித்தூர் வழக்கறிஞர் திரு. எஸ். ரங்கநாத முதலியாரும் துணைத் தலைவராகத் திரு. வி.கே. சடகோபாலச்சாரியாரும் செயலாளராகத் திரு. பி. கண்ணப்பமுதலியாரும் உறுப்பினர்களாக மங்கலங்கிழார், கே. விநாயகம், கோல்டன், நா. சுப்பிரமணியம் உட்பட 20 பேரும் இருந்தனர். (தமிழக வடக்கு எல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும் பக். 38 கோல்டன் நா. சுப்பிரமணியம்)
இந்திய அரசு 1946-இல் ஆந்திர மாநிலத்தைப் பிரித்துக் கொடுக்க சென்னை மாகாண சர்க்காருக்கு உத்தரவிட்டது. அன்றைய முதலமைச்சர் பி. குமாரசாமி ராஜா அவர்கள் தலைமையில் பிரிவினைக் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் சித்தூர் வழக்கறிஞர் ரங்கநாத முதலியார் தலைமையில் மங்கலங்கிழார், கே. விநாயகம், சடகோபாலாச்சாரியார் மற்றும் வடக்கெல்லை குழுவைச் சார்ந்த நாங்களும் திரு. டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்களையும், மாண்புமிகு முதலமைச்சர் பி. குமாரசாமி ராஜா அவர்களையும், மாண்புமிகு பக்தவச்சலம் அவர்களையும் தனித்தனியாகச் சந்தித்து, சித்தூர் மாவட்டத்துத் தமிழ்ப்பகுதிகள் தற்போது அமைக்கப்படவிருக்கும் ஆந்திர மாநிலத்தோடு இணைக்கப்படக்கூடாது என்றும், குறிப்பாகச் சித்தூர், புத்தூர், திருத்தணி தாலுக்காக்களைத் தாய் தமிழகத்துடன் இணைக்கவேண்டுமென்றும், மற்றத் தாலுக்காக்களைப் பிரிப்பதற்கு எல்லைக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் இக்குழுவின் சார்பில் கேட்டுக் கொண்டோம். (மேற்படி நூல் பக்.39) ஆனால் அப்போது ஆந்திர மாநிலப் பிரிவினையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1952 பொதுத் தேர்தலில் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் திரு. இ.எஸ். சுப்பிரமணிய முதலியார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இத்தேர்தலில் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுவில் இருந்த ஆசிரியர் மங்கலங்கிழார், எஸ். ரங்கநாத முதலியார், டி.எம். திருமலைப்பிள்ளை, இ.எஸ். தியாகராஜன் ஆகியோருடன் இந்நூலாசிரியர் திருத்தணி கோல்டன் நா. சுப்பிரமணியமும் வடக்கெல்லை பாதுகாப்புக் குழுவின் வேட்பாளரை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் செய்தனர். திருத்தணி கே. விநாயகம் இத்தேர்தலில் செங்கல்பட்டு தொகுதி பிராஜா வேட்பாளராகப் போட்டியிட்டபோதிலும் திருத்தணிக்கு வந்து வடக்கெல்லை வேட்பாளருக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். (மேற்கண்ட நூல் பக். 41) ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வி.கே. வரதாச்சாரியார் வெற்றிபெற்றார். இத்தேர்தலில் ம.பொ.சி. காங்கிரசை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1952 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டிக்கூட்டம் எஸ். ரங்கநாத முதலியார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நேரு டிசம்பர் 19 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தகராறுக்கு இடமில்லாத 12 மாவட்டங்களைக் கொண்டு ஆந்திரா அமையும் என்று அறிவித்ததைப் பரிசீலனைச் செய்தனர். சித்தூர் மாவட்டம் தகராறுக்கு இடமில்லாத தெலுங்குப் பகுதியென நேரு அறிவித்த கருத்தைக் குறித்து இக்கூட்டம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
தமிழ்நாடு வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழு 17.01.1953-இல் கே. விநாயகம் தலைமையில் நீதிபதி வாஞ்சுவைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மங்கலங்கிழாரும், திரு. ரங்கநாத முதலியாரும், திரு. சபாபதி தேசிகரும் மனுவைத் தயாரித்தனர். திருப்பதி வரை தமிழகப் பகுதிகள் என்பதை இலக்கியச் சான்றுகளுடன் விளக்கினர். சித்தூர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண எல்லைக் கமிஷன் அமைக்க மத்தியஅரசுக்குப் பரிந்துரைக்கப் போவதாக இக்குழுவினரிடம் நீதிபதி வாஞ்சு தெரிவித்துள்ளார். (மேற்கண்ட நூல் பக். 49)
சித்தூர் மாவட்டத் தமிழர் மாநாடு 09.02.1953-இல் நகரியில் நடைபெற்றது. மங்கலங்கிழார் வரவேற்புரையாற்றினார். பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. சிறப்புரையாற்றினார். ம.பொ.சி. தலைமையுரையாற்றினார். திருத்தணி கே. விநாயகம் MLA தமிழக நிலப்படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். இம்மாநாட்டுக்கு ஈ.வெ.ரா. வாழ்த்துச் செய்தி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. (மேற்கண்ட நூல் பக். 55)
தமிழ்நாடு வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டி செயற்குழுக் கூட்டம் 1953 மார்ச்சு 25 மாலை திருத்தணியில் கே. விநாயகம் தலைமையில் நடைபெற்றது. சித்தூர் மாவட்டம் “தகராறில்லாத தெலுங்குப் பிரதேசம்” என்று ஒரு தலைப்பட்சமாக அபிப்பிராயங்கள் கூறி அதை ஆந்திர மாநிலத்தோடு சேர்ப்பது என்று மத்திய சர்க்கார் அறிக்கை விட்டிருப்பதைத் தமிழக வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டி பலமாக ஆட்சேபிக்கிறது.
மேலும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த, சாத்வீக முறையில் நேரடி நடவடிக்கையில் ஈடுபட, திருவாளர்கள் கே. விநாயகம், ஆசிரியர் மங்கலங்கிழார், திரு. என். சுப்பிரமணியம், திரு. என்.ஏ. ரஷீது, திரு. ரங்கநாத முதலியார், திரு. டி.எம். திருமலைப்பிள்ளை, திரு. இ.எஸ். தியாகராஜன் ஆகியோரைக் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.
இறுதி வெற்றி காணும் வரை வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த கே.விநாயகம் அவர்களிடம் முழுப் பொறுப்பும் அளிக்கப்பட்டது. (மேற்கண்ட நூல் பக். 59)
03.04.1953 அன்று திருத்தணி வன்னியகுல சத்திரத்தில் கூடிய கூட்டத்தில்தான் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுவினர் ம.பொ.சியை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். (மேற்கண்ட நூல் பக். 61)
திருத்தணியில் கண்டன ஆர்பாட்டங்கள் பலமாக இருந்தன. தெலுங்கர் கடைகள் தவிர மற்றக்கடைகள் மூடப்பட்டன. சுமார் 2000-த்திற்கு மேற்பட்ட மக்கள் நான்கு நான்கு பேராக அணிவகுத்துக் கருப்புக் கொடிகளைக் கையிலேந்தி ஊர்வலமாகச் சென்றனர். கடையடைப்பு ஆர்ப்பாட்டங்களையும், மறுநாள் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற மறியலையும் மேற்பார்வையிடத் தலைவர் ம.பொ.சி. அவர்கள் 9-ஆம் தேதி காலையில் திருத்தணிகை வந்துவிட்டார்.
அன்று மாலை வடக்கெல்லைப் பாதுகாப்புக்குழுச் செயலாளர் என். சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய ம.பொ.சி. “சித்தூர் தமிழ் மக்கள் சாத்வீக முறையில் ஆந்திர மக்களை விரோதிக்காத வகையில் தங்கள் போராட்டத்தை நடத்தவேண்டுமென்று” கூறினார். (மேற்கண்ட நூல் பக். 64)
10.04.1953 அன்று திரு. கே. விநாயகம் தலைமையில் மறியல் நடைபெற்றது. திரு. ம.பொ.சி. அவர்கள் மறியல் களத்திலிருந்து நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார். (மேற்கண்ட நூல் பக். 65) ம.பொ.சி. மறியலில் கலந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இம்மறியல் தொடர்ந்து ஏப்ரல் 25-ஆம் தேதிவரை நடைபெற்றது. கே. விநாயகம் (சட்டமன்ற உறுப்பினர்) திருத்தணிகையிலே தங்கி மறியலைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். ம.பொ.சி. அடிக்கடி திருத்தணிக்கு வந்து நிலைமையைக் கவனித்தார். (மேற்கண்ட நூல் பக். 66)
1952-ஆம் ஆண்டு நடந்தப் பொதுத் தேர்தலின் போது இருந்த நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. தமிழர் அனைவரும் இப்போது ஒரே அளவில் ஒன்றுபட்டனர். இப்பெருமை திரு. கே. விநாயகம் அவர்களையே சாரும். (மேற்கண்ட நூல் பக். 68)
திருத்தணி பஞ்சாயத்துத் தேர்தலை ஒட்டி நிறுத்தப்பட்ட வடக்கெல்லைப்போர் மீண்டும் மே 12 முதல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேற்படி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பு தளபதி கே. விநாயகம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. (மேற்கண்ட நூல் பக். 72)
ம.பொ.சி. போராட்டத்தைப் பார்வையிட காரில் திருத்தணிகை வந்தார். தணிகையில் அரைமணி நேரம் தங்கியிருந்து விட்டு உடனே, புத்தூர் சென்று, அங்கு நடைபெற்ற மறியலைப் பார்வையிட்டார். வெயில் கடுமையாக இருந்ததோடு அனல் காற்றும் வீசியதால் சித்தூர் செல்லும் முயற்சியைக் கைவிட்டுப் பிற்பகல் சென்னைத் திரும்பினார். (பக். 74)
மே 14-ஆம் தேதி கே. விநாயகம் தலைமையில் திருத்தணியில் நீதிமன்ற மறியல் செய்யச் சென்றனர். இரும்புத் தொப்பிக் காவல் துறையினர் ஏராளமானோர் குவிக்கப்படடிருந்தனர். கே. விநயாகம் அவர்களைத் தள்ளிவிட்டு உள்ளே சென்று நீதிபதியின் முன் “சித்தூர், தமிழர் பகுதிகளுக்கு நீதி கிடைக்கும் வரை நீதி மன்றத்தை நடத்தக் கூடாது என்று தெரிவித்தார். போலீசார் விநாயகத்தை குண்டுக் கட்டாக வெளியே தூக்கி வந்தனர். விநாயகத்திற்குக் காலில் அடிப்பட்டது. அன்று நடைபெற்ற லத்தி சார்ஜில் சம்பந்தம் என்ற தொண்டருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. (இவர் அப்பகுதி தி.மு.க. செயலாளராவார்)
மே 18-ஆம் தேதி புத்தூரில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆந்திரர்கள் கூட்டம் நடத்தவிடாமல் தகராறு செய்தனர். புத்தூர் மாவட்டக் காவல்துறை சூப்பிரண்டென்ட் ஒரு கன்னடர். அவர்தான் தமிழர்களைப் பத்திரமாகக் காவல் துறை வண்டியில் கூட்டம் நடத்தச் சென்றவர்களைக் காப்பாற்றி ஏற்றி அனுப்பினார். (மேற்கண்ட நூல் பக். 82)
அன்றைய முதல்வர் இராசாசி இக்கிளர்ச்சியை நிறுத்த விரும்பி வேண்டுகோள் விடுத்தார். ம.பொ.சி.யையும் நேரில் அழைத்து வடக்கெல்லைக் கிளர்ச்சி நீடிக்குமானால் அது இனச்சண்டையில் முடிந்துவிடும் என்று கூறினார்.
22.05.1953 அன்று வடக்கெல்லைப் பாதுகாப்புக்குழுக் கூடிப் போராட்டத்தைச் சென்னையில் நடத்த முடிவு செய்தது. (மேற்கண்ட நூல். பக். 83)
1953 ஜுன் 20-ஆம் தேதி 1000 தொண்டர்கள் திருத்தணியில் பம்பாய் (மும்பை) எக்ஸ்பிரஸ் இரயிலைச் செல்ல விடாமல் தடுத்துத் தண்டவாளத்தில் அமர்ந்து விட்டனர். அவர்கள் முன்னெச்சரிக்கையாகத் தந்தி கம்பிகளையும் அறுத்து விட்டிருந்தனர். இந்தச்செய்தி இந்து நிருபர் தொலைப்பேசியில் கூறியபொழுதுதான் ம.பொ.சிக்கே தெரியும். (ம.பொ.சி. எனது போராட்டம் பக்.654) ஆக ம.பொ.சி. இராசாசிக்குக் கட்டுப்பட்டுப் போராட்டத்தைத் தொடராமல் இருக்கிறார். இவரை நம்பக்கூடாது என்பதாலேயே வடக்கெல்லைப் போராட்டக் குழுவினர் ம.பொ.சிக்குத் தெரிவிக்காமலேயே இரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தணி சென்ற ம.பொ.சி. இரயில் மறியல் செய்த தொண்டர்களைப் பார்த்துக் கடுமையான குரலில் “இன்னும் வேறென்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். (மேற்கண்ட நூல் பக். 90)
ம.பொ.சி.க்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு பக்கம் தன் குருநாதர் இராசாசி போராட்டம் நடத்தக் கூடாது என்கிறார். மறுபக்கம் தொண்டர்கள் போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்று துடிப்போடு இருந்தனர். வடக்கெல்லைப் போராட்டக்குழு எங்கே தம் கையை விட்டு நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மீண்டும் அடுத்தநாள் இரயில் நிறுத்தப் போராட்டத்தை அவரே நடத்தச் செய்தார். என்.ஏ. ரஷீத் (இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்) உட்பட ஒன்பது பேர் அரக்கோணம் சென்று ஒருவர் மாற்றி ஒருவராகப் புத்தூர் செல்வதற்குள் 9 முறை சங்கிலியைப் பிடித்து இழுத்து, இரயில் வண்டியை ஆங்காங்கே நின்று செல்லுமாறு செய்தனர். மறுநாள் நீதிமன்றத்தில் இவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது.
அப்போது பிரதமராயிருந்த நேரு இரயிலை நிறுத்திப் போராட்டம் செய்பவர்கள் காட்டுமிராண்டிகள். இரயில் நிறுத்தம் சிறுபிள்ளைத்தனமானது. குழந்தைத்தனமானது. பைத்தியக்காரத்தனமானது என்று கண்டித்தார். (இச்செய்தி ம.பொ.சி. நூலிலோ, நா. சுப்பிரமணியம் நூலிலோ இடம்பெறவில்லை).
21.07.1953 அன்று துப்பாக்கிச்சூடு பற்றிய ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருவர் கண்டனம் மட்டும் இங்கு பதிவு செய்துள்ளேன்.
தமிழர்களைக் காட்டுமிராண்டிகள், பைத்தியக்காரர்கள் என்று கூறிய நேருவுக்குப் பாடம் புகட்ட வேண்டுமென்று முடிவெடுத்த தி.மு.க.வினர் பத்து நாள்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்துவிட்டு 15.07.1953 தமிழகம் முழுவதும் அனைத்து இரயிலையும் சங்கிலி பிடித்து இழுத்துப் போராட்டங்கள் நடத்தினர். இச்செய்தியைத் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் அ. கோவிந்தசாமி சட்டமன்றத்திலேயே பதிவு செய்துள்ளார். வடக்கெல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டு இரயில் நிறுத்தம் செய்தவர்களை நேரு கண்டித்ததால் நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 15.07.1953 இரயில் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அன்று தமிழகத்தில் 600 இடங்களில் இரயில் மறியல் நடைபெற்றது. தூத்துக்குடியிலும் கல்லக்குடியிலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அன்றே 6 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பலர் கை, கால்கள் இழந்தனர். பலருக்குத் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இராசாசி அரசின் இந்த வன்செயலைச் சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் மூலம் பலரும் கண்டித்தனர். 21.07.1953 அன்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அ. கோவிந்தசாமி தம்முடைய கண்டனத்தைப் பதிவு செய்தார்.
“கனம் சபாநாயகர் அவர்களே, டால்மியாபுரத்திலும், தூத்துக்குடியிலும் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி சம்பந்தமாக விவாதத்திற்கு வந்திருக்கிற அவசரப் பிரேரேணையின் மீது பேசுகின்றபோது என் நெஞ்சம் குமுறுகிறது. மக்களின் உயிர்களைத் திரணமாக மதித்து, நாய்களைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுத் தெருவில் இழுத்தெறியப் படும் இந்த ராமராஜ்யத்தில் மனதிற்கு மிகவும் வேதனையைத் தரக்கூடிய இப்படிப்பட்ட செய்கையைத் தவிர வேறு எதையும் நாம் காணமுடியாது தான். வெள்ளைக்காரர்கள் தான் கொடுமைமிக்கவர்கள் என்று எண்ணினோம். அன்று வெறிப்பிடித்த டயர் தன் துப்பாக்கியில் ரவை இருக்கும் வரையிலும் சுட்டுத் தீர்த்தான் என்ற செய்தியை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் அன்றும் கூட டால்மியாபுரத்தில் சுட்டதைப் போல அறுபத்து நான்கு ரவுண்டுகள் சுட்டான் என்று கிடையாது. இந்தக் காருண்ய, அஹிம்சா மூர்த்திகளோ சாத்வீகத்தில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த ராமராஜ்ய ஆட்சியாளர்களோ நிராயுதபாணியான கூட்டத்தின் மீது 64 ரவுண்டுகள் சுட்டிருக்கிறார்கள். ஈவு இரக்கமுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களின் உடல், உள்ளம் எல்லாம் இதைக் கேட்டுச் சிலிர்க்கவில்லையாயென்று நான் கேட்கிறேன்?
“ஜுலை 15-ஆம் தேதி தான் இந்தச் சர்க்காருக்குச் சாவு மணி அடித்த நாள். இந்தச் சர்க்கார் அஸ்தமனம் அடையப் போகிறது என்பதைக் குறிக்கும் வெடிகுண்டு ஒலித்த நாள். இந்த அரசாங்கத்தின் வரலாற்றில் ரத்தக்கறைப் படிந்த நாளாகும். திராவிடரை மிகவும் அவமானப்படுத்தக் கூடிய வகையில் இந்தியப் பிரதம மந்திரி ஸில்லி என்றும், நான்சென்ஸ் என்றும் சொல்லி வருவதைக் கண்டிக்கும் முறையில் ரயில் நிறுத்தம் செய்ய தி.மு.க. திட்டமிட்டிருந்தது சர்க்காருக்குத் தெரியும். இரயில் நிறுத்தத் திட்டத்திற்கும், ஆரம்பக் கல்வித் திட்டத்திற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதாக ஒரு சிலர் குழப்பிக்கொண்டே வருகிறார்கள். அது வேறு, இது வேறு விஷயம் என்பதை நாம் முன்பு சொன்னதைக் கொண்டு மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.
“கடந்த காலமாக தமிழர்கள் பல போராட்டங்களை நடத்திக்கொண்டே வருகிறார்கள். வடநாட்டு மொழி ஆதிக்கம் தென்னாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத் திராவிடர் கழகமும், முன்னேற்றக் கழகமும் ஹிந்தி அழிப்பு இயக்கத்தை நடத்தினார்கள். அது மட்டுமல்ல, ஆந்திர மாகாணம் அமைய வேண்டுமென்பதற்காக சென்னை நகரில் ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு பட்டினி கிடந்து இறந்தார். அதைத்தொடர்ந்து விஜயவாடாவிலும், மற்ற இடங்களிலும் இரயில் வண்டி நிலையங்களில் சென்று சூறையாடியும், உணவு தானியங்களைச் சேதப்படுத்தியும் ஆந்திரர்கள் கிளர்ச்சிச் செய்தார்கள். ஆனால் நியாயமான தனது பிரதேசத்தை ஆந்திராவுடன் சேர்க்கக்கூடாது என்பதற்காக திருத்தணியில் சாத்விகமான முறையில் தமிழர்கள் போராடிய போதும், இந்தியப் பிரதமர் தமிழர்களின் போராட்டங்களை ஸில்லி என்றும், நான்சென்ஸ் என்றும், சைல்டிஷ் என்றும் மட்டமாகப் பேசிக்கொண்டே வருகிறார்கள். மானமுள்ள தமிழர்கள் யாரும் இதைக்கேட்டு ஆத்திரம் அடையாமல் இருக்கமாட்டார்கள். அதன் காரணமாகத்தான் அறிஞர் அண்ணாதுரை அவர்களும் நேருவுக்குப் பாடம் கற்பிக்க நாடெங்கும் ஜுலை 15-ஆம் தேதி இரயில் நிறுத்தம் செய்வோம். அது சாத்வீகமான மறியலாக இருக்குமென்று அறிவித்தார். அவர் வேண்டுகோளின்படி தமிழ் நாடெங்கும் 600 இடங்களுக்கு மேல் மறியல் நடந்திருக்கிறது. ஆனால் டால்மியாபுரத்திலும், தூத்துக்குடியில் மட்டும் போலீஸார்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறாhகள். அதற்குக் காரணம் என்னவென்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
(இந்த நேரத்தில் துணை சபாநாயகர் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார்.)
“வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குச் சுரண்டுவதற்காக வந்த ஒரு முதலாளியின் பெயரை டால்மியாபுரம் என்று ஒரு தமிழ்நாட்டிலுள்ள இரயில் நிலையத்திற்குக் கொடுத்திருப்பது தமிழர்களையே அவமானப்படுத்துவதாக இருக்கிறதென்ற காரணத்திற்காக அந்த இரயில் நிலையத்தின் பெயரைக் கல்லக்குடி என்று மாற்றியமைக்க வேண்டுமென்று கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழர்கள் போராடினார்கள். இதில் தவறு என்ன? பெயர் மாற்ற இயக்கத்தை இராசாசி சில்லி என்கிறார். காங்கிரசுக்காரர்கள் வெள்ளையர்களின் பெயர் இருக்கக்கூடாதென்று பல இடங்களில் தமிழ்ப் பெயர்களை ஏற்படுத்தவில்லையா? பாங்க்வெட்டிங் ஹாலிற்கு ஏன் ராசாசி ஹால் என்று பெயரிட்டார்கள்? அது அற்பத்தனமல்லவா? சைனா பஜாருக்கு ஏன் சுபாஷ் சந்திர போஸ் ரோடு என்றும், மதுரா என்பதை ஏன் மதுரை என்றும் பெயரை மாற்றி வைத்தார்கள் என்று கேட்கிறேன். இவைகளெல்லாம் சில்லியல்லவா? இதேபோல் டால்மியாபுரம் என்பதைக் கல்லக்குடி என்று மாற்றவேண்டுமென்பது தமிழர்களின் அவமானம் துடைக்கும் உரிமைப் போராட்டம், உரிமைக்கிளர்ச்சி, இந்த உரிமைக் கிளர்ச்சியை நேரு அவர்கள் அவமானப்படுத்திக்கொண்டே வருவதைக் கண்டிக்கும் முறையில் தான் சிதம்பரம் மாநாட்டில் அதாவது ஜுலை நான்கு ஐந்தில் நடந்த கூட்டங்களில் ஒரு தீர்மானம் போட்டு நிறைவேற்றினார்கள். ஜனங்கள் அமைதியாகப் பகலில் இரயில் நிறுத்தம் செய்ய வேண்டுமென அறிவிப்புகள் செய்திருந்தார்கள். அதுவும் 15-ஆம் தேதி ஒரேநாள் தான்."
"கனம் இராசாசி சர்க்கார் என்ன செய்திருக்க வேண்டும்? தன்மானமிக்க தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடப்போகிறார்கள் என்றவுடனேயே நேருவுக்குக் கடிதம் எழுதி அவர் சொன்ன வார்த்தைகளை வாபஸ் வாங்கும்படி செய்திருக்கவேண்டும். ஆனால் முதல் மந்திரி அப்படிப்பட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. காமராஜுக்கும், ராஜாஜிக்கும் மனஸ்தாபம் வந்தபோது காந்தி ‘கிளிக்’, என்ற வார்த்தையை உபயோகித்ததைக் கண்டிக்க எவ்வளவுக் கூட்டங்கள் நடந்தது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்தப் பெருந்தன்மை மிக்க உலகத் தலைவர் அந்த வார்த்தையை உடனே வாபஸ் வாங்கிக்கொண்டார். ஆனால் பெருந்தன்மையில்லாத காரணத்தால் அடிக்கடி தன்னிச்சைப்படி தமிழர்களை இழிவு படுத்தும் வார்த்தைகளை உபயோகிப்பது, தமிழர்கள் வருந்தும்போது அதை வாபஸ் வாங்காது இறுமாப்போடு நேரு இருக்கிறார். அவரது இழிவு படுத்தும் போக்கை எதிர்க்கவேண்டிய நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். இந்தக் கிளர்ச்சியில் சாத்வீக முறையில் போராடி நிராயுதபாணியான திராவிட வீரர்களைச் சுட்டிருக்கிறது இந்த வெறிப்பிடித்த சர்க்கார். சுடுவதற்கு முன் கண்ணீர்புகை உபயோகப்படவில்லை."
"இரயில் போகாதவாறு குறுக்கே படுத்திருப்போர்களைப் பலவந்தமாக அப்புறம் தள்ள எந்தவிதமான முயற்சியும் எடுத்துக் கொள்ளாது உடனடியாக 64 ரவுண்டுகள் சுட்டிருக்கிறது. கண்ணதாசன் கையிழந்து தவிக்கிறார். கடந்த ஒரு வாரமாக என்ன நடக்கும் என்பதைப் பத்திரிக்கை வாயிலாகப் படித்தால் எல்லோருக்கும் தெரியும் என்று சொன்ன கனம் ராஜகோபாலாச்சாரியார் கண்ணீர் புகை ஸ்டாக் வைத்துக்கொள்ள உத்தரவிடவில்லையா? உத்தரவு இட்டிருக்க வேண்டாமா? வெறிபிடித்து 64 ரவுண்டுகளா சுடவேண்டும்? சுட்டது தான் சுட்டார்களே? ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தவர்களின் மேலேயா குறிபார்த்துச் சுடவேண்டும்? கதவுகளைச் சாத்தவிட்டு மேல் பர்த்தில் படுத்திக்கொண்டிருந்த ஒரு பிரயாணி சுடப்பட்டிருக்கிறான். ஒரு சிறுவன் சுடப்பட்டிருக்கிறார் என்னும்போது சர்க்காரின் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவு வெறி பிடித்து நடந்து கொண்டிருக்கிறாhகள் என்பதை நாமே தெரிந்துகொள்ளலாம். தாலியை இழந்த தாய்மார்கள் அலறுகிறார்கள். அந்தத் தாலிகள் இந்த சர்க்காரைக் கேட்கும் குழந்தைகள் அலறுகின்றன. இப்படி சாத்வீகமான முறையில் நடத்தப்பட இருந்த ஒரு கிளர்ச்சியின் மீது அசம்பாவிதமான முன் எச்சரிக்கை எதுவுமின்றித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதற்காக கனம் முதல் மந்திரி ராஜகோபாலாச்சாரியின் மேல் நான் குற்றம் சாட்டுகிறேன்."
“கிளர்ச்சி நடத்த இருந்த அறிஞர் அண்ணாவையும் கலைஞர் கருணாநிதியையும் இந்த சர்க்கார் சிறையில் அடைத்தது.இன்னும் இதுபோல பல ஆயிரக்கணக்கான பேர்கள் சிறையில் கிடக்கிறார்கள். தலைவர்கள் இல்லாதபோது சர்க்கார் பலாத்கார முறையில் போலீஸ் படையின் உதவி கொண்டு சுட்டிருக்கிறது. இதை இன்றைய தினம் விசாரிக்க வேண்டுமென்றால், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திற்குக் காரணமாயிருந்த அதிகாரிகளைக் கொண்டே விசாரணை நடத்தும் படியாக ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் கலெக்டர் விசாரிக்கும் பின்னால் சாட்சி சொல்லவேண்டிய கீழ் அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள். இதில் ஏதாவது நியாயமுண்டா? நீதி உண்டாகுமா? ஏன் கனம் ராஜா சிதம்பரம் போன்ற தனிப்பட்ட பிரமுகர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமித்து விசாணை நடத்தக்கூடாதென்று நான் கேட்கிறேன்."
"அரசாங்க உத்தியோகஸ்தர்களைக் கொண்டே விசாரிக்கச் சொல்வதில் நியாயம் கிடைக்காது. கட்சி சார்பற்ற தனிப்பட்ட பிரமுகர்களைக் கொண்டுதான் விசாரிக்கச் செய்யவேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பு என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மேலும் இராசாசி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், போலீஸ்காரர்கள் திறமையாகச் சுட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் செய்கையை இவர்தான் பாராட்டுகிறார். தாலியை இழந்த தாய்மார்களின் கண்ணீர் ஓய்ந்தபாடில்லை. அவர்கள் அலறும் அலறல் ஓய்ந்தபாடில்லை. அதுவெல்லாம் ஆச்சாரியாருக்குத் தெரியவில்லை. டால்மியாபுரத்தில் சுமார் பகல் 2 மணிக்குக் சுட்டிருக்கிறார்கள். எனக்கு உடனே மூன்று மணிக்கு ஒரு தந்தி, 3.24 மணிக்கு ஒரு தந்தி, 3.34 மணிக்கு ஒரு தந்தி என்று வரிசையாகத் தந்தி அடித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு தந்தியாவது எனக்கு அன்றே கிடைக்கவில்லை. ஒரு நாள் கழித்து எனக்குக் கிடைக்கும்படியாக இந்த சர்க்கார் செய்திருக்கிறது. இது தான் ஜனநாயகத்தின் போக்கா? இப்படிச் செய்தியை மறைத்து விட்டால் உண்மை வெளிப்படாமலேயே இருந்துவிடுமென்று எண்ணமா? குடையைக் கொண்டு சூரியனை மறைக்க முடியுமா? இதேமாதிரியே தன்மானத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களது உரிமைக் கிளர்ச்சியை நன்கு அறிந்து கொள்ளவேண்டும். வட நாட்டவர்கள் நம்மை இழிவுபடுத்திப் பேசுவதை நிறுத்தும்படி செய்யவேண்டும். அதற்குத் தகுந்த நடவடிக்கையை இந்தச் சர்க்கார் எடுக்கவேண்டும். மிருகத்தனமாக நடந்து கொண்ட போலீசாரின் துப்பாக்கிப் பிரயோகம் நியாயமானதா இல்லையாயென்பது பற்றி விசாரிக்க உடனே ஒரு தனிப்பட்ட பிரமுகர்கள் கொண்ட அதாவது அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அற்ற ஒரு கமிட்டியை நியமித்து விசாரணை நடத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன்.”
A. Govindasami Nayagar:- “Sir, on a point of Order - கனம் அங்கத்தினர் ஸ்ரீ சுயம்பிரகாசம் அவர்கள் ஆரம்பக் கல்விக்காக இரயில் நிறுத்தம் செய்யப்பட்டதாகச் சொல்லுகிறார். ஆரம்பக் கல்வித் திட்டத்திற்கும், இரயில் நிறுத்தத்திற்கும், எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. தமிழர்களை அவமதிக்கும் முறையில் இந்தியப் பிரதமர் பேசிக்கொண்டே வருவதைக் கண்டிக்கத்தான் இரயில் நிறுத்தம் செய்யப்பட்டது என்பதை அவருக்கும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.”
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். கல்யாணசுந்தரம் தன்னுடைய கண்டன உரையில் கூறியதாவது:-
Sri. M. Kalyanasundaram:- “கனம் சபாநாயகர் அவர்களே, இந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் எனக்கு உணர்ச்சி வேகம் ஏற்படுகிறது. ஒரு புறத்தில் துக்கம், இன்னொரு புறத்தில் கோபம் - ஆகவே வார்த்தைகள் வருவதுகூட கஷ்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமை தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. துப்பாக்கிப் பிரயோகத்தின் மூலம் 10, 12 உயிர்களை மாய்க்கவேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? துப்பாக்கிப் பிரயோகத்தைத் தவிர வேறு வழியே அவர்களுக்குத் தெரியவில்லையாயென்று நான் கேட்கவிரும்புகிறேன்”.
Sri. M. Kalyanasundaram:- “கனம் முதல் மந்திரி அவர்கள் சொல்லுகிறார், “ஆறு உயிர்கள்தான் இறந்தனவென்று, அப்படியே இருக்கட்டும். அதை நான் மறுக்கவோ, திருத்தவோ விரும்பவில்லை. இந்த ஆறு பேர்களைத் தவிர இன்னும் பல ஆயிரக்கணக்கான பேர்கள் கையும், காலும், மண்டையும் உடைபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்கள். இது நியாயமா, நீதியா, தப்பு யாருடையது என்று விவாதத்திற்கு வரும்முன் நான் முதலில் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு மனப்பூர்வமான அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்."
“இம்மாதிரி துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தக் காரணம் என்ன? கனம் ராசாசி அவர்கள் இந்த இயக்கத் தலைவர்கள் சிறையில் அடைத்தபோதே தலைவர்கள் வெளியில் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதை உணரவில்லையா? நேரில் காணும் பிரச்சினைகள் ஒப்புக்கொள்ள மறுத்து விஷயங்களை மழுப்பக் கூடாது. நம் எதிரேயுள்ள உண்மை விஷயத்தை அப்படியே எடுத்துப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினைப்பற்றி வடநாட்டான் தென்னாட்டை ஆதிக்கம் செலுத்துவதை ஒரு கட்சி விரும்பாமல் இருக்கலாம். அது அந்தக் கட்சியின் அபிப்பிராயம். ஆனால் ஒரு பொறுப்புள்ள அந்தஸ்த்தில் இருக்கக்கூடிய இந்தியப் பிரதம மந்திரி அவர்கள், இவைகளையெல்லாம் சில்லியென்றும், நான்சென்ஸ் என்றும் இழிவுப்படுத்திப் பேசுவது ரொம்பவும் கண்டித்தக்கதாகும். தமிழ் மக்களின் எழுச்சியை இழிப்படுத்துவது தமிழ்நாட்டையே இழிவுப்படுத்துவது போலாகும். "
"தமிழ் நாட்டிலுள்ளவர்கள் கௌரவமாக வாழவேண்டும். மானத்தோடு வாழவேண்டும். வடநாட்டானுக்கு அடிமைப்பட்டுத் தன்மானத்தை இழக்கக்கூடாது. வடநாட்டான்தமிழனை இழிவுப்படுத்திப் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. வடநாட்டானின் ஆதிக்கச் சின்னமான வடநாட்டுப் பெயர்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு கட்சி சாத்வீக முறையில், முன்னறிவிப்புச் செய்துவிட்டு, டால்மியாபுரம் என்ற பெயரைக் கல்லக்குடி என்று திருத்தி எழுதுவதற்கு முயற்சி செய்தபோது கூட்டத்தின்மீது 64 ரவுண்டுகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம், கனம் இராசாசி அவர்களின் அதிகார ஆதிக்க வெறியைக் காட்டாது வேறு எதைக் காட்டுகிறதென்றுதான் நான் கேட்கவிரும்புகிறேன். சபையிலே பேசும்போது கடந்த ஒரு மாதமாக திராவிடப் பத்திரிகைகளான விடுதலை, நம்நாடு போன்ற தினத்தாள்களைப் பார்த்தாலேயே உங்களுக்குத் தெரியும். இதுமாதிரியான ஒரு நிலையை உண்டுப் பண்ணவே அவர்கள் ரொம்பவும் தூபம் போட்டு வந்தார்கள். ஆகவே இதுமாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பற்றி நான் ஆச்சரியப்படவேயில்லை’, என்று இராசாசி சொன்னாரே. முன்பே என்ன நடக்கும் என்று எதிர்ப்பார்த்த ஸ்ரீ இராசாசி துப்பாக்கிப் பிரயோகம் செய்யச் சொல்லித்தான் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாரா? குறிப்பாக சபையிலுள்ளவர்கள் இராசாசி பதவிக்கு வந்தபின், அதாவது அதிகாரம் அவர்கள் கைக்கு வந்தபின் எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைப் பார்க்கவேண்டும்."
“பலமான எதிர்ப்புகளிடையே கனம் இராஜகோபாலாச்சாரியார் மந்திரி சபையை அமைக்க ஒப்புக்கொண்டதும், தீரமாக மந்திரி சபையை அமைத்ததும் - கொல்லைப்புர வழியாக வந்தாலும் அதன் பின் தனது சாகஸங்களை உபயோகித்துத் தனது சாணக்கிய சட்ட நுணுக்கத்திறமைகளைக் காட்டி மந்திரி சபையை நிலைக்க வைத்துக் கொண்டதையும் எல்லோரும் பாராட்டலாம். அது தனிப்பட்ட விஷயம். ஆனால் நாட்டின் நிலைமை கொஞ்சமாவது முன்னேற்றம் அடைந்திருக்கிறதா? பொதுநலனைப் பாதுகாக்க எப்படிப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் ஒன்றுப்பட்டு அதை முறியடிக்கப் போராடுவோம் என்பதை மக்கள் பல சந்தர்ப்பங்களில் இந்தச் சர்க்காருக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். கனம் இராஜகோபாலாச்சாரியார் மந்திரிசபைக்கு எதிராக உணவுப்பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், பசிப்பட்டினிச் சாவுகள் போன்ற பலப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. ஆகவே இதுமாதிரியாக மக்கள் ஒன்றுச் சேர்ந்துப் போராட இப்பொழுது சந்தர்ப்பம் அளித்தால் இந்த எதிர்ப்புச் சக்திகள் எல்லாம் நிச்சயமாக ஒரு காலத்தில் ஒன்று திரண்டு இந்தச் சர்க்காரையே கவிழ்த்துவிடும் என்ற அச்சத்தாலேயேதான் மக்கள் உள்ளத்தில் பயத்தை உண்டுபண்ண அவசியமானால் துப்பாக்கிப் பிரயோகத்தையும்கூடச் செய்து இந்த இயக்கத்தை நசுக்க வேண்டுமென்று இராசாசி உத்தரவு போட்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லுகிறேன். அதை அவர்கள் மறுக்க முடியுமாவென்று கேட்கிறேன்? முன்பு நடந்த ஹிந்தி ஒழிப்பு இயக்கத்தின்போது போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன உத்தரவிட்டார்கள். அவர்கள் சாத்வீக முறையில் அழிக்கும்போது பேசாமல் இருங்கள். நிலைமை மோசமாகிவிடாமல் மாத்திரம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதோடு கடைசி பாராவில் இதில் கம்யூனிஸ்ட்டுகள் பங்குக் கொள்ளுகிறார்களா என்றுப் பார்க்கவும் எனக் கொண்டிருந்தது."
Sri. M. Kalyanasundaram:- “உங்களால் உத்திரவும் போட முடியும். உத்திரவு போடவில்லையென்று மறுக்கவும் முடியும். ஆனால் எங்களால் அந்த இரகசிய உத்தரவைக் கொண்டுவந்து காட்ட முடியாதல்லவா? நீங்கள் உத்திரவு போடவில்லையென்றால், போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன உத்தரவு கொடுத்தீர்கள்? என்ன உத்தரவு கொடுத்தீர்களோ அதன் நகல் ஒன்றை சபையின் முன்பு உங்களால் வைக்கமுடியுமா?”
Sri. M. Kalyanasundaram:- “அந்த உத்தரவையும்தான், இப்பொழுது போட்ட உத்தரவையும்தான், தமிழ்நாட்டில் இரயில் நிறுத்த மறியல் பல இடங்களில் நடந்தபோதிலும்கூட துப்பாக்கிப் பிரயோகம் எந்த இடங்களில் நடந்திருக்கிறதென்று பாருங்கள். ஒன்று டால்மியாபுரத்தில், மற்றொன்று தூத்துக்குடியில். டால்மியாபுரத்தில்தான் சிமெண்ட் தொழிற்சாலை இருக்கிறது. தொழிலாளர்களின் நலனை நசுக்க எல்லாவித வழியையும் கையாளும் அந்த வட நாட்டு முதலாளி, மற்றவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்திய சர்க்காரின் சலுகையைப் பெற்றுத் தொழிலாளிகளின் உயிரை உறிஞ்சி வருகிறான். தூத்துக்குடிதான் ஆர்.வி. மில்லியன் கோட்டை. அங்கே வேலை செய்யக் கூடிய தொழிலாளிகள் பட்டினி கிடந்து செத்தாலும்கூட தன்னுடைய நாலு பங்கு லாபத்தில் ஒரு பங்கு லாபம் குறைந்தாலும் கூட அவன் அலறுவான். அவர்களின் நஷ்டத்தைக் கோடிக்கணக்கில் கொடுத்து ஈடு செய்யவும் சர்க்கார் முன்வரும். இந்த இரு இடங்களில்தான் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருக்கிறது."
"வேலையில்லாத் திண்டாட்டம், உணவு கிடைக்காத திண்டாட்டம் போன்ற பல பெரிய பெரிய பிரச்சினைகள் நாட்டில் கிளம்பிக்கொண்டிருக்கிறது. இப்பொழுதிலிருந்தே எதிர்ப்புச் சக்திகள் ஒன்று சேர இடம் கொடுக்கக்கூடாது என்ற கருத்தோடுதான் கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். இதுவே தமிழ் நாட்டிலுள்ள மக்களின் அபிப்ராயம். சர்க்காரிடம் அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள்மேல் பழியைச் சுமத்திவிட்டு, சந்தர்ப்பங்களை தனது சமயோசித புத்தியால் எப்பொழுதும் தனக்குச் சாதகமாகவே வைத்துக்கொண்டு விட்டால் மாத்திரம் போதாது. சர்க்கார் தரப்பிலிருந்து பேசியவரால் கூட துப்பாக்கிப் பிரயோகம் சரி என்று சொல்வதற்கு நாக்கு வரமாட்டேன் என்று விட்டது. அவர் மனம் அதற்குத் துணியவில்லை. ஆகவே கனம் ராஜகோபாலாச்சாரியாக்கு நான் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். பிரச்சினையை நேருக்கு நேராகப் பார்க்கவேண்டும்."
"சென்ற ஒரு மாதகாலமாகவே சர்க்காரின் ஆரம்பக் கல்வித் திட்டத்தையும், மற்ற விஷயங்களையும் கண்டிக்கும் முறையில் அவர்கள் மகாநாடுகள் கூட்டினார்களே. பலப்பல இடங்களில் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் அனுப்பினார்களே. அவர்களது தினத்தாள்களில் ரொம்பவும் எதிர்த்து எழுதி வந்திருப்பதாக கனம் ராஜகோபாலாச்சாரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறாரே. அப்படியிருக்க ஜனநாயகத்தில் ரொம்பவும் நம்பிக்கையுள்ள கனம் இராசாசி அவர்கள் அந்தக் கட்சித் தலைவர்களைக் கூப்பிட்டு வைத்து அவர்கள் எதிர்க்கவேண்டியதன் அவசியத்தைக் கேட்டாரா? அப்படி எதுவும் சமரஸ முறையில் நடந்ததாகத் தெரியவில்லை. விபரீதமான செய்கை ஏற்படலாம் என்று உணரும் போதாவது கண்ணீர்ப் புகை எல்லாயிடங்களிலும் கிடைக்கும்படி வழி செய்தாரா? போதுமான முன்னறிவிப்பு இன்றி, சாத்வீகமான முறையில் கூட்டத்தைக் கலைக்க வழியிருந்தும் அவைகள் ஒன்றையும் கைப்பற்றாமல் சுடுவதற்கு உத்தரவு எப்படிக் கொடுத்தார் என்று கேட்கிறேன்? கனம் இராசாசியின் உத்திரவு இல்லாவிட்டால் அவர்கள் அப்படித் துணிந்து செய்திருப்பார்களா? கூட்டத்தினரின் தொகை அதிகமாக இருந்தது என்று வைத்துக்கொண்டாலும், அவர்களைக் கலைப்பதற்கு வேறு வழி ஒன்றுமேயில்லையென்று வைத்துக்கொண்டாலும் முப்பது வயதுகூட நிரம்பப் பெறாத ஒரு அதிகாரி, ஒரு ரவுண்டா இல்லை.... 64 ரவுண்டுகள் சுடு, சுடு என்று சொல்ல வேண்டுமானால் அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமலர் தைரியமாக அப்படி மக்களின் உயிர்களைத் திரணமாக மதித்து உத்தரவு இட்டிருப்பார்? நான் கேட்கிறேன்? யாரோ தெரியாமல் செய்துவிட்டதாக, ஸ்தல அதிகாரிகளின்மீது பழியைப் போட்டுவிட்டு கனம் ராஜகோபாலாச்சாரியார் தப்பித்துக்கொள்ள முடியாதென்று நான் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்."
“ஆகவே ஒரு பாரபட்சமற்ற கமிட்டியை நியமித்து இதைப்பற்றி விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்குக் காரணமாயிருந்த அதிகாரிகளைவிட்டே இதை விசாரிக்கச் சொல்வது ரொம்பவும் தப்பாகும். அதில் நியாயம் கிடைக்காது. நீதி இருக்காது. ஆகவே ஜனநாயகத்தை காலில் போட்டுத் துவைக்காமல், இரத்தத்தைச் சிந்தி இந்த நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டிய ஒரு நிலைமை ஏற்படாமல் செய்ய வேண்டுமென்றால் உடனே தனிப்பட்ட அங்கத்தினர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமித்து இதுப்பற்றிப் பாரபட்சமற்ற விசாரணiயை நடத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். அல்லது ஜனங்கள் இரத்தத்தைச் சிந்தியாவது ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்த எதேச்சதிகார ஆட்சியை ஒழித்துக் கட்டுவார்கள் என்று சொல்லிக்கொண்டு என்பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன்.”
அண்ணா திராவிட நாடு இதழில் தம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
நன்றிகெட்ட ம.பொ.சி. ஒரு வரிக்கூட தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றிஎழுதவில்லை. ஏனென்றால் சுட்டுக் கொல்லக் காரணமாக இருந்தவர் அவருடைய குருநாதர் இராசாசி ஆவார். வடக்கெல்லைப் போராட்டத்தில் இருவர் இறந்ததைப் பற்றி எழுதியுள்ள ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டத்திற்கு ஆதரவாக இரயில் மறியல் செய்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட 10 தமிழர்களைப் பற்றி ஒரு வரிக் கூட எழுதவில்லை.
1967 தேர்தலில் தி.மு.க. இராசாசியின் சுதரந்திரக் கட்சியின் கூட்டணி வைத்துக் கொண்டதால் அவர்களும் இந்த வரலாற்றை மறைத்துவிட்டனர் என்பது சோக வரலாறு.
பட்டம் தாணுப்பிள்ளை திருவிதாங்கூரில் 11 தமிழர்களைச் சுட்டுக்கொன்றதை கண்டிக்கும் தமிழ்த் தேசியவாதிகள். வடக்கெல்லைப் போருக்கு ஆதரவாகப் போராடி இரயில் மறியல் செய்தபோது 15.07.1953 அன்று இராசாசியின் அடக்குமுறை ஆட்சியால் 10 தமிழர்கள் சுட்டுக் கொன்றதைப் பற்றி வாய்த் திறப்பதில்லையே ஏன்? இவர்கள் தமிழர்கள் இல்லையா?
கோல்டன் ந. சுப்ரமணியமும் தன்னுடைய நூலில் இதைத வெளியிடவில்லையே ஏன்?
தகராறுக்கிடமான பிரதேசம் என்றறிவிக்குமாறு பிரதமர் நேருவிடம் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துமாறு மீண்டும் ஒரு முறை அவரை வற்புறுத்திக் கேட்க விரும்பினேன். அதன்படி 26.06.1953-இல் முதல்வர் இராசாசியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்... ஆந்திரர் நிலைக்கு எதிராகத் தமிழர் மட்டுமே நடத்தும் கிளர்ச்சிக்கு ஆதரவாக முதல்வர் என்ற முறையில் தாம் எதையும் செய்யாமலிருப்பதை எனக்கு உணர்த்தினார்.
அன்று சங்கடமான நிலையை உணர்ந்தேன். ஆயினும் அன்றைய நிலையில் அவரிடம் எனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்திப் பிரதமர் நேருவிடம் தொலைபேசியில் பேசி எல்லைக் கமிஷன் அனுப்பவுதாக உறுதிமொழி வாங்கித் தருமாறு அவரைக் கட்டாயப் படுத்தினேன். அவர் அதற்கு இணங்கவில்லை என்றாலும் மாற்று யோசனை ஒன்றை எனக்குத் தெரிவித்தார்.
விரைவில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் ஆந்திரப் பிரிவினை மசோதா விவாவதத்திற்கு வரவிருப்பதால் அந்த மசோதாவிலேயே சித்தூர் மாவட்டத்தைத் தகராறுக்குரிய பிரதேசமாகக் கருதி ஆந்திரம் பிரிந்து ஓராண்டுகள் எல்லைக் கமிஷன் அனுப்படவேண்டும் என்ற விதியைச் சேர்த்துவிடலாம் என்பது இராசாசி கூறிய மாற்று யோசனை. இதற்கு அமைச்சரவையிலும் சட்டமன்றக் காங்கிரஸ் கட்சியிலும், உள்ள ஆந்திரர்களுடைய ஆதரவைப் பெற்றுவிட முடியும் என்று இராசாசி நம்பினார்.
எனக்கு அந்த நம்பிக்கை இல்லை என்பதோடு அப்படியே சென்னை மாநில சட்டமன்றம் இசைந்தாலும் மத்திய அரசு அதனை ஏற்குமென்று எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை-கோல்டன் நா. சுப்பிரமணியம் (மேற்கண்ட நூல் பக்.
98-93) ம.பொ.சி.யின் எனது போராட்டம் நூலிலிருந்ததை கோல்டன் சுப்பிரமணியம் மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
இராசாசி அரசு தயாரித்த ஆந்திரபிரிவினை சட்டமசோதாவில் எல்லை நிர்ணயணையம் அமைக்க வேண்டும் என்ற விதி இல்லை. திருத்தணி விநாயகம், கோசல்ராமன், ப. ஜீவானந்தம் ஆகியோர் சட்டமன்றத்தில் வற்புறுத்திய பிறகு அவ்விதியைச் சேர்த்தார் என்பதே உண்மை.
வடக்கெல்லைப் பிரச்சனையில் ஒரு எல்லை வரையரை ஆணையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஏற்காது என்று கூறுகின்ற ம.பொ.சி. சென்னை தலைநகர் மீட்பதில் தான் நகர மன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தினால் நேரு மனமாற்றம் அடைந்து சென்னையைத் தமிழகத்திற்குக் கொடுத்துவிட்டார் என்று எழுதுவதில் என்ன நியாயம் இருக்கிறது. சட்டமன்றம் பெரியதா? மாநகராட்சி மன்றம் பெரியதா? என்பதை ம.பொ.சி. அன்பர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
வடக்கெல்லைப் பிரச்சிணையில் ம.பொ.சிக்கு இராசாசி எந்தவிதமான ஆதரவையும் வழங்கவில்லை என்பதை அவரே ஒப்புதல் வாக்குமூலமாக நமக்கு அளித்துள்ளார். பின்பு எதற்காக அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.
வேறுவழியின்றி ம.பொ.சி. திருத்தணி மார்கெட் பகுதியிலுள்ள காந்தி சிலையின் முன் 03.07.1953 அன்று சத்தியாகிரகம் இருக்கப்போவதாக அறிவித்தார்...
சத்தியாகிரகத்தில் ஈடுபடுவதற்கு முந்தைய நாள் இராசாசி எனக்குத் தந்திக் கொடுத்திருந்தார். அதில் “தாங்கள் தடையை மீறிச் சிறைப்புகுவதற்கு முடிவு செய்துவிட்டதாக அறிகிறேன். அது தேவையற்ற முயற்சி. அந்த முயற்சியைக் கைவிட்டு உடனே சென்னைக்கு வந்து என்னைப் பார்க்கக் கோருகிறேன்”...... “இராசாசியின் அன்புக் கட்டளையைப் புறக்கணிப்பது என் மனதுக்குத் துன்பம் தருவதுதான்”
....சென்னை மாநில காங்கிரசிடமோ, அதன் முதல்வராகிய தங்களிடமோ எனக்கு எந்தவிதமான மனத்தாங்கலும் இல்லை. மத்திய அரசின் நீதியற்றப் போக்குத்தான் என்னைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது. இப்போதுங்கூட சித்தூர் மாவட்டம் தகராறுக்குரிய பிரதேசம் என்பதனை ஒப்புக்கொண்டு அதற்காக எல்லைக்கமிஷன் அனுப்ப மத்தியஅரசு உறுதி கூறுமானால், நான் போராட்டத்தை அடியோடு கைவிட்டு விடுவேன். தாங்கள் என் தலைவர். அந்த வகையில் தங்கள் ஆணைக்குக் கட்டுப்பட நான் கடமைப்பட்டவன்”..... (மேற்கண்ட நூல் பக். 100-101)
இந்தக் கடிதத்தை ம.பொ.சி. ஒரு ஆள்மூலம் முதல்வர் கைக்குக் கிடைக்கும்படி அன்று இரவே அனுப்பிவிட்டார்.
03.07.1953 காலை 9 மணிக்குத் திருத்தணி காந்தி சிலைமுன் போடப்பட்டிருந்த மேசையின் மீதேறி வடக்கெல்லைப் பகுதிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துப் பேசத் தொடங்கினேன். இரண்டு மணித்துளி ஆவதற்குள் கைது செய்யப்பட்டேன்.....
“ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 1952இல் நடந்தப் பொதுத் தேர்தலிலே எந்தக் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் சரியான ஊன், உறக்கம் இல்லாமல் நாடு சுற்றிப் பிரச்சாரம் செய்தேனோ அந்தக் கட்சியின் ஆட்சி என்னைச் சிறையில் அடைத்தது”. (மேற்கண்ட நூல் பக். 102)
பா. குப்பனின் தலைவர் தேர்தலில் காங்கிரசுக்கு உழைத்ததை அவரே எழுதியுள்ளார். இதுதான் தமிழ்த் தேசியம் அமைக்க அவர் தீவிரமாகப் போராடியதா....?
“நீதிபதி ம.பொ.சிக்கு 6 வார சிறைத்தண்டனை விதித்தார். அதுவரை எல்லைக்கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு 2 வாரத்திற்கதிமாகத் தணிகையில் யாருக்கும் தண்டனைத் தரப்படவில்லை. எனக்குத்தான் அதிக தண்டனை”.... (மேற்கண்ட நூல் பக். 105)
ம.பொ.சி.யை வேலூர் சிறைக்கு அனுப்பவேண்டாம் என்று முதல்வர் கூறியதால் திருத்தணி சப்-ஜெயலில் ம.பொ.சி. தங்க வைக்கப்பட்டார். ஆமாம் அடைக்கப்படவில்லை. இதோ ம.பொ.சி.யே பேசுகிறார். “சப்-ஜெயிலில் வழக்கமான கைதிகளை அடைக்கும் காற்றோட்டம் இல்லாத இருட்டறையில் என்னை அடைக்காமல் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலகத்தைக் காலி செய்து அங்கு என்னை வைத்தனர். கட்டில், நாற்காலி, மின்விசிறி முதலியவற்றையும் கொண்டு வந்து வைத்தார்கள்”.
“சட்டத்திற்குட்பட்டு ம.பொ.சிக்கு எவ்வளவு வசதிகளைச் செய்து தரமுடியுமோ, அவ்வளவையும் செய்து கொடுங்கள் என்று முதலமைச்சர் தங்களுக்குக் கட்டளையிட்டதாகப் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கூறினார். இராசாசி என்னிடம் வைத்துள்ள அன்பை அறிந்து கொள்ள இந்த நேரம் எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.” (மேற்கண்ட நூல் பக். 104)
இதே இராசாசி 1938-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆறுமாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்படி கிரிமினல் சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்தார். பெரியாரைப் பெல்லாரி சிறையில் அடைத்தார். ம.பொ.சி. செல்லப்பிள்ளை என்பதால் அவருக்கு மட்டும் உபச்சாரம் செய்துள்ளார்.
பிரதமர் நேரு அவர்கள் சித்தூர் மாவட்டம் தகராறுக்குரிய பிரதேசம் என்பதனை ஒப்புக்கொண்டு அதற்காக விரைவில் எல்லைக்கமிஷன் அமைக்கப்படும் என்று, இன்று பகல் செய்தி நிருபர்களிடம் கூறியுள்ளார். இதைத் தங்களிடம் தெரிவித்து தங்கள் கருத்தை அறிந்து உடனே தமக்குத் தகவல் தருமாறு முதலமைச்சர் இராசாசியைக் கேட்டுள்ளார் என்று வி.ஆர். இராசரத்தின முதலியார் மகிழ்ச்சியோடு கூறினார். (மேற்கண்ட நூல் பக். 106)
நேருவின் அறிக்கைத் தமக்கு மனநிறைவைத் தந்ததாகக் கூறி அதே நாளில் ம.பொ.சி. சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். 6 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டாலும் 5 நாளில் வெளியே வந்துவிட்டார்.இது ம.பொ.சி.யும் இராசாசியும் போட்ட கபட நாடகம்தான். எப்படி என்றால் இது நடைப்பெற்றது 1953 சூலையில் நேரு அதன் பிறகு நான்காண்டு காலம் எல்லைக்கமிஷனை அமைக்கவே இல்லை என்பதை எண்ணிப்பார்க்கவும்.
ம.பொ.சி. கைது செய்யப்பட்ட மறுநாளே விநாயகம் தடை உத்தரவை மீற இருந்தார். தலைவர் ம.பொ.சி. கேட்டுக் கொண்டதால் போராட்டம் அன்றே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் எந்தப் போராட்டமும் நடைபெறாமல் ம.பொ.சி. தடுத்துவிட்டார். சென்னை மாகாண அரசின் தடை உத்தரவை மீறிப் பல இடங்களிலும் ஊர்வலங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. ஜுன் 2-ஆம் தேதி அம்மையார்குப்பத்தில் 500 பேர், ஆர்.கே. பேட்டையில் 500 பேர் தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்தினர். ஜுன் 30-ஆம் தேதி நகரில் சுமார் 4000 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து பம்பை எக்ஸ்பிரஸ் ரயலை மறித்தனர். திருவாலங்காட்டுக்கும் மணவூருக்கும் இடையே ஜனதா எக்ஸ்பிரஸ் இரயில் நிறுத்தப்பட்டது. சித்தூரிலும் இரயில் நிறுத்தம். (மேற்கண்ட நூல் பக். 118) வடக்கெல்லைப் போராட்டத்தின் வீச்சைக் குறைத்து இராசாசியைக் காப்பாற்றவே ம.பொ.சி. நாடகம் ஆடினார்.
வடக்கெல்லைப் பாதுக்காப்புக் குழுவினர் 02.09.1953 அன்று கே.விநாயகம் தலைமையில் தில்லிச் சென்று பிரதமர் நேருவைச் சந்தித்தனர். இந்தச் சமயத்தில் தில்லித் தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொள்ள ம.பொ.சி.யும் தில்லி சென்றிருந்தார். அன்று ம.பொ.சி. தில்லியில் இருந்தபோதிலும் வடக்கு எல்லைப் போராட்டக்குழுவிற்குத் தலைவராக இருந்த போதிலும் நேருவைப் பார்க்கும் குழுவினருடன் அவர் உடன் செல்லவில்லை. (மேற்கண்ட நூல் பக். 121)
ம.பொ.சிக்கு வடக்கெல்லைப் போராட்டத்தில் எவ்வளவு அக்கறை இருந்தது! என்பது இதன் மூலம் தெரிகிறது. நேரு காங்கிரசை விட்டுத் தம்மை நீக்கிவிடுவார் என்று பயந்துக் கொண்டுதான் ஒதுங்கிவிட்டார் என்பதே உண்மை. 1953 சூலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட எல்லைப்போரை மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்துத் திரு. கே. விநாயகத்தின் முயற்சியில்தான் மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டது.
தமிழரசுக் கழக மாநாட்டில் பேசிய விநாயகம் “நாங்கள் இறுதி முடிவுக்கு வந்துவிட்டோம். அதாவது இரண்டு வருடங்கள் காத்திருந்தும் எல்லைக்கமிஷன் அனுப்பப் படாததுதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்த எல்லைப் போராட்டத்தை மீண்டும் துவக்குவதென்று தீர்மானித்துவிட்டோம்” (மேற்கண்ட நூல் பக். 152)
1955 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் சத்தியாகிரகம் நடைபெறவும் கே. விநாயகம் தளபதியாகவும் முடிவு செய்யப்பட்டது. அதற்குள் ம.பொ.சி. சென்னை மாநில நிதி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 1955 டிசம்பருக்குள் எல்லைச் சிக்கல் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
“நான் கொடுத்த மூன்று நிபந்தனைகளையும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுவிட்டதால், எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் காலவரம்பு வைக்கப்பட்டு விட்டதால், நாளை நடக்கவிருந்த சத்தியாகிரகப் போராட்டத்தை இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை ஒத்தி வைத்து இருக்கிறேன்” என்று ம.பொ.சி. அறிவித்தார். (மேற்கண்ட நூல் பக். 158-159)
1955 டிசம்பர் இறுதிநாள் முடிந்தும் வடக்கெல்லைப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் எட்டப்படாததால் வடக்கெல்லைப் போராட்டக்குழுச் செயலாளராகிய நான் (இந்நூலாசிரியர்) திருத்தணி வன்னியர் குல சத்திரத்தில் 1956 சனவரி 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். அதன் விளைவாகத் திருத்தணியில் கடைகள் அடைக்கப்பட்டன. ஊர்வலமும் நடத்தப்பட்டது. தலைவர் ம.பொ.சி.யிடமிருந்து கடிதம் வந்தது. அதில் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டாம் எனக் கூறியிருந்தார். (மேற்கண்ட நூல் பக். 165)
பெரியோர் பலரின் அறிவுரையை ஏற்று உண்ணா விரதத்தை மறுநாள் காலை 9 மணிக்கு முடித்துக் கொண்டேன்.
தமிழக வடக்கெல்லைப் போராட்டம் வெற்றிப்பெறும் பொருட்டு டிசம்பர் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று “வடக்கெல்லைப் பாதுக்காப்புத் தினம்” கொண்டாடுமாறு தமிழ் மக்களை வடக்கெல்லைப் பாதுகாப்புக்குழு வேண்டிக் கொள்கிறது. சென்னையில் நடைபெறும் எல்லைப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளத் தொண்டர் படைக்குழு ஒன்று தணிகையிலிருந்து புறப்பட்டுச் சென்னை வரை கால்நடையாகவே செல்லவேண்டும் என்றும் இப்படைக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல திரு. ஈ.எஸ். தியாகராஜன் அவர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. (மேற்கண்ட நூல் பக். 176)
வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுவினர் 1956 செப்டம்பர் 20ஆம் நாள் சுமார் 500 பேர் சென்னையிலிருந்துப் புறப்பட்டனர். தளபதி கே. விநாயகம் வந்துக் கலந்துக் கொண்டார். 12 மைல் நடந்து வந்த கே. விநாயகம் பகலுணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுச் சென்னை சென்று விட்டார்..... ம.பொ.சி. திருவள்ளூருக்கு வந்து நலம் விசாரித்துவிட்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.... செப்டம்பர் 23 ஆம் தேதி கோடம்பாக்கம் வந்தவுடன் தளபதி விநாயகம் இன்முகம் காட்டி வரவேற்றுக் காலை மற்றும் பகல் உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். வடபழனி கோவில் மண்டபத்தில் ஓய்வெடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு ம.பொ.சி. வந்துப் பார்த்தார்....
செப்டம்பர் 24 ஆம் தேதி தளபதி கே. விநாயகம் தலைமையில் 50 பேர் சட்டமன்றத்தை நோக்கி முழக்கங்கள் எழுப்பியவாறு அப்போது சட்டமன்றம் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டனர். 25 ஆம் நாளும் மறியல் நடைபெற்றது. 26 ஆம் நாள் ம.பொ.சி. மறியலில் கலந்து கொண்டனர். 29 ஆம் தேதி வரை மறியல் நடைபெற்றது. அனைவருக்கும் 15 நாள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால் மறுநாள் 30 ஆம் தேதியே அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இது எங்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. ம.பொ.சி. அவர்கள் எங்களிடம் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இது எங்களுக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது. (மேற்கண்ட நூல் பக். 180-181)
ஒவ்வொரு முறையும் வடக்கெல்லை போராட்டக் குழுவினர் போராடும் போதெல்லாம் அதை தடுப்பதிலேயே ம.பொ.சி. குறியாக இருந்துள்ளார். வடகெல்லைப் பிரச்சினைத் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால்தான் ம.பொ.சி. க்கு அரசியல் கட்சி நடத்த ஆட்கள் இருப்பார்கள் என்ற காரணத்தினால் பிரச்சினையை விரைவில் தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். 1956ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த போதும் தமிழகத்தின் வடக்கெல்லையைப் பற்றியக் குறிப்பு எதுவும் பசல் அலி ஆணையத்தில் இல்லாமல் போனதற்கு ம.பொ.சி., இராசாசி கூட்டுறவே காரணம். அதனால் 1960 வரை இப்பிரச்சினை இழுத்துக் கொண்டே சென்றது.
ஆந்திரப் பிரிவினைத் தொடர்பான மசோதா சென்னை சட்டமன்றத்தில் 14.07.1953 முதல் 27.07.1953 வரை 14 நாட்கள் நடைபெற்றது. அதில் பேசிய பெரும்பான்மையான தமிழகப் பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் இராசாசியின் ஆந்திர ஆதரவுப் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளனர். சட்டமன்ற விவாதங்கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. சென்னை சட்டமன்ற மேலவையிலும் 20.07.1953 வரை 5 நாட்கள் நடைபெற்றது. ம.பொ.சி. ஒருவரைத் தவிர வேறு யாரும் இந்த மசோதாவை வரவேற்கவில்லை. எண்பதுக்கும் மேற்பட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த உண்மையை ம.பொ.சி.யோ, கோல்டன் சுப்பிரமணியமோ எழுதவில்லை.
தில்லி நாடாளுமன்றத்திலும் ஆந்திரப் பிரிவினை மசோதா 13.08.1953 முதல் 27.08.1953 வரை 15 நாட்கள் நடைபெற்றது. 18.08.1953 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய திருக்குறள் முனுசாமி “சென்னை மாகாண சட்ட மன்றத்தால் ஆந்திராவுக்குப் புதிய தலைநகரை உருவாக்க 2.30 கோடி கொடுக்க வேண்டும் என்ற விதி நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவில் அது சேர்க்கப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் ஆந்திரப் பிரிந்து எஞ்சிய சென்னை மாகாணத்திற்குத் திராவிடநாடு (அ) தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டவேண்டும்” என்று பேசினார். ஆந்திராவில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்கவேண்டும் என்பதற்காக ஒரு எல்லை ஆணையம் (கமிஷன்) அமைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். (நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1030 - 1034 நாள் 18.08.1953)
தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான ஆர். வெங்கட்ராமன் “ஆந்திராவுக்குப் புதிய தலைநகரை உருவாக்கச் சென்னை மாகாண அரசு 2.30 கோடிக் கொடுக்க வேண்டும் என்ற விதியை நீக்கவேண்டும் (அ) அதை ஒரு கோடியாக குறைக்க வேண்டும்” என்று வாதிட்டார். (நாடாளுமன்ற விவாதக் குறிப்புகள் பக். 1630 நாள் 26.08.1953)
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டு வ. வீரசாமி ஆந்திர உயர்நீதிமன்றத்தைச் சென்னையில் இருந்து உடனே ஆந்திரப் பகுதிக்கு மாற்றவேண்டும் என்று பேசினார் நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1273 நாள் 22.08.1953)
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவினாசிலிங்கம் செட்டியார், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி. இராமசாமி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் நடேசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தமிழகத்திற்கு ஆதரவாக வாதாடி உள்ளனர். ஆந்திரா பிரிவினை தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. இதைப் பற்றியெல்லாம் ம.பொ.சி. ஒருவரிகூட எங்குமே எழுதவில்லை. கோல்டன் சுப்பிரமணியமும் எழுதவில்லை. ஆந்திரப் பிரிவினை வடக்கெல்லைப் பிரச்சினை என்பது கே. விநாயகம், ம.பொ.சி. இராசாசி, போன்றவர்களோடு முடிந்துவிட்டதைப் போல வரலாற்றை இவர்கள் பதிவுச் செய்துள்ளார்கள்.
தமிழகத்தின் தெற்கெல்லைத் தொடர்பாகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. இன்று வரை எல்லைப் போராட்டங்களைப் பற்றி நூல் எழுதியவர்கள் யாருமே முழுமையாக இவற்றை ஆராய்ந்துப் பார்த்து எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ம.பொ.சி. தனக்கு மட்டுமே பெருமை வரவேண்டும் என்ற வகையில் ‘எனது போராட்டத்தை’ எழுதியுள்ளார்.
வடக்கெல்லைப் போராட்டத் தளபதி கே. விநாயகம் தான் அந்தப் பகுதி மக்களைத் திரட்டிப் போராட்டத் தளபதியாக திகழ்ந்தார். ம.பொ.சி. அவ்வப்போதுக் கூட்டத்தில் பேசுவதற்கு மட்டுமே சென்றார். வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. பெரிய தியாகம் எதுவும் செய்துவிடவில்லை என்பதே உண்மை.
- வாலாசா வல்லவன்