kuthoosi gurusamy 263சினிமா முதலாளி திரு. டி.வி. சுந்தரம், “அய்யோ! அய்யோ! என்று அலறித் துடிக்கிறார்! பொது மக்கள் இப்படிப் பாழாகிறார்களே! அட தெய்வமே! இந்த நாட்டை இப்படிக் குட்டிச்சுவராக்கி விட்டாயே! என்று கதறு கதறென்று கதறுகிறார்!

வீண் பேச்சல்ல! புள்ளி விவரங்களை வாரி வீசியிருக்கிறார்!

இதோ, பவனியுங்கள்! இந்தியாவில் 100-க்கு 12.5 பேர்தான் சினிமா பார்க்கிறார்களாம்! இதென்ன அநியாயம் 100-க்கு 85 பேர் தற்குறிகளாயுள்ள நாட்டில் 100 க்கு 90 பேராவது சினிமா பார்க்க வேண்டாமா? அதுவும் காதல் நிறைந்து வழிந்து ஓடுகின்ற அற்புதமான தமிழ் சினிமாக்களைப் பார்க்காவிட்டால் ‘கலை’யின் கதி என்னாவது? கலை என்றால் சாதாரணக் கலையா? சினிமாக் கலையாச்சே!

இதோ, மேலும் புள்ளி விவரங்கள்!

37 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் 3,500 சினிமாக் கொட்டகைகள் தானிருக்கின்றனவாம்!

ஆனால் ரஷ்யாவில் 39,000 கொட்டகைகளாம்!

அமெரிக்காவில் 19,000 கொட்டகைகளாம்!

மேற்படி சினிமா முதலாளி இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்!

ஏழை எளியவர்கள், “அரிசி விலை ஏறிவிட்டது; பள்ளிக்கூடச் சம்பளம் கட்டப் பணமில்லை; மருந்து வாங்கப் பணமில்லை;” - என்றெல்லாம் அலறுகிறார்கள்! ஆனால் அதே சமயத்தில் சினிமாக் கொட்டகைகளைப் பாருங்கள்! அரை மைல் நீளத்திற்குக் ‘கியூ’ நிற்கிறது! இதைப் பார்த்தால் “மூன்று ரூபாய்க்குக் குறைந்த சினிமா டிக்கெட் கிடையாது” என்று எந்தப் புண்ணியவானாவது சட்டம் செய்ய மாட்டானா என்று கூடத் தோன்றும்!

குடிக்கத் தண்ணீரில்லாதவன் குளிப்பதற்குப் பன்னீரை உபயோகப் படுத்துவது மாதிரி!

உடுத்துவதற்குக் கந்தையில்லாதவன், உயர்ந்த வகையான ‘செண்ட்’ பூசிக்கொண்ட மாதிரி!

“அமெரிக்காவைப் பார்! ரஷ்யாவைப் பார்!” - என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்!

ஆமாம்! நானும் பார்த்தேன்! அங்கே குப்பைத் தொட்டியில் எச்சில் இலை பொறுக்குகிறவர்கள் இல்லை! இங்கே இது சர்வ சாதாரணம்!

அந்த இரண்டு நாட்டிலும் பஞ்சத்தினால் குழந்தைகளை விற்பவர்களில்லையே!

அந்த இரண்டு நாட்டிலும் மழைக்காகக் கடவுளைக் கூப்பிடுகின்ற ‘மண்டூகங்கள்’ இல்லையே!

அந்த இரண்டு நாட்டிலும் படிக்கிற பையனுக்குப் பள்ளியில் இடமில்லை என்று கூறுகின்ற அரக்கர்கள் இல்லையே!

அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் சாலையோரத்தில் பத்திரிகைகளை அடுக்கி வைத்துவிட்டுப் போய்விடுகிறார்களாம்! தேவையானவர்கள் அதற்குரிய பணத்தைப் போட்டுவிட்டுப் பத்திரிகையை எடுத்துப் போவார்களாம்!

ஆனால், இங்கே? மற்றொருவன் பாக்கெட்டிலிருக்கின்ற மணிபர்சை எடுத்துப் போகிறார்களே, பாரத புத்திரர்கள்!

அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் பூமியைத் தோண்டி செல்வத்தை எடுக்கும் வேகம் எப்படியிருக்கிறது? இங்கு ஒரு ‘சுண்டைக்காய்’ சுரங்கம் தோண்டுவதற்கு ஒரு மகாமகம் பிடிக்கிறதே!

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு ஒரு சொந்த மோட்டார் கார் இருக்கிறதாம்! வீட்டு வேலைக்காரர், ஆஃபீஸ் ப்யூன் இவர்கள்கூட சொந்த மோட்டார்களில் வருகிறார்களாம்!

ஆனால், ‘பாரதமாதா’வில்? 5 பேருக்கு ஒருவர் அரைப் பட்டினி! முப்பது பேருக்கு ஒருவர் முழுப்பட்டினி!

அமெரிக்காவுக்குப் போட்டியாக ரஷ்யாவும் அணுக்குண்டுகளைச் செய்து குவித்து விட்டதாம்!

இங்கே, பாரதமாதாவினால் சரியான குண்டூசிகூடச் செய்ய முடிய வில்லையே!

எடுத்ததெல்லாம் இப்படி ஓட்டையாக இருக்கும்போது, சினிமாக் கொட்டகைகள் குறைவாக இருப்பது பற்றிக் கண்ணீர் வடிக்கிறார், சினிமா முதலாளி!

அவரவருக்கு அவரவர் கவலை! மோட்டார் கார் வைத்திருப்பவருக்குப் பெட்ரோல் விலையில் அரையணா ஏறிவிட்டதே என்ற கவலை!

மைல் கணக்கில் நடந்து போகிறவனுக்குக் கால் ஒடிந்து விட்டதே என்ற கவலை!

- குத்தூசி குருசாமி (19-06-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It