kuthoosi gurusamyகடவுளைப் பலர் பலவிதமாக வர்ணிக்கின்றனர்! சாயிபாபாவாக வர்ணிக்கின்ற சாக்கடை மூளைகளைப் பற்றி நான் கூறவில்லை!

எங்கும் நிறைந்திருக்கிறதாகக் கூறுகின்ற முதிர்ந்த மூளைகளைப் பற்றிக் கூறுகின்றேன்!

“பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந் தேமே” -என்றார், தாயுமானவர்!

இன்று கடவுளின் இடத்தை வேறொருவர் கைப்பற்றிக் கொண்டார்! மெஜாரிட்டிக் கட்சியை இழுத்துத் தள்ளிவிட்டு, மைனாரிட்டிக் கட்சியார் மந்திரி சபை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது போல!

கடவுளைக் கழுத்தைப் பிடித்து “நெக்கி” விட்டு- (சென்னை நடை!) அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார் ஒரு புது ஆசாமி! இன்று நேற்றல்ல! 1947 ஆகஸ்ம் 15 -ந் தேதி முதல் அசைக்க முடியாமல் உட்கார்ந்து விட்டார்!

அவர் தான் ஸ்ரீலஸ்ரீ சிபார்ஸ்! இங்கிலீஷில் recommendation (“ரெக்கமெண்டேஷன்”) என்று சொல்வார்கள்!

இவர் இல்லாத இடமில்லை! அங்குமிருப்பார்! இங்குமிருப்பார்! எங்குமிருப்பார்! தூணிலுமிருப்பார்! துரும்பிலுமிருப்பார் அங்கிங்கெனாதபடி எங்குமிருப்பார்!

அய்யா! என் வீட்டில் திருட்டுப் போய் விட்டது! இவன் தான் திருடியவன்! திருடும் போதே பிடித்து விட்டேன்! தயவு செய்து உங்கள் சிநேகிதர் சப்இன்ஸ்பெக்டரிடம் சிபார்சு செய்து இவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்லுங்களேன்!

என் வீட்டுக்கு முன்பு சாக்கடைத் தண்ணீர் குளமாக நிற்கிறது. எத்தனையோ, ‘பெட்டிஷன்’ எழுதிவிட்டேன். தயவு செய்து உங்கள் வீட்டில் குடியிருக்கின்ற முனிசிபல் கமிஷனரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்களேன்! நீங்கள் சொன்னால் நிச்சயம் செய்வார்!

அய்யா, ஸ்டேஷன் மாஸ்டரே! சிதம்பரத்துக்கு ஒரு டிக்கெட் வேணும்! ரொம்ப நேரமாக நின்று கொண்டிருக்கிறேன்! வண்டி வரும் நேரமாகி விட்டது. டிக்கெட் கொடுக்கிறவர் ரூபாய்யை எண்ணி நோட்டோடு போடுகிறார்! நோட்டை எண்ணி ரூபாயோடு போடுகிறார்! இந்த வேலையை அப்புறம் செய்து கொள்ளக் கூடாதா என்று கேட்டால் வெறி நாய் மாதிரி விழுகிறார்! தயவு செய்து ஏழைக்காக மனமிரங்கி இந்தப் பணத்தை யெடுத்துக் கொண்டு ஒரு டிக்கெட் கொடுக்கச் சொல்லி சிபார்ஸ் செய்யுங்களேன்!

என் பையனை நாலாம் கிளாசிலே சேர்க்கணும், இடமில்லையாம்! ஹெட்மாஸ்டர் ராஜாராமய்யர் தம் வீட்டிலே வந்து பார்க்கச் சொன்னார்! ஸ்கூலிலே அதிக வேலையாக்கும் என்று நினைச்சு அவர் வீட்டுக்குப் போனேன்! “என்னாங்காணும் கல்வி மந்திரி மாதிரி கையை வீசிக்கிட்டு வர்றீர்? உம்ம பையனைச் சேர்ப்பதனாலே எனக்கென்னங்காணும் லாபம்? போமய்யா, போம்! 40 பையனுக்குப் பதிலாக 47 பையனைச் சேர்த்துட்டேன்! இடமில்லை, போம்!”- என்று கூறிவிட்டார்.

லஞ்சம் கொடுப்பதற்கு என்னிடம் பணமில்லை. நீங்கள்தான் இந்த ஏழைக்கு உதவி செய்ய வேண்டும்! எம். எல். ஏ. என்றால் கொஞ்சம் பயப்படுவார்! ஒரு வார்த்தை சொன்னால் போதும், கொஞ்சம் தயவு பண்ணுங்கள்! மூன்று மாதமா எனக்குச் சம்பளம் வரலே! ரொம்பக் கஷ்டமாயிருக்கு! கம்பாசிட்டர் வேலையிலே என்ன கொள்ளைச் சம்பளம்! கக்கூஸ் எடுக்கிறவளுக்குக் கூட என்னைப் போல் இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்குது! இந்த அற்பக்காசைக் கூட மாதா மாதம் குடுக்காமே வயிற்றிலே அடிக்கிறான், படுபாவி! அவனுக்கு மாத்திரம் புது மோட்டார் கார்; பெரிய பங்களா! மந்திரி பேட்டி! ரொம்ப அநியாயமா யிருக்குதய்யா! தொழிலாளிக்கெல்லாம் கொழச்சு நாமஞ் சாத்திட்டான்! நீங்கள் கொஞ்சம் மனசுவைச்சு ஜட்ஜுக்கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் போதும்! ரிக்கார்டெல்லாம் பலமாயிருக்கு!

இதே போல இன்னும் ஆயிரம் சொல்லலாம்!

எதற்கெடுத்தாலும் “சிபார்சு” தான்!

என் தலையிலே மயிர் முளைக்க மாட்டேன்கிறது; தயவு செய்து விவசாய மந்திரியிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள், என்று தான் கேட்பதில்லை!

இன்றைக்குத் திங்கட்கிழமை, நாளைக்கு எப்படியாவது செவ்வாய்க் கிழமையாவதற்குக் கலெக்டரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள்- என்று தான் கேட்பதில்லை!

ஆஃபீஸ்களில் சிபார்சு! கடைகளில் சிபார்சு! வீடுகளில் சிபார்சு! ரயில் நிலையங்களில் சிபார்சு! ஆணிடம் சிபார்சு பெண்ணிடம் சிபார்சு! பணக்காரனிடம் சிபார்சு! ஏழையிடம் சிபார்சு! உத்யோகஸ்தனிடம் சிபார்சு! என்னைப் போன்ற வெறும் ஆளிடமும் சிபார்சு!

சர்வம் சிபார்சு மயம்! இது இல்லாத இடமேயில்லை!

“சிபார்சு” என்றவுடனேயே அந்த ஃபைலை (file) அப்படியே கட்டி வைத்து விடுவாராம், முன்னாள் முதலமைச்சரான ஓமந்தூரார்! நியாயமானதா யிருந்தாலும் கூட விரோதமான உத்தரவைப் போடுவாராம்! அதுவும் ஒரு மாதம் கழித்து!

இந்த மாதிரி எல்லா உத்யோகஸ்தர்களும் செய்வதாயிருந்தால் கூட நல்லாயிருக்கும்!

எஸ். எஸ். எல். ஸி. மார்க்கை ஒரு வாரத்துக் முந்திக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக (இதில் என்ன லாபமோ எனக்குத் தெரியாது!)

மீன் பிடிக்கும் குட்டைக்கு மேலே கருடாழ்வார்கள் வட்டமிடுவது மாதிரி வட்டமிடுகிறார்களே, படித்த மக்கள்!

எந்த வியாதிக்குத்தான் அழுவது? சகல ரோக நிவாரணி ஏதாவது அகப்பட்டால் தான் சமுதாயத்தை உயிர்ப்பிக்க முடியும்! கிட்டே நெருங்க முடியவில்லை? அவ்வளவு துர்நாற்றம்! நோய்களின் பொக்கிஷம்! சமுதாயத்தின் மேலே பிணவாடை வீசுகிறதே!

இவ்வளவுக்கும் காரணமென்ன! சுயநலம்! தனி உடைமை! - இவை தாம் காரணம்!

- குத்தூசி குருசாமி (16-06-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It