1. ஈழ விடுதலைப் போராட்டம் இப்படி பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதே, இனி அதன் எதிர்காலம் என்னாகும்?
மு. கதிர்வேலன், பெரியகுளம்
உலகில் எந்த ஒரு தேசிய இனப் போராட்டமும் இப்படி ஒரு பேரிழப்பை சந்தித்ததில்லை. இழப்பு பேரிழப்புதான். மக்களோடு போராளிகளும் அதன் மதிப்புமிக்க பல தலைவர்களும் மடிந்திருக்கிறார்கள். வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், உணர்வுள்ள போராளிகளும் அதன் தலைவர்களும் எஞ்சிய மக்களும் இருக்கும் வரைக்கும் தமிழீழ முழக்கம் எழுந்தே தீரும். விடுதலையை வென்றே தீருவார்கள். ஆனால், நடந்த நிகழ்வுகளிலிருந்து இந்தப் படிப்பினையிலிருந்து நாம் பாடம் பெற வேண்டும். சும்மா வெட்டிப் பேச்சு, வீர வசனங்கள் பேசிக் கொண்டிருக்காமல், பிரச்சினையின் ஆழத்தையும், தீவிரத்தையும் மக்களிடம் சொல்லி மக்களைத் தட்டி எழுப்பவேண்டும். தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு அமைப்புகளை, தமிழ்த் தேசிய சக்திகளை ஓரணியில் திரட்ட வேண்டும்.
உலகம் முழுதும் சிதறி கிடக்கும் தமிழர்கள் குரல் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தனித்தனியாகக் குரல் எழுப்புகிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இதுபோதாது. ஒன்றுபட்ட போராட்டம் வலிமையாக ஏற்பட வழி காணவேண்டும். ஒப்புக்கு சப்பாணி போல் இருக்கக்கூடாது. இந்திய அரசு தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்கு எதிர் வினையாற்ற முன்வரவேண்டும். தமிழகத்தில் இயங்கும் சிறுசிறு அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும். உலகத் தமிழர்கள் ஒன்றிணைவார்கள். மக்களது தொடர் போராட்டம் நமக்கான திசையைக் காட்டும் என்பது உறுதி. நேற்று ஐ.நா பொதுச் செயலாளர் பால்கிமூன் பேசி இருக்கிறார் “தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் தேசிய இனப்போர் தவிர்க்க முடியாததாகிவிடும்”. தமிழீழ மக்கள் மீதான ஒடுக்குமுறை நிலவும் வரை, நீடிக்கும் வரை தமிழீழத்திற்கான குரல் ஓங்கி ஒலிக்கவே செய்யும். அதற்கான போராட்டமும் தொடரும். இதுதான் தற்போதைய ஈழத்தின் வரலாறாகவும் அமையும்.
2. பல்வேறு தேசிய இனப் போராட்டங்களையும் ஆதரித்த உலக நாடுகள் ஈழ விடுதலை போராட்டத்தை கைவிட்டது ஏன்?
-வி. செந்தில்குமார், திருச்செந்தூர்
ஒன்றைப் புரிந்து கொள்வது நல்லது. தற்போது உலக நாடுகள் எதுவும் தேசிய இனப் போராட்டங்களை அதன் நியாய நோக்கில் அணுகுவதில்லை. மாறாக, அவற்றை ஆதரிப்பதால் அல்லது எதிர்ப்பதால் ஏற்படும் பலாபலன்கள், அரசு நலன்களை வைத்தே முடிவு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, கொசாவா விடுதலைப் போராட்டம், இதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆதரிக்கின்றன. ரஷ்யா எதிர்க்கிறது. தனக்கு பக்கத்திலேயே ஐரோப்பிய நாடுகள் வருவதை ரஷ்யா விரும்பவில்லை. ஆனால் ரஷ்யாவுக்கு மிக அருகில் தங்களுக்கு ஒரு தளம் அமையவேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.
இங்கே இந்தியாவைப் பாருங்கள். திபெத்தை இந்தியா ஆதரிக்கிறது. தலாய்லாமா தர்மசாலாவில் தங்கி திபெத்திய விடுதலையை முன்னெடுக்கிறார். திபெத் விடுதலைப் போராட்டம் சீனாவுக்கு எதிரானது என்பதால் இந்தியா அதை ஆதரிக்கிறது. ஆனால் ஈழப் போராட்டத்தை எதிர்த்து இலங்கை அரசுக்கு உதவுகிறது. இப்படி இந்தியா இலங்கையை ஆதரிப்பதால்தான், இலங்கையை ஆதரிக்கும் இந்தியாவை எதிர்க்க உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. 100 கோடிக்கும் மேல் மக்கள்தொகையும், மிகப்பெரும் சந்தையையும், உலகிலேயே நான்காவது நிலையில் வலிமை மிக்க ராணுவத்தையும் கொண்ட பெரிய நாடு இந்தியா, எனவே, இந்தியாவைப் பகைத்துக் கொள்ள உலக நாடுகள் விரும்பவில்லை.
இதனால்தான் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான சுவிட்சர்லாந்து கொண்டு வர முயன்ற தீர்மானத்தை முதலில் ஆதரித்த நாடுகளும், இந்தியா இதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக நிற்பதைப் பார்த்து, இலங்கை கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து சுவிட்சர்லாந்து தீர்மானத்தைத் தோல்வியுறச் செய்தன. அந்நாடுகளின் பன்னாட்டுச் சந்தை இங்கு விரிவு படுத்தப்படுகிறது. அவர்களின் நாட்டு நலன் இந்தியாவில் உள்ளது. இதனாலேயே உலக நாடுகளின் ஆதரவு ஈழத்திற்குக் கிட்டாமல் போய்விட்டது. ஆகவே இந்த உண்மை நிலையை நாம் உணரவேண்டும். மக்களுக்கும் உணர்த்தவேண்டும். இந்திய அரசின் நிலைப்பாட்டை, வெளியுறவுக் கொள்கையை மாற்ற தமிழகத்தில் எழுச்சிமிகு போராட்டங்கள் நடத்தவேண்டும்.