kuthoosi gurusamy 268துணிக் கடைகள் மூடப்பட்டால் அவைகளைத் திறப்பது தையற் கடைக்காரரின் சொந்தப் பொறுப்பு!

சினிமாக்கள் நின்று போனால், அவைகளைத் தொடங்கி வைப்பது மூக்குக் கண்ணாடிக் கடைக்காரரின் சொந்தப் பொறுப்பு!

பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தால் அதை நீடித்து நடத்தித் தர வேண்டியது குதிரை வண்டிக்காரரின் சொந்தப் பொறுப்பு!

வாதியும் பிரதிவாதியும் சமாதானமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வக்கீலின் சொந்தப் பொறுப்பு!

கூட்டுறவு சங்கக் கடைகள் சரியாக நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தனி வியாபாரிகளின் சொந்தப் பொறுப்பு!

மகனும் மருமகளும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளுமாறு செய்ய வேண்டியது மாமியாரின் பொறுப்பு!

- இவைகளைப் போல் பல பேருக்குப் பல்வேறு சொந்தப் பொறுப்புகள் திடீர் திடீரெனத் தலையில் வந்து விழுவதுண்டு! “பொது ஜன நன்மை” யைக் கருதி இம்மாதிரிப் பொறுப்புக்களை அவரவர் ஏற்றுக் கொள்ள நேரிட்டு விட்டது!

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்குத் திடீரென்று பண முடை எற்பட்டது! (என்ன எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டனவோ பாவம்!) உடனே பக்த கோடிகள் (ரெங்கநாதர் சார்பில்) விழித்தெழுந்தனர் ஒரு சீட்டு ஒரு ரூபாய் வீதம் லட்சக் கணக்கான ‘லாட்டரி’ சீட்டுகள் தயார் செய்யப்பட்டன. அதாவது ஸ்ரீரெங்கநாதர் லாட்டரி போட்டார்.

சீரங்கத்துத் திருமண் நெற்றித் திருமேனிகளில் கோவிலுக்குள் புகுந்திருப்பவைகள் போக எஞ்சியுள்ளவைகள் தென் இந்திய ரயில்வே மத்திய நிலையத்தில் புகுந்திருக்கின்றன அல்லவா? எனவே இந்த “லாட்டாரி” சீட்டுகளை விற்க வேண்டிய பொறுப்பு இந்த ரயில்வே திருமேனிகளின் திருத்தலைகளில் விழுந்தது. ஒன்று பாக்கியில்லாமல் எல்லாச் சீட்டுகளும் விற்கப்பட்டன. பல லட்சக்கணக்கில் லாபங் கிடைத்தது. நல்ல வேளையாக ஸ்ரீரெங்கநாதர் பண நெருக்கடியிலிருந்து தப்பிப் பிழைத்தார். மலைபோல் வந்த வினை பனிபோல் நீங்கிற்று, பக்தர்கள் கடாட்சத்தினால்!

ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புக்கும் முன்பு அடிக்கடி ஆபத்து வரும். அப்போது, சென்னை செக்ரடேரியட் நாடக சபையார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊர் ஊராக நாடகம் நடத்துவார்கள். கலெக்டர் முதல் கணக்கப்பிள்ளை வரையில் நாடக டிக்கெட் விற்பார்கள்! பல்லாயிரக் கணக்கில் பணந் திரட்டிக் கொண்டு வருவார்கள்!

மயிலாப்பூரில் ஆண்டு தோறும் அறுபத்துமூவர் திருவிழா நடக்கிற தல்லவா? அதன் செலவு முழுதும் சென்னை அகவுண்டண்ட் ஜெனரல் ஆஃபீஸ்காரர்கள்தான் ஏற்றுக் கொள்கிறார்களாம். கட்டாய வசூல் நடைபெற்று வருகிறதாம். அவரவர் சம்பளத்துக்குத் தக்கபடி, பல ஆண்டுகளாகவே! சென்ற வாரத்தில் இந்த விழா நடைபெற்றபோது 2 மணிக்கே அலுவலகத்தை மூடி விட்டார்களாம். எப்போதுமே இம் மாதிரித்தான் பழக்கமாம்!

அகவுண்டெண்ட் ஜெனரல் ஆஃபீசுக்கும் அறுபத்து மூவருக்கும் அவ்வளவு பொருத்தம்! போதாக்குறைக்கு இப்போதுள்ள அகவுண்டெண்ட் ஜெனரல் பாலகிருஷ்ணய்யர் என்றால், சொல்லவா வேணும்? கரன்சி நோட்டுப் பந்தலில் பொன்மாரி பொழிந்த மாதிரித் தானே?

அறுபத்து மூவர் விழாவுக்காக சுமார் 800 பேர், ஆளுக்கு மூன்று மணிநேர வேலையைப் பாழாக்கியிருக்கிறார்கள். “மதச்சார்பற்ற சர்க்கார்” என்பதை இனியுங்கூட யாரேனும் மறுக்க முடியுமா என்று அகவுண்டெண்ட் ஜெனரல் ஆணையாக அறைகூவிக் கேட்கிறேன்!

இந்த அலுவலகம் இருக்கிறதே, ஒரு மாதிரி... நரர்களோ, ராட்சதர்களோ, ரொம்ப ரொம்பச் சொற்பம்! அநேகமாக எல்லோருமே பூதேவர்கள்! மற்ற சர்க்கார் நிலையங்களிலிருப்பது மாதிரி “சீனியாரிட்டி”ப்படிக் கூட ‘ப்ரமோஷன்’ கிடையாது. உயர்ந்த பதவிக்குப் போவதற்குக் கூடத் தனித் தேர்வுதான். அதாவது பன்னாடை வேலை!

அறுபத்து மூவர் திருவிழா நின்று போனால் அது யாரைப் பாதிக்கும் என்பது தெரிகிறதா? அகவுண்டெண்ட் ஜெனரல் ஆஃபிஸ் ஊழியர்களை! எவ்வளவு மகத்தான பொறுப்பு!

இதில் ஆச்சரியம் எதுவுமில்லை! மாதம் முப்பது இராத்திரியும் அமாவாசையாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களில்லையா? அதுபோல், பொதுமக்கள் மனம் எப்போதும் இருட்டாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுமிருக்கிறார்கள்!

-  குத்தூசி குருசாமி (03-04-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It