டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை

இந்து மதப் பண்டிகையில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டம் தேவையா? இந்தத் தீபாவளி கதை - தமிழர்களை அழித்தொழித்ததைக் கொண்டாடச் சொல்லும் கதை என்பது ஒன்று. இதையும் தாண்டி இதில் அடங்கியுள்ள கேடுகள் என்ன?

•             உயிருக்கு ஆபத்தான நச்சுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த பிஞ்சுக் கரங்கள் வெந்து, நோய்களை சுமந்து வாழ்க்கையை தொலைக்கின்றன.

•             தீபாவளிக்கு டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தவும் பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகரிக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் அக்டோபர் இறுதிவரை தடை விதித்துள்ளது.

•             பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இல்லை. வெடி விபத்துக்குள்ளாகி, ஆண்-பெண் தொழிலாளர்கள் உயிர்ப்பலி ஆகிறார்கள்.

•             வணிக நிறுவனங்கள் இந்தப் பண்டிகையை நுகர்வோர் கலாச்சாரமாக்கி பொருள்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகின்றனர். தள்ளு படிகள் அறிவிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்ன ‘மகாவிஷ்ணு’, தள்ளுபடி விலை யில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், 4ஜி அலைபேசிகளை வாங்கச் சொன்னாரா? இது மதத்தின் புனிதமா? வர்த்தகத் தந்திரமா?

•             புரிந்து கொள்ளுங்கள். மதம், வர்த்தக சந்தையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே மதப் பண்டிகை ‘வர்த்தகத் திருவிழா’ என்ற வடிவ மெடுத்துள்ளது.

இனி ‘நரகாசுரனை’ கொன்ற மகாவிஷ்ணு ஒவ்வொரு ஆண்டும் “பக்தர்களே, அம்பானி, டாட்டா, சரவணா ஸ்டோர், ஜி.ஆர்.டி. தங்க மாளிகைகளில் பொருள்களை வாங்கினால் உங்கள் ஆத்மா சாந்தி பெறும்; சொர்க்கத்துக்கு வந்து சேருவீர்கள்” என்று சொன்னதாக புதிய புராணங்கள்கூட வரக் கூடும். இந்தப் பொருள்கள் நீடித்து உழைப்பதற்காக புரோகிதப் பார்ப்பனர்கள் - புதிய ‘இலட்சார்ச்சனை’, ‘ஜெபங்கள்’, ‘மந்திரங் களோடு’ ஒவ்வொரு வீட்டுக்கும் வரலாம். இதற்கு ‘கிரடிட் கார்டில்’ முன் கட்டணம் செலுத்தி, ‘ஆன்லைன்’ பதிவு செய்யலாம் என்ற அறிவிப்புகளும் வரலாம்.

•             இந்த ஆண்டு பண்டிகைக்கு மக்கள் 25,000 கோடி ரூபாய் செலவிடத் தயாராகிவிட்டார்கள் என்று வணிகம் சார்ந்த ஆய்வு மய்யம் ஒன்று பல நகரங்களில் ஆய்வு செய்து அறிவித்துள்ளது. பொருள்களை தேவைக்குத் தான் வாங்க வேண்டும். ஆடம்பரங்களை வெளிச்சம் போடும் வாழ்க்கை, வசதிப் படைத்தவர்களுக்கு தேவைப் படலாம்; ஆனால், நடுத்தர, ஏழை மக்கள் இத்தகைய மனநிலைக்கு தள்ளப்படுவதால் சந்திக்க வேண்டிய பொருளாதார நெருக்கடிகள் எவ்வளவு? சிந்திக்க வேண்டாமா?

•             பட்டாசுப் புகை சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடுகளை உருவாக்குகிறது. ‘வர்த்தக சந்தை’, பொருளாதார நெருக்கடிகளை சாமான்ய மக்களின் தலைமீது சுமத்துகிறது. தீபாவளிக்காகவே ‘மாத சேமிப்புகள்’, ‘பண்டுகள்’ என்று மக்கள் சேமிப்பு ஒரு நாள் கூத்துக்காக வீணாகிறது. ‘தீபாவளி’ என்றாலே ‘டாஸ்மாக்’ குதூகலமும் ‘எண்ணெய் தேய்த்து’ குளிக்கும் சடங்கு போல், ‘கங்கா ஜல’ புண்ணிய தீர்த்தமாகி விடுகிறது. இவ்வளவு கேடுகளையும் இழுத்துக் கொண்டு வரும் தீபாவளியை கொண்டாடத்தான் வேண்டுமா?

சிந்தியுங்கள், தமிழர்களே!

Pin It