ஒரு வழியாக ஊடகங்களின் அத்திவரதர் அனத்தல் முடிவுக்கு வந்திருக்கின்றது. பார்ப்பனப் பத்திரிகைகள், சூத்திரப் பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் 48 நாட்களாக ஆக்கிரமித்திருந்த அத்திரவதர் நம்மை எல்லாம் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு, பக்த கோடிகளை கண்ணீர்க் கடலில் மிதக்க விட்டுவிட்டு, அனந்தசரஸ் குளத்துக்குள் சயனிக்க சென்றுவிட்டார். இனி அவரைக் காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அத்திவரதர் தரிசனத்தை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அவரது பக்தகோடிகள் தொடுத்த வழக்கைக் கூட உயர்நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. எல்லா வழக்குகளிலும் சம்மந்தமே இல்லாமல், தங்களது உள்ளத்தை அரித்து தின்று கொண்டு இருக்கும் கருத்துக்களை சொல்வதற்கான மேடையாக நீதிமன்றத்தைப் பயன்படுத்தும் நீதிபதிகள் இதைப் பற்றியும் ஏதாவது திருவாய் மலர்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்.
அதாவது “அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு இந்த அரசு சரியான வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற கருத்து பக்தர்கள் மத்தியில் பரவலாக நிலவுகின்றது. எனவே அத்திவரதரை ஏன் இந்த அரசு தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது? அவரை ஒரே இடத்தில் வைத்து தரிசிக்க வைப்பதால் பெரிய இட நெருக்கடியும், கால விரயமும் ஏற்படுவதால் ஏன் அத்திவரதரை ஊர் ஊராக எடுத்துச் சென்று மக்களுக்கு காட்டக் கூடாது? அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் ஏன் அவரை நிரந்தமாக காட்சிப்படுத்தக் கூடாது? அப்படியான ஏதாவது திட்டம் இந்த அரசிடம் உள்ளதா என்பதைப் பற்றி இரண்டு வார காலத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என உத்திரவிடும் என்று நினைத்திருந்தோம். ஆனால் கோயில் மரபு மற்றும் வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட முடியாது என்று பொசுக்கென்று சொல்லி விட்டது.
இருந்தாலும் அத்திவரதரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தை முறையாக தூர்வாரவும், அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படும் நீரின் தன்மை குறித்தும், எந்தத் தண்ணீரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்தும் வரும் 19-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிபதிகள் உத்திரவிட்டுள்ளனர். நீதிபதிகளுக்கு அத்திவரதர் மேல் உள்ள அக்கறைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏற்கெனவே சென்னையில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த அரசு குளம், குட்டை, குவாரி என்று கண்ட கண்ட இடங்களில் இருந்து எல்லாம் தண்ணீரை எடுத்து, அதை ஏதோ பெயரளவிற்கு சுத்தம் செய்து, மிக மோசமான நிலையிலேயே மாநகராட்சி மூலம் குடிநீரை விநியோகித்துக் கொண்டு இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிக ஆச்சாரமான அத்திவரதரை அந்தத் தண்ணீரில் வைத்தால் அவரது உடல்நிலை என்னவாவது? ஏதாவது காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டு விட்டால் பின்னால் என்ன செய்ய முடியும்? அப்போல்லாவிலா சேர்த்து வைத்தியம் பார்க்க முடியும்? அதனால்தான் மேன்மை மிகு நீதிபதிகள் ஊன் உருக, உயிர் உருக தங்களது ‘ஆச்சாரமான புனித வாயால்’ இந்த உத்திரவைப் பிறப்பித்து இருக்கின்றார்கள்.
மற்றபடி அத்திரவரதரை தரிசிக்க வந்து, கூட்ட நெரிசலில் பலர் பலியானது பற்றியோ, உடல் ஊனமானவர்கள் பற்றியோ, மயக்கம் போட்டு சரிந்தவர்கள் பற்றியோ அத்திவரதருக்கோ, நீதிபதிகளுக்கோ, அத்திவரதரின் பூலோக மீடியேட்டர்களான பார்ப்பன அர்ச்சகர்களுக்கோ, எந்தவிதமான கருத்தும் இருக்கப் போவது கிடையாது. அவர்களைப் பொருத்தவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் அருளாளரை தரிசிக்க வரும்போது ஒன்றிரண்டு நர மனிதர்கள் வைகுண்ட பதவி அடைவது ஒன்றும் பெரிய செய்தியல்ல, இன்னும் சொல்லப் போனால் இது அவர்கள் செய்த பெரும் பாக்கியம்.
அத்திவரதரை தரிசிக்க முண்டியடித்த கூட்டத்தில் சாமானிய பக்தர்களில் இருந்து அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள், ரவுடிகள் வரை அனைவருமே இருந்தனர். தமிழ்நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சராசரியாக 7க்கு ஒரு நபர் அத்திவரதரை தரிசித்து இருக்கின்றார்கள். இன்னும் வாய்ப்பு கிடைக்காத, பொருளாதார வசதியற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த எண்ணிகை இன்னும் பெரிய அளவில் உயர்ந்திருக்கும் என்பது நிச்சயம். உண்மையில் இது நம்மைப் போன்ற பகுத்தறிவுவாதிகளை வேதனைப்படுத்தும் செய்தியாகும். இத்தனை ஆண்டுகால பகுத்தறிவு பரப்புரைக்குப் பின்பும் இத்தனை கோடி பேருக்கு தமிழ்நாட்டில் தன்மான உணர்வும், சுயமரியாதை உணர்வும் தரைமட்டத்தில் இருப்பது வேதனை அளிப்பதாகும். கல்வியறிவு விகிதம் உயர்ந்த அளவிற்கு மக்களின் பகுத்தறிவு சிந்தனை வளரவில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. இன்னொரு புறம் மக்கள் இப்படி கோயில்களில் குவிவது என்பது இந்த மக்கள் யாருமே நிம்மதியாக இல்லை என்பதையும் காட்டுகின்றது.
மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரைதான் கடவுளுக்கான தேவையும் இருக்கும் என்பது மார்க்சியப் பார்வையாகும். ஒரு அரசு எவ்வளவு கேடு கெட்டதனமாக, மக்கள் விரோத ஆட்சி நடத்துகின்றதோ அந்த அளவிற்கு கோயில்களை நோக்கிச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஏற்கெனவே இருக்கும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டதால்தான் புதிதாக வந்திருக்கும் அத்திவரதராவது தன்னுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க மாட்டாரா என்ற நம்பிக்கையில் இப்படி கோடிக்கணக்கான மக்கள் அத்திவரதரை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர்.
சமூகத்தில் பிரச்சினை அதிகரிக்க அதிகரிக்க புதிய கடவுள்களுக்கான தேவையும் அதிகரிக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உழைப்புகேற்ற ஊதியமின்மை, சீரழிந்த சமூக சூழ்நிலை போன்றவை குடும்ப அமைப்பையும், சமூகத்தையும் பெரிய அளவிற்கு துயரத்திலும், அதில் இருந்து விடுபட நினைக்கும் எத்தனிப்பையும் கொடுத்துள்ளது. ஆனால் மக்களிடம் இயல்பாக உள்ள சுயநலம், குறுகிய மனப்பான்மை, பிழைப்புவாதம், அற்பவாதம் போன்ற குணங்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது இந்தச் சமூக அமைப்பை மாற்றி அமைப்பதில்தான் உள்ளது என்று கருதவிடமால் செய்கின்றது. உடல் நோகாமல், வேலையை கெடுத்துக் கொள்ளாமல், எந்தவித பொருளாதார இழப்பையும் சந்திக்காமல், போராட்டம் செய்யாமல், ஆர்ப்பாட்டம் செய்யாமல், ஆக மொத்தம் எதுவுமே செய்யாமல் எல்லாமும் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அனைத்தையும் கடவுள் மாற்றியமைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் கடைசியில் கடவுளிடம் புகலிடம் தேடுகின்றார்கள்.
ஆனால் அத்திவரதரால் இந்த 48 நாட்களில் சாமானிய உழைக்கும் மக்கள் பயன் பெற்றார்களோ இல்லையோ, அத்திவரதரை வைத்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பட்டர்கள், திருட்டுத்தனமாக வி.ஐ.பி பாஸ்களை விற்ற ஜவுளி நிறுவனங்கள் என அனைவரும் சேர்ந்து 1000 கோடி ரூபாய் வரை கல்லா கட்டியதாக பார்ப்பன ஊடகமான ஆனந்த விகடனே எழுதியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக அரசு ஒதுக்கிய தொகை 29 கோடி ரூபாய் கூட என்ன ஆனது என்றே தெரியவில்லையாம். இந்த 48 நாட்களில் ஒரு கோடி பேர் தரிசித்ததாக சொல்கின்றார்கள். ஆனால் கோயில் உண்டியலில் சேர்ந்த மொத்த தொகை 7 கோடி ரூபாய்தானாம். ஆக மொத்தம் அத்திவரதரைக் காட்டி பக்தர்களிடம் மொத்தமாக ஆட்டையை போட்டிருக்கின்றார்கள். இந்துக்களுக்காக கட்சி நடத்துகின்றோம் என்று சொல்லிக் கொண்டு ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பயல் கூட இதைப் பற்றி வாயே திறக்கவில்லை என்பதை சூடு, சுரணையுள்ள பக்த கோடிகள் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பான் கடவுளின் பெயரால் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவனது பாதத்தைக் கழுவி குடிப்பதுதான் அடிமைகளின் புத்தியாகும்.
அத்திவரதர் தமிழ்நாட்டு பக்த கோடிகளுக்கு ஒன்றையுமே கொடுத்துச் செல்லவில்லை. மாறாக பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பணத் தொப்பைகளை வெடித்துவிடும் அளவிற்கு உப்ப வைத்துச் சென்றுள்ளார். இதை எல்லாம் பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றுகின்றது என்றால் பிணத்தை வைத்து ரோட்டில் பிச்சை எடுப்பவர்களுக்கும், அத்திவரதரைக் காட்டி 1000 கோடிகளை சுருட்டியவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பதுதான்.
- செ.கார்கி