மனிதர்களின் வாழ்வை சூறையாடி விட்டது வெள்ளம்; இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு; இயற்கையின் இந்த சீற்றம், பல்வேறு உண்மைகளை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது. இயற்கையின் உலகிலிருந்து பல்வேறு பரிணாமங்கள் பெற்று படிப்படியான உருமாற்றங்களுக்குப் பிறகு உருவாகியவன் மனிதன். ஆனால் இந்த இயற்கையின் நியதி மதம், ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற பேதங்களை உருவாக்கவில்லை. மக்களைப் பிளவுபடுத்தும் இந்த அடையாளங்களை உருவாக்கியது மனிதன் தான். இயற்கையின் சீற்றம் அனைத்து மத, ஜாதியினரையும் பாதிக்கச் செய்துவிட்டது. எனவே தான் கூறுகிறோம், இயற்கையின் நியதியில் மதம், ஜாதி, கடவுளுக்கு கிஞ்சித்தும் இடம் கிடையாது.
நான் யார்? நான் எப்படி வந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கிய மனிதன், தனக்கு மேலாக ஒரு உலகம், ஒரு சக்தி இருப்பதாகவும், அந்த உலகத்தை அடைவதற்காகவே இந்த பூமியில் நாம் வாழ வேண்டும் என்றும் நம்பினான். இயற்கையின் புதிர்களுக்கு அவனுக்கு விடை கிடைக்கவில்லை. கால ஓட்டத்தில் நாகரிகங்கள் தோன்றின. புதிர்களுக்கு அறிவியலின் தேடலில் விடைகள் கிடைத்தன. மனிதனின் அச்சத்தால் உருவான கடவுள்-மத நம்பிக்கை களுக்கானது மட்டுமே வாழ்க்கை என்ற கருத்து நிலையிலிருந்து மாறத் தொடங்கிய மனித சமூகம், இந்தப் பூமியில் நிறைவான வளமான மகிழ்ச்சிக்கான வாழ்க்கை என்ற புரிதலுக்கு வந்தது. ‘மேல் உலகம்’, ‘ஆன்மிக வாழ்க்கை’, ‘கடவுளின் சக்தி’ என்றெல் லாம் பேசி மக்களை ஏமாற்றி வரும் பார்ப்பனியம்கூட இந்த நம்பிக்கைகளைக் காப்பாற்றுவதற்கும் உறுதி செய்வதற்கும் அரசியலையும் அரசியல் அதிகாரத்தை யுமே தேடிச் செல்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது மக்களில் பெரும்பாலோர் கடவுளை நம்புவோர்தான். அவர்களேகூட தாங்கள் நம்பிக் கொண்டிருக்கும் தெய்வம் தங்களுக்கு தந்த தண்டனை! நாம் என்ன செய்ய முடியும்? என்ற முடிவுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள்; வரவும் முடியாது.
‘வெள்ளத்தில் நம்மை மூழ்க வைத்தது - இந்த அரசு செய்த பெரும் குற்றம்!’ என்ற கண்டனக் குரல்களே திரும்பும் இடமெல் லாம் ஒலிக்கின்றன. மனித வாழ்க்கை - உயிருக்கும் உடைமைக்கும் போராடும்போது கடவுள், மத நம்பிக்கைகளை எவரும் இறுகப் பிடித்துக் கொண்டிருப்பதில்லை. சொல்லப் போனால், அங்கே அரசும் சக மனிதர்களும் வரமாட்டார்களா? என்ற கவலைதான் மேலோங்கி நிற்கிறது!
கடவுளும் மதமும் காதொடிந்த ஊசிக்குக்கூட பயன்படாது என்றார் பெரியார்! இவை மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு தடைகளாகவே இருப்பதை ஊர் ஊராகப் போய் பேசினார்.
“மனிதன் முன்பு எது எது கடவுள் சக்தி, எது எது சக்திக்கு அப்பாற்பட்டது என்று கருதி வந்தானோ அவைகள் அனைத்தும் இன்றைக்கு மனிதச் சக்திதான் என்று உணர்ந்து விட்டானே!” (‘விடுதலை’ 12.3.1970) என்று தந்தை பெரியார் கூறியது நூற்றுக்கு நூறு சரியானதே என்பதை இப்போது காலம் உணர வைத்திருக்கிறது.
இனி எங்களுக்கு எங்கே இருக்கிறது வாழ்க்கை என்ற கேள்வியோடு வழி தெரியாமல் நிற்கும் நமது மக்களுக்கு நம்பிக்கை தருவது மனித சக்தியே தவிர, பெரியார் கூறியதுபோல் கடவுள், மத சக்திகள் அல்ல.
இந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட கடவுளோ, மதமோ ஓடி வரவில்லை. மாறாக மனித நேயம் கொண்ட சமூகத்தை நேசிக்கிற ஈரம் கொண்ட நெஞ்சங்கள், இளைஞர்களின் குழுக்களாக இயக்கங் களாக அமைப்புகளாக உதவிக்கரம் நீட்ட ஓடி வந்தன.
எந்த இ°லாமியர்கள் மீது பகைமையும் வெறுப்பையும் பார்ப்பனியம் விதைத்து வருகிறதோ அந்த இ°லாமிய சகோதரர் கள்தான் ஓடி ஓடி உதவினார்கள். இந்துக் கோயில்களையும் தூய்மைப்படுத்தினார்கள். பாதிக்கப்பட்டவர்களை மதத்தால் பிரித்துப் பார்க்கவில்லை. மனிதர்களாகவே பார்த்தார்கள். தொண்டு நிறுவனங்களும் கிறி°துவ அமைப்புகளும் நேசக்கரம் நீட்டின. கடவுள், மதங்களை மறுக்கும் திராவிடர் விடுதலைக் கழகமும் திராவிடர் கழகமும் உதவிட முன் வந்தன. இராயப் பேட்டைப் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் உணவுத் தேவைக்காக எரியூட்டிய அடுப்பின் நெருப்பு 10 நாள்கள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது.
வெள்ளம் வடியக்கூடிய கால்வாய்கள், ஏரிகளை ஆக்கிரமித்து, அங்கே கட்டிடங்களை எழுப்பி வெள்ளத்தின் ஓட்டத்தை மக்கள் வாழும் பகுதிக்கு திருப்பி விடக் காரணமாக இருந்தவர்கள் யார்? இவர்கள் எழுப்பிய சட்ட விரோதமான கட்டிடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ‘பூமி பூஜை’ போட்டுக் கொடுத்தவர்களும், ‘வாஸ்து சாஸ்திரம்’ பார்த்துச் சொன்னவர்களும் இதே பார்ப்பன மதவாதக் கும்பல்தான் என்பதை மறந்து விடாதீர்கள்! இது கடவுளுக்கும் தர்மத்துக்கும் எதிரானது என்று மறுத்துக்கூற, ‘அவாள்கள்’ தயாராக இல்லை; வருமானத்தையே பார்த்தார்கள்.
புகலிடம் தேடி வீதிகளில் நின்ற மக்களுக்கு மசூதிகள், தேவாலயங்களை இ°லாமியர்களும் கிறி°தவர்களும் திறந்து விட்டார்கள். இங்கே அடைக்கலம் புகுந்தவர்களில் பெரும்பான்மை மக்கள் ‘இந்து’ என்ற அடையாளத்தை சுமந்தவர் கள்தான். ஆனால், இந்த ‘இந்து’க்களுக்கு புகலிடத்துக்கு இதோ கோயில்களைத் திறந்து விடுகிறோம் என்ற ஒரு மனிதநேயக் குரல்கூட தமிழகத்தில் கேட்காமல் போனது ஏன்? இந்தக் கோயில்கள் பூஜைகளுக்கும் சடங்குகளுக்கும் மட்டும் தானே தவிர மக்களுக்கு அடைக்கலம் தருவதற்கு அல்ல என்பதையே மீண்டும் பார்ப்பனியம் உறுதிப்படுத்தியது. உயிர்த்துடிப்பு மிக்க இந்தக் கேள்வியின் உணர்வுகளை அவ் வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியுமா?
அடேயப்பா! மக்களின் ‘க்ஷமத்துக்கும்’ நாட்டின் அமைதிக்கும் எத்தனை எத்தனை யாகங்கள் நடத்தப் பட்டன? இலட்சம் இலட்சமாய் உணவுப் பொருள்கள் நெருப் பில் எரிக்கப்பட்டன. வேத மந்திரங்கள் காதைக் கிழித்துப் போட்டன. அந்த யாகத் தின் சக்திகள் எல்லாம் எங்கே போனது? வேத பார்ப்பனர்களின் வயிற்றுக்குத் தானே போனது. உண்மையில் அப்படி அந்த யாகத்துக்கு ஒரு சக்தி இருந்திருக்கு மானால், இத்தகைய பேரழிவுகள் நடந்திருக்குமா?
தேவாலயங்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாக்களின் ஆடம்பர கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டன. தங்களின் வழிபாட்டுத் தலம் பார்ப்பன சக்திகளால் தகர்க்கப்பட்டதை மறக்க முடியாத அந்த டிசம்பர் 6 - இருண்ட நாளில் வழக்கமாக நடத்தும் கண்டன ஆர்ப் பாட்டங்களை நிறுத்திவிட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஓடோடி வந்தார்கள் இ°லாமியர் சகோதரர்கள்.
ஆனால், பார்ப்பனக் கோயில்களில் கும்பாபிஷேகங்களும், வைதீக சடங்குகளும், ‘ஆகமங்களின்’ விதி, பிசகாமல் அப்படியே நடந்து கொண்டிருக்கின்றன. திருவிழாக்களும், ‘திவ்யமாக’ பார்ப்பன தர்மங்களோடு படம் காட்டி நிற்கின்றன! எங்கே போய் பதுங்கியது மனிதாபிமானம்?
“இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று முழங்கியவர்கள் எந்த சந்துக்குள் பதுங்கினார்கள்?
பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலோர் ‘இந்து’க்கள் என்பதற்காக பார்ப்பனர்கள் கவலைப்பட்டு கண்ணீர் வடிப்பார்களா என்ன? மழைக்கு யாகம் நடத்தியவர்கள் இப்போது மழை நிறுத்துவதற்கு யாகம் நடத்தப் புறப்பட்டிருக்கிறார்கள். அடுத்து மீண்டும் மக்கள் மறுவாழ்வு பெற யாகம் நடத்துவார்கள்.
எல்லாவற்றிலும் அடங்கிக் கிடப்பது ‘அவாள்’களது நலன்தான். பார்ப்பனர்களுக்காக பார்ப்பனர்களால் உருவாக்கப் பட்டு பார்ப்பன மேலாண்மையை நிலை நிறுத்துவதே இந்துமதம் என்ற உண்மையை இந்த வெள்ளப் பேரழிவும் உணர்த்தி யிருக்கிறது.