kuthoosi gurusamy 263இந்த விகிதத்தில் நாம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்!

அதிக உற்பத்தி! அதிக உற்பத்தி! என்று அமெரிக்கா தவிர எல்லா நாடுகளும் லபோ-லபோ என்று கதறிக் கொண்டு தானிருக்கின்றன.

அமெரிக்காகூட அணுக்குண்டு விஷயத்தில் மட்டும் “அதிக உற்பத்தி! அதிக உற்பத்தி!”

உற்பத்தி போதும் உற்பத்தி போதும்! நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! - என்று இதே நேரத்தில் ஒரு சிலர் கூக்குரலிடாமலும் இருக்கவில்லை! அதிலும் கடவுளாகப் பார்த்து உற்பத்தியாக்குகின்ற ஒரு விஷயத்தை, “நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று சொன்னால் அப்படிச் சொல்கிறவர் நிச்சயம் நெஞ்சழுத்தக் காரராகத் தானிருக்க வேண்டும்.

ஆதாமும் ஏவாளும் சேர்ந்துதான் நம்மையெல்லாம் உண்டாக்கினார்கள்! உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்குமே பெற்றோர்கள் இவர்கள்தான்! அல்லது பிரம்மாதான் நம் எல்லோரையும் “பெற்றெடுத்தவர்” என்று வைத்துக் கொண்டாலும் சரி! என்னைப் பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்!

இப்போது நாம் எத்தனை பேர் இருக்கிறோம், தெரியுமா? 220 கோடி! இருநூற்று இருபது கோடி! ஏதோ எல்லோரையும் கை தூக்கச்சொல்லி நேரிற் கண்டு குறித்து வைத்த எண்ணிக்கை இது, என்று கருதாதீர்கள்! உத்தேசமாகத்தான் கூற முடியும்! இரண்டொரு கோடி முன்பின்னாகவும் இருக்கலாம்! உலகில் மொத்தம் 16,28,43,264 மாடுகள் இருக்கின்றன என்று கூறினால் எப்படி எவராலும் மறுக்க முடியாதோ, அதுபோல! உத்தேசமாக 220 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்! ஆனால் இந்த 4-5 வரிகளை நீங்கள் படித்து முடிப்பதற்குள் இரண்டு குழந்தைகள் அதிகமாகியிருக்கலாம்! அதற்கு நான் பொறுப்பாளியல்ல! (பெற்றவர்கள்தான் பொறுப்பாளி!) எப்படியென்றால் மூன்று விநாடிக்கு இரண்டு குழந்தைகள் வீதம் பிறந்து கொண்டிருக்கின்றனவாம்! அதாவது நிமிஷத்துக்கு 40 (நாற்பது) குழந்தைகள்! நாள் ஒன்றுக்கு 57,600 குழந்தைகள்!

அடேயப்பா! என்று நீங்கள் பெருமூச்சு விடலாம்! விடுங்களேன்! எனக்கென்ன? நிமிஷத்துக்கு 40 வீதம் பிறந்து கொண்டே யிருந்தால் இந்த உலகத்தின் கதி என்ன ஆவது? என்று சிலர் கேட்கலாம்! “கல்லினுட் சிறு தேரைக்கும்...” என்ற பாட்டை ஒரு தடவை பாடிப் பார்த்துக் கொள்ளுங்கள்! பாட்டை மறந்து போனவர்கள் உங்கள் பாட்டுக்குச் சும்மாயிருங்கள்!

தென் அமெரிக்காவில் அதிகக் காப்பிக் கொட்டையை உற்பத்தியாக்கி, கடலில் கொட்டியழிக்கிறார்களாம்! அதுபோல கடவுளும் அதிக மக்களை உற்பத்தியாக்கி அவ்வப்போது அழித்துக் கொண்டு தானிருக்கிறார்! போர், நோய், விபத்து - முதலியவைகள் மூலம் அதிகமான மனிதர்களை ஓரளவு செலவழித்துக் கொண்டு தானிருக்கிறார்!

ஜூலியன் ஹக்ஸ்லி என்ற மேல் நாட்டு மேதாவி யொருவர், “இந்த அதிக மனித உற்பத்தியை உடனே தடுத்தாக வேண்டும்; அதாவது கட்டுப்படுத்தியாக வேண்டும்,” என்கிறார்.

அட பாவி! அரிசி கண்ட்ரோல், சர்க்கரை கண்ட்ரோல், பெட்ரோல் கண்ட்ரோல், இரும்பு கண்ட்ரோல் என்று எடுத்ததெல்லாம் கண்ட்ரோலாக இருக்கும் இந்த நாளில், குழந்தை கண்ட்ரோல் வேறா?

மற்ற விஷயங்களாவது மனிதனாக உற்பத்தி செய்தவை! குழந்தை விஷயம் கடவுள் செயல் அல்லவோ? தெரியாமலா எங்கள் நாட்டுப் புத்திசாலிகள் அரச மரத்தைச் சுற்றுகிறார்கள், ராமேஸ்வரம் போகிறார்கள்! துறவிகளிடம் சென்று பிள்ளை வரம் கேட்கிறார்கள்! சோதிடம் பார்க்கிறார்கள்

நமது ஸ்ரீ ராமபிரானைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரா இந்த ஹக்ஸ்லி?அவரே புத்திர காமேஷ் யாகம் செய்து ஏதோ ஒரு மாதிரியாக (இந்த இடத்தில் வால்மீகி இராமாயணம் படித்துப் பார்க்க வேண்டும், ராம பக்தர்கள்!) பிறந்தவராச்சே!

பிள்ளை பிறப்பதற்காக எங்கள் நாட்டில் என்னென்ன அதிசயங்கள் நடக்கின்றன, தெரியுமா?

“குணம்தான் பெரிது; கூட்டமல்ல,” என்கிறார், ஹக்ஸ்லி! அதாவது பன்றிபோலப் பல குட்டிகளைப் போடுவதை விட்டு சிங்கம்போல சில குட்டிகளுடன் நிற்பதே நல்லது என்கிறார்!

வேறு மாதிரிச் சொல்வதென்றால் பிள்ளை பெறும் மோட்டார் காருக்கு ஒரு ப்ரேக் வேண்டுமென்கிறார்! எப்போதுமே கார் ஓடிக் கொண்டிருக்கக் கூடாது. வேண்டும்போது ஓட வேண்டும்! வேண்டாத போது நிறுத்த வேண்டும்! இதுதானே?

சொல்வது நியாயமாகத் தானிருக்கிறது! கண்ட்ரோல் இல்லாத ‘கார்’ காடுமேடெல்லாம் போய் நொறுங்கித்தான் போகும்! ஆனால் கடவுள் விஷயம் என்ன ஆவது? அவரல்லவோ இந்த மனித உற்பத்திப் பெருக்கத்துக்குக் காரணம்?

அப்படியானால், அவரையும் கண்ட்ரோல் செய்ய வேண்டும். அதாவது நம் திட்டங்களில் அவர் குறுக்கிடக் கூடாது!

- குத்தூசி குருசாமி (06-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It