மதம், கடவுள், வேதம், சாஸ்திரம் முதலிய கற்பனைகளில் குருட்டு நம்பிக்கையுடைய பகுத்தறிவற்ற வைதீகர்களைக் காட்டிலும், தாம் பார்க்காத வைகளையும், அறியாதவைகளையும், நம்பாத பகுத்தறிவுடைய நாஸ்திகர் களே உலகத்தில் நன்மையை, மக்களுடைய நலத்தைக் கவனிப்பவர்கள் என்பது ஒரு உண்மையான அபிப்பிராயமாகும் என்று நாம் தீர்மானமாக நினைக்கிறோம். வைதீகர்கள் எவ்வளவு தான் யோக்கிய பொறுப்புடைய வர்களாயிருந்தாலும், இரக்கமன முடையவர்களாய் இருந்தாலும் கால நிலையையும் மக்களுடைய மனோபாவத்தையும், பிறர் நலத்தையும் அறிந்து அதற்குத் தகுந்த வகையில் நடந்து கொள்ளுவதற்குரிய அறிவு, அவர்களிடம் உண்டாவதில்லை.

periyar 347ஏனெனில், கொடுமைப்படுகிற மக்கள் கொஞ்சம் சுக மடையக்கூடிய சீர்திருத்த சம் மந்தமான விஷயங்கள் வருகிற பொழு தெல்லாம் அவர்கள் வேதங்களில் என்ன சொல்லப்படுகின்றது. புராணம் ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களில் என்ன சொல்லப்படுகின்றது என்று பார்த்து அதன்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களே ஒழிய தமது சொந்த புத்தியினால் ஆலோசித்துப் பார்க்க முன்வருவதே யில்லை. அவர்கள் சொந்த அறிவும் உபயோகப்படுவதேயில்லை. ஆனால் மதம், கடவுள், வேதம், சாஸ்திரம் முதலிய கற்பனைகளைக் கற்பனைகளாகவே அறிந்திருக்கின்ற ‘நாஸ்திகர்’ என்பவர்களோ எந்த விஷயங்களிலும் தமது சொந்த புத்தியை செலுத்தி யோசனை செய்யக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு யோசனை செய்வதனால் பிறருடைய சுகதக்கங்களையும் இலாப நஷ்டங்களையும் அறிந்து அவர்கள் பால் இரக்கங்கொண்டு உதவி செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மேலே நாம் கூறியவைகளைப் பொய்யென்றோ, பொருத்தமற்ற தென்றோ யாரும் கூறமுடியாது. இது வரையிலும் உலகில் நடந்து இருக்கின்ற எந்தச் சரித்திரங்களைப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்காமல் போகாது. புராணங்களில் ஆகட்டும், இதிகாசங்களிலாகட்டும், மற்றும் தேச சரித்திரங் களிலாகட்டும் மதம், வேதம், கடவுள், சாஸ்திரம் இவைகளை நம்பாத நாஸ்திகர்கள் ஜனசமூகத்திற்குத் தீங்கு செய்ததாகவோ அல்லது ஜன சமூகத்தை அடிமைப்படுத்தியதாகவோ, கொடுமைப்படுத்தியதாகவோ சொல்லப்படவில்லை. இதற்கு மாறாக மதம் என்னும் அபினையும், வேதம் என்னும் சாக்கடையையும், கடவுள் என்னும் பொய் மொழியையும், சாஸ்திரம் என்னும் குப்பையையும் கண்மூடித்தனமாக நம்பிய வைதீகர்களே ஜன சமூகத்தைக் கஷ்டத்திற்கு உள்ளாக்கி வந்திருக்கின்றார்கள் என்று அறியலாம்.

ஒரே வகையான மக்களை வேறு வேறு சாதிகளாகப் பிரித்து வைத்ததும், கொள்கை காரணமாக அதாவது மதம் காரணமாக ஒருவரை ஒருவர் வெறுப் பதும், பழிப்பதும், அடிப்பதும், குத்துவதும், கொல்லுவதும், கழுவேற்று வதுமான கொடுமைகளைச் செய்யும் படி வைத்ததும் குருட்டு நம்பிக்கை யுள்ள வைதீகர்களே ஆவார்கள். ஆகையால் எந்தக் காலத்திலும் வைதீகர் களால் ஜனசமூகம் விடுதலையோ, சுதந்திரமோ, சுகமோ அடைய முடியாது என்ற உண்மையான நிச்சயத்தோடுதான் நாம் வைதீகத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமெனக் கூறிவருகிறோம்.

ஜனசமூகத்தில் சரிபகுதியாக விருக்கும் பெண் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக்கட்டுண்டு கிடந்த தமது அடிமைத் தளையை அறுத்தெறிந்து சுதந்தரத்தோடு வாழ உலகமெங்கும் கிளர்ச்சி செய்து வருகின்றனர் என்பதும் அவருடைய கிளர்ச்சி நியாயமானதும், உண்மையானதும், அவசியமானதும் ஆகும் என்பதும், குடி அரசு வாசகர்களுக்குத் தெரியாத புதிய செய்தி அல்ல. பெண்மக்கள் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் அடிமையாகவே இருந்து துன்பப்பட்டு வாழக்கூடிய நிலையை அகற்றி, அவர்களும் ஆண் மக்களைப் போலவே சுதந்தரத்துடன் வாழச் செய்ய வேண்டுமென்றும் நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் இடைவிடாது பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறோம். மதம், வேதம், கடவுள், சாஸ்திரம் இவைகளின் பேரால் ஆண் களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி ஏற்பட்டிருக்கும் கொடுந்தன்மை யான - அக்கிரமமான - அநீதி ஒழிய வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்காகச் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமாகிய ‘விவாகம்’ அதாவது மணம் என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டு கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்! இவ்விஷயத்தில் ஆண் களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளையும், பெண்களுக்கு ஏற்படுத்தியுள்ள அநீதிகளையும் பாருங்கள் ! இந்து சமூகத்தில் ஆண்கள் எத்தனை மனைவி களை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்; உயிரோடிருக் கும் மனைவி பிடிக்காவிட்டால் அவளை நீக்கி விட்டு வேறு பெண்ணை விவாகம் பண்ணிக் கொள்ளலாம். மனைவி இறந்து விட்டாலும் வேறு மணம் புரிந்து கொள்ளலாம் என்பதற்கு மதம், வேதம், சாஸ்திரம் ஆகிய இவைகள் இடந்தருகின்றன. ஆனால் பெண்கள் பல கணவர்களை மணம் புரிந்து கொள்ளவும், உயிரோடிருக்கும் கணவன் பிடிக்காவிட்டால் அவனை நீக்கி விட்டு வேறு ஒருவனை மணம் புரிந்து கொள்ளவும், கணவன் இறந்து விட்டால் வேறு மணம் செய்து கொள்ளவும், அந்த மதமும், வேதமும், சாஸ்திரங்களும் தடைசெய்கின்றன.

இப்படிப்பட்ட வித்தியாசமும் கொடுமையும் இல்லாமல் பெண்களும் ஆண் மக்களைப் போலத் தங்கள் விருப்பப்படியே மணம் புரிந்து கொள்ளச் சுதந்தரமுடையவர்களாய் இருக்க வேண்டுமென்று கூறுகிறவர்களையும், இதற்காக சட்டஞ் செய்ய வேண்டுமென்று சொல்பவர்களையும், சட்டம் ஆக்குவதற்காக மசோதாக்கள் கொண்டு வருபவர்களையும், அதை ஆதரிப்பவர்களையும் வைதீகர்கள் நாஸ்திகர்கள் என்றும் மதத் துரோகிகள் என்றும் தூற்ற வாரம்பித்து விடுகின்றனர். “மண விஷயத்தில் ஆண்களுக்கு இருக்கும் உரிமை பெண்களுக்கும் இருந்தால் மணம் என்பதன் தெய்வீகத் தன்மை போய் விடும்; பெண்களின் கற்புத்தன்மை போய் விடும்; இந்திய மக்களின் கட்டுப்பாடான சமூகத்தன்மை அழிந்து விடும்”, என்று வைதீகர்கள் கூச்சலிட்டு எதிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் ஆண் மக்கள் விஷயத்தில் மாத்திரம் இக்கட்டுப்பாட்டைப் பிரயோகிக்கச் சம்மதிப்பதில்லை; ஆண் மக்கள் மாத்திரம் பல மனைவிகளை மணந்து கொள்ளுவதனாலும், ஒரு மனைவியை நீக்கிவிட்டு வேறு மனைவியை விவாகம் புரிந்து கொள்ளு வதனாலும் மனைவி இறந்தபின் வேறு மணம் புரிந்து கொள்ளுவதனாலும். ‘மணம்’ என்பதன் தெய்வீகத் தன்மை அழியவில்லையா? கற்புத் தன்மை அழியவில்லையா? இந்திய மக்களின் கட்டுப்பாடான சமூகத்தன்மை அழியவில்லையா? என்று தான் கேட்கிறோம்.

பொதுவாகப் பெண்மக்களுக்குச் சுதந்தரம் வழங்கும் விஷயத்தில் நமது நாட்டு வைதீகர்களுக்கு இருந்து வரும் மனப்பான்மையை நாம் பல தடவைகளில் விளக்கமாக எடுத்துக் காட்டி வந்திருக்கின்றோம். அன்றியும் சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்கள், பெண்கள் சுதந்தரம் சம்பந்தமான மசோதாக்கள் சட்ட சபைகளில் கொண்டு வரப்படும் காலங்களில், வைதீகர் கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் மனப்பான்மையை வெளியிட்டு வந்திருக்கின்றார்கள். இவ்விஷயங்களை பாலிய விவாகத் தடை மசோதாவை இந்திய சட்டசபையில் திரு. சாரதா அவர்கள் நிறைவேற்றிய காலத்தில் அதை எதிர்த்த பண்டித மாளவியா, திரு. எம். கே. ஆச்சாரியார் போன்றவர்களின் பேச்சுகளிலிருந்து உணரலாம்.

அன்றியும் இந்த ஆண்டிலும் சென்ற ஜனவரி மாதத்திலும், பிப்ரவரி மாதத்திலும் இந்திய சட்டசபையில், “விதவைகளுக்குச் சொத்துரிமை வழங்க வேண்டும்” என்ற மசோதாவை திரு. சாரதா அவர்கள் கொண்டு வந்த காலத்திலும் “இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு விவா கரத்துச் செய்து கொள்ள உரிமை வேண்டும்” என்ற மசோதாவை திரு. அரி சிங்கவர் அவர்கள் கொண்டு வந்த காலத்திலும், இவர்களை எதிர்த்து திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் போன்ற வைதீகர்கள் வெளியிட்ட அபிப்பிராயங்களைக் கொண்டும் வைதீகர்களின் மனப்பான்மைகளை நன்றாய் உணரலாம். சென்ற வாரங்களில் “விதவைகளுக்குச் சொத்துரிமை” வழங்கும் மசோதாவைப் பற்றி எழுதியிருந்தோம். ஆதலால் இப்பொழுது “விவாக விடுதலை” மசோதாவைப் பற்றி மாத்திரம் கூறி முடிக்கின்றோம்.

சென்ற 13-2-32 இல் இந்திய சட்டசபையில் மீண்டும் விவாக விடுதலை மசோதா விவாதத்திற்கு வந்த போது வைதீகர்கள் நடந்து கொண்ட மாதி ரியைக் கவனித்தால் நமது நாட்டினரனைவரும் வெட்கமடைய வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. அன்று காலையில் மசோதாவைப் பற்றிய விவாதம் தொடங்கிய போது பண்டித சத்தியேந்திர நாத சென் என்பவர் மசோதாவை எதிர்த்தும், திரு. ஜோஷி, ஆர். எஸ். சர்மா போன்றவர்கள் மசோதாவை ஆதரித்தும், திரு. சீத்தாராம ராஜு, திரு. ஸி. எஸ். ரெங்கய்யர் போன்றவர்கள் மசோதாவின் கொள்கையை ஒப்புக் கொண்டும், ஆனால் அதைப் பிறகு நிறைவேற்றிக் கொள்ளலாமென்றும் விளக்கெண்ணையாகவும் பேசினார்கள். இவ்வாறு காலையில் விவாதம் நடந்து முடிந்தது. மீண்டும் இடைவேளை போஜனத்திற்குப் பின் சட்டசபைக் கூடிய போது சபையில் 18 அங்கத்தினர்களே வீற்றிருந்திருந்தார்களாம், மற்ற அங்கத்தினர்கள், அதாவது இம்மசோதாவை எதிர்க்கும் மனப்பான்மையுடைய வைதீக அங்கத் தினர்களும், ஆதரிக்கும் மனப்பான்மையுடைய அங்கத்தினர்கள் சிலருங் கூடச் சட்ட சபைக்குள் வராமல் வெளியிலேயே நின்று விட்டார்களாம் சட்ட சபையிலிருந்து இருந்து கொண்டு தங்களுடைய உண்மையான அபிப்பிராயத்தை வெளியிடத் துணிவில்லாத இவ்வங்கத்தினர்களால் நமது சமூகத்திற்கோ, அல்லது தேசத்திற்கோ என்ன நன்மை செய்ய முடியும் என்று கேட்கின்றோம். கடைசியில், சட்ட சபைத் தலைவர் சபையில் “குவாரம்” உண்டாவதற்கு எவ்வளவோ முயன்றும் கடைசி வரையிலும் ‘குவாரம்’ ஏற்படாததால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியிலிருந்து “ விவாக விடுதலை” விஷயத்தில் நமது வைதீகர்களின் மனப்பான்மை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த வைதீகர்கள் “விவாக விடுதலை” உரிமையில்லாமையால் உண்டாகும் தீமைகளையும், நன்மைகளையும், விவாக விடுதலை உரிமை இருந்தால் அதனால் உண்டாகும் நன்மை தீமைகளையும் தங்கள் சொந்த அறிவைக் கொண்டு நன்றாய் ஆலோசித்துப் பார்த்தால் “விவாக விடுதலை” மசோதாவை எதிர்க்க முன் வருவார்களா? என்று கேட்கின்றோம்.

ஒரு குடும்பத்திலுள்ள கணவன் மனைவிகளுக்குள் ஒற்றுமையில்லா விட்டால் எந்தக் காலத்திலும் ஒற்றுமை ஏற்பட முடியாத அதிருப்தி ஏற்பட்டு விட்டால், அல்லது வியாதி யுடையவர்களாய் இருந்தால் ஒருவருடைய நடத்தை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தால், தாங்கள் கணவன் மனைவிகளாக வாழ்வதில் சிறிதும் விருப்பமில்லாதவர்களாயிருந்தால் அவர்கள் தங்கள் மண ஒப்பந்தத்தை சட்ட மூலமாக நீக்கிக் கொள்ளுவதில் என்ன குற்றமிருக்கின்றது? மனவொற்றுமையில்லாத இருவர்கள் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதில் ஏதாவது சௌகரியமோ சுகமோ அவர்களுக்கு இருக்க முடியுமா? ஆனால் ஆண் மகன் மாத்திரம் மணம் செய்து கொண்ட மனைவி பிடிக்கா விட்டால் யாதொரு தடையுமின்றி உடனே அவளை நீக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணஞ் செய்து கொள்ளுகின்றான். இது சட்டப்படி செல்லத்தக்கதாகவும், குற்றமற்றதாகவும் இருக்கிறது. ஆனால் கணவனால் நீக்கப்பட்ட பெண்கள், கணவன் உயிரோடு இருக்கும் வரையிலும் தனக்கு விருப்பமுள்ள வேறொரு புருஷனை மணந்து கொள்ளச் சட்டப்படி உரிமையில்லை.

இந்தக் காரணத்தால் கணவனால் நீக்கப்பட்ட - வெறுக்கப்பட்ட - அநேக பெண்கள் திருட்டுத் தனமாகத் துன்மார்க்க வழியில் பிரவேசிக்கவும் சில சமயங்களில் மானம் பொருக்க மாட்டாமல் தற்கொலை செய்து கொள்ளவும், தனித்திருந்து விபசாரம் புரிந்து மானமற்ற வாழ்க்கை நடத்தவும் நேருகின்றது. பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களெல்லாம் மாமன், மாமி, புருஷன் முதலியவர்களின் கொடுமை சகிக்க முடியாமலும், வேறு ஒரு புருஷனை மணந்து வாழ வழியில்லாமலும்; தனித்திருந்து கௌரவமாக ஜீவிப்பதற்கு முடியாமலும், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளுகிறார்களே ஒழிய வேறு காரணம் இல்லை என்று சொல்லலாம். இது போலவே மாமன், மாமி, பெண்சாதி முதலியவர்களின் கொடுமைக்கு அஞ்சித், தற்கொலை செய்து கொண்ட ஆண்கள் எவரேனும் உண்டென்று கூறமுடியுமா?

ஆகையால் பெண்களும் ஆண்களைப் போலவே உரிமைப் பெற்றவர்களாயிருந்தால் இத்தகைய கொடுமைகள் நடைபெற முடியுமா? என்று தான் கேட்கிறோம். கணவன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் வியாதியஸ்தனாயிருந்தாலும், ஆண்மை அற்றவனாய் இருந்தாலும், கொடுமைப்படுத்துகின்றவனாய் இருந்தாலும் அவனையே ஆயுள் வரையிலும் தெய்வமாகக் கொண்டு அவனுக்கு அடிமையாக இருந்து வாழ்வது தான் ‘மணத்தின் தத்துவம்’ ‘விவாகத்தின் தெய்வீகத்தன்மை’ ‘ரிஷிகளின் புனிதமான சட்டம்’ பெண்கள் கடமையென்று விதிப்பது ஒரு மதமாகுமா? வேதமாகுமா? சாஸ்திரமாகுமா? நீதியாகுமா? அறிவுடைமை யாகுமா? என்று நன்றாய் யோசனை செய்து பாருங்கள்!

ஆகையால் இத்தகைய கஷ்டங்களில்லாமல் ஆண் பெண் இருவரும் சமவுரிமையடைய வேண்டுமென்ற நல்லெண்ணத்துடனேயே திரு. அரி சிங்கவர் அவர்கள், ‘விவாக விடுதலை மசோதா’வைக் கொண்டு வந்தார். இத்தகைய ஒரு நல்ல சீர்திருத்த மசோதாவை வைதீகர்கள் ஆதரிக்க மனமில்லாமலும் அவ்விவாதத்தில் அதிகமாகக் கலந்து கொள்ள இஷ்ட மில்லாமலும் சட்ட சபைக்கு வெளியிலேயே நின்று விட்டார்கள். இவ்வாறு வெளியிலேயே நின்றவர்களுடன் அரசாங்க அங்கத்தினர் சிலரும் இருந்த னராம்! இதனால் அரசாங்கமும் வைதீகர்களுடன் சேர்ந்து கொண்டு இந்த மசோதாவை எதிர்த்ததாகத் தானே அர்த்தம்? இவ்வாறு எத்தனை நாளைக்கு அரசாங்கத்தார் வைதீகர்கள் வார்த்தைக்கு அஞ்சிச் சீர்திருத்தத்திற்கு விரோதியாய் இருப்பார்களென்று கேட்கின்றோம். உண்மையிலேயே நாட்டின் நன்மையில் கருத்துடைய அரசாங்கமாய் இருந்தால் இது போன்ற சீர்திருத்த மசோதாக்களை ஆதரிக்க வேண்டியது கடமையாகும். அல்லது மத நடு நிலைமை வகிக்கக்கூடிய அரசாங்கமாய் இருந்தால் மசோதாவை எதிர்க்காமல் நடுநிலைமை வகிக்க வேண்டும். இரண்டுமில்லாமல் மசோதாவுக்கு எதிராக உள்ள வைதீகர்களுடன் சேர்ந்து கொண்டு வெளியேறுவது ஒழுங் கான காரியமா என்று தான் கேட்கிறோம்.

வைதீகர்களும் அரசாங்க உறுப்பினர் சிலரும் “விவாக விடுதலை மசோதா”வைக் கெடுக்கும் பொருட்டு சபைக்குள் வராமலிருந்த காரணத்தால், உத்தியோகப் பற்றற்றவர்களின் மசோதாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நாளில் அரை நாள் வீண் போயிற்று. இனியும் உத்தியோகப் பற்றற்றவர்களின் தீர்மானங்கள் விவாதத்திற்கு வரும் நாளில் இந்த மசோதாவும் வரத்தான் போகிறது. அப்பொழுதும் இம்மாதிரி சட்டசபைக்குள் வராமல் வெளியி லேயே நின்று கொண்டு நாளை வீணாக்கப் போகிறார்களா? அல்லது மசோதாவை எதிர்த்துத் தோற்கச் செய்யப் போகிறார்களா? அல்லது வேறு என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

இவ்வாறு வைதீகர்களும், அரசாங்கமும் சீர்திருத்தங்களை எதிர்ப்ப தனால் அவ்வுணர்ச்சியை அடக்கி விட முடியாது என்பது நிச்சயம் என்று மாத்திரம் எச்சரிக்கை செய்கிறோம். வரவர மக்களுடைய மனத்தில் சமூகச் சீர்திருத்த உணர்ச்சி மிகுந்து வருவதன் பலனாக சீர்திருத்தங்களுக்கு விரோத மாக இருக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், வைதீகம் ஆகியவைகளின் ஆதிக் கம் வீழ்ச்சிடையும் காலம் தூரத்திலில்லை என்றே நாம் கூறி முடிக்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 21.02.1932)