kuthoosi gurusamyஒருவர் உயிர் நீத்த பிறகு அவருடைய குறைகளைக் கூறக் கூடாது; நற்குணத்தை மட்டுந்தான் கூற வேண்டும், என்று சொல்கிறார்கள்.

ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று பன்முறை யோசித்துப் பார்த்தேன். சரியான காரணம் தோன்றவேயில்லை. ஷேக்ஸ்பியர் கூட இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். “மனிதன் செய்யும் தீமைகள் அவனுடன் புதைக்கப்படுகின்றன,’ என்று கூறியிருப்பதாக ஞாபகம்!

ஒரு மனிதன் உயிருள்ள வரையில் அவன் செய்யும் அக்கிரமங்களை யெல்லாம் கூறிவிட்டு, அவன் இறந்து போன பிறகு அவனைப் பற்றிப் புகழ்வது என்பதன் தத்துவமென்ன? சங்கராச்சாரியார் பகற்கொள்ளை யடிக்கிறார் என்றும், பண்டார சந்நிதி கிருஷ்ண லீலை செய்கிறார் என்றும் சதா கூறிவிட்டு, இருவரும் மறைந்தவுடனே, (ஓம்! தத்ஸம்!) இவர்களைப் போன்ற பேரறிஞர்கள் இருக்கவே முடியாது; இவர்கள் மரணத்திற்காக நாம் துயரக் கடலுக்குள் தலைகீழாகக் குதித்து உயிரை விடத் தயாராயிருக்கிறோம்,” என்று எழுதினால் அது நேர்மையாகுமா?

இது பற்றிப் பலமுறை யோசித்துப் பார்த்த பிறகு கீழ்க்கண்ட முடிவுக்கு வந்தேன்.

சிரார்த்தம் (திதி) கொடுக்கிறார்களே! அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதென்று!

எப்படித் தெரியுமா? தகப்பன் உயிருள்ள வரையில் தனயன் தடியால் அடிப்பான். அவர்மீது வழக்குத் தொடர்வான். பேச மாட்டான். முறைத்துப் பார்ப்பான். வீட்டை விட்டு விரட்டுவான். கிழட்டுக் கழுதைக்கு ரப்பர் மாதிரி உயிர் நீண்டு கொண்டே யிருக்கிறதே! என்று தன் நண்பனிடம் கூறுவான்!

ஆனால் அவர் செத்தாரோ இல்லையோ, அய்யரை அழைப்பான், கோதானம் கொடுப்பான்! கருமாந்திரம் செய்வான்! மாதா மாதம் “மாசியம்” செய்வான். “வருஷாப்திகம்” செய்வான். இன்னும் சாகிற வரையில் அரிசி உப்பு, புளி, தட்சணையோடு திதியும் கொடுத்து வருவான்! இவைகளெல்லாம் (பசு மாடு தவிர!) புரோகிதன் வயிற்றில் தான் விழுகின்றன என்பது அவனுக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் செத்துப் போன தன் தந்தையின் ‘ஆவி’க்கு ஆகாயத்தில் முள் குத்தாமலிருக்க வேண்டுமே என்பதற்காக மிதியடிக் கட்டையைத் தானம் தருகிறான்! இத்தனையும் அவருக்குப் போய்ச் சேருவதற்காகவாம்!

கொடுக்கிறதுதான் கொடுக்கிறானே! தன் வீட்டுக்காரர்கள், அல்லது சுற்றத்தார், அல்லது நெருங்கிய நண்பர்கள் வழியாகக் கொடுத்தனுப்பக் கூடாதா?

எவனோ ஒரு அயோக்கியன், (ஒருக்கால் தந்தைக்கு விரோதியாகவே இருந்தவனாகவும் இருக்கலாம்!) முன்பின் தெரியாதவன், நம் வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்காதவன், அவன் வீட்டுக்குள்ளேயே நம்மை (நாயாக இல்லாதபடியால்) அநுமதிக்காதவன் - ஆகிய இப்பேர்ப்பட்டவனை நம்பியா தந்தைக்குச் சேர வேண்டிய சாமான்களை அனுப்புவது?

ஒருவன் செத்த பிறகு “இனிச்சாம் பிணங்கள்” செய்யும் பித்தலாட்டங்களில் இதுவுமொன்று!

காந்தியார் நினைவு நிதிக்காக மத்திய மாகாண போலீஸார் 1,64,456 ரூபாய் பணமுடிப்புக் கொடுத்திருக்கிறார்களாம்!

- குத்தூசி குருசாமி (13-11-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It