ஜீவகாருண்யம்
தலைவரவர்களே! தோழர்களே!
ஜீவகாருண்யத்தைப் பற்றி நான் பேச வந்திருப்பது உங்களில் பலருக்கு வேடிக்கையாகக் காணப்படலாம். ஏனெனில், நான் நீங்கள் பெரும்பாலும் கருதி இருக்கிற ஜீவகாருண்யத்தைச் சேர்ந்தவனல்ல என்று நீங்கள் கருதி இருப்பதேயாகும். ஜீவ காருண்யம் என்கின்ற வார்த்தைக்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான அர்த்தம் கொண்டிருக்கிறார்கள். சிலர் மாம்சம் சாப்பிடாமல் இருந்தால் அதுவே பெரிய ஜீவகாருண்யமென்றும், மற்றப்படி ஜீவர்களுக்கு எவ்வித மன வருத்தத்தையும், உடல் வருத்தத்தையும் செய்தால் குற்றமில்லை என்றும் கருதி இருக்கிறார்கள். சிலர் ஜீவர்களை ஹிம்சைப்படுத்தாமல் இருந்தால் போதும் என்றும், மாம்சம் சாப்பிடுவதைப் பற்றிக் குற்றமில்லை என்றும் கருதி இருக்கிறார்கள்.
சிலர், சில ஜந்துக்களை மாத்திரம் இம்சைப்படுத்தக் கூடாதென்றும், மற்ற ஜந்துக்களைப் பற்றிக் கவலை இல்லை என்றும் கருதி இருக்கிறார்கள். ஜீவகாருண்யத்திற்கு இந்தப்படி எத்தனையோ விதமான கருத்துக்களும், தத்துவங்களும் இருக்கின்றன.
விவரமாய்ச் சொல்ல வேண்டுமானால் ஜீவகாருண்யம் என்பது ஒவ்வொரு தேசத்துக்கும், ஒவ்வொரு மதத்துக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாய்க் கருதப்படுகின்றது.இந்துக்கள் என்பவர்கள் பசுவை வணங்குவார்கள். அதனிடத்தில் அளவுக்கு மீறிய மரியாதையும், ஜீவகாருண்யமும் காட்டுவார்கள். யாராவது பசுவைக் கொன்றால் சாப்பிட்டால் அவர்களிடம் குறோதமும், வெறுப்பும் கொள்ளுவார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்துக்களுக்கு மகமதியர்கள் மீது வெறுப்பும் அசூசையும் இருந்து வருகின்றன. இதனாலேயே பல இடங்களில் இந்து முஸ்லீம் கலகங்களும் கக்ஷிகளும் உண்டாகின்றன. இந்துக்களிலேயே பறையர், சக்கிலியர் என்று அழைக்கப்படும் வகுப்பார், மாட்டு மாம்சம் உண்பதினாலேயே அவர்களைக் கீழ் ஜாதிக்காரர்கள் என்று கருதுவதாகவும் அதனாலேயே அவர்களைத் தொடுவதற்கு அஞ்சுவதாகவும் சொல்லப்படுகின்றன. இதை அனுசரித்து பல சாஸ்திரங்களும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இப்படிப்பட்ட இந்துக்கள் பசுமாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்று பார்த்தால் வண்டியிலும் உழவிலும், ஏத்தத்திலும், செக்கிலும் கட்டி அதை சாகும் வரை உபத்திரவிக்கிறார்கள். அதை நல்ல காளைப் பருவத்தில் கட்டிப் போட்டு விதர்களை நசுக்கி கொட்டாப்பிடியால் தட்டிக் கரைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். அதன் பாலை அதன் கன்றுக்குக் கொடுக்காமல் அதற்கு வெறும் புல்லைப் போட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடுகிறார்கள். இப்படி அர்த்தமற்ற ஜீவகாருண்யம் பலப்பல ஜீவர்கள் பெயரால் எத்தனையோ விதத்தில் உலகத்தில் வழங்குகின்றன. பக்ஷி, மிருகம், ஊர்வன ஆகிய விஷயங்களில் காட்டப்படும் ஜீவகாருண்யத்தில் ஒரு சிறு பாகம்கூட மனித ஜீவனிடத்தில் மக்கள் காட்டுவது அருமை என்றே சொல்லலாம்.
மக்கள் சமூக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள்? எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள்? என்று பார்த்தால் நடைமுறையில் உள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள் தனமானதென்றே சொல்லலாம்.
நான் ஏன் வந்தேன்?
நான் ஏன் இங்கு இந்த ஜீவகாருண்யக் கூட்டத்திற்கு வந்தேன் என்று சிலர் கேட்கலாம். உண்மையிலேயே இங்கு கடலாடியில் நடக்கும் யாகத்தில் ஏதோ சில ஐந்தோ பத்தோ ஆடுகள் கொல்லப்படுவதை நான் பிரமாதமாகக் கருதி இங்கு வரவில்லை. லக்ஷக்கணக்கான ஆடுகள் மாடுகள் மற்றும் சில ஜீவர்கள் தினமும் கொல்லப்படுவது எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட கொலைகளை என் போன்றவர்களால் நிறுத்துவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும். அப்படி இருக்க, பின் ஏன் நான் இங்கு வந்தேனென்றால் யாகத்தின் புரட்டையும், அது செய்யப்படுவதின் உள் எண்ணத்தையும் அதனால் ஏற்படும் பலன்களையும் "உயர்ந்த ஜாதியார் அஹிம்சா தர்மமுள்ள அந்தணர்" என்று கர்வமுடன் தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டவும் கொல்லப்படும் பிராணிகள் யாகத்தின் பேரால் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பதையும் ஜனங்களுக்கு அறிவித்து இப்படிப்பட்ட கொடுமையான சித்திரவதை இனி நிகழாமல் இருக்கும்படி செய்ய சர்க்காரைத் தூண்டுவதற்காகவுமே இங்கு வந்திருக்கிறேன்.
இவற்றில் என் அபிப்பிராயம் தவறுதலாய் இருந்தாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நான் உண்மையானதென்று அறிந்ததை எவ்வித விருப்பு வெறுப்பு இல்லாமல் பொது நன்மையை உத்தேசித்து சொல்லுகின்றேன். உங்களுக்கு சரியென்று பட்டதை எடுத்துக்கொண்டு அதற்கும் உங்களாலான உதவி செய்யுங்கள். மற்றதைத் தள்ளி விடுங்கள்.
கொலைக் கொடுமை
முதலில் கொலைக் கொடுமைகளைப் பற்றிச் சொல்லுகிறேன். யாகத்தில் கொல்லப்படும் ஆடுகள் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பது தங்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். நான் அறிந்த மட்டில் ஆட்டை கால்களைக் கட்டிக் கீழே தள்ளி கொம்பைப் பிடித்து ஒருவர் அமிழ்த்துக் கொண்டு வாய்க்குள் மாவைத் திணித்துக் கொண்டிருக்க ஒருவர் நன்றாக மூச்சுவிடாமல் கட்டி சத்தம் போடாமல் செய்து ஒருவர் விதர்களை கிட்டி போட்டு நசுக்க, மற்றவர் வயிற்றில் ஆயுதங்களால் இடித்து கிழித்து அதன் சிற்சில உறுப்புகளை தனித் தனியாய் அறுத்து எடுப்பதன் மூலம் கொல்லப்படுகிறதாம். இது சகிக்கக் கூடியதா? உயிர்களிடத்தில் அன்பு காட்டக்கூடிய ஜாதியார் செய்யக்கூடியதா? அஹிம்சைக்காரருக்கு ஏற்றதா? இப்படிப்பட்டவர்கள் மேல் ஜாதிக்காரர்களா? இவர்களுக்குப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுண்டா? மற்றவர்களைப் பார்த்து கீழ் ஜாதியார் என்றும், ஜீவகாருண்யமில்லாதவர்கள் என்றும், சண்டாளர்கள் என்றும் பாபிகள் என்றும், பாதகர்களென்றும் அழைக்க இவர்களுக்கு உரிமை உண்டா? யோசித்துப் பாருங்கள்.
ஆடு கோழியை தலைகீழாகப் பிடிப்பதையும், தர தரவென்று இழுப்பதையும் ஜீவஹிம்சை என்று சட்டஞ்செய்து அம்மனிதர்களைத் தண்டிக்கும் சர்க்கார் இவர்களை என்ன செய்ய வேண்டும்? ஆலையிலிட்டு நசுக்கும்படி சட்டம் செய்தால் அதை தப்பு என்று சொல்ல முடியுமா? யோசித்துப் பாருங்கள். இந்த யாகம் ஆட்டுக்கு மாத்திரமில்லையாம். மாடு, மனிதர், குதிரை முதலியவைகளுக்கும் உண்டாம். இப்படியே விட்டு விட்டால் நாளைக்கு இந்த ஆடுகளின் கதிதானே மனிதர்களுக்கும் ஏற்படும். மத சம்மந்தத்தில் அரசாங்கம் நுழைவதில்லை என்று சொல்லி அரசாங்கம் சுலபமாய் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நாளைக்கு நரமேதயாகம் செய்து 10, 20 மனிதர்களை இந்தப்படி சித்திரவதையான கொலைபாதகம் செய்தால் மதத்தில் பிரவேசிக்காமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்குமா? அதுபோலவே இப்போது கருதி இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான சித்திரவதைக் கொலைகளையும், ஹிம்சைகளையும் அரசாங்கம் ஏன் நிறுத்தக்கூடாது? பார்ப்பனர்களுக்குப் பயந்தோ, மதத்திற்குப் பயந்தோ தாங்கள் சும்மா இருப்பதாக சொல்லுவார்களானால் இப்படிப்பட்ட கொலையும், சித்திரவதையும் தங்கள் மதத்திற்கு விரோதம் என்று கருதி அதற்காக வேதனைப்படும் ஜயின மதத்தினுடையவும், ஜயினர்களுடையவும் கொள்கையும், மரியாதையும், உணர்ச்சியும் காப்பாற்றப்பட வேண்டாமா என்று கேள்க்கின்றேன்.
இராமாயணம்
தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும்போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படுங் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள். இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்த சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாகமே யாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்ததற்காகத்தானே கொல்லப்பட்டிருக் கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார்தான் துணியமாட்டார்கள்? யாகத்தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப்பட்டு அதை நிறுத்த முயர்ச்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?
நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனுகூலமான ஆக்ஷி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம். சக்தியும் ஆக்ஷி உரிமையும் இருக்குமானால் நாம் தாடகையைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டது மல்லாமல் அந்தம்மாளை இழித்துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்துவிட்டார் என்றும் மிருகங்களையும், பக்ஷிகளையும் பச்சையாய் சாப்பிட்டார் என்றும், பொருத்தமற்றதும் போக்கிரித்தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள். இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்யம் காரணமாய் ஏற்பட்ட ஆரியர் திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர்களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதற்காக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும் ராம லக்ஷ்மணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ராவணனாதியோர் திராவிட அதாவது ஜீவகாருண்யக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்கவில்லையா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
அக்கதையில் மிருகங்களையும் ஜீவர்களையும் கொல்லும் விஷயங்களிலும், மது மாம்சம் சாப்பிடும் விஷயங்களிலும், சூதுவாது செய்த விஷயங்களிலும் பெண்களை இழிவாய் நடத்திக் கொடுமைப் படுத்தின விஷயங்களிலும் சிறிதும் தயங்காத ராம லக்ஷ்மணக் கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந்திருப்பதுமல்லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார்கள். அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம லக்ஷ்மணாள் செய்த அளவுகூட செய்யாதவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்துவிட்டார்கள். திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்துவிட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராக்ஷதனாம்; ஒருவன் (விபூஷணன்) தேவகணத்தைச் சேர்ந்த(ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலியவைகளை மேற்கண்டபடி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதிலிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராமணர்கள் ஆகியவர்களின் யோக்கியதைகளை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித்தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.
புண்ணியம், சொர்க்கம்
இது நிற்க, இந்த யாகங்கள் புண்ணிய காரியங்களாம். சுவர்க்கத்திற்குக் காரணமானவைகளாம். புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களை சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாபத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால் கைகளைக் கட்டிப் போட்டு வாயில் மண்ணை அடைத்து விதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று போட்டால் புண்ணியமும் சொர்க்கமும் கிடைத்துவிடும்போல் இருக்கிறது. வேண்டுமானால் சில மந்திரங்களையும் சொல்லிவிடலாம். இதில் நமக்கு இரண்டு வித லாபம் போலும். சொர்க்கம் நரகம் என்பவைகள் சோம்பேறிகளின் வயிற்றுப் பிழைப்பு சாதனங்கள் என்று பல தடவை நான் சொல்லி வந்திருக்கிறேன். பாடுபட்டு உழைத்தவன் பொருளைக் கையைத் திருகிப் பிடுங்கிக் கொள்வதற்குப் பதிலாக சொர்க்க நரகங்கள் என்னும் பூச்சாண்டிகளைக் காட்டி பயப்படுத்திப் பிடுங்கிக் கொள்ளப்படுகின்றன. இப்படிப்பட்ட சொர்க்க நரகத்துக்கு உண்மையான அர்த்தம் நல்ல விதத்தில் செய்ய வேண்டுமானால் மனிதனின் மூர்க்க சுவாபமும் பழிவாங்குந் தன்மையும் சொர்க்க நரகம் என்னும் வார்த்தைகளால் கற்பனைகளால் பிரதிபலிக்கின்றது என்பதேயாகும்.
யாகத்தின் கருத்து
இப்படிப்பட்ட சொர்க்க நரகத்தைப் பிரசாரம் செய்யவே யாகங்கள் முதலியன செய்யப்படுகின்றன. யாகத்தில் பிராமணர்களுக்கு நம்பிக்கை இல்லையென்பதே எனது அபிப்பிராயம். மற்றவர்களை மிரட்டவும் ஏமாற்றவும் சிலர் செல்வம் சேர்த்து வயிறு பிளைக்கவுமே இப்போது யாகங்கள் செய்யப்படுகின்றன.
யாக சம்பந்தமான வேத சாஸ்திர ஆதாரங்கள் நமக்குப் பொருத்தமானவைகளாகுமா? நாம் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படிப்பட்ட கொடுமைக்கும், கொலை பாதகத்துக்கும், சித்திரவதைக்கும் ஒரு கடவுள் சொர்க்கத்தைக் கொடுப்பதாய் இருந்தால் கடவுளின் தன்மையாகக் கூறப்படும் அன்பு, கருணை என்று சொல்லுவது உண்மையாய் இருக்க முடியுமா? கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனை மற்றொரு ஜீவன் சித்திரவதை செய்து ஆகுதி கொடுப்பதைக் கடவுள் விரும்புகின்றார் என்றால் ஜீவர்களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்தார் என்பது உண்மையாயிருக்க முடியுமா? கடவுள் பேராலேயே இப்பேர்ப்பட்ட காரியங்கள் நடப்பதை ஒரு கடவுளோ, அரைக் கடவுளோ, அணுவளவு கடவுளோ இருந்தால் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? அல்லது கடவுளுக்கு இது தெரியாது என்று சொல்லி விட முடியுமா? இவைகளெல்லாம் பாமர மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிப் பிரசாரமேயொழிய வேறில்லை. இப்படிப்பட்ட யாகங்களுக்கு சங்கராச்சாரி சுவாமியார் என்பவரும் அனுமதியளிக்கிறாராம்; பணம் கொடுக்கிறாராம். இதிலிருந்து சங்கராச்சாரிகள் என்பவர்கள் யோக்கியதைகளையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
யாகம் ஏன் செய்யப்படுகிறது?
இந்த யாகங்கள் இப்பொழுது ஏன் செய்யப்படுகின்றன? என்பது உங்களுக்குத் தெரியுமா? சனாதன தர்மங்கள் கெட்டுப் போய்விட்டனவாம். எதனால் என்று கேட்பீர்களானால் சாரதா சட்டம் செய்யப்பட்டுவிட்டதாம். தீண்டாமை ஒழிப்புச் சட்டமும், கோவில் பிரவேசச் சட்டமும் இப்போது இந்திய சட்டசபையில் இருக்கிறதாம். அவை நிறைவேறிவிடும் பக்ஷத்தில் சனாதன தர்மத்துக்குப் பெரிய ஆபத்து வந்து விடுமாம். ஆதலால் யாகங்கள் செய்வதன் மூலம் அவற்றைத் தடுத்து சனாதன தர்மத்தை நிலை நாட்ட வேண்டுமாம். ஆகவே சனாதன தர்மங்கள் என்பவைகள் பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பார்ப்பனர் ஒழிந்த மற்ற மனித சமூகத்துக்கு எவ்வளவு மோசமானதும் கெடுதியானதும் சுயமரியாதைக்கு விரோதமானதுமான காரியம் என்பதை நான் உங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
இதிலிருந்து பார்ப்பனப் புரட்டுகளை நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடும் என்று நினைக்கிறேன். சில பார்ப்பனர்கள் தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும் சில பார்ப்பனர்கள் கோயில் பிரவேசம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதும், மற்ற பார்ப்பன குருமார்கள், மடாதிபதிகள், ஜாதித் தலைவர்கள் ஆகிய எல்லோரும் சேர்ந்து சட்டம் ஒழியவும், பிரயத்தனப்படுபவர்கள் ஒழியவும் யாகம் செய்வதும் யாகத்தை ஆதரிப்பதுமாயிருந்தால் இதற்கு என்ன அர்த்தம் சொல்வது என்று உங்களையே கேட்கின்றேன். நான் இங்கு வரப்போவதாய்ப் பத்திரிகையில் தெரிந்தவுடன், இரண்டொரு பார்ப்பன நண்பர்கள் என்னைப் பரிகாசம் செய்தார்கள். அது என்னவென்றால், "நீங்கள் இப்பொழுது உலக மக்கள் பொது விஷயங்களில் சம்மந்தம் வைத்துக் கொண்டிருக்கும் போது எங்கோ இரண்டொரு பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஏதோ ஒரு வியாபாரமாய் யாகம் செய்து பிழைக்கிற காரியத்தைப் பிரமாதமாய்க் கருதி அதற்காக நீங்கள் போகலாமா?" என்று கேட்டார்கள். இந்த யாகங்களை யாரோ இரண்டொரு பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் என்று எண்ணிவிட முடியுமா? இதற்கு எல்லாப் பார்ப்பனரும் பணம் கொடுத்திருக்கிறார்கள். சங்கராச்சாரி முதலியவர்கள் ஆதரவளிக்கிறார்கள். அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு யாகம் விரோதமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதைய யாகத்தில் அய்யங்கார் பார்ப்பனர்களும் சில மாத்வப் பார்ப்பனர்களும்கூட சேர்ந்து ஆதரவளித்தும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அப்படி இருக்க இரண்டொரு பார்ப்பனர் என்று எப்படி சொல்லிவிட முடியும்?
அப்படியானால் இவ்வளவு கூச்சல் ஏற்பட்ட பிறகாவது சில முக்கியமான பார்ப்பனர்கள் ஏன் ஒன்று கூடி ஒரு அறிக்கையை வெளிப்படுத்தக் கூடாது. "இந்த யாகம் பார்ப்பன சமூகத்தின் சார்பாகவோ மதத்தின் தத்துவப் பிரகாரமோ நடப்பதல்ல. நாங்கள் அதை ஆதரிப்பதில்லை என்பதோடு வெறுக்கவும் செய்கிறோம்" என்று தோழர்கள் மகாகனம் சாஸ்திரியாரும், சர். சிவசாமி அய்யரும், சர்.சி.பி. ராமசாமி அய்யரும், டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாரும், சர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும் ஒரு அறிக்கை வெளியிடட்டுமே? இவர்களெல்லாம் தங்களைப் பெரிய சீர்திருத்தவாதிகள் என்றும், தாங்களே இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும், எல்லா விஷயங்களுக்கும் தாங்களே அபிப்பிராயம் கொடுப்பவர்கள் என்றும் தாராளமாக விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்ததுடன் போதிய விளம்பரமும் பெற்றிருக்கிறார்கள். ஏன் ? இவர்கள் வாய்திறக்கக் கூடாது என்று கேட்கிறேன். காங்கிரஸ் பார்ப்பனர்களாவது ஏன் அறிக்கை வெளியிடக்கூடாது. தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் முந்திரிக் கொட்டை போல் உலக விஷயங்களுக்கெல்லாம் முன்னால் வந்து அபிப்பிராயங் கொடுப்பவர் இதற்கு ஏன் வாய் மூடிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கின்றேன்.
தீண்டாமை விலக்கு மசோதாவையும், கோவில் பிரவேச மசோதாவையும் காங்கிரசின் சார்புடையவையல்லவா என்றும், தோழர் காந்தியார் இம்மசோதாக்கள் நிறைவேற வேண்டி கவலை எடுத்துக் கொண்டு இந்திய சட்டசபை அங்கத்தினர்களிடம் பிரசாரம் செய்து ஆதரவு தேடி வருகிறார்களா இல்லையா என்றும் கேட்கின்றேன். இப்படிப்பட்ட காங்கிரஸ் அனுமதி பெற்ற காங்கிரஸ் சார்பான மசோதாக்களை ஒழிப்பதற்கு யாகம் செய்தால், காங்கிரஸ்வாதியான தோழர் சத்தியமூர்த்தியின் கடமை என்ன என்று கேட்கின்றோம்?
தோழர் சத்தியமூர்த்தி இந்திய சட்ட சபைத் தேர்தலுக்கு தஞ்சை, திருச்சி ஜில்லா சார்பாக நிற்கப்போவதாய் பிரஸ்தாபம். தஞ்சை ஜில்லா பார்ப்பனர்கள் வருணாச்சிரமக்காரர்கள். அவர்கள் தீண்டாமை விலக்கு மசோதாவுக்கும் கோவில் பிரவேச மசோதாவுக்கும் எதிராகவும், சாரதா சட்டத்தை ஒழிப்பதற்கும் தகுதி உடையவர்களையும், அந்தப்படி செய்வதாக வாக்களிப்பவர்களையுந்தான் தேர்ந்தெடுப்பவர்கள். அப்படி இருக்க தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் அந்தத் தொகுதியில் நிற்பதென்றால் அவர் எப்படிப்பட்டவராய் இருக்கக் கூடும் என்று யோசித்துப் பாருங்கள். தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்த இரண்டு மூன்று மசோதாக்களையும் ஆதரிப்பதாக இதுவரை எங்கும் பிரஸ்தாபிக்கவே இல்லை. அன்றியும் தீண்டாமை விலக்கு, கோவில் பிரவேசம் ஆகிய காரியங்களுக்கு சட்டம் செய்யக்கூடாது என்று தஞ்சை, திருச்சி ஜில்லாவில் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட பார்ப்பனர்கள் தான் காங்கிரஸ் தலைவர்கள் மாத்திரமல்லாமல் தோழர் காந்தியால் பாராட்டப்பட்டவர்களுமாய் இருக்கிறார்கள். இவர்களைப் போன்ற சில பார்ப்பனரல்லாதார்களும் இருக்கிறார்கள். தோழர் முத்துரங்க முதலியார் கூட்டமும் இப்படிப்பட்டதே யாகும். இவர் இந்திய சட்டசபை போக வேண்டுமாம். இதுமாத்திரமா? தோழர் சீர்காழி சிதம்பரநாத முதலியார், கோவை வெள்ளியங்கிரிக் கவுண்டர் ஆகியவர்கள் சனாதன தர்மத்தை ஆதரித்ததுடன் வைசிராய் பிரபுவைக் காண சனாதன தர்ம பார்ப்பனர்களுடன் டெபுடேஷன் சென்றார்கள் என்று நான் சமீபத்தில் அறிந்தேன். ஆகவே காங்கிரஸ் யோக்கியதையைப்பற்றி நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
தேர்தல் தந்திரம்
இந்த யாகத்தை நான் ஒரு தேர்தல் தந்திரமாகவே நினைக்கின்றேன். சனாதன தர்மம் நிலை நிறுத்தப்பட யாகம் செய்தால் அந்த சனாதன தர்மத்துக்கு விரோதமானவர்களுக்குப் பாவமும் கெடுதியும் ஏற்படக்கூடும் என்று பாமர மக்கள் பயப்படக்கூடும். அப்போது பெரும்பாலும் பகுத்தறிவற்ற பாமர ஜனங்களும், தோழர்கள் சிதம்பரநாத முதலியார், வெள்ளியங்கிரிக் கவுண்டர், முத்துரங்க முதலியார் போன்ற செல்வவான்கள் என்பவர்களும், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்பவர்களுக்கே ஓட்டுக் கொடுக்கக் கூடும் என்கின்ற எண்ணத்தின் மீது பாமர மக்களைப் பயப்படுத்தவே இந்த யாகப் பூச்சாண்டி காட்டப்படுகின்றது. யாகத்திற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை.
நான் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் இருக்கும் போது எனக்கும் என் மனைவிக்கும் மற்றும் எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் விரோதமாக யாகம் செய்யப்பட்ட இந்த யாகங்களுக்கு மேல் ஜாதிக்காரர்கள், பணக்காரர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அரசாங்க தேவஸ்தான இலாக்கா ஆகியவர்கள் பலவித உதவி செய்தார்கள். அது எங்களைக் கொல்ல முடியவில்லை . அது மாத்திரமல்லாமல் அந்த சமஸ்தான ராஜாவை சாகாமல் காப்பாற்றவும் முடியவில்லை. அந்த யாகத்தின் போது நான் 6 மாதம் தண்டனை பெற்று திருவனந்தபுரம் சென்டிரல் ஜெயிலில் இருந்தேன். அதே சமயத்தில் அத்தேச அரசர் இறந்து போனார். அதனால் நான் தண்டனை காலம் பூராவும் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டுவிட்டேன். யாகம் முடிந்தும் கூட வைக்கம் சத்தியாக்கிரக விஷயம் வைக்கத்தைப் பொருத்தவரை வெற்றி பெற்றுவிட்டது. ஆகையால் யாகத்துக்கு ஏதோ சக்தி இருப்பதாகவோ அது நம்மை ஏதாவது செய்து விடுமென்றோ யாரும் பயப்பட்டு விடாதீர்கள். இந்த தந்திரம் எல்லாம் உழைப்பாளிகளின் உழைப்பை சோம்பேறிகள் சாப்பிடுவதற்காகவே ஒழிய வேறில்லை.
உழைத்தவன் உழைப்பின் பயனை அடைய வேண்டுமானால் இப்படி யாகம், சாஸ்திரம், வேதம், மோக்ஷம், கர்மம், முன் ஜன்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.
எத்தனையோ வருஷ காலமாய் யாகம் செய்யப்பட்டு வருவதாய் அறிகிறோம். உலகத்தில் என்ன அக்கிரமம் மாறி இருக்கிறது? என்ன கொடுமை நீங்கியிருக்கின்றது? யாகம் எக்கியம் கிரமமாய் செய்யப்பட்டு வந்த தெய்வீக அரசர்களான ராமன், அரிச்சந்திரன் ஆகியவர்கள் காலத்தில் உள்ள அக்கிரமம், அயோக்கியத்தனம், கொலை பாதகம் எல்லாம் இன்னும் இருந்துதான் வருகின்றன. எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விடவில்லை. ஆகையால் நீங்கள் இப்படிப்பட்ட மிரட்டுதல்களைக் கண்டு பயந்துவிடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்!!
(குறிப்பு: ஆரணிக்குப் பக்கத்தில் கடலாடி என்னும் கிராமத்தில் சென்னை ஜீவரக்ஷõ பிரசார சபையாரால் 03061934இல் பார்ப்பனர்கள் நடத்திய யாகத்தைக் கண்டித்து நடத்தப் பெற்ற யாகக் கண்டன கூட்டத்தில் திரு.வி.கலியாண சுந்தரமுதலியார் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.
புரட்சி சொற்பொழிவு 10.06.1934)