ஊர் முழுவதும் பட்டாசு சத்தம் இப்போதே காதைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டது. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருமே ஒரு மிகப் பெரிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பெருமித உணர்வோடு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் யாருக்கும் எதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்று தெரியவில்லை. இருந்தாலும் அதைக் கொண்டாடியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. கையில் காசு இருக்கின்றதோ இல்லையோ ஒருவன் இந்துவாக இருந்தால் நிச்சயம் அவன் தீபாவளி கொண்டாடியே ஆகவேண்டும். இல்லை என்றால் ஊர் உலகம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளமுடியாது. அதற்காக நூற்றுக்குப் பத்து இருபது கந்துவட்டிக்கு வாங்கியாவது தனக்கும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் புதுத்துணி வாங்கி தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகி விடுகின்றார்கள். நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் இந்த தீபாவளியை எதற்காக இத்தனை சிரமப்பட்டு மெனக்கெட்டு கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று தெரிவதில்லை. கையில் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பல ஆயிரங்களுக்குப் பட்டாசு வாங்கி தீபாவளிக்குப் பத்து நாளைக்கு முன்பிருந்தே வெடித்து காசை நாசம் செய்யும் நபர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை ஆனால் ஒருவேளை சோற்றுக்கே வழியற்று தினம் உழைத்து சாக நிர்பந்திக்கப்பட்ட மக்களையும் இந்தத் தீபாவளி பண்டிகை பதம் பார்ப்பதுதான் நம்மைத் துயரப்பட வைக்கின்றது.
பெரியார் தன் வாழ்நாள்முழுவதும் தீபாவளி பண்டிக்கைக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தார். தீபாவளி கொண்டாடுவது தமிழினின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் பெரும் இழுக்கை தேடிக் கொடுப்பது என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினார். தீபாவளி கொண்டாடும் தமிழர்களை எவ்வளவு தூரம் திட்டி திருத்த முடியுமோ, அவ்வளவு தூரம் திட்டி திருத்த முயன்றார். "எவ்வளவு சொன்னாலும் அறிவும், அனுபவமும் இல்லாத இளைஞர்கள்(மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம், துரோகம், மோசத்தாலும் வாழ வேண்டிய- தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையிடம் சிக்கிவிட்டார்களேயானால் எவ்வாறு யார் எவ்வளவு அறிவையும் நன்மையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தம் உள்ளம் முழுவதையும் பரத்தையிடம் ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போலவே நடந்து கொள்கின்றார்கள்!”. என்று மிகக் காட்டமாகவே குறிப்பிட்டார்.
“இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமில்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட்ட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு – பூகோளக் கூறு இவற்றில் நிபுணர்கள் வேதாந்தத்தில் கரை கண்டவர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு சிந்தனையின்றி நடந்துகொள்கிறார்கள் என்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழன் அடிமைப்பட்டு சிந்தனையின்றி நடந்து கொள்கிறார்கள் என்றால் இழிவுக்கும் மடமைக்கும் மானமற்ற தன்மைக்கு இதைவிட வேறு எதை எடுத்துக்கட்டாக கூற முடியும்?”. (விடுதலை 5/11/1961) என்று இன இழிவுக்குத் துணைபோகும் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் மானங்கெட்ட தமிழர்களையும் அம்பலப்படுத்தினார்.
மக்களிடம் இந்தத் தீபாவளி பண்டிகை இன்று இந்த அளவிற்கு சென்று சேர்ந்ததற்கு இங்கிருக்கும் பார்ப்பனப் பத்திரிக்கைகள் மற்றும் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட சூத்திரப் பத்திரிக்கைகள், பணத்திற்காக எதை வேண்டுமென்றாலும் விளம்பரப்படுத்தும் விபச்சார தொலைக்காட்சிகள் போன்றவற்றின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். எதை எதையோ ஆய்வு செய்து அம்பலப்படுத்துவதாக பிதற்றிக்கொள்ளும் இந்த ஊடகங்கள் எப்போதாவது ஏன் இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்று மக்களுக்கு சொல்லி இருக்குமா என்று பார்த்தால் இந்த விபச்சார ஊடகங்களின் வேசித்தனம் நமக்கு விளங்காமல் போகாது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பத்திரிக்கைகள் சிறப்பு மலர்கள் போடுவதும் தொலைக்காட்சியில் சினிமா நட்சத்திரங்களை அழைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவதும், பட்டிமன்றங்களை நடத்துவதும் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகின்றது. இதன் மூலம் தீபாவளிப் பண்டிகை மிக முக்கியமானதாக, கொண்டாடியே ஆகவேண்டிய ஒன்றாக திட்டமிட்டு இனத் துரோகிகளால் பரப்பப்படுகின்றது. ஒவ்வொரு சாமானியனின் மனதையும் பார்ப்பனியத்தால் நச்சாக்கி அதில் பணம் ஈட்டுகின்றது. தமிழன் எப்போதுமே மானமுள்ளவனாக, சுயமரியாதை உள்ளவனாக மாறக்கூடாது என்பதில் இந்த எச்சிலை ஊடகங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன.
தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்று நோக்கிலேயே கற்பிக்கப்பட்ட தீபாவளி இழி கதையை இன்று தமிழ் மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியது ஒவ்வொரு முற்போக்குவாதியின் கடமையாகும். விபச்சார ஊடகங்கள் நிச்சயம் இந்தப் பணியை செய்யப்போவதில்லை. ஆதனால் ஒவ்வொரு முற்போக்குவாதியும் தன்னால் முடிந்தவரை தீபாவளி என்ற மானங்கெட்ட பண்டிகையின் யோக்கியதையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு பெரியார் நமக்கு பெரிதும் துணை நிற்பார். தீபாவளி என்றால் என்ன என்று கேள்வி எழுப்பி பெரியார் அவர்கள் அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கின்றார்.
1) ஒரு காலத்தில் ஓர் அரக்கன் உலகத்தைப் பாயாக சுருட்டிக்கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்துகொண்டான்.
2) தேவர்கள் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் ( உருவம்) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து (மீண்டும்) விரித்தார்.
3) விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4) ஆசைக்கு இணங்கிய பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5) அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6) அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7) தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரனுடன் போர் தொடங்கினார்.
8) விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை.விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9) இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10) இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். (விடுதலை 5/11/1961)
இந்த மானமற்ற பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத கதைதான் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணமாகும். மேலும் புராணங்களில் அசுரன், அரக்கன், குரங்குகள் என்று குறிப்பிடப்படுவதெல்லாம் திராவிடர்களைத்தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவதையும் நாம் நோக்க வேண்டும். பெரியாரும் அதைத்தான் குறிப்பிடுகின்றார்
“நரகாசூரன் ஊர் மகிஷ்மதி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கின்றது. மற்றொரு ஊர் பிராக் ஜோதிஷம் என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அஸ்ஸாம் மாகாணத்திற்கு அருகில் இவற்றை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்களாத்தில் தேவர்களும் அரசர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பான் எழுதி வைத்தான் என்பதற்காகவும் நாம் நடு ஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும் இந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா” என்று கேட்பதும், நாம் ஆமாம் சொல்லி கும்பிட்டுக் (காசு) கொடுப்பதும், அவன் காசு வாங்கிக்கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது? மாணவர்களே? உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள்! இளைஞர்களே சிந்தியுங்கள்!”. (விடுதலை 5/11/1961)
எனவே தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்தோ, தெரியாமலோ இனத் துரோகியாய் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றான் என்றுதான் அர்த்தம். கோடிக்கணக்கான தமிழ்மக்களை சூத்திரர்கள் என்றும், பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்றும், குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் நம்மை அசிங்கப்படுத்திய பார்ப்பன மேலாண்மையை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே அர்த்தம். இன்று பார்ப்பனப் பயங்கரவாதத்தால் இந்தியும், சமஸ்கிருதமும், நீட் தேர்வும் தமிழகத்தில் திணிக்கப்படும் காலத்தில் தீபாவளியைப் புறக்கணிப்பது என்பது ஒவ்வொரு மானமுள்ள தமிழனின் தலையாய கடமையாகும். பார்ப்பன தீபாவளியைக் கொண்டாடிவிட்டு நீட்டையும், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதென்பது கேலிக்கூத்தானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே முற்போக்குவாதிகள் அனைவரும் இந்தத் தீபாவளி பண்டிக்கைக்கு எதிராக கருத்துப் பிரச்சாரத்தை வீச்சாக எடுத்துச் செல்ல வேண்டும். தீபாவளிப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லும் ஒவ்வொருவனும் தமிழின துரோகி என்பதையும், பார்ப்பனித்தின் அடிமை என்பதையும், சுயமரியாதையும், தன்மானமுமற்ற உலுத்துப்போன உலுத்தர்கள் என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து பட்டாசு வாங்கிக் கொடுத்து அவர்களின் மூளைகளை முடமாக்கும் மூடர்களிடம் குழந்தைகளுக்கு நல்ல அறிவு சார்ந்த நூல்களை வாங்கிக் கொடுத்து அவர்களை பகுத்தறிவுடன் வளர்க்குமாறு அறிவுரை சொல்ல வேண்டும். இதை ஒவ்வொரு மானமுள்ள சுயமரியாதை உள்ள முற்போக்குவாதிகளும் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
- செ.கார்கி