இராமாயணக் கதையைப் பற்றி மிகப் பெருமளவு விமர்சனம் செய்த நூல்கள் இன்று நிறைய நமக்குக் கிடைக்கின்றன. இராமாயணப் பாத்திரங்கள் பற்றியும், அதில் உள்ள அறிவியலுக்குப் பொருந்தாத கருத்துக்களைப் பற்றியும், மனித இனமே வெட்கி தலைகுனிய வைக்கும் ஆபாசத்தைப் பற்றியும் பெரியார், அம்பேத்கர் உட்பட இந்தியாவிலும் உலக அளவிலும் பல பேர் வெளிப்படுத்தி உள்ளார்கள். முற்போக்குவாதிகளும், இடதுசாரி சிந்தனை கொண்டவர்களும் எப்போதுமே இராமாயணத்தை ஒரு கதை என்ற அளவில் இருந்து மட்டுமே அணுகி இருக்கின்றார்கள். அது உண்மையாக நடந்தது என்றோ, இல்லை அது தெய்வீகத் தன்மை கொண்டது என்றோ, அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொண்டது கிடையாது. அப்படி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அது சிந்தனையை மழுங்கடித்து மனிதனை பொய்மைகளுக்கும், புரட்டுகளுக்கும் அடிமையாக மாற்றிவிடும் என்று நேர்மையான அறிவியல் சிந்தனை கொண்ட ஆய்வாளர்கள் அறிந்து வைத்திருத்தனர். அதனால்தான் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் இராமாயணத்தைக் கதை என்ற அளவில் இருந்தே மட்டுமே ஆய்வை மேற்கொண்டனர்.
வால்மீகி ராமாயணத்தின் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் இராமாயணத்தின் மூலநூல் கி.மு முதல் ஆயிரமாவது ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்கின்றார். ஆனால் சில பார்ப்பன, பார்ப்பன ஆதரவு வரலாற்று ஆசிரியர்கள் திட்டமிட்டே இராமாயண கதை எழுதப்பட்ட காலத்தை மிக பின்னுக்குத் தள்ளுகின்றார்கள். சிலர் எழுத்து முறை உருவாகாத காலத்திற்கும், இன்னும் சிலர் மனித இனம் குரங்கு நிலையில் இருந்த காலத்திற்கும், இன்னும் சிலர் மனித இனிமே இந்த உலகில் தோன்றியிராத காலத்திற்கும், இன்னும் சில பாவிகள் உலகமே தோன்றியிராத காலத்துக்கும் எந்தவிதக் கூச்சமும், குற்ற உணர்வும் இன்றி காலத்தை தள்ளிப் போடுகின்றார்கள். இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டம் என்பது பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக இருக்கின்றது. மார்க்சிய அடிப்படையில் தம் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் அதை இன்னும் ஒருபடி மேலே சென்று, இராமாயணம் எழுதப்பட்ட காலத்தை வரலாற்றுடன் ஒப்பிட்டு, கதை எந்த நோக்கதை வெளிப்படுத்துகின்றது என்பதையும் ஆராய்ந்தார்கள். வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் இராமாயணத்தை ஆரியர்களின் ராச்சிய விரிவாக்கத்தின் பகுதியாக மதிப்பிடுகின்றார்.
“இராம இராவண யுத்தம் ஒரு வட்டாரத்தின் சண்டைகளை மிகைப்படுத்திக் காட்டியதாகும். கங்கைச் சமவெளியின் விரிவடையும் இராச்சியத்திற்கும், விந்தியப் பிரதேசத்தின் புலம்பெயராத மக்கள் சமூகங்களுக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது. கோசல இராச்சியம் புதிதாக வெளிப்பட்ட மன்னராட்சிகளில் உலகியலை அறிந்துகொண்டதைப் பிரதிபலிக்கிறது. அரக்கர்களின் சமூகங்களுக்கு இது மாறுபாடானது. அரக்கர்கள் என்பது காடுவாழ் குலத்தினரை மிகைப்படுத்திக் கூறுவதெனலாம். மன்னராட்சிகளில் உள்ள வாழ்க்கையைவிட காடுவாழ் மக்களின் வாழ்க்கைமுறை முற்றிலும் வேறுபட்டதால் அவர்கள் அரக்கர்களாக்கப்பட்டனர். இராச்சியம் மற்றும் காடு என்னும் இருபிரிவுகள் உள்ள இவ்வுலகம் கிராமம் மற்றும் ஆரண்யமாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்னும் பார்வையின் விளக்கமாகும். குடியிருப்புக்களும், புன்னிலங்களும் இந்திய இதிகாச இலக்கியங்களில் ஓர் இறுக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன. நிகழ்வுகளை மேலும் தெற்குப் பிரதேசங்களுக்கு மாற்றியது பிற்காலத்தில் வந்த தொகுப்பாசிரியர்களின் கை வண்ணமாக இருந்திருக்கக்கூடும். அது விரிவடைந்த மண் பிரதேசங்களைப் பிரதிபலிக்கிறது. இலங்கையை அளவற்ற செல்வமுடைய நகரமாக காட்டுவதும் அத்தன்மையதே.” (முற்கால இந்தியா-ரொமிலா தாப்பர்- ப.எண்: 201) என்கின்றார்.
அது போல வரலாற்று அறிஞர் ஏ.எல்.பாசம் அவர்களும் "ஐரோப்பியர்கள் இக்கதையை இலக்கியமாகக் கொள்வாரன்றி மதத் தொடர்புடையதாகக் கொள்ளார்.” என்கின்றார் (வியத்தகு இந்தியா- ஏ.எல்.பாசம்-ப.எண்:425). மேலும் “மகாபாரதமும், இராமாயணமும் பெருங்காப்பியங்களாம். அவை மதகுரவர் பலர் கைப்பட்டு மாற்றம் பல அடைந்தவாயினும்,தொடக்கத்திலே போருக்குரிய கட்டுக்கதைகளாய் இருந்தனவென்பதைத் தெளிவாய்க் காட்டுகின்றன.” என்கின்றார். ( மேற்படி நூல் பக்கம்: 537). பொதுவாக விமர்சன நோக்கில் இருந்து பார்க்கும்போது, ராமாயணப் புளுகை பற்றிய கட்டுடைப்புகளே நமக்குக் கிடைக்கின்றன. பண்பாட்டுத் தளத்தில் அவை ஏற்படுத்திய அழிவு பற்றிய ஆய்வுகள் நமக்கு குறைவாகவே கிடைக்கின்றன. இராமாயணம் ஆரியர்கள் எழுதியது, அது குறிப்பிடும் ஒழுக்கம் என்பது ஆரிய ஒழுக்கம் என்றால், ஆரியர் இல்லாத மக்களின் பண்பாடு, ஒழுக்கம் எப்படிப்பட்டதாய் இருந்தது என்பதைச் சேர்த்து சொல்லும்போதே இராமனை கடவுளாக இன்று ஏற்றுக்கொண்டிருக்கும் மக்கள், இராமாயணம் குறிப்பிடும் இராமனின் ஒழுக்கத்தை அவர்கள் வணங்கும் மண்சார்ந்த கடவுள்களின் ஒழுக்கத்தில் இருந்து பிரித்தறிய முடியும்.
இராமன் ஒழுக்கம் கெட்டவன் என்பதை பெரியாரும், அம்பேத்கரும் சொல்வதைப்போல, அன்றே சார்வாகர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அதையும் வால்மீகியே அயோத்தியா காண்டப்பகுதில் பதிவும் செய்திருக்கின்றார்.
“இராமாயணத்தின் அயோத்தியா காண்டப் பகுதியில் கதை நாயகனான இராமனிடம் சார்வாகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும்படி ஜாபாலி என்ற ஒருவர் அறிவுறுத்துகிறார். ஜாபாலி அன்பொழுக இராமனிடம் இவ்வாறு கூறுகிறார்: "மகனே, நீ தவறான தருக்க முறையில் வழிநடத்தப்படுகிறாய். பட்டறிவை விடச் சாலச் சிறந்தது ஒன்றில்லை. மறு உலகம் பற்றி மடையர்கள்தான் சிந்திப்பார்கள். இறந்துபோன உறவினர்களுக்காக மக்கள் சிரார்த்தம் செய்வது அபத்தமானது. அதனால் அரிசியும் உணவுப் பொருட்களும்தான் வீணாகிறது. இறந்த மனிதர்கள் இரையெடுக்க இயலுமா? இறை வேண்டல்களினாலும், யாகங்களினாலும், தியானம் செய்வதினாலும் எந்தப் பயனும் இல்லை. வேத நூல்கள் மக்களை மழுங்கடிப்பதற்காக மலிந்து கிடக்கின்றன. எனவே இராமா, தர்மம் என்று உலகில் எதுவும் இல்லை. நேரானதும், நேரில் காண்பதுமான வழியில் செல்வாயாக. அய்யத்துக்குரிய வழியில் அலைந்து திரிய வேண்டாம்.” (இந்திய வரலாற்றில் பகவத் கீதை-பிரேம்நாத் பசாஸ் - ப.எண்:141).
இதற்கு அடுத்து, இந்திய வரலாற்றில் இராமனுக்கு எதிராக வலுவான பதிவு என்பது எங்குமே பெரும்பாலும் இல்லை. இருபதாம் நூற்றாண்டில் தான் பெரியாரும், அம்பேத்கரும் அதை மிகக் கடுமையாக எதிர்க்கின்றார்கள். அதிலும் பெரியார் அவர்கள் இராமாயண எரிப்புப் போராட்டத்தையும், ராமன் எதிர்ப்புப் போராட்டத்தையும் இயக்கமாகவே முன்னெடுத்தார். ராமன் தமிழ்நாட்டு மக்களின் அறிவையும், தன்மானத்தையும், சுயமரியாதையும் அழிக்க வந்த ஆரிய பண்பாட்டின் மொத்த உருவம் என்று பெரியார் தனது ஆணித்தரமான வாதங்களால் அம்பலப்படுத்தினார்.
ஓர் இனம் எவ்வளவு நாகரிகம் அடைந்திருக்கின்றதோ அந்த அளவிற்குத்தான் அது தன் கடவுள்களையும் அமைத்துக் கொள்கின்றது. இராமாயணம் உட்பட ஆரியர்கள் எழுதிய அனைத்து நூல்களும் காறி உமிழும் அளவிற்கு ஆபாசமாய், படிப்பதற்கே அருவருப்பு நிறைந்ததாய் இருப்பதற்குக் காரணம் ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் நாகரிகமற்று, அநாகரிகமாய் இருந்ததே காரணமாகும். அன்றில் இருந்து இன்றுவரையிலும் ஆரியர்கள் தங்களை இந்த மண் சார்ந்த பண்பாட்டோடு பிணைத்துக்கொள்ளாமல், அதே நிலையில் வாழ்ந்து வருவதற்குக் காரணம் அவர்கள் அந்த ஆபாசங்களை தங்களின் சொத்தாகவே நினைக்கின்றார்கள் என்பதுதான். அதனால் ஆரிய பார்ப்பனர்களும் அவர்களின் கொள்கைகளை கடைபிடிப்பவர்களும் ஆபாசமானவர்களாகவும், பெண்களை வல்லுறவு செய்து கொல்லும் குற்றக்கும்பலாகவும் , மானமற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.
ஆனால் தமிழர்கள் தங்களின் கடவுள்களாக அமைத்துக் கொண்ட நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் பார்ப்பனக் கடவுள்களின் கீழ்த்தரமான ஆபாசப் புனைவுகள் போன்று ஏதுமின்றி சாமானிய தமிழனின் வாழ்க்கையை, உணவுப் பழக்க வழக்கத்தை, பண்பாட்டை பிரதிபலிப்பதாக இருக்கின்றன. பார்ப்பனக் கும்பலால் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்ட சாதியை எதிர்த்து சமர் புரிவதாய் உள்ளது. இதைப் புரிந்துகொள்ள முயலும்போதுதான் ஆரிய நாகரிகத்தையும், திராவிட நாகரிகத்தையும் நம்மால் பிரித்துப் பார்த்து நமக்கான நாகரிகத்தைக் கண்டுகொள்ள முடியும். இது ராமனின் கதையோடு தொடர்பில்லை என்றாலும், தமிழரின் நாகரிகத்தோடு சம்மந்தப்பட்டது என்பதால் கொஞ்சம் பார்ப்பது நல்லது.
பொதுவாக தமிழ்நாட்டில் வணங்கப்படும் நாட்டார் தெய்வங்கள் பல வகைப்படுபவை. இனக்குழுத் தெய்வம், வீட்டுத் தெய்வம், குல தெய்வம், சாதித் தெய்வம், ஊர்த் தெய்வம், காவல் தெய்வம், நாடறி தெய்வம் என பல வகைப்படும். இவற்றில் பல சாதி காப்பாற்றுபவையாகவும், சாதியத்தை இன்று கெட்டிப்பட வைப்பவையாகவும் இருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் பார்ப்பன புராண குப்பைகளைப் போன்று, இவற்றுக்கு ஆபாசக் கதைகள் இல்லை என்பதும், ஆகமங்கள் இல்லை என்பதும், பெரும் கோயில்கள் இல்லை என்பதும், ஆடம்பர வழிபாடு இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உதாரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் வணங்கப்படும் முத்துப்பட்டன், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் வணங்கப்படும் மதுரை வீரன், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் வணங்கப்படும் காத்தவராயன் போன்ற தெய்வங்கள் அடிப்படையில் சாதிய எதிர்ப்பு நிலைபாடு கொண்டவை ஆகும்.
பார்ப்பன குலத்தில் பிறந்த முத்துப்பட்டன் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த வாலப்பகடையின் இரண்டு மகள்களான பொம்மக்கா, திம்மக்காவை காதலிக்கிறான். வாலப்பகடையின் கட்டளையை ஏற்று செருப்புத் தைக்கும் தொழில் செய்கின்றான். இதனால் முத்துப்பட்டன் மீது நம்பிக்கை வைத்து, அவனுக்கு தனது இரண்டு மகள்களையும் மணம் செய்து கொடுக்கின்றான். சாதியக் கட்டுப்பாட்டை மீறி தாழ்ந்த சாதிப் பெண்களை மணம் செய்து கொண்டதால் மேற்சாதியினரால் குத்திக்கொலை செய்யப்படுகின்றான்.
சக்கிலியர் குலத்தில் பிறந்த மதுரைவீரன் சாதி மீறி நாயக்கர் வீட்டுப் பெண்ணான அரசனின் மகள் பொம்மியைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கின்றான். இதனால் சாதிவெறியர்களால் கொல்லப்படுகின்றான். அதே போல ஆரியமாலா எனற பார்ப்பன பெண்ணை, பறையர் சாதியைச் சார்ந்த காத்தவராயன் சிறையெடுத்துச் செல்கின்றான். காத்தவராயனின் தந்தை சேப்பிளை நாடெங்கும் தேடி, மகனைக் காணாது நாட்டுக்கு வெளியே தேடிக் கண்டுபிடிக்க, காத்தவராயன் கழுவேற்றப்படுகின்றான். இவர்கள் எல்லாம் கொல்லப்பட்டபின் கொன்றவர்களாலேயே தெய்வமாக வணங்கப்பட்டார்கள்.
சாதி மீறிய காதல் மட்டும் அல்லாமல் கொலை செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. நிலப்பிரபுத்துவம் மற்றும் அதிகார வர்க்கச் சாதியினரின் பகைமை, பிறரின் பொறாமையுணர்வு மூடநம்பிக்கை, குடும்பப் பிரச்சினைகள், நேரடியான போரில் ஈடுபட்டமை, வாழ்க்கைப் பிரச்சினையால் சில தவறுகள் அல்லது குற்றங்களைப் புரிதல், கொள்ளையர், காமுகர் ஆகியோரிடமிருந்து பிறரைக் காக்கும் முயற்சியினை மேற்கொண்டமை போன்றவை (கோபுரத் தற்கொலைகள். ஆ.சிவசுப்பிரமணியம்.ப.எண்:73).
அதே போல தமிழர்கள் வணங்கிய முருகனுக்கு முன்பு ஆடு கோழி போன்றவை பலிகொடுக்கப்பட்டு வணங்கப்பட்டது. வேட்டையாடி வாழ்ந்த மக்கள் முருகனை வேட்டைத் தெய்வமாகவும், நோய்தீர்க்கும் சக்தியாகவும், காதலரைச் சேர்த்து வைக்கும் சக்தி படைத்தவனாகவும், போர்த் தெய்வமாகவும், கொற்றவையின் மகனாகவும் வணங்கினர். பின்னாளில் பார்ப்பனியம் அதைச் செரித்து முருகனை சிவனின் மகனாக உள்வாங்கிக் கொண்டது. இந்தக் கதைகளும் அது சார்ந்த கடவுள்களும் இந்த உலகத்தை தான் தான் படைத்தாக கதைவிடவில்லை. தன்னை மந்திரங்கள் சொல்லி வணங்கச் சொல்லவில்லை. அதையும் ஒரு குறிப்பிட்ட சாதிதான் செய்ய வேண்டும், இல்லை என்றால் தீட்டுப்பட்டுவிடும் என்று சொல்லவில்லை. தீட்டு என்ற கருத்தியலே நாட்டார் தெய்வ வழிபாட்டில் ஏறக்குறைய இல்லை என்று சொல்லலாம். மாதவிடாய் காலத்திலும் பெண்கள் இந்தக் கோயிலுக்கு செல்ல முடியும், மிக எளிதாக வழிபாடு செய்யவும் முடியும். இந்தக் கடவுள்கள் மக்களின் உணவுகளையே உண்கின்றன. மாமிசம், மது, சுருட்டு என உழைக்கும் மக்களின் பழக்க வழக்கங்களை கொண்டு தன்னையும் அவர்களில் ஒருவராக காட்சிப்படுத்திக் கொள்கின்றன.
ஆனால் பார்ப்பனியம் எப்படி முருகனை உள்வாங்கிக் கொண்டதே, அதே போல சமீப ஆண்டுகளில் இந்த நாட்டர் தெய்வங்களையும் உள்வாங்கி வருகின்றது. ஆதிக்க சாதிகள் எப்படி வேசிமகன் பட்டத்தை ஏற்றுக்கொண்டு தன்னை சூத்திரனாக இருக்க மனமார ஒப்புக் கொண்டார்களோ, அதே போல தங்களின் கடவுள்களையும் பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்து அவற்றை பார்ப்பன மயமாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இதனால் இன்று கிராமங்களில் சாதி காப்பாற்றும் கடவுளாக இந்த நாட்டார் தெய்வக் கோயில்கள் ஆதிக்க சாதிகளால் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆடு மாடுகளைக் காப்பாற்றவும், ஊரைக் காப்பாற்றவும், சாதிக்கு எதிராகவும் போராடி மாண்டவர்களை தெய்வங்களாக ஏற்றுக்கொண்ட மக்கள், சாமானிய மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் உதவாத, சாதிவெறி பிடித்த, பல பெண்களுடன் ஊர்மேய்ந்த, தமிழர்களை குரங்குகள், அரக்கர்கள், அசுரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று சொன்ன கடவுகளை வணங்குவது என்பது தமிழன் தன்னுடைய சுயமரியாதையும், தன்மானத்தையும் இழந்து பார்ப்பானின், பார்ப்பனியத்தின் அடிமையாக மாறிவிட்டான் என்பதைத்தான் காட்டுகின்றது. இராமாயணத்தைக் கொளுத்துவது என்பதும், இராமனை செருப்பால் அடிப்பது என்பதும் தமிழன் தன்னுடைய பழைய வீரத்தையும், தன்மான, சுயமரியாதை உணர்வையும் மீட்டெடுக்கும் வழியாகும். இன்னும் வரும்…
- செ.கார்கி