எங்கே? எங்கே காலி? தெருப் பெயர் என்ன? வீடா? உண்மையாகவா? அதுவும் 5-10 வீடுகள் கூட இல்லையே! ஐயாயிரம் வீடுகளா? ஏன் இப்படித் திடீரென்று காலி செய்து விட்டார்கள்? ஜப்பான்காரன் மறுபடியும் குண்டு போடப் போகிறானா? அல்லது ‘ப்ளேக்’ பரவி விட்டதாக யாராவது கயிறு திரித்து விட்டார்களா? நம்பவே முடியவில்லையோ! ஒரு வருஷமாக 20 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டுக்குத் திண்டாடித் தெருத் தெருவாய்த் திரிந்து கொண்டிருக்கிறேனே!

kuthoosi gurusamy 300இந்த விதமாக சென்னை வாசிகள், அதாவது வீடில்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள், குடும்பத்தை அழைத்துக் கொண்டு வர முடியாமல் கட்டாய பிரம்மசாரி வாழ்வு நடத்துகிறவர்கள், ஹோட்டல் அளவுச் சாப்பாட்டை விழுங்கி (தின்ன முடியாத காரணத்தால்!) வருபவர்கள் - ஆகியோர் ஆச்சரியத்தால் கேட்பீர்கள்!

சற்றுப் பொறுங்கள்! ‘அவசரப் படேல்’ என்று (சர்தார் படேல் அல்ல!) முன்பே கூறியிருக்கிறார்களே, நம் பெரியவர்கள்!

“யாரப்பா உனக்குச் சொன்னது? எங்களுக்கே இன்னும் தகவல் வரவில்லையே! எங்களுடைய சிப்பந்திகளுக்கும் ஆபீசர்களுக்கும் குறைந்த பட்சம் 200 வீடுகளாவது அவசரமாகத் தேவையா யிருந்தும், வீட்டைக் காலி செய்வதும் குடியேறுவதும் காதும் காதும் வைத்த மாதிரி நடக்கிறதே தவிர எங்கள் கவனத்திற்கே வரக் காணோமே! அப்படி யிருக்கையில் திடீரென்று 5000 வீடுகள் காலியாகி விட்டதாக ‘சரடு’ விடுகிறாயா, என்ன?”

இந்த மாதிரி சர்க்கார் கூடக் கேட்கலாம்.

அடாடா! சர்க்கார் கூடவா இவ்வளவு அவசரப்படுவது? சற்றுப் பொறுங்கள். 5000 அல்ல, 7000, 8000 வீடுகள் கூடக் காலியாகப் போகின்றன, பாருங்கள்!

சில பேர் நாக்கில் ‘சனி’ யிருப்பதாகச் சொல்வார்கள். அதாவது, அவர்கள் சொல்கிற கெட்ட சொல் உடனே பலித்து விடுமாம்! இன்னும் சில பேருடைய நாக்கில் சரஸ்வதி இருப்பதாகச் சொல்வார்கள்! அதாவது பெரிய புலவர்களாக இருப்பார்களாம்!

மாஜி மந்திரி கே. பாஷ்யமய்யங்கார் இருக்கிறாரே, அவர் நாக்கில் ‘சனி இருக்கிறானோ, சரஸ்வதி இருக்கிறாளோ', எனக்குத் தெரியாது.

டாக்டர்கள் நோயாளியைப் பார்த்ததும் நாக்கை நீட்டச் சொல்கிறார்களே! அது இதற்காகத் தான் இருக்க வேண்டும். நாக்கில் சனியாவது, சரஸ்வதியாவது இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான் என்றே நினைக்கிறேன்! மாஜி சுமங்கிலிகளை இந்து மதம் அலட்சியப்படுத்துவது போல, சிலர் மாஜி மந்திரிகளையும் அலட்சியப்படுத்துகிறார்கள். நான் மட்டும் மாஜி மந்திரிகளுக்கு ஒரு தனி மரியாதை செலுத்தத் தவறுவதில்லை. அதிலும் கே. பாஷ்யமய்யங்கார் போன்ற ‘மாஜிகள்’ எந்த நேரத்திலும் அதிகாரத்திற்கு (சுமங்கிலியாக) வரக் கூடும் என்ற பயமே எனக்கு!

அவர் சொல்லுகிற காரியம் அப்படியே நடந்துவிடுகிறது பாருங்கள்? ‘கருஞ்சட்டை முறையைச் சட்ட விரோதமாக்க வேண்டும்’ என்று முதன் முதல் ஹிந்து பத்திரிகையில் எழுதினார். அப்படியே செய்தார்கள், காங்கிரஸ்சர்க்கார்.

இன்று இன்னொரு அருமையான யோசனை கூறியிருக்கிறார். யாருக்கு? தன் இனத்துக்கு. லட்சுமிபுரம் ஒய்.எம்.ஏ.யில் பேசிய போது, “பிராமணர்கள் சர்க்கார் வேலைக்கே போகக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறேன்,” என்று கூறியிருக்கிறார். சர்க்கார் உத்யோகத்தைத் தவிர வேறு எத்தனையோ வேலைகள் பிராமணர்களுக்கு இருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்..

பாஷ்யமய்யங்கார் சொன்னதை ஓமந்தூர் சர்க்கார் உடனே கேட்டது போலவே, பிராமண சமுதாயமும் உடனே கேட்கும் என்பது நிச்சயம். பாஷ்யமய்யங்கார் வாக்குப் பலித்தே விடப் போகிறது!

வெளியூர்க்காரர்! எப்படிச் செய்தாலும், சென்னையிலுள்ள பிராமணர்களாவது தங்கள் சர்க்கார் உத்யோகங்களை ராஜிநாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ‘வேலையிலிருப்பவர்களை அவர் விடச் சொல்லவிலையே!” என்று எவரும் தவறாக நினைத்துவிடக் கூடாது.

‘இம்மாகாணத்திலுள்ள வகுப்பு வேற்றுமை ஒழிவதற்கு இதுவே சரியான ஒரு வழி,’ என்றும், பிராமண இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று குடியேற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஆதலால் இங்குள்ள பிராமண உத்யோகஸ்தர்கள் நிச்சயம் கிராமங்களுக்குப் புறப்படப் போகிறார்கள்! என்ன சொன்னாலும் தியாகிகள் தியாகிகள்தான்! யாருக்கு இருக்கும் இவ்வளவு பெரிய தியாகச் சிந்தனை?

குறைந்த பட்சம் 5000 வீடுகளாவது சென்னையில் காலியாகலாம். தியாகராய நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற அக்கிரகாரப் பகுதிகளில் இனிமேல், பழங்குடி மக்களும், கிருஸ்துவர்களும், ஆங்கிலோ இந்தியர்களும், முஸ்லிம்களும், இதர திராவிடர்களும் தாராளமாகக் குடியேறலாம்! சாமான்களைக் கட்டி வைத்துக் கொண்டு தயாராயிருங்கள்!

ஆனால் தோழர் பாஷ்யமய்யங்கார் எந்தக் கிராமத்திற்குக் குடியேறப் போகிறார், என்று என்னைக் கேட்காதீர்கள். அடுத்த மந்திரி சபையில் தனக்கு ஏதாவது ஒரு ‘சான்ஸ்’ கிடைக்குமா என்பதையும் பார்த்து விட்டுத்தானே புறப்பட வேண்டும்! அதற்குள்ளே அவசரப்பட்டால் என்ன செய்கிறது? அது மட்டுமா? அவர் போகப் போகிற கிராமத்திற்கு ஹைகோர்ட்டை மாற்றிவிட்டு, பிறகல்லவா அவர் புறப்பட வேண்டும்? எவ்வளவு சிரமம்? எவ்வளவு பொறுப்பு! பாவம்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It