சென்னை மாகாணத்தில் நடைபெற்ற சட்ட சபையின் தேர்தல்களின் முடிவுகள் இந்த வாரத்தில் அநேகமாய் எல்லாம் வெளியாய் விட்டன.
இதில் முக்கியமாய் நாம் மகிழ்ச்சி அடையத்தக்கது இரு விஷயங்க ளாகும். அதாவது தேசம், தேசியம், காங்கிரசு என்பவைகளின் பேரால் மக்களை ஏமாற்ற பலருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது ஒன்று.
மற்றொன்று, பார்ப்பன சூட்சிக்கு செல்வாக்கில்லாமல் போய் விட்டதாகும். உதாரணமாக இதுவரை இந்திய சட்டசபைக்கு தமிழ்நாட்டி லிருந்து வெறும் அய்யங்கார்களே பெரும்பாலாய் போய்க் கொண்டிருப்பது வழக்கம். இவ்வருஷம் அது சற்று மாறிவிட்டது.
அதாவது மதுரை இராம நாதபுரத்திற்கு திரு. சேஷயங்காருக்குப் பதிலாக திரு. ராஜாராம் பாண்டியனும், சென்னைக்கு திரு. சீனிவாசய்யங்காருக்குப் பதிலாக திரு எ. இராமசாமி முதலியாரும், மலபார், தென் கன்னடத்திற்கு திரு. கே. வி. ரங்கசாமி அய்யங்காருக்குப் பதிலாக கொல்லங்கோடு வாசுதேவ ராஜாவும், சித்தூர், சென்னை வகையராவுக்கு துரைசாமி அய்யங்காருக்குப் பதிலாக திரு. இராம கிருஷ்ண ரெட்டியாரும் வந்திருப்பது குறிப்பிடத் தகுந்த மாறுதலாகும்
செங்கற்பட்டில் பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சி இல்லாதிருக்குமானால் அங்கும் ஒரு அய்யங்காரை மாற்றி யாராவது பார்ப்பனரல்லாதாரே வந்திருக்கலாம்.
தஞ்சை, திருச்சி ஜில்லாக்களுக்கும் இந்திய சட்டசபைக்குப் போவதில் ஏதாவது சுயநலம் அடைய மார்க்கம் உண்டு என்று அறியத்தக்க நிலைமையாருக்காவது இருந்திருக்குமானால் அங்கும் ஒரு பார்ப்பனரல்லாதாரே வெற்றி பெற்றிருக்கலாம் என்றாலும் ஒரு தொகுதியாவது பார்ப்பனருக்கு விடப்பட வேண்டியது நியாயமானதால் அதற்காக தஞ்சை தொகுதி விடப்படுவதில் ஆnக்ஷபனை இல்லை.
ஆனாலும் அந்த இரண்டு அய்யங்கார் பார்ப்பனர்களும் சாரதா சட்டத்தை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு வெற்றி பெற்றது தான் நாம் வருந்தத்தக்க முடிவாகும். மற்றபடி சென்னை சட்டசபைக்கும் தமிழ்நாட்டிலிருந்து இவ்வருடத்தில் ஆறு பார்ப்பனர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இதுவும் சென்ற வருஷத்தில் இருந்த எண்ணிக்கைக்கு மிக்கக் கீழாகவே வந்து விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது சென்ற வருஷம் சென்னையில் இருவர், தென் ஆற்காட்டில் ஒருவர், தஞ்சையில் ஒருவர், திருச்சியில் இருவர், கோவையில் ஒருவர், மதுரையில் ஒருவர், இராமநாதபுரத்தில் ஒருவர், மலையாளத்தில் ஒருவர் ஆக பத்துப்பேர்கள் பார்ப்பனர்கள் இருந்தார்கள். இவ்வருஷம் சென்னை ஒரு ஸ்தானம், தென்னாற்காடு, கோவை, மலையாளம், திருச்சியில் ஒரு ஸ்தானமாக அய்ந்து இடங்களில் அவர்களது ஸ்தானங்கள் மாற்றப்பட்டு விட்டது.
மற்ற இடங்களும் அநேகமாக தஞ்சையைத் தவிர பாக்கியெல்லாம் மாற்றியே இருக்கலாம். ஆனாலும் அவைகளும் பார்ப்பனரல்லா தார்களுக்குள்ளாகவே மந்திரி கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்கின்ற போட்டிகளால் மாற்ற முடியாமல் போய்விட்டதே தவிர பார்ப்பனர்களின் செல்வாக் கால் அவர்களது சொந்த முயற்சியால் வரப்பட்டார்கள் என்று சொல்ல முடியாது.
ஆகவே பார்ப்பனர் அல்லாத கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சி சென்ற தேர்தலில் வகுப்புவாதம் காரணமாக என்று தோல்வியுற்றும், வகுப்பு வாதத்திற்கு விரோதமாய் தேசீயப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஒரே மூச்சாய் கூப்பாடு போட்டும் ஜஸ்டிஸ் கட்சியாரும் அதற்குப் பயந்து கொண்டு பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வதாய்த் தீர்மானம் செய்தும் பார்ப்பனரல்லாதார் கட்சி பிற்போக்கான கட்சியென்றும், அதை ஒழிக்க வேண்டுமென்றும் காங்கிரஸ் தீர்மானம் செய்தும், ஜஸ்டிஸ் கட்சியும், மந்திரி கட்சியும், நாஸ்திக இயக்கமும் தேச விடுதலைக்கு முட்டுக்கட்டையான இயக்கமும் ஆகிய சுயமரியாதை கட்சியோடு சேர்ந்து விட்டது என்று விஷமப் பிரசாரங்கள் செய்யப்பட்டும், இந்தத் தடவை இந்த மாதிரியான மாறுதல் ஏற்பட்டிருக்கின்றதென்றால் பார்ப்பனீயத்திற்கு எதிரான பிரசார மும் நாஸ்திகப் பிரசாரமென்பதும், வகுப்புவாதப் பிரசாரமும் பயன்பட்டி ருக்கின்றன வென்றே சொல்லுவோம்.
ஆனாலும் திருச்சி நகரத் தொகுதிக்கும், மதுரை நகரத் தொகுதிக்கும் பார்ப்பனர் வெற்றி ஏற்பட்டது அவ்விரு நகர பார்ப்பனரல்லாதார்களுக்கும் அவமானம் என்றே சொல்லுவோம். வட ஆற்காடு ஜில்லாவுக்கு ஒரு பார்ப்பனர் புதிதாக வந்ததானதும் வருந்தத் தக்கதானாலும் அதைவிட மோசமான திரு. ஆதிநாராயண செட்டியார் மாற்றப்பட்டு அந்த ஸ்தானத்திற்குத் தான் பார்ப்பனர் வரப்பட்டார் என்பது சிறிதே ஆறுதலளிக்கத் தக்கதாகும்.
திருச்சி சேதுரத்தினமையர் உபத்திரவமில்லாத பார்ப்பனர் என்று சொல்லப்பட்டாலும் திரு. நாராயணசாமி பிள்ளையை விட மோசமில்லை என்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும், ஜில்லாப் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையைக் காக்கவாவது இந்த நிலை ஏற்பட்டது ஒரு வழியில் நன்மையேயாகும்.
இராமநாதபுரம் ஜில்லாவானது இன்னமும் நாட்டுக் கோட்டையார் ஆதிக்கத்திலும் இராமநாதபுரம் ராஜா அவர்கள் ஆதிக்கத்திலும் இருக்கும்வரை அந்த ஜில்லாவில் பார்ப்பனர்களுக்குச் செல்வாக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். அவ்விருவருக்கும் உண்மையான சமூக உணர்ச்சி வரும்வரையிலும் அல்லது அந்த ஜில்லா மக்களுக்கு பூரண சுய மரியாதை உணர்ச்சி வரும் வரையிலும் இவ்வளவு தான் எதிர்பார்க்கலாம்.
தவிர தஞ்சை ஜில்லாவில் திரு. முத்தையா முதலியார் வராமல் போனது வருந்தத்தக்க விஷயமாகும், ஏனெனில் நாம் அவர் மறுபடியும் வந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதெல்லாம் ஒரே ஒரு காரியத்திற்காகத்தான். அதாவது அரசாங்க உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவப்படி உத்தியோகம் பெற வசதியான உத்தரவு போட்டதற்கு ஆகவேதான்.
ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அவர் தோல்வியுற்றார் என்று சொல்லப்படுமானால் அதிலிருந்து பார்ப்பனரல்லாதார்களுக்குப் போதுமான சுய அறிவு இல்லை என்று சொல்லியாக வேண்டியதற்கு அந்த ஒரு காரணமே போதுமானதுடன் நமது மக்களுக்கு வோட்டை உபயோ கிக்கும் யோக்கியதை இல்லை என்றே சொல்லுவோம்.
அல்லது சென்ற தேர்தலில் காங்கிரசின் பேரால் நின்று விட்டு மந்திரி உத்தியோகம் பெற்றுக் கொண்டதால் தோல்வியுற்றார் என்று சொல்லுவதானால், அதுவும் யோக்கியப் பொறுப்பற்ற வார்த்தையென்று தான் சொல்லுவோம்.
எப்படியெனில் காங்கிரசின் பேரால் நின்று, திரு. படேல் உத்தியோகம் பெற்று மாதம் 3000, 4000 ரூபாய் சம்பாதித்ததும், காங்கிரஸ் பேரால் நின்ற தலைவர் திரு நரசிம்மராஜு உத்தியோகம் பெற்று மாதம் 2000, 3000 ரூபாய் சம்பாதித்ததும் இன்னமும் பண்டித நேரு திரு. ரங்கசாமி அய்யங்கார் திரு. சத்தியமூர்த்தி ஆகியவர்கள் காங்கிரசின் பேரால் நின்று அரசாங்க கமிட்டியில் பதவி பெற்று அலுவல் பார்த்ததும் பணம் பெற்றது முதலான காரியங்கள் பிரத்தி யக்ஷத்தில் நடந்து இருக்கும் போலும்.
இந்த ஆசாமிகள் எல்லாம் இன்றைய தினமும் தேசபக்தர்களாகவும் தலைவர்களாகவும் இருக்கும் போதும் திரு. முத்தையா முதலியார் மந்திரி பதவி ஒப்புக் கொண்டது மாத்திரம் பாவ மென்றால் இதை அறிவுள்ளவர்கள் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும். ஏதோ பதவி போட்டியில் ஒருவருக்கொருவர் செய்த எதிர்ப் பிரசாரத்தால் தோல்வி ஏற்பட்டுவிட்டதென்றால் நமக்கு ஆnக்ஷபனை யில்லை.
ஆகவே பொதுவாக இந்தத் தடவை தேர்தலில் பார்ப்பன ஆதிக்கம் ஒருவாறு குறைவு பட்டது என்கின்ற வரையில் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரப்பட்ட சேதியேயாகும்.
மற்றபடி பார்ப்பனரல்லாதார்களில் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கொடுமை செய்யப்பட்ட மக்கள், தொழிலாளிகள், கூலிக்காரர்கள், சாதாரண குடியானவர்கள் ஆகிய 100க்கு 90க்கு மேற்பட்ட ஜனசமூகத்திற்கு இத் தேர்தல் முடிவானது சரியான “கூற்றுவன்”- அதாவது அவர்களது உயிரை வாட்டத் தகுந்த தன்மையது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்தக் குற்றம் பிரதிநிதித்துவ அமைப்பைப் பற்றியதே ஒழிய வோட்டர்களைப் பற்றியது என்று நாம் சொல்ல வரவில்லை.
வோட்டர்களுக்கு புத்தியும், நன்மை தீமை அறியும் சக்தியும், வோட்டுச் செய்யும் தன்மையின் நாணயமும் உண்டாக்கும் வேலைக்கு இதுவரை எந்த சீர்திருத்தத்திலும் இடமில்லை. எந்த தலைவரும் அதற்கு முயற்சி செய்யவும் இல்லை. ஆகையால் அது விஷயத்தில் நாம் வோட்டர் களைப் பயிற்றும் முயற்சியில் இருக்க வேண்டுமே ஒழிய அவர்களைக் குற்றம் சொல்வது மூடத்தனமேயாகும்.
தவிர உண்மையான ஒரு யோக்கியன் என்பவன் அதாவது சமதர்மத்தில் லக்ஷியமுள்ள ஒருவன் இன்றைய தினம் ஒரு கிராமப் பஞ்சாயத்து சபைக்கு நின்றால் கூட வெற்றிபெற முடியாத நிலையில் தான் இன்று இந்திய வோட்டர்களின் அறிவும், சமதர்ம பிரதிநிதியின் நிலைமையும் இருக் கின்றது.
தவிரவும், சட்டசபையின் மூலம், ஒருவனுக்குத் தனது சுய நலப்பயன் பெற ஆசையில்லையானால் அங்கு வேலையும் இல்லை; வெற்றியும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தேர்தலுக்கும் 10, 20, 30, ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியிருக்கின்றன.
செலவு செய்யாமல் வோட்டர்களுக்குப் பெரிதும் பணம் கொடுக்காமல் வோட்டுபெற முடிவதில்லை. பொதுக்காரியத்திற்கு உண்மை யாய் உழைப்பவன் எதற்காக கையில் இருந்து பதினாயிரக்கணக்காகச் செலவு செய்யமுன் வருவான். அன்றியும் பணக்காரனுக்குத் தான் இப்படிச் செலவு செய்யமுடியும். பொது நலத்தில் ஈடுபடும் பணக்காரன் கிடைப்பதும் அருமை.
ஏழைகள் ஈடுபட்டாலோ அவர்களுக்குப் பணமில்லாததால் அவர்கள் வர முடிவதில்லை.ஆகையால் இந்த சட்டசபைகளை நாட்டுக்கு பெரும்பான்மை மக்க ளின் பிரதிநிதித்துவம் என்று யாராலும் சொல்லவே முடியாது.
உதாரணமாக இப்போது வெற்றி பெற்று வந்திருக்கும் கனவான்களைப் பார்ப்போமானால் கூட உண்மை நன்றாய் விளங்கிவிடும்.
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் ஏற்பட்டுள்ள 30, 35 பொது ஸ்தானங்களுக்கு வெற்றி பெற்றிருக்கும் கனவான்கள் யாரென்றால் ஜமீன் தார்கள், லேவா தேவிக்காரர்கள், பார்ப்பனர்கள், வக்கீல்கள் 500, 1000, 10000 ஏக்கர் நிலங்கள் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய மிராசுதாரர்கள் ஆகிய வியாபாரிகள் இவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை.
இந்தக் கூட்டத்தார் ஏழை மக்களுக்கு பிரதிநிதிகள் என்றால் இவர்களை விட வெள்ளைக் காரர்களே அரசாட்சியில் இருப்பதில் என்ன கெடுதி என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனெனில், மேற்கண்ட அத்தனை பேரும் ஏழைகளைப் பாமர மக்களைத் தாழ்த்திக் கொடுமைப்படுத்தி இம்சித்து வயிற்றிற்கில்லாமல் அடித்துத் துரத்தி அந்த நிலை பெற்றவர்கள் ஆவார்கள் என்பதோடு இனியும் அதே நிலையில் மேலும் முற்போக்கடையக் கருதிக் கொண்டிருப்பவர்களும் ஆவார்கள்.
ஆகையால் இவர்களது ஆட்சியை விட மோசமான ஆக்ஷி உலகத்தில் வேறு எந்த ஆட்சியும் இருக்காதென்று தான் சொல்லுவோம். ஆதலால் தேர்தல் முடிவைப் பற்றி பொதுவாக நாம் சிறிதும் சந்தோஷப்படுவதற்கில்லை.
ஆனாலும் இவர்களுள் ஏதாவது தனிப்பட்ட நபர்களைப் பிடித்துக் கெஞ்சிக் கூத்தாடி ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஏதா வது நன்மை செய்து கொள்ள முடியுமா என்பதுதான் நாம் இனிச் செய்ய வேண்டிய வேலையாகும்.
இப்பொழுது வெற்றி பெற்றவர்களெல்லாம் பெரிதும் தேர்தல்களில் தாங்கள் செலவழித்த பணத்தை எடுப்பதற்குக் கூடிக் கூடி யோசனையும் முயற்சியும் செய்து கொண்டிருக்கும் வேலையில் முனைந்திருக்கின்றார்கள் ஆனதால் அவர்கள் யோசனை முடிந்து ஆய்ந்து ஓய்ந்த பிறகு நமது லட்சியத்திற்கு ஏதாவது வகை உண்டா என்று முயலு வோம்.
(குடி அரசு - தலையங்கம் - 21.09.1930)