“வாருங்கள் ஸார் மிஸ்டர் கிணற்றுத் தவளை எங்கே, இருபது இராத்திரிகளாய் உங்கள் சத்தத்தையே காணோமே! கொர, கொர, கொர, கொர, கொர, கொர என்று காலட்சேபம் பண்ணிக் கொண்டே இருப்பீர்களே! மூச்சுப்பேச்சையே காணோமே!”
"என்னையா கேட்கிறாய், குத்தூசி? ஆமாம்! காலம் கெட்டுப் போய்க் கிடக்குது பாரு! நான் வாயைத் திறந்தால் பாம்பு தன் வாயைத் திறக்கிறது. அதுவும் இந்த மாதம் (பிப்ரவரி) ஒண்ணாந்தேதி முதல் ஒரே தடபுடலாயிருக்கிறது! அதற்காக யார் கண்ணிலும் படாமல் உலக சுற்றுப் பிரயாணம் போய்விட்டு இன்றுதான் வந்தேன்!”
“உலக சுற்றுப் பிரயாணமா? தாங்களா? கிணற்றை விட்டே வெளிவர முடியாதவர், அப்படி வந்தாலும் தத்தித் தத்தி மாதம் காத வழிகூடப் போக முடியாத நீங்களா உலக சுற்றுப் பிரயாணம் செய்தீர்களா? இதென்ன, கம்பராமாயண - கந்தபுராண - பெரிய புராணப் புளுகுகளை யெல்லாம் தோற்கடித்து விடும் போலிருக்கிறதே, உங்கள் புளுகு!” இவ்வாறு நான் கேட்டேன், ஸ்ரீலஸ்ரீ கிணற்றுத் தவளையாரை.
அதற்கு அவர் கூறினார்:-
“நான் சொன்னால் புளுகாகத் தானிருக்கும், உனக்கு. இனி மேல் என்னைக் கிணற்றுத் தவளை என்று கூப்பிடப் கூடாது. 'அமெரிக்க கோட்டை விமானம்,’ என்று கூப்பிட வேண்டும், தெரியுமா?”
"கபோதியைக் கண்ணாயிரம் என்று அழைப்பது போலவா?”
“அல்ல அல்ல; கும்பகோணம் சங்கராச்சாரியாரை 'லோககுரு' என்று அழைப்பதுபோல! பல்லக்கில் சவாரி செய்யும் அவர் ‘லோககுரு’வாக விளங்கும்போது; அவரைவிட அதிக வேகமாக நடக்கக் கூடிய நான் ஏன் கோட்டை விமானமாக விளங்கக் கூடாது?”
“அது கிடக்கட்டும்! ஊரார் பேச்சு நமக்கு எதற்கு? நீர் ஏன் மீண்டும் உம் கிணற்றுக்கே வந்து விட்டீர்? உலகத்தில் ஒரு குளமோ, குட்டையோ, ஆறோ, வாய்க்காலோ கிடைக்காமலா போய்விட்டது?”
“ஆஹா, எத்தனையோ இருக்கிறது! எதுவும் பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் சொந்த இடம் ஒரு மாதிரித்தான். அதுமட்டுமல்ல, காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஜகக்குரு ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் கடலூருக்கு அருகிலுள்ள பாகூரில் கூடார மடித்து பிiக்ஷ (‘பிச்சை’ அல்ல; ஜாக்கிரதையாகப் படிக்கவும்!) ஏற்று வருகிறாரே, தெரியுமா? அவர் காந்தியடிகளின் மரணத்திற்காக எல்லோரும் மகோதய ஸ்நானம் செய்ய வேண்டுமென்று சொல்லி யிருந்தாரே, அதைப் படித்தாயா, குத்தூசி?”
“ஆமாம்! படித்தேன். அவர் ஏதேதோ உளறிக் கொட்டி யிருக்கிறாரே!
“காந்திஜி மரணத்திற்கு ஒரு ஹிந்துவே காரணமாயிருப்பது ஹிந்து சமூகத்துக்கே ஏற்பட்ட பேரவமானம். அத்தகைய மகானைச் சுட்டுக் கொன்ற பாபம் நம் ஹிந்து சமூகத்தையே சூழ்ந்துள்ளது. தோஷங்களுக்கெல்லாம் பரிகாரம் ஸ்நானம்தான்,' என்றல்லவா கூறியிருக்கிறார்? ஒரு மகானைக் கொன்று விட்டால்கூட ஒரு முழுக்குப் போட்டு விட்டால் போதும் என்கிறாரே! என்ன கல் நெஞ்சய்யா இவருக்கு?”
“இந்தா, குத்தூசி! ஜகத்குருவைப் பற்றி இப்படி அலட்சியமாகப் பேசாதே! அவர் சாமான்யப்பட்டவரல்ல! ஹிந்து மதத்திற்கே, பூதேவர்களுக்கே தலைவர்! அவர் இல்லாவிட்டால் இந்து மகா சபையாவது ஆர். எஸ். எஸ்ஆவது! அவர்தான் வைதீக இந்து மதத்தின் ஆணிவேர். தெரியுமா?”
“அப்படியானால் அவரை மட்டும் ஏன். . . . . . . . ?”
“...... அரெஸ்ட் செய்யவில்லை என்றுதானே கேட்கிறாய்? அவர் வகுப்புத் துவேஷமா பேசுகிறார்? சூத்திரர் யாரும் தன்னிடத்தில் நெருங்கக் கூடாது என்கிறார்! அவர்களுடன் பேச மாட்டார். நேரே பிரசாதம் (சாம்பல் தூள்) தரமாட்டார்! அவ்வளவுதானே! இது எப்படி வகுப்புத் துவேஷமாகும்? பரம்பரையாக உள்ள பழக்கந்தானே?”
“அது கிடக்கட்டும்! முழுக்குப் போட்டுவிட்டால் பரிகாரமாகிவிடும் என்கிறாரே! கொலைகாரப் பிராமணனான கோட்ஸேகூட கும்பகோணம் காவிரியில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் போதுமா?”
“ஆஹா! போதுமே! எந்தப் பிராமணனையாவது இதுவரையில் தூக்குப் போட்டிருக்கிறதாக கேள்விப்பட்டிருக்கிறாயா? கொலை செய்த அய்யங்கார் கூட ஆயுள் தண்டனை பெற்றுத்தானே வெளியே வந்தவிட்டார்! நீ மநுதர்மம் படித்ததில்லை போலிருக்கு! 8 ஆவது அத்தியாயம் 381 ஆவது சுலோகம் என்ன தெரியுமா?
“பிரம்ம ஹத்தியைவிட அதிகமான பாவம் உலகத்தில் கிடையாது. ஆதலால், பிராமணனைக் கொல்ல வேண்டுமென்று அரசன் மனதினால் கூட நினைக்கக் கூடாது, என்று மனுதர்மம் கூறுகிறது!”
“ஓஹோ! அதுதான் கைதியான பிராமணர்களை யெல்லாம் விடுதலை செய்கிறார்களோ? இப்பத்தான் புரிந்தது! அதுசரி! நீர் இனி என்ன செய்யப் போகிறீர்?”
“முன் ஜென்மத்தில் பல கொலைகளைச் செய்திருக்கிறேன். அவைகளுக்குப் பரிகாரமாக ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் ஆக்கினைப்படி ஸ்நானம் செய்யப் போகிறேன். அதாவது சதா ஜலத்திலேயே கிடக்கப் போகிறேன்.”
“அப்படியா? போமய்யா போம்! உங்கள் நாட்டில்தான் இப்போது மழை பெய்கிறது?”
“ஆமா குத்தூசி! நீ ஸ்நானம் செய்தாயோ?”
“நானா? நான் ஹிந்து வல்லவே! திராவிடனாச்சே! ஹிந்துக்களுக்குத் தானே அந்தக் கொலை பாதகத்தின் பழி? அது கிடக்கட்டும்! யாரோ ஒரு பிராமணன் கொன்றான் என்பதற்காக எல்லா ஹிந்துக்களையும் சேர்த்து இழுக்கிறாரே சங்கராச்சாரியார், கவனித்தீரா?”
“ஏ குத்தூசி? என்ன, ஜாடையாகக் குத்த ஆரம்பிக்கிறாய்? இரு! இரு! ஜகத்குருகிட்டே சொல்லி, மயிலை சாஸ்திரியார் வழியாக பாஷ்யத்துக்கிட்டே சொல்லச் சொல்லி சீனுவாசய்யங்கார்களுக்குச் சொல்லி, எழுத வைத்து உன்னை ஒரு கை பார்க்கிறேன்.”
(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)
நன்றி: வாலாசா வல்லவன்