சென்னை சட்டசபைக்கு சாமி வெங்கடாசலம் செட்டியார் அவர்களால் காலி செய்த ஸ்தானமானது பூர்த்தி செய்யப்படுவதற்கு காங்கிரசுக்காரர்கள் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் வெற்றியைப் பார்த்த பிறகு அதற்கும் பார்ப்பனர்களாகவே பார்த்து நிறுத்த முயற்சித்து வருகிறார்கள். தோழர் லக்ஷிமிபதி அம்மாள் அவர்கள் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டது. பிறகு தோழர் டி. பிரகாசம் பந்துலு அவர்கள் பெயர் பிரஸ்தாபிக்கப்படுகிறது. அவர்கள் பெயர் ஓட்டர் லிஸ்டில் காணப்படவில்லை என்றும் சொல்லிக் கொள்ளப்படுகிறது என்றாலும் மறுபடியும் ஒரு அரைப்பார்ப்பனரையாவது அந்த ஸ்தானத்துக்கு போட பார்க்கின்றார்களே ஒழிய தோழர் கத்தே ரங்கய்ய நாயுடு அவர்கள் காங்கிரசுக்காக என்று எவ்வளவோ உழைத்து வந்தும் அவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதால் அவர் பெயரை பிரஸ்தாபிப்பாரையே காணோம். அவர் எந்தக் காரணத்தினால் பிடித்தமில்லை ஆனாலும் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாரையாவது போடலாம்.ஆகவே இந்த சந்தர்ப்பத்திலேயே எவ்வளவு பார்ப்பனர்களை புகுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு பெயர்களையும் புகுத்திக் கொள்ள முடிவு செய்து தோழர் டாக்டர் மல்லப்பா அவர்களை நமது பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதியில் நிறுத்த தீர்மானித்து இருக்கிறார்கள். இதற்கு பாட்னாவில் இருந்து உத்திரவு வந்தது போல் வேஷம் போட்டு மக்களை ஏமாற்ற பார்லிமெண்டரி போர்ட் தீர்மானம் செய்து விட்டது என்று தந்தி அடித்து விட்டார்கள்.
ஆகவே காங்கிரசின் வெற்றி பார்ப்பனர் வெற்றி என்பதும் காங்கிரஸ் தேர்தல் பார்ப்பனர் தேர்தல் என்பதும் காங்கிரஸ் கட்சி ஜஸ்டிஸ் கட்சி என்பதும் பார்ப்பனர் கட்சி அல்லாதார் கட்சி என்பது தான் என்பதும் இதிலிருந்தாவது பார்ப்பனரல்லாத புல்லுருவிகள் உணர்வார்களாக.
(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 09.12.1934)