உள்கட்சி சனநாயகத்தை ஒழித்தவர் உலகறிந்த நேருவின் மகள் இந்திராகாந்தி

இராமாயணமும் பாரதமும் இந்தியா முழுவதிலும் அறியப்பட்ட இதிகாசங்கள். அவை புனித நூல்களாக இந்துக்களால் போற்றப்பட்டன. அப்படிப்பட்ட சிந்தனை இந்துக்களிடையே ஓர் இனம்புரியாத ஒற்றுமையை ஏற்படுத்தியிருந்தது. இது பண்பாடு சார்ந்தது.

ஆதி சங்கரர் காலத்துக்குப் பிறகு (கி.பி. 830) இந்தியா முழுவதிலும் பார்பபனப் புரோகிதம் வேகமாகப் பரவியது. பார்ப்பான் உயர்ந்த சாதிக்காரன் - இந்துக்களின் மதகுரு என்கிற இடத்தைப் பிடித்துக் கொண்டான். வெள்ளையன் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்களும் இராச புத்திரர்களும் காயஸ்தர்களுமே படித்தவர்களாக இருந்தார்க்ள. இவர்களும் உருது பேசிய இஸ்லாமியர்களுமே அரசுக் கல்வி, அரசுப் பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

வெள்ளையனை எதிர்த்துப் போராடிய காங்கிரசுக் கட்சியை வெள்ளையர்களே உருவாக்கினர். அக் கட்சியின் பெருந்தலைவர்களாகப் பார்ப்பனர்களே விளங்கினர். பார்ப்பன சனாதனப் பாதுகாவலரான காந்தியார் 1920க்குப் பிறகு காங்கிரசில் செல்வாக்குப் பெற்றார். வட நாட்டில் மோதிலால் நேரு, அவருடைய மகன் ஜவஹர்லால் நேரு இருவரும் காந்தியாரால் வளர்க்கப்பட்டனர். தென்னாட்டில் அய்யங்கார் பார்ப்பனர் ஆச்சாரியாரும், அய்யர் பார்ப்பனர் சத்திய மூர்த்தியும் காங்கிரசில் செல்வாக்குப் பெற்றனர்.

இந்தச் சூழலில்தான் இந்தப் பார்ப்பனர்களிடமும்; அவருடைய பணிகளுக்கு நிதி உதவிய டாட்டா, பிர்லா, பஜாஜ் ஆகிய பணக்காரர்களிடமும் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்து விட்டு, 1947 ஆகஸ்ட்டில் வெள்ளையன் வெளியேறினான். காந்தியார் கட்சி - வெள்ளையனை வெளியேற்றிய கட்சி- இந்திய தேசியக்கட்சி என்கிற எண்ணமும் சிந்தனையும் - காங்கிரசுக் கட்சி மட்டுமே 6 இலட்சம் ஊர்களிலும் அறியப்பட்ட கட்சியாக இன்றுவரை நிலைத்திருக்க உதவுகின்றன.

இந்து - இஸ்லாம் - சீக்கியர் - கிறித்துவர் என்கிற எல்லா மதத்தினரிடமும் வாக்கு வங்கியை காங்கிரசு மட்டுமே பெற்றிருக்கிறது. எல்லா உள் சாதிகளிடமும் சிலவாக்குகளையேனும் பெறுகிற கட்சியாக இருப்பது காங்கிரசு மட்டுமே.

1925இல் தோற்றுவிக்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் அனைத்திந்தியக் கட்சிகள். அதிலும் முன்னணித் தலைவர்களாக விளங்கியவர்கள் பார்ப்பனர்களே. அவர்களுள் சிலர் பூணூலையும் உச்சிக்குடுமியையும் நீக்கிவிட்டாலும், பார்ப்பன ஆதிக்க மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை. பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்கத்தைக் குலைக்க அவர்கள் ஆற்றியிருக்க வேண்டிய பங்களிப்பை 1980 வரையில் புறக்கணித்தனர். இந்தியாவில் எல்லா ஊர்களிலும் இவர்கள் இன்றுவரை கால் கொள்ள முடியவில்லை.

தென்னாட்டிலும், வட நாட்டிலும் 1920களில் உருவாக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும், தீண்டப்படாதார் இயக்கமும் அனைத்திந்திய இயக்கங்களாக வளர்க்கப்படவில்லை. 1937இலேயே இத்தகைய எண்ணங் கொண்ட பெரியார் ஈ.வெ.ரா-வின் விருப்பம் இன்றளவும் ஏட்டிலேயே உள்ளது. டாக்டர் அம்பேத்கரின் வளர்ச்சியை தேசியக் கட்சிகளும் காந்தியக் கொள்கையாளரும் விரும்பவில்லை.

இந்த இடைவெளியில் 1948 முதல் திட்டமிட்டு முயற்சித்த பாரதிய சனதாக் கொள்கையினர் - காங்கிரசையும் மிஞ்சிய ஏக இந்தியவாதிகளாக - இந்துத்துவ ஆதிக்கவாதிகளாக - 1980க்குள் வளர்ந்து விட்டனர்.

1947க்குப் பிறகு முதலில் அளிக்கப்பட்டிருக்க வேண்டிய வயது “வந்தோருக்கான வாக்குரிமை” 1952இல்தான் வந்தது.

1960க்குள் எல்லோருக்கும் தரப்பட்டிருக்க வேண்டிய தொடக்கக் கல்வி தரப்பட இணக்கமான முயற்சி 2010 வரையில் எடுக்கப்படவில்லை.

1946 முதல் 1964 வரை பார்ப்பன நேருவே பிரதமர்; 1966 சனவரி முதல் 1977 வரையில், 1980 முதல் 1984 வரையில் நேருவின் மகள் இந்திராவே பிரதமர்; 1984 இறுதி முதல் 1989 முடிய இந்திரா காந்தியின் மகன் இராஜீவே பிரதமர், இப்போது 2004 முதல் இந்திரா காந்தியின் மருமகள் சோனியா காந்தியே காங்கிரசின் ஆளும் கூட்டணியின் ஒரே தலைவி.

இவ்வாறு நேருவின் குடும்பமே 43 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்டிருக்கிறது. காங்கிரசு 48 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது. அதனால் தான் இந்தியாவின் வளர்ச்சி என்றாலும், தளர்ச்சி என்றாலும் அதற்குப் பெரும் பொறுப்பை காங்கிரசே ஏற்க வேண்டும் என நாம் கருதுகிறோம். அதில் மிகப் பெரும் தளர்ச்சிக்குக் காரணமானவர் இந்திரா காந்தியே ஆவார்.

பண்டித நேருவே காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும், தலைமை அமைச்சராகவும் முடி சூடா மன்னராகவும் 1955 வரையில் விளங்கினார். அவர்தான் 1955 இலேயே இந்திரா காந்தியை காங்கிரசுக் கட்சியின் தலைவராக அமர்த்தினார். காங்கிரசை ஆட்டிப் படைப்பதை 29 ஆண்டுகள் இந்திரா காந்தி செய்தார்.

இந்திய மாநிலங்கள் பெரும்பாலானவற்றை 1967 வரையில் காங்கிரசுப் பார்ப்பனர்களும், காரியஸ்தர்களுமே முதலமைச்சர்களாக இருந்து ஆண்டனர். இதற்கு ஒரு அடியை கேரள மக்கள் கொடுத்தனர்.

1957இல் கேரள மாநில ஆட்சியைப் பொதுவுடைமைக் கட்சி கைப்பற்றியது. அந்த ஆட்சியைக் கலைத்தே தீரவேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவர். இந்திரா காந்திதான். அதை அப்படியே நேரு செய்தார். மக்கள் நாயகத்தின் மாண்பைக் கெடுத்திடத் தந்தையும் மகளுமே காரணம் ஆயினர். 1967க்குப் பிறகு 40 ஆண்டுகளாக காங்கிரசு, கம்யூனிஸ்ட் (வலது) - கம்யூனிஸ்ட் (இடது) என மாறி, மாறி கேரளாவில் ஆட்சி நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலையில் 27 ஆண்டுகள் இடதுசாரிக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இவர் ஒரு காயஸ்தர். காங்கிரசு, பாரதிய சனதா என எந்தக் கட்சி ஆட்சியானாலும் ஒரிசாவை ஒரு பட்நாயக், அசாமை ஒரு மகந்தா இவர்களே ஆண்டனர். இவர்களும் காயஸ்தர்கள். இந்திய மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு கூட, காயஸ்தர் இல்லை. ஆனால், இவர்களே. மூன்று மாநிலங்களை 30 ஆண்டுகள் ஆண்டனர். இப்போது இடது சாரிகள் ஆட்சி மேற்கு வங்கத்தில் - ஒரு பார்ப்பனர் தலைமையில் உள்ளது.

தமிழகத்தில்தான், காங்கிரசு உள்கட்சி சன நாயகத்தை ஒழிக்கும் பணியை, 1969 ஆகஸ்டில் இந்திரா காந்தி தொடங்கி வைத்தார்.

1969இல் காங்கிரசுக் கட்சியின் சார்பில், குடி அரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக என். சஞ்சீவி ரெட்டியை இந்திரா காந்தியே முன்மொழிந்தார். சஞ்சீவி ரெட்டி தென்னாட்டவர்; பார்ப்பனர் அல்லாதவர்; காமராசரின் நண்பர். அவரைத் தோற்கடித்திடத் திட்டமிட்டு வெங்கடகிரி - வி.வி. கிரி என்கிற பார்ப்பனரைப் போட்டி வேட்பாளராக அறிவித்தார் இந்திராகாந்தி.

தமிழகத்தில் 1969இல் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. கலைஞர் முதலமைச்சராக விளங்கினார். அவருடைய முழு ஆதரவைப் பெற்று - காங்கிரசின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தார், இந்திரா காந்தி. அதன் வழியாகக் காமராசரை வீழ்த்தினார். தமிழ்நாட்டுக் காங்கிரசை வீழ்த்தினார். அப்போது முதல் தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் எல்லா மட்டத் தலைவர்களையும் தானே நியமனம் மூலமே தெரிவு செய்தார். 1969இல் குப்புற விழுந்த தமிழ்நாட்டுக் காங்கிரசு, 1975இல் காமராசர் மறைவுக்குப் பிறகு சவலைப் பிள்ளையாக மாறிவிட்டது.

இந்திராகாந்தியின் கைப்பாவைகளாக கோ. கறுப்பய்யா மூப்பனாரும், வாழப்பாடி கூ. இராம மூர்த்தியும் மாறி மாறி விளங்கினாலும் குப்புற விழுந்த தமிழ்நாடு காங்கிரசு, மாறி, மாறி, தி.மு.க.விடமோ - அ.தி.மு.க.வி-டமோ தேர்தலுக்கான இடங்கள் கேட்டுப்பேரம் பேசும் அளவுக்குச் சீர்குலைந்து விட்டது. அந்தப் போக்கை இராசீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், சோனியா காந்தி என்கிற எந்தத் தலைவரும் மாற்ற முடியவில்லை. ஏன்?

தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கி வைத்த காங்கிரசு எதிர்ப்பு - இந்தி ஆதிக்க எதிர்ப்பு - பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகள் வெற்றி முகட்டை எட்டவில்லை என்றாலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கின்றன. அதனை வெற்றி முகட்டுக்கு எடுத்துச் செல்ல தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆவன செய்யவில்லை என்றாலும், தமிழக மக்கள் இந்த இரண்டு கட்சிகளின் தலைமையில்தான் பிரிந்து கிடக்கின்றனர். இவர்கள் பெரும்பாலோராக உள்ளனர். எனவே, “காமராசர் ஆட்சி”, “காங்கிரசு ஆட்சி”, என்ற எந்த முழக்கத்தை வைத்தும், தமிழ்நாட்டில் காங்கிரசு கரையேற முடியவில்லை; கரையேற முடியாது. தமிழர்களின் நலன்களை இந்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும் - இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் காங்கிரசுக் கட்சி புறக்கணிக்க முடியாது.

இது, காங்கிரசுக் கட்சியைக் கொன்ற பணிக்கு இந்திரா காந்தி, செய்த தொண்டு.

அடுத்து, 60 ஆண்டுகளாகத் தன்னுரிமை வேண்டித் தத்தளிப்பது ஜம்மு - காஷ்மீர்.

1966க்கும் 1976க்கும் இடையில் திட்டமிட்டு, ஜம்மு - காஷ்மீர், அசாம், மீசோரம், நாகாலாந்து மாநிலங்களில் வீறிட்டெழுந்த தன்னாட்சி உரிமைப் போராட்டங்களை, உளவு நிறுவனங்கள் மூலமும், பேச்சு வார்த்தை என்கிற இழுத்தடிப்பு மூலமும், அடக்கு முறை மூலமும் நசுக்கியவர் இந்திரா காந்தி.

1977 இல் பதவியை இழந்த அவர், 1980இல் மீண்டும் பிரதமர் ஆனார்.

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் 1980 தேர்தலின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் புறந்தள்ளிவிட்டு, அவரே நேரில் அங்கு சென்று, “காஷ்மீரப் பிராமணப் பண்டிட் பெண்மணி நான். எனக்கு வாக்குப் போடுங்கள்” என்று கோரி, இந்து - முஸ்லீம் பிரிவினை உணர்ச்சியைத் தூண்டுவிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும், ஜம்மு - காஷ்மீர் சிக்கல் அப்படியே நீடிக்கிறது.

அசாம் மாநிலத்தை 700 ஆண்டுகள் ஆண்ட “அஹோம்” என்னும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எழுச்சி பெற்றுத் தங்களின் இழந்த உரிமையை மீட்கப் போராடினர். அவர்களை வீழ்த்திட இந்திரா காந்தியே திட்டமிட்டார். RAW உளவுப்படையினரைப் பயன்படுத்தி, பார்ப்பனர், காயஸ்தர், கொலிதா முதலான மேல் வகுப்பு மாணவர்களைத் தூண்டி விட்டு, அவர்கள் “அன்னியரை வெளியேற்றுவோம்” என்ற முழக்கத்தை முன் வைத்து - அசாமிலிருந்து இஸ்லாமியரையும் பழங்குடிகளையும் வெளியேற்றும் போராட்டம் நடைபெற வழி அமைத்தார்.

இந்திராகாந்தியே போடோ பழங்குடி மக்களைத் தூண்டிவிட்டு, “சமவெளி போடோக்களும்”, “மலைவாழ் போடோக்களும்” ஒருவரை ஒருவர் கொன்று அழித்துக் கொள்ளக் காரணராக விளங்கினார்.

பஞ்சாபில் அகாலிதள சீக்கியர்களின் ஆதிக்கம் மாநில ஆட்சியில் வலிமையாக இருந்தது. அதைச் சிதைத்து காங்கிரசுக் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக பிந்தரன் வாலே என்கிற வரை, கியானி ஜெயில்சிங் மூலம், இந்திரா காந்தி உருவாக்கினார். வெறிபிடித்த சீக்கியரான அவர், அயல் நாட்டிலிருந்த சீக்கியப் பணக்காரர்களின் ஆதரவைத் திரட்டிக் கொண்டு “சீக்கிஸ்தான்” - “சீக்கியர் நாடு” என்னும் உள்ளடக்கத்துடன் கூடிய, “காலிஸ்தான்” பிரிவினைப் போராட்டத்தை நடத்தினார். கண்மண் தெரியாமல், தங்கள் கோரிக்கைக்கு எதிரானவர்களைக் கொன்று குவித்தார்.

அவரை அடக்கிடும் முயற்சியில், அமிர்தசரஸ் பொற்கோயிலில் ஒளிந்துகொண்ட அவரைப் பிடிக்கும் பெயரில் 1984இல் ஆயிரக்கணக்கான சீக்கிய ஆண், பெண், குழந்தைகளை இந்திரா காந்தி கொன்று குவித்தார். அந்தக் கொடுஞ்செயலுக்காக அவரைப் பழிவாங்கத் திட்டமிட்ட அவருடைய மெய்க்காப்பாளர்களாலேயே 1984 அக்டோபர் 30 இல் சுட்டுக் கொல்லப்பட்டார், இந்திரா காந்தி.

அப்படிப்பட்ட சாவு தனக்கு நேரும் என்பதை, 1984 ஆகஸ்டிலேயே அவர் ஊகித்திருந்தார். அதனால்தான், 15-8-1984இல் சுதந்தர நாளில் தில்லி செங்கோட்டையில் கொடியேற்றச் சென்ற அவர் மாறுவேடத்தில் - எந்த ஊர்தியில் பயணிக்கிறார் என்பதை மறைத்துக் கொண்டே - 3 வேடங்களில் ஒருவராக அவர் சென்றார். அவருக்கு அணுக்கமாக இருந்த RAW உளவுப் புலன் செய்திகளையும் மீறி, அவருடைய இல்லத் தோட்டத்திலேயே - அவருடைய மெய்க்காப்பாளர்களாலேயே குருவிபோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தம் பதவிக்காலத்தில் தனக்குப் பணம் தேவைப்பட்டபோது, நிதி நிறுவனத்துடன் வேறு ஒருவரைத் தொலைபேசியில் பேச வைத்துப் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு, அதை மூடி மறைத்திட, அந்த ஆளையே தீர்த்துக் கட்டிய கொலைகாரர் இந்திரா காந்தி.

1975இல் அவசர கால ஆட்சியை அறிவித்து, மக்கள் நாயகத்தின் மாண்பையே அழித்தார்.

தானடித்த மூப்பாக - அவர் செய்த ஏற்பாடுகளை எதிர்த்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச், சிறையில் தள்ளினார். காமராசர் போன்றவர்கள் இது கண்டு நெஞ்சம் கொதித்தனர். காமராசரை வீழ்த்திட, 1969 ஆகஸ்டில் எந்தக் கலைஞரின் ஆதரவைத் தேடிப் பெற்றாரோ, அந்தக் கலைஞரின் ஆட்சியை 1976 சனவரியில் கலைத்தார்.

1966 சனவரியில் தாம் பிரதமராக வர வழிகண்ட காமராசரை அதே இந்திரா காந்தி 1969இல் வீழ்த்திவிட்டார்.

இந்திரா காந்தி காமராசரை வீழ்த்தியதன்மூலம், இங்கே, காங்கிரசு அடியற்றுப் போகச் செய்தார். அடியற்ற காங்கிரசு, திராவிடக்கட்சிகளின் தோள்களின் மீது நின்றே தில்லியில் இந்திய ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, ஒரு தூணாகப் பயன்படுத்திக் கொள்கிறது. மேலும், மாநில உரிமைகளைப் பறிப்பதற்கென்றே இந்திய அரசு புதிய புதிய சட்டங்களைத் தொடர்ந்து செய்கிறது.

மேலும், வெள்ளையர் காலம் முதல் மாகாண (அ) மாநில அரசுகளிடம் இருந்த கல்வி, 1976இல் கூட்டு அதிகாரப் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இன்று உயர்நிலைப் பள்ளிக் கல்வி மட்டுமே மாநில அதிகாரத்துக்கு உட்பட்டதாக உள்ளது.

வேளாண்மை, மருத்துவம் முதலான துறைகளின் அதிகாரங்களும் இந்தியப் பொது அதிகாரப்பட்டியலின்கீழ் வைக்கப்பட்டு விட்டன.

ஒரு விடுதலை பெற்ற நாட்டில் ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுரிமை பெற்றதாகத் திகழ வேண்டும். இன்று இந்தியாவில் இப்படி இல்லை. இதுபற்றி அனைத்திந்திய அளவில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகளும், தேசிய இன உரிமைக்குப் போராடும் அமைப்புகளும், மாநிலக் கட்சிகளும் - தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகளும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இதற்கான இணக்கமான முயற்சிகளை அனைத்திந்திய அளவில் இவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவர்களோடு இணைந்து செயல்பட, மா.பெ.பொ.க. ஆயத்தமாக உள்ளது.

- வே. ஆனைமுத்து

(சிந்தனையாளன் ஜூலை 2010 இதழில் வெளியானது)

Pin It