கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மகாத்மா காந்தி அம்பேத்கர் சந்திப்பு

மகாத்மா காந்தி, 1931 ஆகஸ்டு 6ஆம் நாள், அம்பேத் கரை சந்திக்க விரும்பி, அவரை எப்பொழுது எங்கு சந்திக்கத் தான் வரலாம் என்று கேட்டுக் கடிதம் எழுதினார் அம்பேத்கர் உடல் நலம் குன்றியிருந்தார். எனினும், உடல் நலம்பெற்றதும் தானே நேரில் வந்து சந்திப்பதாக பதில் எழுதியிருந்தார்.அதன்படி ஆகஸ்டு 14 ஆம் நாள் பகல் 2 மணிக்கு பம்பாய் மலபார் பகுதியில் இருந்த மணிபவனில் மகாத்மா காந்தியை தன் நண்பர்களுடன் சந்தித்தார் அம்பேத்கர்.

காந்தியார் :- என் மீதும், காங்கிரஸ் மீதும் மிகுந்த சினம் கொண்டுள்ளீர்கள் என்று அறிகின்றேன். நான் சிறுவனாக இருந்த போதே தீண்டத்தகாதோரின் அவலங்களைக் குறித்து கவலை கொண்டிருந்தேன் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். காங்கிரஸ் தலைவர்கள், தீண்டாமைப் பிரச்சினை, சமய, சமூகப் பிரச்சினையாகும். அதனை அரசியலுடன் கலக்கக்கூடாது என்று எதிர்த்தனர் : என்றபோதும், தீண்டாமை ஒழிப்பினை காங்கிரஸின் வேலைத் திட்டங்களில் சேர்த்திட நான் மேற்கொண்ட கடும் முயற்சிகளை அறிவீர்கள். மேலும் காங்கிரஸ் 20 இலட்சம் ரூபாய்கள் தீண்டப்படாதோர் நலனுக்காகச் செலவு செய்துள்ளது. ஆனால் உங்களைப் போன்றோர்  என்னையும் காங்கிரஸையும் எதிர்ப்பது எனக்கு வியப்பாய் உள்ளது. என்றார்.

அம்பேத்கர் :- தங்கள் முயற்சியால் தான் தீண்டாமைப் பிரச்சினையை காங்கிரஸ் வேலைத்திட்டத்தில் ஏற்றுக் கொண்டது என்பதை ஏற்கிறேன். ஆனால் காங்கிரஸ் பெயரளவில் அங்கீகாரம் கொடுத்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை காங்கிரஸ் 20 இலட்சம் ரூபாய்கள் தீண்டப்படாதோர் நலனுக்காகச் செலவு செய்துள்ளது என்று கூறுகிறீர்கள். அவை அனைத்தும் வீண்  என்று குறிப்பிட விரும்புகின்றேன். அந்தப் பணம் என்னிடம் இருந்திருந்தால் என் மக்களின் கல்வி, பொருளாதார நிலைகளில் வியப்பூட்டும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பேன்.

தீண்டாமை ஒழிப்பில் காங்கிரஸுக்கு உண்மையில் ஈடுபாடு இருக்குமேயானால், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகக் கதர் அணியவேண்டும் என்று விதி உள்ளதைப் போல் தீண்டாமை ஒழிப்பையும் ஒரு நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும். அத்தகைய நிபந்தனை இருந்திருந்தால் ஒரு மாவட்டத் தலைவர் தீண்டத்தகாதவர் கோயில் நுழைவினை எதிர்த்திட்ட அவலம் நிகழ்ந்திருக்காது. எங்கள் பிரச்சினையில் இந்துக்களிடம் சிறிதும் மனமாற்றம் ஏற்படவில்லை. மனமாற்றம் ஏற்படாத நிலையில் இந்துக்களையும் காங்கிரஸையும் நாங்கள் நம்பமாட்டோம்.  நாங்கள் சுயமரியாதையிலும் சுயமுயற்சியிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். பெரிய தலைவர்களிடமோ, மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை.  காங்கிரஸ்காரர்கள் ஏன் எங்கள் இயக்கத்தை எதிர்க்கவேண்டும்? ஏன் என்னைத் துரோகி என்று அழைக்கவேண்டும்? காந்திஜீ எனக்குத் தாயகம் என்பதில்லை.

காந்தி: (அதிர்ச்சி அடைந்தவராக) உங்களுக்குச் சொந்த நாடு இருக்கிறது. வட்டமேசை மாநாட்டில் நீங்கள் ஆற்றிய செயல்களின் மூலம் நீங்கள் சிறந்த நாட்டுப்பற்று மிக்கவர் என அறிந்து கொண்டேன்.

அம்பேத்கர்: எனக்கு நாடு உள்ளது என்று கூறு கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் கூறுகின்றேன். எனக்கு நாடு இல்லை. இந்த நாட்டை என் நாடென்றோ, இந்து மதத்தை என் மதம் என்றோ எவ்வாறு என்னால் கருதமுடியும்.? நாய்கள், பூனைகளைவிடக் கேவலமாக நடத்தப்படுகின்றோம். பொது நீர் நிலைகளிலிருந்தும் தண்ணீர் எடுக்கும் உரிமையும் கிடையாது. இந்த  நிலையில் சுயமரியாதையுள்ள எந்தத் தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? நாட்டுப் பற்று எங்களுக்கு இல்லை என்றால், அதற்கு நாங்கள் பொறுப்பு ஆகமாட்டோம். இந்த நாடே பொறுப்பாகும். என்னைத் துரோகி என்றால் அதற்கு நான் பொறுப்பு இல்லை   இந்த நாடே பொறுப்பாகும். என் மனச்சான்று காட்டும் நெறிப்படி என் மக்களுக்கு மனித உரிமைகளைப் பெற முயற்சி மேற்கொண்டிருக்கிறேன். இந்நாட்டிற்குக் கேடு சூழ வேண்டும் என்று எள்ளளவும் மனதாலும் நான் எண்ணுவதில்லை, செயல்படுவதுமில்லை. சூழ்நிலை விரும்பத்தக்காதாயில்லை.

காந்தியார் பொறுமையிழந்தார். அந்த நிலையில் இந்தச் சந்திப்பின் நோக்கம் பற்றிய முக்கியக் கேள்வியை அம்பேத்கர் கேட்டார்.

அம்பேத்கர்:- தீண்டப்படாதவர்களைவிட,சமூக, அரசியல் பொருளாதார நிலைகளில் உயர்ந்த நிலையில் முஸ்லீம்களும், சீக்கியர்களும்,  உள்ளனர். முதல் வட்ட மேசை மாநாட்டில் முஸ்லீம்கள், சீக்கியர்கள் கோரிக் கைகள் ஏற்கப்பட்டு அரசியல் அங்கீகாரம் கொடுக்கப் பட்டுள்ளன. காங்கிரஸ் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மாநாட்டில் தீண்டப்படாத வர்களின் அரசியல் உரிமைகளும் ஏற்கப்பட்டுள்ளன. அவர்கள் போதிய அளவு பிரதி நிதித்துவம் பெறவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இவை எம் மக்களுக்கு நன்மைப் பயப்பனவாகும். இவை குறித்தத் தங்கள் கருத்தை அறிய விழைகின்றேன்.

காந்தியார்:-  இந்துக்களிடமிருந்து தீண்டப்படாதவர்களை அரசியல் ரீதியாகப் பிரிப்பதை நான் எதிர்க் கின்றேன்.. அது தற்கொலைக்கு நிகரானது, என்றார்

அம்பேத்கர்:- உங்கள் கருத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் நிலையை நான் அறிந்து கொண்டேன்.  விடைபெற்றுக் கொள்கின்றேன், என்று கூறிவிட்டு வெளியேறினார் இனி, தம் மக்களின் மனித, அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தந்திட தீவிரமாகச் செயல்பட உறுதி பூண்டார்.

காந்தி இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் வரையில், அம்பேத்கர் ஒரு பிராமணர் என்றே கருதியிருந்தார், அவர் அரிசனங்கள் நலனில் அக்கறைகொண்டிருந்ததால் வரம்பு கடந்து பேசினார் என்று காந்தி எண்ணிக்கொண்டிருந்தார்.

இரண்டாவது வட்டமேசை மாநாடு:-

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அம்பேத்கர் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டாட்சி துணைக்குழுவில் அம்பேத்கர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழுதான் இந்தியாவுக்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் முதன்மையாக விளங்கியது.

அம்பேத்கர் 1931 ஆகஸ்டு15 ஆம் நாள், வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க லண்டனுக்குப் பயணமானார்; ஆகஸ்டு 29அன்று லண்டன் சென்றடைந்தார்

மகாத்மா காந்தி 1931 ஆகஸ்டு 29 இல் சரோஜினி நாயுடு, பண்டிட் மதன் மோஹன் மாளவியா முதலி யோருடன் இங்கிலாந்திற்குப் பயணமானார் செப்டம்பர் 12 இல் இலண்டனை சென்றடைந்தார்.

செப்டம்பர் 7 ஆம் நாள் இரண்டாவது வட்டமேசை மாநாடு தொடங்கியது. வட்டமேசை மாநாட்டின் முக்கியப் பணி கூட்டாட்சி அமைப்புக் குழுவிலும் சிறுபான்மை யினர் குழுவிலும் தான் பெரிதும் அமைந்திருந்தது. கூட்டாட்சி அமைப்புக் குழுவில் செப்டம்பர் 15 ஆம் நாள் தன் முதல் உரையை நிகழ்த்தினார் காந்தி. அப்பொழுது அவர், இந்தியமக்களின் பிரதிநிதி காங்கிரஸ் கட்சி மட்டுமே என்றும் தான் அக்கட்சியின் பிரதிநிதி என்பதால் தான் மட்டுமே இந்தியமக்களைப் பிரதிநிதிப் படுத்துவதாகவும் குறிப்பிட்டார் .

மேலும் மற்றவர்கள் எல்லாம் அரசால் நியமிக்கப்பட்டவர்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர்  என்றும் குறிப்பிட்டார். இப்படிக் கூறியதன் மூலம் அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் கூறுகின்ற கருத்துகள் இந்தியர்களைக் கட்டுப்படுத்தமுடியாதென்று மறைமுகமாகச் சொன்னார். பல்வேறு வகுப்புகள் தனிப்பிரதிநிதித்துவம் கோருவது குறித்து காந்தி தன் கருத்தைக் கூறினார், இந்து, முஸ்லீம், சீக்கியர் என்றளவில் மட்டுமே தனிச்சலுகை அளிக்கப்படல் வேண்டும். தீண்டப்படாதரின் நலனில் காங்கிரஸுக்கு மிகுந்த அக்கறையுண்டு. ஆகவே மேலும் தனிப்பிரதிநிதித்துவம் கேட்கும் எந்தக் கோரிக்கையையும் நான் கடுமையாக எதிர்ப்பேன் என்றார். காந்தியாலும் காங்கிரஸாலும் தீண்டப்படாத மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் தான் இது என்று அம்பேத்கர் கூறினார்.

1931 செப்டம்பர் 27 அன்று இரவு 9 மணிக்குமேல் சரோஜினி நாயுடு இருப்பிடத்தில் அம்பேத்கர், காந்தியைச் சந்திக்க தேவதாஸ் காந்தி ஏற்பாடு செய்திருந்தார்.  அந்தச் சந்திப்பில் அம்பேத்கர் தன் கருத்துகளை எடுத்துரைத்தார். ஆனால் காந்தி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசினார். மற்றவர்கள் ஒப்புக்கொண்டால் அம்பேத்கரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் காந்தி கூறினார்.

செப்டம்பர் 28 இல் சிறுபான்மைக்குழுக் கூட்டம் கூடியது. அம்பேத்கர், தீண்டப்படாத வகுப்பினருக்கு தனித் தொகுதி ஒதுக்கீடும் தனி வாக்காளர் பட்டியலும் வேண்டும் என்று கோரினார். சிறுபான்மைக் குழுவின் உரையாடல்களில் கலந்து கொள்பவர் யாராகிலும் அது காந்தியானலும் மற்றவர்களானாலும் அவர்கள் முழு அதிகாரம் பெற்றவர்கள் அல்லர்; அவர்களின் கருத்துகள் எங்களைக் கட்டுப்படுத்தாது  என்று உறுதியுடன் கூறினார். மேலும் சிறுபான்மையினர் பிரச்சினையை சிறுபான்மைக்குழுவே தீர்க்கவேண்டும்; அல்லது பிரிட்டிஷ் அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அம்பேத்கர் கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் தன் நிலையைத் தனக்கே உரிய பாணியில் தெளிவாகக் கூறிவிட்டார், என்று பிரிட்டிஷ் பிரதமர்  ராம்சே மக்டொனால்டு குறிப்பிட்டார்.

அன்று இரவு இந்து  முஸ்லீம் உடன்பாடு காண்பதற்காக முஸ்லீம் தலைவர்களைக் காந்தி இரகசியமாகச் சந்தித்தார். இதுகுறித்து அம்பேத்கர் லண்டனிலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டுக்கு எழுதிய கடிதத்தில் 12-10-1931 இல் குறிப்பிட்டார்: முஸ்லீம்களின் பிரதிநிதிகளுடன் பேசும்போது, அவர்களின் 14 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்குமுன் நிபந்தனை விதித்தார் காந்தி. தாழ்த்தப்பட்டோர் பிரச்சனை எழுப்பப்படும்போது அதனை எதிர்க்கவேண்டும் என்று நிபந்தனையை விதித்தார். எல்லாரும் ஏற்றுக்கொண்டால் தானும் சம்மதிப்பதாக ஒத்துக்கொண்ட காந்தியார் இம்மாதிரி செயல்பட்டது மகாத்மா என்பவருக்கு அழகா? தாழ்த்தப் பட்டோரின் நண்பராக அவர் செயல்படவில்லை என்பதோடல்லாமல் ஒரு நாணயமான எதிரி என்பதாகக்கூட செயல்படவில்லை, என்று அம்பேத்கர் எழுதினார்.

காந்தியாரின் அந்தரங்கச் செயலாளர் பியாரேலால் காந்திஜியின் எண்ணவோட்டத்தைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார். தீண்டப்படாதவர்களுக்குத் தனி அடையாளம் கிடைத்துவிட்டால் அவர்கள் முஸ்லீம்களுடன் கைகோர்த்து சாதி இந்துக்களை கொல்வார்களே என்று தமது நெருங்கிய நண்பரிடம் காந்தி சொன்னாராம். காந்தியாரின் இந்தப் போக்கு பிரிட்டிஷ் அமைச்சரை மட்டுமல்ல, இந்தியரான வித்தல்பாய் பட்டேல் போன்றவர்களையும் அதிருப்தி அடையச் செய்தது.

சிறுபான்மைக் குழுவின் கடைசிக் கூட்டம் நடைபெற்றபோது முஸ்லீம்கள், தீண்டப்படாதவர்கள், கிறித்துவர்கள், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் ஆகியோரின் முதன்மைப் பிரதிநிதிகள் கூட்டறிக்கை அளித்தனர். அரசுப் பணிகளில் சேர்வதற்கும், எந்தவொரு தொழிலைச் செய்வதற்கும் சாதி, மதம் என எந்தப் பாகுபாடும் காட்டக்கூடாது என்றும், தீண்டப்படாதவர்களை காவல் துறையிலும் இராணுவத்திலும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருந்தது. இத்துடன் அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசனும் இணைந்து ஒரு துணையறிக்கை அளித்தனர். எல்லா மாநில மத்தியச் சட்டசபைகளிலும் தீண்டப்படாத மக்கள் தொகைக்கேற்பத் தனிப் பிரதி நிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும், தனி வாக்காளர் தொகுதி வேண்டுமென்றும் கோரியிருந்தனர். சிறுபான்மையினர் உடன்படிக்கை அறிக்கையில் தீண்டப்படாதவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி வழங்கப்பட்டதை காந்தி எதிர்த்தார்.

சிறுபான்மையினர் சிக்கலைத் தீர்ப்பதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இச் சிக்கலைத் தீர்ப்பதற்கு பிரிட்டிஷ் பிரதமர்க்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அவரெடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதாக அம்பேத்கர் தவிர அனைவரும் கையெழுத்திட்டனர்

காந்தி லண்டனிலிருந்து 1931இல் பம்பாய் வந்தடைந்தார். 8000 தீண்டப்படாத மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் காந்திஜியைக் கண்டதும் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். காந்திஜியை வரவேற்கக் கூடியிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் தீண்டப்படாத மக்கள் மீது கற்களை வீசினர். தடியடியும் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டது. இரு சாராரும் கை கலந்தனர். அவ்விடம் கலகப் பூமியாக மாறியது. அகிம்சா மூர்த்தி காந்திக்கு அவருடைய மண்ணில் வழங்கப்பட்ட வரவேற்பும் எதிர்ப்பும் இறுதியில் இரத்தம் சிந்துவதில் முடிந்தது. வருத்தப்படவேண்டிய நிகழ்வாகும்.

இதற்கு முழுமுதற் காரணம் காங்கிரஸ் தலைவர்களிடையே சகிப்புத் தன்மையின்மை என்பதும், அம்பேத்கர் குறித்து வெளியிட்ட அவதூறு பரப்புரைகளும் ஆகும்...அம்பேத்கரை பிரிட்டிஷ் கைக்கூலி, துரோகி, புதரிலுள்ள நாகப்பாம்பு, சாருவாகனன் என்றெல்லாம் பழித்தனர். அதன் விளைவே காந்திக்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்.

ஏற்கனவே காங்கிரஸ்காரர்கள் அலகாபாத்தில் அம்பேத்கருக்குக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். அம்பேத்கர் மராத்தியர் என்பதால். அதற்கு எதிர்வினையாக மராட்டியத்தில் காந்திக்கு, அவரது தீண்டப்படாதார் எதிர்ப்பு நிலைக்காக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.