இது சமயம் இந்தியாவில் நடைபெற்று வரும் “தீண்டாமை விலக்கு” வேலையானது தீண்டாதாரெனக் கருதப்படும் மக்களுக்கு சமூக வாழ்விலுள்ள சகலவித கஷ்டத்தையும் ஒழிப்பதற்காக ஏற்பட்டதல்லவென்றும் அது வெறும் இந்து மத பிரசாரத்திற்காகவே துவக்கப்பட்டு, அந்த முறையிலேயே நடந்து வருகின்றதென்றும் இதற்கு முன் பல தடவைகளில் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.
உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவ காருண்யத்தையும் எத்துறையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய அது எந்த விதமான மத சம்பந்தத்தையும் கொண்டதல்ல வென்பதே நமது துணிபு. அன்றியும் அது பெரிதும் பகுத்தறிவையும், சுகாதாரத்தையும், சமதிருஷ்டியையும் மாத்திரமே கொண்டு யோசிக்கப்பட வேண்டியதே தவிர, மற்றபடி வேறு எந்த விஷயத்தையும் பற்றி கவனிக்க அதில் சிறிதும் இட மில்லை என்பதும் நமது துணிபாகும். ஆனால், இன்று நடைபெறும் தீண்டாமை விலக்கு பிரசாரம் என்ன கருத்தின் மீது என்ன ஆதாரத்தின் மீது நடைபெறுகின்றது என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள்.
முதலாவதாக, இந்தப் பிரச்சினை இப்போது இவ்வளவு தூரம் விளம்பரப்படவும், முக்கியமானதாய்க் கருதப்படவும் ஏற்பட்ட காரணம் என்ன? என்பதை சற்று யோசிப்போம். அதாவது, சென்ற வருஷம் நடந்த சட்ட மறுப்பு மறியல் கிளர்ச்சிகளின் போது ஆங்காங்குள்ள தேசியத் தலைவர்கள் என்பவர்களை தீண்டப்படாத மக்கள் என்பவர்களும், அவர்களுக்காக வேலை செய்து வருபவர்களும் சில கேள்விகள் கேட்டதும் அதற்கு அத்தேசியத் தலைவர்கள் பதில் உரைத்ததும் யாவரும் அறிந்ததே யாகும். என்னவென்றால் “ஐயா தேசிய தலைவர்களே! தேசியவாதிகளே!! சிறிது காலத்திற்கு முன் தீண்டாமை ஒழியாமல் இந்தியாவுக்கு சுயராஜ்யம் வராது என்றும், வந்தாலும் நிலைக்காது என்றும் சொன்னீர்களே! இப்போது தீண்டாமையைப் பற்றிய பேச்சை அடியோடு மறந்து விட்டு வேறு எது ஏதோ பேச்சுப் பேசுகிறீர்களே இதன் மர்மம் என்ன”? என்று கேட்ட காலத்தில் தோழர் காந்தியார் உள்பட “இப்போது தீண்டாமை என்பது அவ்வளவு முக்கியமானதல்ல, சுயராஜியமே முக்கியமானது. ஏனெனில் சுயராஜியம் வந்துவிட்டால் தீண்டாமையை ஒரே ஒரு உத்தரவில் ஒழித்துவிடுவோம். ஆதலால் இப்போது உப்புக் காய்ச்சுவதும், மதுவிலக்கு மறியல் செய்வதும், அன்னியத் துணி விலக்கு மறியல் செய்வதுமே தான் முக்கியமான காரியம்” என்று சொல்லி வந்ததும் அதற்கு தீண்டப்படாத மக்களும் அவர்களது அனுதாபிகளும் பதில் சொல்லுகையில்,
“தீண்டாமையை சுயராஜியம் வந்த பிறகு ஒரு உத்திரவில் ஒழித்து விடக்கூடுமானால் உப்பு வரியையும், கள்ளுக்கடைகளையும், அன்னியத் துணிகளையும் ஒரு உத்திரவில் ஒழித்து விட முடியாதா” என்று கேட்டதும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் முறையில் தோழர் ராஜ கோபாலாச்சாரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது “எந்தெந்த விஷயத்தை எவ்வெப்பொழுது கவனிப்பது என்பதான காரியங்கள் காந்தி யாருடைய இஷ்டத்தைப் பொருத்ததாகையால் அதைப் பற்றி நாங்கள் ஒன்றும் பதில் சொல்ல முடியாது” என்று பதில் சொன்னதும் வாசகர்கள் அறிந்ததேயாகும்.
இப்படி இருக்க உப்புவரி நீக்கப்படாமலும், கள்ளுக்கடை எடு படாமலும், அன்னியத்துணி நிறுத்தப்படாமலும் இருக்கும்போதும், சுயராஜ்யம் ஏற்படாமல் இருக்கும்போதும் இப்போது திடீரென்று தீண்டாமை விலக்குக்கு ஏற்பட்ட அவசரமென்ன? என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்.
தீண்டப்படாத மக்களுக்கும், அவர்களிடம் உண்மையான அனுதாபம் உள்ளவர்களுக்கும், தீண்டாமை விலக்கு விஷயத்தில் காங்கிரசினிடமும், தேசியத்தலைவர்கள் என்கின்றவர்களிடமும் இருந்த நம்பிக்கையானது அடியோடு மறைந்துபோய் அவர்கள் “புற மதஸ்தர்” களையும் அரசாங்கத் தாரையும் அடைக்கலம் புக உறுதி செய்து கொண்டு சிலர் புறமதம் புகுந்தும், அரசாங்கத்தாரிடம் தங்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் கேட்டும் அது பெறுவதற்காக புற மதஸ்தர்கள் என்பவர்களுடன் சில ஒப்பந்தம் செய்து கொண்டும் தைரியமாய் வெளிக் கிளம்பியதுடன் தீண்டாதார் தலைவர்கள் என்பவர்களும் தீண்டாதாருக்குத் தலைவர் என்றும் இந்தியர்களுக்கும் ஏக தலைவர் என்றும் சொல்லிக்கொள்ளப்பட்ட காந்தியாரையே “நீர் எங்க ளுக்குத் தலைவருமல்ல பிரதிநிதியுமல்ல நாங்கள் உங்களை தலைவராகவோ பிரதிநிதியாகவோ ஏற்றுக்கொள்வது மில்லை” என்று லண்டன் வட்ட மேஜை மகாநாட்டில் உலகோரறிய கர்ஜ்ஜனை புரிந்ததோடல்லாமல் வெகு கடுமை யாகத் தாக்கி பேசியும், அதாவது காந்தியாரைப்பார்த்து “நாங்கள் ஒருவரை எங்கள் பிரதிநிதி அல்ல என்று சொன்ன பிறகும்கூட சிறிதும் வெட்கமில்லா மல் மறுபடியும், மறுபடியும் எங்கள் பிரதிநிதி என்று பாத்தியம் கொண்டாடு வது ஒழுங்கானவர்களுக்கு அழகல்ல” என்றும் சொன்னதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்.
இப்படிச் சொன்ன பிறகே அரசாங்கத்தார் காந்தியார் தடுத்ததையும் லட்சியம் செய்யாமல் தீண்டாதாருக்கு தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்து தீண்டப்படக் கூடாதவர்களுக்கே தங்களது தீண்டாமையை நீக்கிக்கொள்ள அவகாசம் ஏற்படுத்திவிட்டதும் வாசகர்களுக்கு நன்றாய்த் தெரியும்.
இவ்வளவும் தவிர இந்த இரண்டு வருஷகாலத்தில் சென்னை மாகாணத்திலும், சுதேச சமஸ்தானங்களிலும் மாத்திரம் ஆயிரக்கணக்கான தீண்டப்படாத பேர்கள் என்பவர்கள் இந்துமதம் என்பதைவிட்டு விட்டு புற மதங்கள் என்பவைகளைத் தழுவிக்கொண்டதும், இந்து மதத்தில் இருந்த வர்களிலும் அனேகர் தங்களுக்கு “மதமும் வேண்டாம், கோவிலும் வேண் டாம், கடவுளும் வேண்டாம்” என்று சொன்னதும் அந்தப்படியே பலபல மகாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும், இந்த தீர்மானங்கள் இந்தியா தேசம் முழுவதும் அனேகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டும், பிரசாரங்கள் செய்யப்பட்டும், வெற்றி முரசுகள் அடிக்கப்பட்டதும் வாசகர் களுக்குத் தெரியும்.
இவ்வளவு அல்லாமல் மற்றும் ஒரு பெரிய கிளர்ச்சி அதாவது, “காங்கிரசும், தேசீயமும், காந்தீயமும், பணக்காரர்களுக்கும், மேல் ஜாதிக்காரர் களுக்கும், படித்த மக்களுக்குந் தான் பிரதிநிதித்துவம் பொருந்தியதே யொழிய ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், குடியானவர்களுக் கும், தொழிலாளிகளுக்கும் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல”வென்று சொல்லி, காங்கிரசு ஒழிய வேண்டும், காந்தீயம் ஒழிய வேண்டும் என்று காந்தியார் முன்னிலையிலேயே கோஷமிடப்பட்டு, கருப்புக்கொடி பிடித்ததும் அவருக்கே கருப்புமாலை போட்டதும் ஆகிய காரியங்களும், வாசகர் களுக்கு நினைவிருக்கும்.
ஆகவே இவ்வளவு காரியங்களும் நடந்த பிறகும், மற்றும் தேசீயத் தலைவர்களுக்கு இதுசமயம் வேறு எந்தவிதமான கிளர்ச்சியும் மும்முரமாய்ச் செய்ய முடியாமல் போனபிறகும் தான் “தீண்டாமை விலக்கு” -– “ஹரிஜன சேவை” - “கோவில் பிரவேசம்” ஆகிய காரியங்கள் தாண்டவமாடுகின்றன. அதுவும் எதற்காக என்றால் மதத்துக்காக என்றும், அதிலும் இந்துக்கள்தான் இதில் ஈடுபட வேண்டும் என்றும் இது கலப்பற்ற மதப்பிரசாரமே என்று பெயரிட்டும், வரையறுத்தும் கிளர்ச்சிகள் செய்யப்படுகின்றன.
பிரசார முறைகள் எப்படியிருக்கின்றன? என்று பார்த்தாலோ அவை தீண்டாமைக்கு மதத்தில் ஆதாரமில்லை என்று ஒருவர் சொல்லுவதும், தீண்டாமைக்கு மதத்தில் ஆதாரமிருக்கின்றது என்று மற்றவர்கள் சொல்லு வதும், தீண்டாமை ஒழிந்தால் ஜாதி முறை கெட்டுப்போகும் என்று ஒருவர் சொல்லுவதும், தீண்டாமை ஒழிந்தால் ஜாதி முறை கெடாது என்று மற்றவர் சொல்லுவதும், தீண்டாமை ஒழிந்தால் வருணாச்சிரம முறை ஒழிந்துவிடும் என்று ஒருவர் சொல்லுவதும் தீண்டாமை ஒழிந்தால் வருணாச்சிரம முறை அழியாது என்று ஒருவர் சொல்லுவதும், தீண்டாமை பாராட்டாவிட்டால் கோவில்களின் பரிசுத்தத்தன்மை கெட்டு விடும் என்று ஒருவர் சொல்லுவதும், பரிசுத்தத்தன்மை கெட்டு விட்டால் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று மற்றவர்கள் சொல்லுவதும் இன்னும் இதுபோன்ற பிற்போக்கான முறைகளில் தான் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.
தோழர் காந்தியவர்களே மாடு தின்பவர்கள் கோவிலுக்குள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு கோவிலை சுத்தி செய்ய வேண்டுமென்பதை அனுமதித்தும் ஜாதி முறைகளையும் வருணாச்சிரம பிரிவுகளையும், தொழில்களையும் ஆதரித்தும் பேசி அவைகளைப் பலப்படுத்தி வருவதும் யாவரும் அறிந்ததே தவிர மற்றபடி யாரும் இதைக் கற்பித்துச் சொல்லுவதல்ல.
மற்றும் தீண்டாமை ஒழிக்க சட்டம் செய்ய இந்திய சட்ட சபையில் மசோதா கொண்டு வந்து விளம்பரம் பெற்ற தோழர் சி. எஸ். ரங்கையர் அவர்களுக்கும் தன்னுடைய மசோதாவால் வருணாச்சிரம முறையும், ஜாதி பாகு பாடு முறையும் கெடாதவாறு பார்த்துக்கொள்ளுவதாக டில்லி தீண்டாதார் மகாநாட்டுத் தலைமை உரையில் சொல்லியிருக்கிறார். இதுவும் இவ்வார தினசரி களில் காணப்படுகின்றனவேயொழிய நாமாகக் கற்பித்துக் கூறுபவையல்ல.
மற்றும் தோழர் பண்டித மாளவியா அவர்கள் தமது தீண்டாமை விலக்குத் திட்டத்தில் தீண்டாதார்களுக்குப் பூணுhல் போட வேண்டுமென்றும், பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும், பழைய மாமிசம் மாட்டு மாமிசம் சாப்பிடக்கூடாதென்றும், சாராயம் குடிக்கக்கூடாது என்றும், துளசி மாலை அஷ்டாக்ஷர மந்திரம் அல்லது ருத்திராக்ஷ பஞ்சாட்சரமந்திரம் ஆகிய ஏதாவதொரு மந்திரமும், தீக்ஷையும் பெற்று இருக்க வேண்டுமென்றும், ஸ்நானம், ஜபம், தபம் முதலியவைகள் செய்யவேண்டுமென்றும், இவை களுக்குக் கட்டுப்பட்டு தீண்டாதார்களுக்கு ஆலயப்பிரவேசம் கொடுக்க லாமென்றும், திட்டம் போட்டிருக்கிறார்கள்.
மற்றும், தோழர் ராஜகோபாலாச்சாரியாருடைய தீண்டாமை பிரசாரத் திலும் “ நந்தன்” “திருப்பாணன்” ஆகியவர்களின் உதாரணத்தைச் சொல்லி அவர்கள் கோயில் பிரவேசம் பெற்ற நிபந்தனையைக்காட்டி பிரசாரம் செய்வதுமான முறையிலேயே தீண்டாமை விலக்கும் ஹரிஜன சேவையும் கோயில் பிரவேசக் கிளர்ச்சியும் நடைபெறுகின்றன. இவைகளை நன்றாய் கூர்ந்து யோசித்துப் பார்த்தால், இந்த சேவைகளிலும், கிளர்ச்சிகளிலும் உண்மையான தீண்டாமை விலக்கு என்பதின் வாசனையாவது காணப் படுகின்றதா என்று கேட்கின்றோம்.
சுயமரியாதைக்காரர்கள் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியில் காங் கிரசுக்காரருடன் சேர்ந்து ஒத்துழைக்கவில்லை என்று சில இடங்களில் காங்கிரசுக்காரர்களாலும் பாமரமக்களாலும் பழி கூறப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. உண்மையான-நாணையமான தீண்டாமை விலக்குக்காரர் களுக்கு இந்த மாதிரியான மேல் கண்ட சூட்சிக் கிளர்ச்சியில் சேர மனம் வருமா என்பதை சற்று நிதானமாய் யோசித்துப் பார்க்கும்படியாய் வேண்டு கின்றோம். ஒரு மனிதனை, ஒருமனிதன் தீண்டக்கூடாது என்பதற்கு என்ன காரணம்? என்று கேட்டு அதற்கு தகுந்த நியாயத்தை எடுத்துச் சொல்லுவதை விட்டு விட்டு வருணாச்சிரமம் ஜாதிமுறை மாட்டு மாமிசம், பஞ்சாட்சரம், அஷ்டாச்சரம், நந்தன், பாணன் ஆகிய பேச்சுகளும் நிர்ப்பந்தங்களும் நிபந்தனைகளும் ஏன் பேசப்பட வேண்டும்? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இது சமய சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றும் வேலையைச் செய்வது என்கின்ற சூட்சியே தவிர மற்றபடி இதில் உள்ள நாணையமோ நன்மையோ என்ன இருக்கின்றது? மதங் களால், ஜாதிகளால் நாட்டிற்கும் மனித சமூகத்திற்கும் ஏற்பட்ட கெடுதிகளை உணர்ந்து அவைகளை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று கருதியிருக்கின்ற மக்கள் இந்த சூட்சிக் கிளர்ச்சியில் சேர முடியுமா என்பதை மறுபடியும் யோசியுங்கள்.
உலக நடப்புக்கு சமூக வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கொள்கையோ, திட்டமோ வேண்டாமா என்றால், வேண்டும் என்றே நாமும் ஒப்புக் கொள்ளு கிறோம். ஆனால் அது எல்லோருக்கும் சமமாய் இருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றோம்.
ஆகவே, மேற்கண்ட எல்லோருக்கும் சமமான திட்டம் என்பது இந்தத் தீண்டாமை விலக்கு கோவில் பிரவேசக்கிளர்ச்சி ஹரிஜன சேவை ஆகிய வைகளில் கடுகளவாவது இருக்கின்றதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
மேலும் இன்று நடக்கும் மேல்கண்ட கிளர்ச்சிகள் எதற்காக, எதுவரை நடக்கப்போகின்றது என்பதை சற்று கவனித்தோமானால் உண்மை விளங்கி விடும். அதாவது தீண்டப்படாத மக்களின் தனித்தொகுதி வாயில் மண்ணைப் போடவும் (போட்டாய் விட்டது) மற்றும் இந்த முடிவு (ராஜிமுடிவு) ஆட்சேபிக்கப்படாமல் சட்ட மூலமாய் உறுதிப்பட்டு வெளியாகும்வரை தீண்டப்படாத மக்களுக்கு ஏதோ பிரமாதமான நன்மைகள் செய்யப்போவதாகக் காட்டவும், அவர்கள் தங்கள் தனிப்பிரதிநிதித்துவம் போய்விட்டதை ஞாபகத்துக்கு கொண்டு வந்து கவலைப்படாமல் இருக்கவும், ஆன காரியங்களுக்காகவே இவை நடைபெறுகின்றன. அன்றியும் அரசியல் சீர்திருத்த சம்பந்தமாய் காங் கிரசின் கூப்பாடுகளுக்கு விரோதமாய் மகமதியர்களோ, கிறிஸ்துவர்களோ, தீண்டப்படாதார்களோ தட்டிப் பேசாமல் இருப்பதற்காக சர்வ கட்சி மகாநாடு, இந்து முஸ்லீம் மகாநாடு, தீண்டாமை விலக்கு வேலை ஆகியவைகள் மூலம் அழுத்தி வைக்கவும், ஆன காரியங்களுக்கே இவை நடைபெறுகின்றன.
அரசியல் சீர்திருத்தம் என்பது வெளியாகி அது உறுதியானவுடன் “கையை வளை பார்ப்போம்” என்று இந்த காங்கிரசுக்காரரும், மேல்ஜாதிக்காரரும் சொல்லப்போகின்றார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகை யால் மதமும், ஜாதியும், மனிதசமூக முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும் விரோதமாய் இருக்கின்றன என்று கருதியவர்கள் எவரும் இன்றைய தீண்டாமை விலக்குக்கும், மத நடுநிலைமைக்கும், மத ஒற்றுமை மகாநாட்டிற்கும் சிறிதும் சம்மந்தம் வைத்துக்கொள்ள முடியாத நிலைமை யிலேயே இருக்கிறார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் அதன் உள் அந்தரங் கங்களையும் , அவற்றின் பலாபலன்களையும் வெளியில் எடுத்துச்சொல்ல வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 05.02.1933