தோழர் ஷண்முகம் அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பொறாமைப்பட்டு இந்த சுமார் இரண்டு வருஷ காலமாகச் செய்து வரும் விஷமப் பிரசாரத்திற்கு முக்கிய ஆஸ்பதமாய் கொண்டது ஒட்டவா ஒப்பந்தத்தில் தோழர் ஷண்முகம் கலந்திருந்தார் என்பதே.

இந்த ஒட்டவா ஒப்பந்தம் என்கின்ற ஓலமே "கீழ்" முதல் "மேல்" வரையில் தங்களது விஷமத்தனத்துக்கும், இழி பிரசாரத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றாலும், அந்த ஒட்டவா ஓலம்தான் என்ன என்று பார்ப்போம்.

இழவு வீடுகளில் துக்கத்துக்குச் சிறிதும் சம்பந்தப்படாத பெண்கள் கூலிக்கு மார்பு வீங்கும்படி மாரடித்துக் கொண்டு புரளுவது போல் "ஒட்டவா விஷயம் என்றால் என்ன? அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?" என்கின்ற விஷயங்களே தெரியாமல் ஒரே கூப்பாடாக கத்திக் கொண்டு "ஒட்டவா வீரர்" "ஒட்டவா வீரர்" என்று எழுதி வருகின்றனர்.

ஒருவன் "எல்லா வகுப்பு மக்களுக்கும் சம சுதந்திரம் வேண்டுமென்று" கேட்டால் அவனை வகுப்புவாதி என்பதும், "உங்கள் சுயராஜ்யத்துக்கு அர்த்தமென்ன" என்று கேட்டால் அவனை தேசத்துரோகி என்பதும், ஜாதித் திமிர்களைப் பற்றி பேசினால் பிராமணத் துவேஷி என்பதும், தீண்டாமைக் கொடுமையைப் பற்றிப் பேசினால் மதத்துரோகி என்பதும் எப்படி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் உரிமையோ, அது போல் ஒருவன் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் புரியாத காரியத்தையோ, அல்லது இவர்களது நன்மைக்கு விரோதமான காரியத்தையோ செய்து விட்டால், அவனை ஒரே அடியாக சர்க்கார்தாசன் என்று கூப்பாடு போடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது.kamarajar and periyarதோழர் ஷண்முகம் அவர்களைச் சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன்பு அதாவது அவர் சட்டசபை பிரசிடெண்ட் ஆவதற்கு முன்பு ஒட்டவா விஷயமாய் தங்களை நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களே பலர் கேட்டபோது, "நீங்கள் தயவு செய்து பொருளாதார விஷயமாய் அ ஆ இ ஈ கற்றுக் கொண்டு வந்து என்னிடம் பேசுங்கள்" என்று சொன்னது யாவருக்கும் ஞாபகமிருக்கும். அவர்கள் அதற்குப் பொருளாதார பிரச்சினைப்படி யாதொரு பதிலும் சொல்லாமல் இருந்துவிட்டு, தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்பது போல் இப்போது மறுபடியும் ஒட்டவா ஒட்டவா என்று கூப்பாடு போடுகிறார்கள்.

பொருளாதார விஷயத்தில் ஒட்டவாவைப் பற்றி மிக பரிதாபப்படும் காங்கிரஸ் பிரசாரகர்கள், எலக்ஷன் கூலிகள், பார்ப்பன சிஷ்யர்கள், தேசீயத் தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் விட ஒருபடி அதிகமாகத் தெரிந்தவரும், அதே தொழிலில் இருந்தவரும், இப்போதும் அதே வேலையில் இருப்பவருமான தோழர் வித்தியாசாகர பாண்டியா அவர்கள் தான் இந்திய சட்டசபையில் இருப்பதைவிட தோழர் ஷண்முகம் "ஒட்டவா வீரர்" இருப்பது மேல் என்றும் அதிக நன்மை பயக்கும் என்றும் கருதி, தான் விலகிக் கொண்டு அவருக்கு இடம் கொடுத்து விட்டார்.

வியாபார அரசர் என்று சொல்லப்படும் வியாபார நிபுணரும், கோடீஸ்வர வியாபாரியுமாகிய தோழர் ஜமால் மகம்மது சாயபு அவர்கள், தான் அந்த ஸ்தானத்தில் இருந்தும், மறுபடியும் தனக்கு அந்த ஸ்தானம் காலடியில் இருக்கக் கூடிய நிலைமை இருந்தும், தான் இருப்பதைவிட தோழர் ஷண்முகம் இருப்பதே வியாபாரத்தின் நன்மைக்கும், நாட்டின் நன்மைக்கும் பயன்படும் என்று கருதி தோழர் ஷண்முகம் அவர்களுக்கு விட்டுக் கொடுத்ததுடன் அவருக்கு ஆதரவும் கொடுத்து வருகிறார்.

நாணையமாற்று, பேங்கிங், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆகிய துறைகளில் நிபுணர்களும் அதே தொழில்காரர்களும் ஆகியவர்களே தோழர் ஷண்முகத்துக்காக விட்டுக் கொடுத்துவிட்டு ஆதரவும் அளித்து வருகிறார்கள் என்றால், இந்தக் கூப்பாடு போடும் தற்குறி ஆசாமிகளுக்கு என்ன யோக்கியதை, என்ன அவசியம், என்ன ஞானம் என்பது நமக்கு விளங்கவில்லை.

இவைகள் எப்படியோ இருந்தாலும் தோழர் ஷண்முகம் அவர்கள் விருதுநகரில் இந்த ஒட்டவா கூப்பாடு வீரர்களுக்கு அளித்த பதிலை (மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருப்பதை) படித்துப் பார்க்கும்படி எல்லோரையும் கேட்டுக் கொள்ளுகிறோம். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது.

"நான் வேறு தொகுதிக்கு போனதை ஒரு காரணமாக வைத்து, விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனாலும் நான் இந்த விஷமப் பிரசாரக்காரர்களுடன் பந்தயம் போடவே அதாவது நான் செய்தது சரியா? தப்பா? என்பதை பாமர மக்களுக்கு மெய்ப்பித்துக் காட்டுவதற்காகவே குடியானவர்கள் தொகுதியையும், இரண்டொரு ஜில்லா மாத்திரம் சம்மந்தப்பட்ட தொகுதியையும் விட்டு விட்டு, ஒட்டவா ஒப்பந்தத்தின் பயனை அனுபவிக்கும் வியாபாரிகள் தொகுதிக்கும் அதாவது 26 ஜில்லாக்காரரும் தெரிந்தெடுக்க வேண்டிய மாகாணத் தொகுதிக்கும் நின்று இருக்கிறேன். ஒட்டவா கூப்பாடு வீரர்கள் உண்மையானவர்களும் சக்தி உடையவர்களுமானால் ஒரு கை பார்க்கட்டும்" என்று அறைகூவி அழைக்கிறார்.

இதற்கு இந்த வீரர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேட்கின்றோம். "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரிந்து போகும்" என்பது போலும் "பேச்சுப் பேச்சென்னும் பெரும் பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி" என்பது போலும் ஒட்டவா கூப்பாடு வீரர்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டதைக் காணலாம். தோழர் ஷண்முகம் அவர்கள் கோவை, சேலம், வட ஆற்காடு ஜில்லாக்களிலும் கூட உள்ள வர்த்தகத் தொகுதி மெம்பர்களிடம் 100க்கு 75 ஓட்டுகளுக்கு மேலாகவே வாங்கப் போகிறேன். இதற்கும் யார் வேண்டுமானாலும், ராஜகோபாலாச்சாரியார் உள்பட பந்தயங்கட்டி பார்க்கட்டும் என்றும் கர்ஜிக்கிறார். நிற்க,

மற்றொரு பந்தயம்

"நான் இந்த மேடையில் ஒரு பந்தயம் கூறுகிறேன். ஒட்டவா ஒப்பந்தம் எந்த வகையில் இந்தியாவுக்கு கெடுதி என்று தோழர் ராஜகோபாலாச்சாரியாராவது தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியாராவது புள்ளி விபரங்களுடன் (ஆதாரங்களுடன்) கூற முடியுமா என்று கேட்கின்றேன்" என்று கூறுகிறார். அதோடு மாத்திரமல்லாமல் ஒட்டவா ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நன்மைகளையும், லாபத்தையும் புள்ளி விபரத்தோடு எடுத்துக் கூறியும் இருக்கிறார்.

மற்றும் "நான் மாத்திரமல்லாமல் இந்திய சட்டசபை பிரதிநிதிகளில் வியாபார அனுபவமுள்ளவர்கள் அடங்கிய கமிட்டியும் ஒட்டவா ஒப்பந்தத்தை பரிசீலனை செய்து அதை அங்கீரித்து இருக்கிறது" என்கின்றார். தோழர் இராஜகோபாலாச்சாரியாரும், அவர்களது சிஷ்யர்களும், கூலிகளும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேட்கின்றோம்.

இந்த "நிபுணர்கள்" தோழர்கள் ஷண்முகத்தை விட, ஜமால் மகம்மதை விட, வித்தியாசாகர பாண்டியாவை விட, இந்திய சட்ட சபையில் இதற்கென்று நிலையாக உள்ள பிரதிநிதி கமிட்டியாரை விட எவ்வளவு தூரம் வியாபார அனுபவம், பொருளாதார சாஸ்திர விற்பத்தி, லாப நஷ்டம் அடைந்த சொந்த அனுபவத் திறமை கொண்டவர்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. காங்கிரஸ் தேசாபிமானம் என்னும் பெயரால் எதையும் சாதித்து விடலாம் என்கின்ற அகம்பாவத்தையும், ஆணவத்தையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கின்ற ஆவலே நம்மை இவற்றை யெல்லாம் பற்றி கவனிக்கச் சொல்லுகின்றதே ஒழிய வேறில்லை. அன்றியும் இவ்விஷயத்தில் பார்ப்பனர்கள் ஊளை இடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. பார்ப்பனரல்லாதார் கூடவே கோவிந்தா போடுவதுதான் நம்மை மார்பில் குத்துவது போல் உறுத்துகின்றது.

நிற்க, பொருளாதார புரொபசர் தோழர் பேசினாக் என்பவர் பொருளாதார விஷயத்தில் பட்டம் பெற்ற நிபுணர் உலகப் பொருளாதார நிபுணர்களில் ஒருவராய் மதிக்கப்படுபவர் பிரிட்டிஷார் அல்லாதார் மாத்திரமல்லாமல் பிரிட்டிஷார் மீது விரோத பாவம் கொண்டுள்ள ஜர்மனி தேசத்தைச் சேர்ந்தவர். இப்படிப்பட்ட இவர் "ஒட்டவா ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு நன்மை என்பது மாத்திரமல்லாமல் இந்திய வியாபார விருத்திக்கு ஒட்டவா ஒப்பந்தம் அவசியமானது" என்று தக்க ஆதாரங்களுடன் "இந்து" பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். இவர் வார்த்தையை நம்புகிறீர்களா அல்லது "எவ்வளவு அயோக்கியனானாலும் நாலணா கொடுத்து காங்கிரசில் சேர்ந்தவுடன் யோக்கியனாய் விடுவான்" என்று சொல்லும் வியாபார வாசனை அற்ற தோழர் ராஜகோபாலாச்சாரியாருடையவும் அவரது கோஷ்டியாரினுடையவும் வார்த்தையை ஒப்புக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்கிறார்.

மற்றும் அனேக புள்ளி விபரங்களைக் காட்டி ஒட்டாவா ஒப்பந்தத்தின் நன்மையை விளக்கியிருக்கிறார்.

ஆகவே வாசகர்கள் பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்ற விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்கிறார்கள் எவ்வளவு அபாண்டங்களைக் கற்பிக்கிறார்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகவும், தங்களுக்கு சிறிதும் புலப்படாத விஷயமாகவும் மனதாரப் பொய் என்று தெரியக் கூடிய விஷயங்களையும் ஆயுதமாகக் கொண்டு எவ்வளவு மனந்துணிந்த கொலை பாதகத்துக்கு ஒப்பான கெடுதியைச் செய்கிறார்கள் என்பதையும், மற்றவர்களைக் கொண்டு செய்விக்கத் துணிகிறார்கள் என்பதையும், வாசகர்கள் உணர வேணுமாய் விரும்புகிறோம்.

(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 23.09.1934)

Pin It