kuthoosi gurusamy“சுதந்தரம்” வந்துவிட்டபடியால் போலீஸ்காரர் குறையவில்லை! அதிகப்பட்டிருக்கிறார்கள். “குறை” என்ற சொல் அவர்களுக்கிருக்கின்ற வசதிக் குறைவைப் பற்றியதாகும்!

போலீஸ்காரர்களுக்கு ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கின்றன! ஆனாலும், அவைகளைப் பற்றி எழுதுவதென்றால் எனக்கு ரொம்பப் பயம்! அவர்கள் என்னைப் பிடித்துக் கொள்வார்கள் என்றல்ல.

அவர்களை அரசாங்கத்தார் பிடித்துக்கொள்வார்களே என்று தான்! இதெல்லாம் “குத்தூசி”க்குச் சொன்னது யார்? அதைக் கண்டுபிடித்தாக வேண்டும்! நீங்கள் சொல்லாமல் இவ்வளவு விவரங்கள் “குத்தூசி”க்கு எப்படித் தெரிய முடியும்? - என்று போலீஸ்காரரை மிரட்டுவார்கள், மந்திரிகள் முதல் பெரிய அதிகாரிகள் வரையில்!

முன்னரே ஒரு தடவை இதை அநுபவித்துப் பார்த்திருக்கிறேன்! இருந்தலும் இருக்கட்டு மென்று தான் இதை எழுதுகிறேன். அவர்கள் குறையை யார்தான் எழுதுவது? அவர்கள் செய்கின்ற அக்கிரமத்தை எழுத அநேகம் பேர் இருக்கலாம். ஆனால் குறைகளைப் பற்றி இரண்டொருவராவது எழுத வேண்டாமா?

போலீஸ்காரர் சம்பளம் உண்டே! ரொம்ப ரொம்பத் தாராளம்! கார்ப்பரேஷன் குப்பைக்காரருக்கும் போலீஸ் காரருக்கும் ஒரே சம்பளம்!

சம்பளம் வாங்க மறுத்துக்கூடப் பார்த்தார்கள், சென்ற ஆண்டில், சென்னையில்! பாவம்! அவர்களால் எப்படிக் கிளர்ச்சி செய்ய முடியும்? கிளர்ச்சிகளை அடக்கியே பழக்கப் பட்டவர்களுக்குக் கிளர்ச்சி செய்ய முடியுமா? கலவரஞ் செய்தே பழகியவர்களுக்கு ஆட்சி நடத்த முடிகிறதா, பாருங்கள், அதுபோல!

புரோகிதப் பார்ப்பான் மகன் டாக்டராகிவிடுகிறான்! எஞ்சினியராகி விடுகிறான்! எதுவும் ஆகிவிடுகிறான். ஆனால் ஒரு போலீஸ்காரர் மகன் இப்பேர்ப்பட்ட உயர் பதவிகளையடைவதில்லையே, ஏன்? புரோகிதனுக்குள்ள வசதி போலீஸ்காரருக்குக் கிடையாது. காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு போலீஸ்காரரின் எண்ணிக்கை அதிகமானது மட்டுமல்ல; வேலையும் அதிகமாகிவிட்டது.

மனுஷர் வாய்களை முகர்ந்து பார்த்து யார் குடித்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது முதல், மந்திரிகள் பேசுவதற்குக் கூட்டஞ் சேர்த்துக் கொடுப்பது வரையில், போலீஸ்காரருக்கு ஆயிரக் கணக்கான வேலைகளிருக்கின்றன. ஆனால் வசதிகளோ வரவரக் குறைந்து கொண்டே போகின்றன.

ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். வெள்ளையர் காலத்தில் போலீஸ்காரர் தங்கள் உடுப்புக்களைக் கழற்றி வைப்பதற்கென்று ஆளுக்கொரு பெட்டி கொடுத்திருந்தார்கள். ‘ராம ராஜ்யம்’ வந்த பிறகு அந்தப் பெட்டியை ஆஃபீசுக்காக எடுத்துக் கொண்டு விட்டார்களாம்! பணக் கஷ்டம் வந்தால் யாரைப் போய்த் தாக்குகிறது, பாருங்கள்!

போலீஸ்காரர் எந்தக் கட்சியையும் - ஆட்சியையும் - சேர்ந்தவர்களல்லர். எந்த ஆட்சி அதிகாரத்திலிருகிறதோ அது சொல்கிறபடி நடப்பவர்கள்! அன்று காங்கிரஸ் காரரை அடித்தார்கள். இன்று காங்கிரஸ்காரர் காட்டுகின்றவர்களை அடிக்கிறார்கள்! நாளைக்கு யாரை அடிக்க வேண்டி வருகிறதோ, அதன்படியே நடப்பார்கள்; அதாவது அடிப்பார்கள்!

போலீஸ்காரர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியவர்களே அதிகாரத்துக்கு வந்திருப்பதனால் ‘நெருப்பு நிபுணர்கள்’ மீது போலீசாருக்குச் சிறிது பயமிருக்கலாம்! வெறுப்பு இருக்குமோ என்னவோ, எனக்குத் தெரியாது.

இதேபோல் போலீஸ்காரர் காங்கிரஸ்காரரை அன்று தாக்கியதற்காக இப்போது ஒருக்கால் பழி தீர்த்துக் கொள்கிறார்களோ, என்னவோ, எனக்குத் தெரியாது!

எது எப்படியானாலுஞ் சரி, போலீஸ்காரரும் மனிதர்கள்தானே? அவர்கள் குடியிருப்பதற்கு வசதியான வீடு வேண்டாமா? செலவுக்குப் போதுமான பணம் வேண்டாமா? மற்ற வசதிகள் வேண்டாமா?

சர்க்கார் போலீஸ்காரர்மீது கோபப்படக்கூடாது. என்மீதும் கோபப்படக்கூடாது. நிலைமையை உணர்ந்து இரக்கப்பட வேண்டும். வேண்டியதை உடனே செய்ய வேண்டும்.

- குத்தூசி குருசாமி (4-1-50)

நன்றி: வாலாசா வல்லவன்

 

Pin It