periyar cake cuttingஇரட்டை ஆட்சியும் வகுப்புவாதமும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஒழிந்ததா? அல்லது முன்னிலும் பன்மடங்கதிகமாய்ப் பெருகிற்றா? என்பதை பார்ப்பனரல்லாத மக்கள் பகுத்தறிவு கொண்டு கவனித்துப் பார்க்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம்.  ஒத்துழையாமை என்பது மும்மரமாய் இருந்த காலத்தில் நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகளின் மூலம் அதை ஒழிப்பதற்கு பிரயத்தனப்பட்டது வாசகர்கள் அறிந்ததுதான்.  அதாவது கல்கத்தா தனிக் காங்கிரசின்போது தெருவில் போகும் பிச்சைக்காரரையெல்லாம் பிடித்து அவர்களுக்கு நாமம் போட்டு சென்னை மாகாணப் பிரதிநிதி என்று ஏமாற்றி, ஆள்களைச் சேர்த்தும் அங்கும் தோற்றுப் போனதும், சென்னையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், காரியதரிசிகளாகவும் இருந்த பார்ப்பனர்களான ஸ்ரீமான்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார் , ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் ராஜீநாமாக் கொடுத்து வெளியேறி ஒத்துழையாமையையும், மகாத்மாவையும், வாய் கொண்ட மட்டும் வைதும், பழி சுமத்தியும் பார்த்தும் முடியாமல் போனதும், அட்வொகேட் ஜெனரலாயிருந்து மந்திரி உத்தியோகம் பெற ஆசைப்பட்டு அதை ராஜீனாமாக் கொடுத்து வெளிவந்த ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் சர்க்கார் தயவு பெற ஒத்துழையாமை சட்ட விரோதமானதென்றும் அதை உடனே அடக்க வேண்டுமென்று சர்க்காருக்கு யோசனைச் சொல்லிக் கொடுத்தும், தனது சகாக்களான வக்கீல் சைன்யங்களை ஒத்துழையாமையில் சேரக்கூடாதென்று சொன்னதோடு, ஒத்துழையாமைக்கு விரோதமாயிருக்க வேண்டுமென்று ஏவிவிட்டும், முடிவில் ஒன்றும் பயன் பெறாமல் ஒத்துழையாமை செல்வாக்குப் பெற்று வலுக்கவே, கடைசியாக தங்களுக்குப் புத்தி வந்தது போல் பாசாங்கு செய்து ஒத்துழையாமை திட்டம் ஒன்றையும் ஒப்புக்கொள்ளாமலும், தாங்களும் அந்தப்படி நடவாமலும், தங்களையும் ஒத்துழையாதார் என்கிற பெயரைச் சொல்லிக் கொண்டு காங்கிரசுக்குள் புகுந்து காங்கிரசிலும், கான்பரன்சுகளிலும் ஒவ்வொரு தீர்மானத்தையும் எதிர்த்துக்கொண்டும் வந்து கடைசியாக உண்மையான ஒத்துழையாதார் என்று வேஷம் போட்டுக் கொண்டு, காந்தி சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த சில பார்ப்பனர்களின் உதவியால் சட்டசபையில் போய் ஒத்துழையாமை செய்வது, முட்டுக்கட்டை போடுவது, இரட்டை ஆட்சியை ஒழிப்பது என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டு காங்கிரசையும் தங்கள் வசமாக்கி பாமர மக்களையும் ஏமாற்ற சில பார்ப்பனரல்லாதாரையும் கூலிக்குப் பிடித்துக் கத்தச் சொல்லி, அவரவர்கள் பத்திரிகைகளிலும் எழுதும்படி செய்து, ஒத்துழையாமை தத்துவத்தையே அழித்து கடைசியாக வெற்றியும் பெற்று விட்டார்கள். 

ஆனால் இப்போது நடந்ததென்ன என்பது தான் முக்கியமான விஷயம்.  சட்டசபையில் ஒத்துழையாமை நடந்ததா?  என்று பார்த்தால் அந்த பிரஸ்தாபமே அடியோடு மறைந்து போனதோடு, காங்கிரசிலும் ஒத்துழையாமை எடுபட்டுப் போய்விட்டது.  முட்டுக்கட்டை நடந்ததா? என்று பார்த்தால் அந்த பிரஸ்தாபமும் இப்போது அடியோடு மறந்துபோய், சர்க்காருக்கும் தங்களுக்கும் வேண்டிய தீர்மானங்களுக்கு அனுகூலமாக இருந்தும் தங்களுக்கு வேண்டியபடி தீர்மானங்கள் கொண்டுவந்தும், தங்களுக்கு மறுபடியும் சட்டசபை ஸ்தானம் கிடைக்கும்படி பல கேள்விகள் கேட்டும் பொது மக்களிடை சட்டசபைக்கு ஒரு யோக்கியதை சம்பாதித்துக் கொடுத்தாய் விட்டது.  கல்கத்தாவிலும், மத்திய மாகாணத்திலும் வகுப்புவாதம் காரணமாய் அதாவது வங்காளத்திலிருந்து முஸ்லீம் என்கிற காரணத்தாலும், மத்திய மாகாணத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்தாலும், மந்திரி பதவிப் போட்டியின் காரணமாக கொஞ்ச காலம் மந்திரி உத்தியோகங்கள் காலியாய் இருந்ததையே பிரமாதமாய் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றை குருவாகக்கொண்ட பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் “இரட்டை ஆட்சி மடிந்தது”, “சுயராஜ்ய கட்சி ஜெயித்தது”, “எங்கள் காரியம் முற்றுப் பெற்றது” என்று பாமர மக்களை ஏமாற்றி தயவு பெற்றும், கூலி பெற்றும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது பக்தர்களுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுத்து வீரர்களானார்கள்.  இதன் பலனாய் மற்ற இடங்களில் “இரட்டை ஆட்சி ஒழிந்தது” என்று சொல்லிக் கொண்டிருந்ததோடு சென்னை மாகாணத்தில் வகுப்புவாதமும் வகுப்புக் கட்சியும் குழி தோண்டி புதைக்கப்பட்டது என்றும் தம்பட்டமடித்துக் கொண்டார்கள். 

இப்போது இரட்டை ஆட்சி எங்கே ஒழிந்தது? என்று பார்த்தால் ஒவ்வொரு மாகாணத்திலும் இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்க சுயராஜ்யக் கட்சியில் இருந்த ஆள்களே பலவேறு வேஷங்கள் போட்டுக்கொண்டு போட்டி போடுவதும், எல்லா மாகாணங்களிலும் இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்க ஆள்கள் ஏற்பட்டு இரட்டை ஆட்சி தலை சிறந்து விளங்குவதும் மறைக்க முடியாத விஷயமாய்ப் போய்விட்டது.  சென்னை மாகாணத்திலோ, சுயராஜ்யக் கட்சியார் என்கிற பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாய் இரட்டை ஆட்சிக்கு ஆதரவளிப்பதாய் கூறி இப்போது தங்கள் ஆதரவில் மந்திரிகளையும் நியமித்துக்கொண்டு, தங்கள் சுயநலக் காரியங்களை சாதித்துக்கொண்டு வருவதும் மறைக்கக்   கூடிய விஷயமல்ல.  இரட்டை ஆட்சி ஒழிந்ததென்பது இப்படி இருந்தாலும் வகுப்புவாதம் ஒழிந்து குழியில் போட்டு புதைத்தாய் விட்டதா? என்று பார்த்தால் அதுவும் தலை மாகாணமாகிய பஞ்சாப்பு முதல் ஒவ்வொரு மாகாணமும் வகுப்புப் படியே மந்திரிகள் நியமித்துக்கொண்டு வருவதும் யாரும் அறியாத விஷயமல்ல.  பஞ்சாப்பில் ஒரு இந்து, ஒரு சீக்கியர், ஒரு முசல்மான் என்கிற வகுப்பு மந்திரிகளே! கல்கத்தா மத்திய மாகாண முதலிய எல்லா மாகாணங்களிலும் இதுபோலவே வகுப்பு பிரித்து மந்திரிகள் நியமிக்கப்பட்டு விட்டார்கள். 

சென்னை மாகாணத்தில் வகுப்புவாதம் ஒழிந்த யோக்கியதையும் மந்திரி நியமனமும் சட்டசபைத் தலைவர் நியமனமும் டிப்டி தலைவர் நியமனமும் எதை ஆதாரமாய் வைத்து நியமிக்கப்பட்டது?  வகுப்புவாதம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டால் ஏன் ஒரு பார்ப்பன மந்திரியாவது, தலைவராவது, உப தலைவராவது  ஏற்பட்டிருக்கக்கூடாது?  பார்ப்பனர்களில் யோக்கியதை உடையவர்கள் இல்லையா?  உப தலைவர் பதவிக்கு “ஒரு மகமதிய கனவானையே நியமிக்க வேண்டும் என்று” வகுப்பு பெயர் சொல்லி சுயராஜ்ஜியக் கட்சி தன் 'தலைவர்' ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அதிகாரம் கொடுப்பானேன்?  சட்டசபையில் சுயராஜ்ஜியக் கட்சித் தலைவர் (லீடர்) பதவிக்கு ஏன் ஒரு பார்ப்பனரைத் தெரிந்தெடுக்கக் கூடாது.  லீடர் பதவிக்கு யோக்கியதை உள்ள பார்ப்பனர் இல்லையா?  ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியாருக்கு இருக்கிற யோக்கியதை ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சி.வி. வெங்கிடரமண ஐயங்கார் ஆகிய பார்ப்பனர்களுக்கு இல்லையா? வகுப்புவாதம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது வாஸ்தவமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி தனக்கு லீடர் பதவி கிடைக்காததற்காக கட்சியை விட்டுப் போவதாக மிரட்டிக் கொண்டிருப்பானேன்.  “தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்குத் தலைவர் பட்டம் வாங்கிக் கொடுக்க ஒவ்வொருவரையும் ராஜீனாமா கொடுக்கும்படி கெஞ்சுவானேன்?  மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வருவானேன்?  கோக்கலே ஹால் சென்னை மாகாண மகாநாட்டுக்கு 150 பிரதிநிதிகளே மாத்திரம் வருவானேன்?  அதுவும் சென்னை பிரதிநிதிகள் 125 பேர்களாயிருப்பானேன்?  காங்கிரசுக்கு வருஷா வருஷம் சென்னை மாகாணத்திலிருந்து 1000 பிரதிநிதிகள் போய்க் கொண்டிருக்க இவ்வருஷ காங்கிரசுக்கு 100 பேர்கள் கூட போகாமல் இருக்கக் காரணம் ஏன்?  அதுவும் “தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணம் கொடுத்துச் சிலரைக் கூட்டிக்கொண்டு போவானேன்? 

இன்னும் அனேக ரகசியங்கள் உண்டு.  இவைகளையெல்லாம் பார்த்தால் இரட்டை ஆட்சியும் வகுப்புவாதமும் ஒழிந்ததா?  நிமிர்ந்ததா?  வாசகர்களே! நன்றாய் யோசிக்க மறுபடியும் கோருகிறோம்.  ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைய இதுவே தக்க சமயம். வீணாய்ப் பார்ப்பனர்களின் அரசியல் புரட்டில் மயங்கி தக்க சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 16.01.1927)

Pin It