மாஜி முதல் மந்திரியான டாக்டர் க.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர் வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேக்ஷகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்நாட்டில் இந்திய சட்டசபைத் தேர்தல் விஷயத்தில் ஒரு மாற்றம் ஏற்படலாம்.

அதாவது கோவை ஜில்லாவிலும், சேலம் ஜில்லாவிலும் கொங்கு வேளாள சமூகம் அதிகமாக உண்டு. இந்த இரண்டு ஜில்லாவில் உள்ள வேளாள சமூகம் ஒரு வேளாள சமூக அபேக்ஷகரைத்தான் ஆதரிப்பார்கள். வேளாள சமூகத்தில் ஒரு அபேக்ஷகர் இல்லை என்கின்ற காரணத்தினாலேயே கோவை ஜில்லா போர்டு பிரசிடெண்டு தோழர் வெள்ளியங்கிரிக் கவுண்டர் தனது ஜில்லா போர்டு ஸ்தாபனத்தின் பயனாய் உள்ள செல்வாக்கைத் தோழர் அவனாசிலிங்கத்துக்காகப் பயன்படுத்துவதாகவும், கோவை ஜில்லா போர்டு வைஸ் பிரசிடெண்டும், கொங்கு வேளாள குலத் தலைவரும், மடாதிபதியுமான பழய கோட்டைப் பட்டக்காரர் அவர்கள் தனது செல்வாக்கை டாக்டர் வரதராஜுலு அவர்களுக்குப் பயன்படுத்துவ தாகவும் வாக்களித்து இருந்தார்கள். இதன் பயனாக கோவை, சேலம் ஜில்லா வேளாள சமூக ஓட்டுகள் இவ்விருவருக்குமே சற்றேறக்குறைய சரிசமமாகப் பிரிந்து போகக் கூடிய நிலையில் இருந்து வந்தது.karunanidhi and periyarஇப்போது டாக்டர் சுப்பராயன் அவர்கள் சீமையிலிருந்து வந்து தோழர் ராதாபாய் அம்மாளின் அபேக்ஷக ஸ்தானத்தை உறுதிப்படுத்தி மேல்கண்ட இரண்டு கனவான்களையும் சென்று பார்த்ததில் தோழர் வெள்ளியங்கிரிக் கவுண்டரும், பட்டக்காரர் அவர்களும் தோழர் ராதாபாய் அவர்களை ஆதரிப்பதைப் பற்றி டாக்டர் சுப்பராயனுக்குத் தைரியம் சொல்லி விட்டதாகத் தெரிகின்றது.

இது மாத்திரமல்லாமல் தோழர் வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள், தோழர்கள் அவனாசிலிங்கம் செட்டியாருக்கும், ராஜகோபாலாச்சாரியாருக்கும் இது விஷயத்தைத் தெரிவிக்கப் போவதாகவும், பட்டக்காரரவர்களும் டாக்டர் நாயுடு அவர்களுக்கு எழுதி விடுவதாகவும் டாக்டர் சுப்பராயன் அவர்களிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதன் பயனாய் தேர்தல் நிலைமை மாற்றமடைந்தே தீரும். இதன் பயனாகத் தோழர்கள் அவனாசிலிங்கமும், நாயுடுவும் தங்கள் அபேக்ஷகர் ஸ்தானத்திலிருந்து விலகிக் கொள்ளுவார்களோ அல்லது நடந்தது நடக்கட்டும் என்று துணிந்து நிற்பார்களோ தெரியாது.

டாக்டர் சுப்பராயன் அவர்கள் இந்தத் தொகுதியை ஒரு பெண் அபேக்ஷகருக்காக எல்லா கட்சியார்களும் போட்டி இல்லாமல் விட்டுவிட வேண்டும் என்றும் இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு பெண்தான் இந்திய சட்டசபைக்கு நிற்க சகல விதத்திலும் தகுதியோடு முன் வந்திருப்பதாகவும், இதன் பயனாய் காங்கிரஸ் பெண்கள் விஷயத்தில் கொண்டுள்ள கொள்கையைக் காட்ட ஒரு சந்தர்ப்ப மேற்பட்டிருக்கிறதென்றும், தோழர் ராஜகோபாலாச் சாரியாருக்கும், டாக்டர் வரதராஜுலுவுக்கும் தெரிவித்து இருப்பதாகவும் தெரிகிறது. இதனாலெல்லாம் தான் அபேக்ஷகர்கள் தன்மையே மாறுபட்டாலும் மாறுபடக்கூடும் என்று எதிர்பார்க்க இடமேற்படுகின்றது.

மற்றும் ஒரு விஷயம், அதென்னவெனில் டாக்டர் நாயுடுவை திருச்சி பொதுக்கூட்டத்தில் "டாக்டர் சுப்பராயன் மனைவியார் கோவைத் தொகுதிக்கு ஒரு அபேக்ஷகராய் நின்றால் அப்போது உங்கள் நிலை என்ன?" என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு பதிலளிக்கையில் "தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் நிற்பதாய் இருந்தால் எனக்கும், அந்தம்மாளுக்கும் போட்டி இல்லாமல் இருக்கும்படியாக நடந்து கொள்ள முயற்சிப்பேன். எங்களுக்குள் போட்டிப் பிரசாரம் நடக்க இடம் வைத்துக்கொள்ள இஷ்டமில்லை" என்று சொல்லி இருப்பதாகத் தெரிகிறது.

ஒரு சமயம் தோழர் ராதாபாயம்மாள் விஷயத்தில் நாயுடு ஒப்புக் கொண்டு காங்கிரஸ் விட்டுக் கொடுக்கவில்லையானால், ராதாபாயம்மாள் வேறு தொகுதியில் நின்று கொண்டு கோவை, சேலம் ஜில்லா வேளாள சமூக ஓட்டுகளை டாக்டர் நாயுடுவுக்கு அனுகூலமாய்த் திருப்ப முயர்ச்சி செய்யப் போவதாயும் தெரிய வருகின்றது.

தோழர் ராதாபாயம்மாளுடன் போட்டி போட விரும்பவில்லை என்று எப்படி டாக்டர் நினைக்கிறாரோ, அது போலவே செங்கல்பட்டு தென்னாற்காடு ஜில்லா தொகுதியில் அபேட்சகராய் இருக்கும் திவான்பகதூர் எம்.கே. ரெட்டியாரும் ராதாபாயம்மாள் நிற்பதாயிருந்தால் போட்டி போட விரும்பவில்லை என்பதாய் தெரிகிறது. அப்படியானால் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகரும் அம்மாள் விஷயத்தில் போட்டி போட மாட்டார்கள். இவர்கள் இருவரும் போட்டி போட முன் வரவில்லையானால் மிஞ்சுவது தோழர் முத்துரங்க முதலியாரே ஆவார்கள். அவர் நிற்பதும் ஒன்றுதான் உட்காருவதும் ஒன்றுதான். ஆதலால் அந்த தொகுதியிலும் ராதாபாயம்மாளுக்கு சுலபமாக ஆகக் கூடும்.

இப்படியும் ஒரு உத்தேசம் இருப்பதாகவும் தெரிகிறது. எனவே ஏதோ ஒரு விதத்தில் அசம்பளி தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படக் கூடும் என்று தெரிகிறது.

(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 23.09.1934)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.