தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்து கொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். பாமர மக்களைப் பலவகையிலும் ஏமாற்றி அவர்களைத் தன்னைப் பின்பற்று மாறு செய்துகொள்ள முடியாத எவனும் தேசீயத்தலைவனாக இருக்க முடியாது. பாமர மக்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு பித்தலாட்டங்களும், அயோக்கியத்தனங்களும் செய்தாக வேண்டுமோ அவ்வளவும் செய்துதான் ஆகவேண்டும். அன்றியும் ஒரு நிலையான கொள்கையும், நேர்மையான நடத்தையும் இல்லாதவனே தேசீயவாதியாக இருக்க முடியும். அல்லாமலும் பாமர மக்கள் எவ்வளவு பிற்போக்கான கொள்கையும், பழக்க வழக்கமும் உடையவர்களா யிருக்கிறார்களோ அவ்வளவு பிற்போக்கான கொள்கையையும் பழக்க வழக்கங்களையும் பாராட்டுகின்றவனே தேசீயத் தலைவனாகப் புகழ்பெற்று விளங்க முடியும்.

periyar 360காலத்திற்குத் தகுந்த மாதிரியில் நாட்டிற்கு நன்மை தரும் கொள்கைகளை யாருடைய நன்மதிப்பையும் இகழ்ச்சியையும் பாராட்டாமல் எடுத்துக் கூறும் ஒருவன் தேசீயவாதியாக விளங்க முடியாது. அவன் தேசத் துரோகியாகவும், புரட்சிக்காரனாகவும், நாஸ்திகன் என்று வைதீகர்களால் பழி சுமத்தப்படுபவனாகவுந் தான் விளங்க முடியும். ஆகையால் தான் நமது தேசத்திலும் மற்றும் நமது நாட்டைப் போல மூடநம்பிக்கையுடைய மக்கள் வாழ்கின்ற தேசங்களிலுமுள்ள ஒருவன் தேசீயத்தின் பெயரால் புகழ் பெறுவதும், பாமர மக்களின் நன்மதிப்பைப் பெறுவதும், தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாக இருந்து வருகின்றது.

அல்லாமலும் முற்காலத்தில் வைதீகர்கள், பக்தர்கள், மதாச்சாரியார்கள், புரோகிதர்கள் என்பவர்கள் எவ்வாறு ஜன சமூகத்தை ஏமாற்றுகின்றவர்களாகவும், ஜன சமூகத்தின் நன்மதிப்பிற்கு பாத்திரப்பட்டவர்களாகவும், ஜன சமூகத்திற்குப் பல ஆசை வார்த்தைகளைக் காட்டுவதன்மூலம் அவர்களிடம் பொருள் பெற்றுப் பிழைக்கின்றவர்களாகவும் இருந்து வந்தார்களோ அவ்வாறேதான் இக்காலத்தில் தேசீயவாதிகளும் இருந்து வருகின்றார்கள். வைதீகர்களும், பக்தர்களும், மதாச்சாரியார்களும், புரோகிதர்களும், பாமர மக்களுக்கு “இறந்தபின் சுவர்க்கத்தை அடையலாமென்றும், அங்கே இவ்வுலகத்தைக் காட்டிலும் அதிகமான சுகத்தை அடையலாமென்றும், அச்சுகத்தை நீண்டநாள் அனுபவிக்கலாமென்றும், அது அழியாத சுகமென்றும், ஆகையால் அதைப் பெற முயல்வதே அறிவாகுமென்றும், அற்பமான இவ்வுலக சுகத்தை இச்சிப்பதனால் அவ்வுலக சுகத்தைப் பெற முடியாதென்றும் கூறி அவர்கள் அறிவைக் கெடுத்து வந்தனர். அந்தச் சுவர்க்க வாசலின் சாவி தங்களிடத்தில்தான் இருக்கின்றதென்றும் கூறி, அவர்களின் உழைப்பையும், செல்வத்தையும், அறிவையும் கொள்ளை கொண்டு வந்தனர். அவர்களைப் போலவே இன்று தேசீயவாதிகள் என்பவர்களும், “நாங்கள் ராம ராஜியத்தைக் கொண்டு வருகிறோம். அந்த ராஜியத்தில் எல்லோரும் கஷ்டமில்லாமல், தரித்திரமில்லாமல் வாழலாம். ஒருவரும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதில்லை. அரசாங்கத்திற்கு வரிகொடுக்க வேண்டியதில்லை. எல்லோரும் தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டிருக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

அந்த சுவர்க்கலோகத் தரகர்கள் தங்கள் மதச் சின்னங்களாக ‘விபூதி பட்டை நாமம், துளசிமணி, உருத்திராட் சம் முதலியவைகளைத் தரித்துக் கொண்டு ‘அரகரா சிவ சிவா ராமா கோவிந்தா’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தது போலவே இந்தத் தேசீயவாதிகளும் இன்று ராமராஜ்யச் சின்னமாக கதர்த்துணி, தேசீயக் கொடி முதலியவைகளைத் தரித்துக் கொண்டு ‘பாரத மாதாவுக்கு ஜே! மகாத்மா காந்திக்கு ஜே!’ என்று சத்தமிட்டுப் பாமர மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் பாமர மக்களின் கவனத்தை இழுக்கும் பொருட்டு அளவற்ற பண்டிகைகளையும், சடங்குகளையும், விழாக்களையும், உண்டாக்கி அவைகளை அவர்கள் கொண்டாடும்படி செய்து அவைகளின் மூலம், அவர்களுடைய உழைப்பையும், அறிவையும், செல்வத்தையும் எவ்வாறு கெடுத்து வந்தார்களோ அதைப்போலவே இன்று இந்தத் தேசீயவாதிகளும் ஜெயந்திகளையும், பிரார்த்தனைகளையும், கொடியேற்று விழாக்களையும் ஏற்படுத்தி அவைகளின் மூலம் பாமரமக்களின் கவனத்தை இழுத்து, அவர்களுடைய செல்வத்தையும், உழைப்பையும், அறிவையும் கெடுத்து வருகின்றனர். அந்தக் காலத்தில் நமது மக்கள் எவ்வாறு சுவர்க்கத்தை நம்பி வைதீகர்களும், பக்தர்களும், மதாச்சாரியர்களும், புரோகிதர்களும் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார்களோ அதைப் போலவேதான் இன்றும் இருக்கின்றனர். தேசீயவாதிகள் வாங்கித் தருவதாகக் கூறும் ‘ராம ராஜியத்’தை நம்பி இவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் பின்செல்லுகின்றவர்களா யிருக்கின்றனர். பாமர மக்களின் இத்தகைய அறியாமையைக் கண்டே இன்று நமது நாட்டில் வேறுபிழைப்பிற்கு வழியில்லாமலிருக்கின்ற வர்களும், கௌரவமான வழியில் ஜீவனம் பண்ண வகையற்றவர்களும், யோக்கியமான முறையில் பட்டம் பதவி பெறத் திறமையற்றவர்களும் தேசீய வேஷம் பூண்டு, தேசீயவாதிகளாக நடனம் பண்ண ஆரம்பித்து விடு கின்றனர்.

இந்த உண்மையை அறிய வேண்டுமானால் இன்று நமது நாட்டில் தேசீய வேஷம் போட்டுத் திரியும் கூட்டத்தினரைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் கொஞ்சம் பகுத்தறிவுடைய எவரும் நன்றாகத் தெரிந்து கொள்ள லாம். தேசீயத் தொண்டர்கள் என்பவர்களில் அனேகர் வேறு பிழைப்பிற்கு வழியில்லாத காரணத்தால் தேசீயக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு “காங்கிரஸ்”, “காந்தி”, “கதர்”, “சுயராஜ்யம்” என்று கூச்சலிட்டுத் திரிகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது, இவர்களில் அனேகருக்கு, காங்கிரஸ் என்றால் இன்னது, காந்தியென்றால் இப்படிப்பட்டவர், கதர் என்றால் அதன் தத்துவம் என்ன? சுயராஜியம் என்றால் அது எப்படி யிருக்கும்? என்று கூடத் தெரியாதவர்கள் என்பது பலருக்குத் தெரிந்த விஷயமாகும். இவர்களை நடத்துகின்ற தலைவர்கள் என்பவர்கள், எதைச் சொல்லும்படி கட்டளை யிடுகிறார்களோ, எதைச் செய்யும்படி உத்தரவிடுகிறார்களோ, அவற்றையே அவற்றின் பொருளை யுணராமலே செய்கின்ற புத்திசாலித்தனமுடையவர்கள் என்பதும் அனேகருக்குத் தெரியாத விஷயமல்ல.

நமது நாட்டுத் தேசீய ஸ்தாபனமென்று சொல்லிக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கைக்கூலி கொடுப்பதையோ, சோறு போடுவதையோ நிறுத்தி விடுமானால் காங்கிரசின் கட்டளைப்படி சட்டமறுப்புச் செய்யத் தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டு தேசீயத்தின் பெயரால் பெருவாரியாக முன்வர மாட்டார்கள் என்பது சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும். இதற்கு உதாரணமாக சென்ற ஒத்துழையாமை இயக்கம் தோன்றிய காலத்திலும், உப்புச் சட்ட மறுப்பு இயக்கம் தோன்றிய காலத்திலும், காங்கிரஸ் பேரால் ‘தேசீய சேவை’ என்று சொல்லிக் கொண்டு எத்தனை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன் வந்தார்கள் என்பதையும், தற்போது ஆரம்பித்து நடத்தப்பட்டுவரும் சட்ட மறுப்புப் போரில் எவ்வளவு பேர் தேசீயத்தின் பெயரால் தொண்டர்களாக முன் வந்து சட்ட மறுப்புச் செய்திருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் விளங்கும்.

சென்ற ஒத்துழையாமையின் போதும், உப்புச் சட்டமறுப்பின் போதும், அரசாங்கத்தார் கடினமான அடக்கு முறையைக்கைக் கொள்ளாத காரணத்தாலும், காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சட்ட விரோதமானதெனக் கூறி அதன் பணத்தில் கை வைக்காத காரணத்தினாலும் காங்கிரஸ் ஸ்தாபனம் தொண்டர்களுக்குக் கைக்கூலி கொடுக்கவும்,சோறு போடவும் தயாராயிருந்தது. இக் காரணத்தாலேயே ஏராளமான வேலையற்றவர்கள் தேசீயத்தின் பேரால் சட்டமறுப்புச் செய்ய முன் வந்தனர். ஆனால் இப்பொழுது காங்கிரசால் நடத்தப்படும் சட்ட மறுப்பிலோ, முன்போல ஏராளமான தொண்டர்களைக் காணவில்லை. இதற்குக் காரணம் அரசாங்கத்தார் கடுமையான அடக்குமுறையைக் கையாண்டதும், காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சட்ட விரோதமானதென விளம்பரப்படுத்தி அதன் பொக்கிஷத்தைக் கைப்பற்றிக் கொண்டதும், பாமர மக்களிடம் காங்கிரசின் பேரால் பணம் வசூல் செய்வதைத் தடுத்ததுமேயாகும். இவ்வாறு காங்கிரசின் பணமும் போய் பண வருவாய்க்கு இடமில்லாமலும் போனவுடன் அதன் தலைவர்களால் யாருக்கும் கைக்கூலி கொடுக்கவும், சோறு போட்டு வளர்க்கவும் முடியாமற் போய்விட்டது. ஆகவே தேசீயத்தின் பெயரால் முன் வந்து, சட்டமறுப்புச் செய்கின்ற தொண்டர்கள் கூட்டமும் குறைந்து விட்டது. இதனால் தேசீயம் என்று சொல்லப்படுவது பிழைப்பற்றவர்களுக்கு ஒரு கையாயுதமாக இருக் கின்றது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அடுத்தபடியாகத் தேசீயவாதிகளாக விளங்கும் தலைவர்களாகிய பணக்காரர்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்! பணக்காரர்களுக்கு எந்த காலத்திலாகிலும், தமது சுய நன்மையை விட்டுக் கொடுத்து ஏழை மக்களுக்குச் சம உரிமையும், சம சுகமும் அளிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாக முடியுமா? அவர்களுடைய பணத் திமிரும், ஜாதி அகங்காரமும், மதக் கிறுக்கும் ஒழிந்தால் அல்லாமல் அவர்களிடம் சமதர்ம நோக்கமும், அதற்குத் தகுந்த தியாக புத்தியும் தோன்றப் போவதில்லை என்பது உறுதியாகும். இத்தகைய இயல்பையுடைய அவர்கள் தேசீய வேடம் தரித்து ஏழைகளுக்குப் பாடுபடுவதாகப் பாசாங்கு பண்ணுவது எதற்காக என்று ஆலோசித்துப் பாருங்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப் பெற்று, அதன் மூலம் சட்ட சபைத் தேர்தல், ஸ்தல ஸ்தாபனத் தேர்தல் முதலியவைகளில் வெற்றி பெற்று அதிகாரம் வகிப்பதன் வாயிலாகப் பாமர மக்களின் உழைப்பையும், அதன் பயனையும் நிரந்தரமாகக் கொள்ளையடிக்கவா? அல்லவா? என்றுதான் கேட்கிறோம்.

உண்மையாகவே ‘தேசீயம்’ பேசும் பணக்காரத் தலைவர்கள், தியாகஞ் செய்யக் கூடியவர்களாயிருந்தால் இப்பொழுது அவர்கள் எங்கே? அரசாங்கத்தார் கடினமான அடக்குமுறையைக் கையாளாத காலங்களில் தொண்டைவறளத் தேசீயம் பேசியவர்களெல்லாம், கடுமையான அடக்குமுறை ஆரம்பித்தவுடன் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று எங்கோ ஓடி ஒளிந்து போனார்கள்? இத்தகைய தேசீயவாதிகளில் அனேகர் கவர்னர்கள், மந்திரிகள், நிர்வாக சபை அங்கத்தினர்கள் ஆகியவர்களுக்கு அளிக்கும் வரவேற்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், கவர்னர் வீட்டுக் கல்யாணத்தில் மணமக்களுக்குப் பரிசுகள் வழங்கவும் பின் வாங்க வில்லையன்றோ? மற்றுஞ் சிலர் சட்டசபைகளில் உட்கார்ந்து கொண்டு, காங்கிரஸ், காந்தி, கதர், சுயராஜ்யம் முதலிய வார்த்தைகளைக் கலந்து பேசி விடுவதும், அரசாங்கத்தாரின் அடக்கு முறையைப் பற்றியும், தடியடி பிரம்படி முதலியவைகளைப்பற்றியும், பிரமாதமாகக் கேள்விகள் கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவதும் எதற்காக? இவைகளெல்லாம் தங்களைத் தேசீய வாதிகள் என்று பாமர மக்கள் நினைத்துக் கொள்ளவும், அதன் மூலம் அடுத்த எலக்ஷனில் வெற்றி பெறவும் செய்யப்படும் தேசீய தந்திரமா? அல்லவா? என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேசீய வேஷக்காரர்களில் அநேகர் “சட்ட மறுப்புக்கு அநுதாபம் காட்டும் தீர்மானங்கள் எதுவும் ஸ்தல ஸ்தாபனங்களில் நிறைவேற்றக் கூடாது” என்று அரசாங்கத்தாரின் கடுமையான உத்தரவு இருப்பதை அறிந்திருந்தும், பலஸ்தல ஸ்தாபனங்களில் சட்டமறுப்புக்கு அநுதாபம் காட்டும் முறையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களையெல்லாம் அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ளாமல், நிராகரிக்கும்படி உத்திரவிட்டவைகளை அறிந்திருந்தும், “கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்” என்றும், யாராவது சிறைப்பட்டால் அதற்கு அநுதாபங் காட்டுவதாகவும் ஸ்தல ஸ்தாபனக் கூட்டங்களில் தீர்மானங்கள் கொண்டு வருகிறார்களே இது எதற்காக? இதுவும் மறுபடியும் எலக்ஷனில் வெற்றியடைவதற்குச் செய்யப்படும் பிரசாரமா? அல்லவா? என்றுதான் கேட்கிறோம். ஆகவே தேசீயத்தலைவர்கள் என்பவர்களிலும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் பேர்வழிகள் பட்டம் பதவிகளைப் பெறவே இவ்வேஷத்தைத் தரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாக உணரலாம். அன்றியும் அறிவு, திறமை, தியாகம் முதலியவைகளுக்கு மதிப்பில்லாமல் பணத்தையும், ஜாதியையுமே முதன்மையாக மதித்து, தேசீய இயக்கங்களில் தலைமைப் பதவியும், பத்திரிகை விளம்பரமும் அளிக்கப்படுவதும், ஏழைத் தொண்டர்களைப் பற்றிக் கேள்வி முறையில்லாமல் மேற்கூறிய பணக்கார உயர்ந்த சாதித் தலைவர்களைப் பற்றியே சட்ட சபைகளில் கேள்விகள் கேட்டு விளம்பரப்படுத்துவதும், தேசீயத்தின் உண்மையை உணர்வதற்குத் தகுந்த உதாரணமாகும்.

அடுத்தபடியாகத் தேசீயத்தின் பெயரால் நடைபெறும் பத்திரிகை களைப் பாருங்கள்! அவைகள் வெகு ஜாக்கிரதையாக, அரசாங்கத்தாரின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு அகப்பட்டுக் கொள்ளாமல் தலையங்கங்கள் எழுதினாலும், தேசீயத்தின் பெயரால் நடைபெறும் காரியங்களைப் பற்றி, அவை வெகு அற்பமானவையாய் இருந்தாலும் பிரமாதப்படுத்திப் பெரிய பெரிய எழுத்துக்களால் தலைப் பெயர் கொடுத்துப் பிரசுரிக்கின்றன. உண்மை யிலேயே சட்ட மறுப்பு இயக்கத்தை ஆதரிக்காத பத்திரிகைகளும், சட்ட மறுப்பு இயக்கத்தை எதிர்க்கும் பத்திரிகைகளுங் கூட இவ்வாறு செய்கின்றனவே எதற்காக? தேசீயப் பத்திரிகை என்று பெயர் பெறுவதின் மூலமும், தேசீய விஷயங்களையே அதிகமாக வெளியிடுகின்றன என்று தேசீய மோகங் கொண்டிருக்கும் மக்களால் நம்பப்படுவதன் மூலமும் பத்திரிகைகள் அதிகமாக விற்பனையாகிப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறென்ன? ஆகவே தேசீயம் என்பது பத்திரிகைகளுக்கு பிழைப்பைக் கொடுக்கும் ஒரு கருவியாகி விட்டது என்று உணரலாம்.

இன்னும், இந்தத் தேசீயம் என்பதன் பெயரால், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள், தங்கள் செல்வாக்கும், அதிகாரமும் எப்பொழுதும் குறையாம லிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அரசியல் சீர்திருத்தத்தில், கொடுமைப்படுத்தப்பட்டு, தாழ்த்தப் பட்டிருக்கும் வகுப்பினருக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதை மறுத்து வருவதையும், இதைத் தேசீயத்தின் பேரால் உயர்ந்த வகுப்பினர் என்பவர்களாலேயே நடத்தப்படும் பத்திரிகைகளெல்லாம் ஆதரித்து வருவதும் தெரியாத விஷயமல்ல.

மற்றும் மதம், கடவுள், வேதம், புராணம், வருணாச்சிரம தர்மம் முதலியவைகளில் நம்பிக்கை கொண்ட திருவாளர்கள் காந்தி, மாளவியா போன்ற வைதீகர்கள் தேசீயத்தின் பெயரால் மீண்டும் மக்களுடைய மனத்தில் மதம், கடவுள், வேதம், புராணம், வருணாச்சிரம தருமம் முதலியவைகளைப் பற்றிய மூட நம்பிக்கைகள் உண்டாகும்படி செய்து வருகின்றனர் என்பதை யும், இவ்வாறு மக்களுடைய பகுத்தறிவை அடக்கி ,அவர்களை என்றும் சுதந்தரமற்ற அடிமைகளாகவே வைத்திருக்கக் காரணமாக இருக்கும் வைதீகப் பிரசாரத்திற்கும் தேசீயமே கருவியாக இருந்து வருகின்றதென் பதையும் யார் மறுக்க முடியும்? மக்களை வைதீகத்தில் திருப்ப தேசீயம் உதவி யாக இருக்கின்ற காரணத்தினாலேயே, வருணாச்சிரம தருமத்தில் முரட்டுப் பிடிவாதமுடைய “மடி சஞ்சி”களில் அனேகரும் தேசீய வேடந்தரித்து நடிக்கின்றார்கள் என்பதும் உண்மையான விஷயமாகும்.

ஆகவே நாம் இது வரையிலும் “தேசீயம்” என்பதைப் பற்றிச் சொல்லி வந்த விஷயங்களைக் கொண்டு அதன் பித்தலாட்டங்களை உணரலாம். இவ்வாறு நாட்டு மக்களின் கஷ்டங்களை நீக்குவதற்கு ஒரு வழியிலும் உதவி செய்யாமல், அவர்களை ஏமாற்றி இன்னும் கஷ்ட நிலைமையிலேயே வைத்திருக்க உதவியாக இருக்கும் இவ்வார்த்தையைக் கொண்டுதான் இன்று பிழைப்பற்றவர்களும், பணந் திரட்டும் தந்திரசாலிகளும், பதவி வேட்டைக்காரர்களும், தங்கள், தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆதலால் உண்மையான சமதர்ம நோக்க முடைய எந்த வாலிபர்களும், முதியவர்களும், தேசீயத்தின் பெயரால் நடை பெறும் கிளர்ச்சிகளையும், காரியங்களையும் கண்டு ஏமாறாமல் இருப்பதே நன்மையாகும்.

இதுவரையிலும் இந்த “தேசீயம்”என்ற வார்த்தையின் பேரால் நமது நாட்டில் நடந்த கிளர்ச்சிகளாலும், காரியங்களாலும் ஏழை மக்கள் என்ன நன்மையைப் பெற்றார்கள்? மேலும் மேலும் பல வகையில் ஏழை மக்களுக் குக் கஷ்டமும், நஷ்டமும் பொதுவாக தேசத்தின் செல்வத்துக்கும், வியாபாரத்துக்கும், அனேக மக்களின் உயிருக்கும் துன்பமும் சேதமும் உண்டானதைத் தவிர வேறு கடுகளவு நன்மையாவது கிடைத்ததுண்டா? என்று யோசித்துப் பார்ப்பவர்களுக்குத் ‘தேசீயத்தின்’ பித்தலாட்டம் விளங்காமற் போகாது.

ஆதலால், நமது நாட்டு ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நன்மை உண்டாக வேண்டுமானால் - நமது நாட்டில் வேரூன்றி இருக்கும் சாதி மத பேதங்கள் ஒழிந்து, எல்லா மக்களும் சம சுதந்திரம் அடையக் கூடிய சந்தர்ப்பத்தை உண்டாக்க வேண்டுமானால் எப்படி “வைதீகம்” என்னும் பழய பாசிபிடித்த விஷநீர்க் குளத்தை முழுதும் மண்ணைப் போட்டு மூட வேண்டுமோ அதைப்போலவே இந்தத் தேசீயம் என்னும் பித்தலாட்டத்தையும் அடியோடு ஒழித்தாக வேண்டும். எப்படி வைதீகத்தில் நம்பிக்கையுடைய மக்கள் பகுத்தறிவும், நாகரீகமும் அடையாமல் புரோகிதர் வலையில் அகப்பட்டுக் கிடந்து அழிய வேண்டுமோ அதுபோலவே தேசீயத்தில் மக்களுக்கு நம்பிக்கையும் பைத்தியமும் இருக்கின்றவரையிலும், சுகமும் சமத்துவமும் பெற முடியாமல் “தேசீயத் தலைவர்கள்” என்பவர்களின் வலையிற் சிக்கிக் கஷ்டமும் நஷ்டமும் அடைய வேண்டியதுதான். “தலை வலி போய்த் திருகு வலி வந்தது” என்பது போலவே மக்களுக்கு வைதீகத் தில் உள்ள மூடநம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் குறைந்து சிறிது பகுத்தறிவு உதயமாகி வருகிற இக்காலத்தில் இந்தப் பாழும் “தேசீயம்” என்பது தோன்றி அவர்களைப் பிணித்து மறுபடியும் மூடநம்பிக்கையில் அழுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை.

ஆகையால் இச்சமயத்தில் ஜன சமூக ஊழியர்கள் அனைவரும் தேசீயமென்பதன் பித்தலாட்டங்களை வெளியாக்கிப் பொது ஜனங்களை ஏமாறாமலிருக்கச் செய்ய முன்வர வேண்டுவதே உண்மையான ஜன சமூக ஊழியமாகும் என்பதை உணர வேண்டுகிறோம். வைதீகத்தைப் போலக் கொடியதான இந்த தேசீயத்தை ஒழிக்க எவருடைய புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் எதிர்பாராமல் தைரியத்துடன் முன் வருவதே ஒவ்வொரு பகுத்தறிவுடைய வாலிபர்களின் கடமையாகும் என்று கடைசியாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 13.03.1932)