‘சுதேசமித்ரன்’ ‘தமிழ் நாடு’ ‘இந்து’ அபிப்பிராயம்

தற்கால காங்கிரஸ் நிலமையை பற்றி “சுதேசமித்திரன்” பத்திரிகையில் நாளது மாதம் 11-ந் தேதி தலையங்கத்தில் காணப்படும் சில குறிப்புகளாவன:-

“இந்தியாவில் தற்கால நிலையில் சீர்திருத்தங்களுக்காகப் போராடி வற்புறுத்தும் சக்திகள் குறைந்து கொண்டிருக்கின்றன. சீர்திருத்தங்களுக்காக வெகுவாக பிரயாசைப்பட்ட தேசீய உணர்ச்சியானது தலைவரிழந்து சக்தி குறைந்து வருகிறது”.

“இந்நிலையை எவ்விதம் பரிகரிப்பது? சோர்வடைந்திருக்கும் ராஜிய கிளர்ச்சிக்கு எவ்விதம் புத்துயிரளிப்பது”.

“காங்கிரஸ் ஸ்தாபனமானது, தனது சக்திகளை, பல துறைகளில், பல பிரச்சனைகளில் திருப்பி வலுவற்றதாகச் செய்துக் கொள்ளக்கூடாது. இதர பிரச்சனைகள் சமுதாய வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானதாயினும், இந்த சமயத்தில் ராஜிய பிரச்சனையே முதல் பெற வேண்டும். சட்ட மறுப்பு கொள்கை வெற்றி பெறுவதற்கு, ஆதியில் எவ்வளவு சௌகரியங்களிருந்த போதிலும் தற்காலம் அது பயன்படாதென்றோ அல்லது அதற்குத் தேவையான உணர்ச்சி தேசத்தில் இல்லையென்றோ அவர்கள் கருதுவார்களானால், உடனே தேசத்தின் நலத்தை உத்தேசித்து தங்கள் திட்டத்தை திருத்தி அமைத்து விட வேண்டும்”.

என்ற குறிப்புகள் தலையங்கத்தில் காணப்படுகின்றன.periyar 90sஆகவே, இதன் உண்மைத் தத்துவம் என்ன என்பதை வாசகர்கள் ஊகித்து பார்க்க வேண்டுமாய் விரும்புகின்றோம். அரசியல் கிளர்ச்சி தோல்வி யடைந்து விட்டதென்றும், மற்றும் தலைவர்கள் என்பவர்கள் தீண்டாமை, விலக்கு, பரதேசி மறியல், சுதேசிப் பிரசாரம் மற்றும் தபாலாபீஸ் பகிஷ்காரம் முதலிய பல சில்லரை விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி தொண்டர்களும், தலைவர்கள் என்கின்றவர்கள் தங்கள் தங்களிஷ்டப்படி தலைவிரி கோலமாய் திரிந்ததின் பலனாய் கிளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது, வலு குறைந்து விட்டது, வெற்றிபெற போதியதாக இல்லை. தேசம் இதுசமயம், போதிய உணர்ச்சி பெற்றதாயில்லை என்றும், ஆதலால் தீண்டாமை முதலிய விஷயங்களையும் மறியல், பகிஷ்காரம் முதலிய பல விஷயங்களையும் விட்டு விட்டு குறிப்பாக, சிறப்பாக ஆலய பிரவேச விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு ஒரு புதிய திட்டத்தை அதாவது சர்க்காரோடு ஒத்துழைத்து ஏதாவது ஒரு வழியில் காங்கிரஸ் தோல்வியுறவில்லை யென்றும் வெற்றி பெற்றதென்றும் பாமர மக்கள் நினைக்கும் படியாக ஒரு தந்திரம் செய்ய வேண்டும் என்று சூசனைக் காட்டுவதாகவே இருக்கிறது.

இந்த அபிப்பிராயம் சுதேசமித்திரனுக்கு மாத்திரம் இப்பொழுது தோன்றி இருப்பதாக அதைக் குற்றம் கூறுவதற்கில்லை. ஏனெனில் மற்றொரு பத்திரிகையாகிய “தமிழ்நாடு” பத்திரிகையும் அதே பிப்பிரவரி µ 11-தேதி தனது தலையங்கத்தில் காங்கிரசின் வீழ்ச்சியைப் பற்றி சிறிது சூசனைக் காட்டியிருக்கிறது. என்னவென்றால்.

“காங்கிரஸ் இயக்கத்தின் வேகம் குன்றி விட்டதால் தோழர் காந்தி தீண்டாமை விலக்குப்போர் தொடுத்திருக்கிறார்” என்று எழுதியிருக்கிறது.

இந்த இரண்டு பத்திரிகைக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால் சுதேசமித்திரன் பத்திரிகையானது தோழர் காந்தி அவர்கள் “தீண்டாமை” விலக்கு கோவில் பிரவேசம் முதலிய வேலைகளில் பிரவேசித்ததால் காங்கிரஸ் ஸ்தம்பித்துப் போய் விட்டதென்று சொல்லுகிறது.

“தமிழ்நாடு” பத்திரிகையோ அந்தப்படி சொல்லாமல் காங்கிரஸ் இயக்கம் ஸ்தம்பித்துப் போய் விட்டதால் தோழர் காந்தி “தீண்டாமை விலக்கு” வேலையைத் தொடங்கி இருக்கிறார் என்றெழுதி இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் இரண்டு தேசீய பத்திரிகைகளும் காங்கிரஸ் ஸ்தம்பித்துப் போய் விட்டதென்பதை கண்ணியமாக ஒப்புக்கொள்ளுகின்றன.

ஹிந்து

இதோடு “ஹிந்து” பத்திரிகையின் யோக்கியதையும் சற்று கவனிப்போம். அதாவது “இந்து” பத்திரிகையின் லண்டன் நிருபர் எழுதிய கடிதமொன்று பிப்பிரவரி µ 14-ந்தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் மொழிபெயர்த்திருப்பதாவது.

“சட்டத்தினாலும் இராணுவத்தினாலும் ஏராளமான பலத்தையுடைய இந்திய கவர்மெண்டானது ஒற்றுமையற்றதும் சரியான ஒரு தலைவரற்றதும் ஆன காங்கிரஸிற்கு தோற்றுப் போவதென்பது, லேசான காரியமல்ல”.

“ராஜிய இயக்கம் சரியாக நடத்தப்படவில்லை யென்று அநேக ஜனங்கள் அபிப்பிராயப் பட்டிருக்கின்றார்கள். சென்ற சில வருஷங்களாக (காங்கிரஸ்) செய்து வந்திருப்பது கண் மூடித்தனமாய் எதிரில் முட்டிக் கொள்ளுவது போலிருப்பதால், அது இந்திய கவர்மெண்டை அசைக்க முடியவில்லை”.

“மகாத்மா காந்தி உலக ஜனங்களின் மதிப்பைப் பெற்றிருக்கிறார் என்றாலும் இக்கால ராஜியத் துறையில் வெற்றி பெற அவர் அருகதையற்றவர்”.

“சட்ட மறுப்பியக்கம் பிரமாதமான பலனைத் தந்துவிடுமென்று பல தேசியவாதிகள் அளவுக்கு மீறி நம்பினது சிரிப்பாக விருக்கிறது”.

“இப்படி வீண் நம்பிக்கை கொள்ளவேண்டாமென்று எங்களில் சிலர் அப்பொழுதே எச்சரிக்கை செய்தோம். நாங்கள் நினைத்தது சரியென்று இப்பொழுது ஏற்பட்டு விட்டது. இந்தியாவின் கட்சி நியாயமானதென்ற எங்களு டைய நம்பிக்கை குறையவில்லை. ஆனால் இந்தியாவின் இலட்சியத்தை அது குறுக்கு வழியில் போய்ப் பெற்று விடாதென்று தெரிந்து கொள்ள விசேஷ சாமர்த்தியம் தேவையில்லை”.

“இந்தியாவின் கோட்டையைப் பிடிக்கப் பெறும் கூச்சல் மாத்திரம் போதா தென்பது, அனுபவத்தில் தெரிந்து விட்டது. ஆர்ப்பாட்டங்கள் மறியல்கள், பகிஷ்காரங்கள் ஆகியவைகள் வெற்றி பெற்றுவிட முடியுமானால் இதற்குள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்”.

“சட்டசபைகளுக்கு வெளியில் தேசீயவாதிகள் மூடத்தனமாக வேலை செய்து வந்திருப்பதுபோல், சட்டசபைகளில் அவர்கள் சரியான வேலை செய்து வந்திருந்தால் அடக்குமுறைக்குக் கையாளாகச் சட்டசபைகளை உபயோகித்திருக்க முடியாது. காங்கிரஸ் சேர்ந்து சட்டசபையில் கவர்ன்மெண்டை நெருக்கி வந்திருப்பார்களாயின் ஒத்துழையாமைக் காட்டில் அவர்கள் சஞ்சாரம் செய்து வந்ததில் அடைந்துள்ளதைக் காட்டிலும் அதிகப் பலனை அடைந்திருப்பார்கள்”.

“இப்போது மகாத்மா தீண்டாமையை ஒழிக்க முனைந்திருப்பது போல் ராஜீயத் துறையில் முனைந்திருக்கவில்லை என்று தெரிகின்றது. இந்த மத சம்பந்தமான பிரச்சனையை கிளப்பிவிட்டதால் ராஜீயப் பிரச்சனை சிறிது அசட்டைச் செய்யப்பட்டு விட்டதாக இங்கு சிலர் நினைக்கின்றார்கள்” என்று எழுதி இருக்கிறது.

ஆகவே “சுதேசமித்திரன்”, “தமிழ்நாடு”, “இந்து” ஆகிய மூன்று “தேசீய” பத்திரிகைகளும் உள்ளதை ஒரு அளவுக்கு ஒப்புக் கொண்டன. ஆனால் “சுதேசமித்திரன்” “இந்து” ஆகிய இரண்டு பார்ப்பனத் தேசீயப் பத்திரிகைகளும் காந்தியை தீண்டாமை வேலையை விட்டு விட்டு சர்க்காரோடு ஒத்துழைக்கும்படி ஜாடை காட்டுகின்றன. “தமிழ் நாடு” பத்திரிகை வருணாச்சிரமத்தையும் ஜாதிப்பிரிவையும் ஒழிக்க வேலை செய்யும்படி சொல்லுகின்றது. ஆனால் தொண்டர்கள், தேச பக்தர்கள், தேசியவாதிகள் இதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ‘அரசியலுக்கு வேறு வேலை வேண்டாமா?’ எலக்ஷன்களில் வெற்றி பெறுவதற்கு வேறு தந்திரங்கள் வேண்டாமா? சிலருக்கு சாப்பாட்டிற்கே வேறு வழி வேண்டாமா? ஆகையால் மேல்கண்ட பத்திரிகைகள் இதற்கு ஒரு வழி காட்டுமா என்று கேழ்ப்பார்கள்.

(குடி அரசு - கட்டுரை - 19.02.1933)

Pin It