திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் “கடைசிப் போரினால்” இந்தியாவுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப் பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ரூஜுவு ஏற்பட்டு விட்டது.
அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்திப் போரில் மிக்க அக்கரை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.
உப்பு சத்தியாக்கிரகத்திற்கு பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின் வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரால் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.
உப்பு சத்தியாக் கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதீகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்வித கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும் கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.
ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசீய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்கு சரியான பதிலாகும். ஆனாலும் இது விஷயத்தில் இது உண்மையாயிருக்குமானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.
கண்டிக்கின்றோ மென்பது போலி தேசீய வீரர்களைப்போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
உணராமல் சாரதா சட்டத்தை சர்க்கார் திருத்துவார்களேயானால் வைதீகக் கூச்சலுக்குப் பயப்படுவார்களேயானால் அது கடைசிப் போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதீகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக் கொள்ள மாட்டோம். இது மாத்திரமல்லாமல் கடைசிப் போர் முடிவு பெறுவதற்குள் இது போல் இன்னம் அனேகம் கெடுதிகள் ஏற்படப் போவதையும் எதிர்பார்த்து தான் ஆக வேண்டும்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.04.1930)