நமது நாட்டு அரசாங்கத்தாரை தனிப்பட்ட முறையில் பார்த்தோ மேயானால் நமது நலத்தைப் பற்றிய பொறுப்பு ஒரு சிறிதும் அற்றவர்கள் என்பதையும் அவர்கள் தங்கள் ஜாதி, தங்கள் நாடு ஆகியவைகளின் நன்மையையே பெரிதும் கவனித்து அதற்காகவே இந்திய நாட்டின் ஆட்சி நடத்தும் உரிமையை அடைந்து ஆட்சி புரிந்து வருகின்றார்கள் என்பதையும் நாம் வெகு நாளாய் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம் என்பதோடு அந்த ஆட்சியானது அதாவது பிரிட்டிஷ் ஆட்சியானது இந்தியாவில் அன்னிய ஆட்சிக்கு முன் வெகு காலமாய் இருந்து வந்ததாக சரித்திரங்களில் காணப்படும் இந்திய மன்னர்களின் ஆட்சியைவிட - இந்திய “தெய்வ அவதார” ஆட்சிகளைவிட எவ்வளவோ பங்கு மேலானதும் மனிதத் தன்மை பொருந்தியதாகுமென்பதையும் அவ்வப்போது எடுத்துக் காட்டி ஆதாரங்களுடன் மெய்பித்து வந்திருக்கின்றோம்.
மேலும் இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் யோக்கியமான ஆட்சிமுறைகள் என்பவைகள் எல்லாம் இன்றைய தினம் நம்மால் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று சொல்லப்படும்படியான மனுதர்ம ( பார்ப்பன ஆதிக்க ) ஆட்சிமுறையாகத் தானிருந்து வந்ததாகக் காணப்படுகின்றனவே - சொல்லப்படுகின்றனவே தவிர மனிதத் தன்மை ஆட்சி முறை - சமதர்ம ஆட்சி முறை ஒரு நாளும் இருந்ததாக எங்கும் எதிலும் காணப்படவே யில்லை யென்றும் உறுதியாய்ச் சொல்லுகின்றோம்.
இன்னும் பார்க்கப் போனால் (சனாதன தர்மத்தை) பழைய தர்மத்தை அனுசரித்து செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டு வரும் இன்றைய இந்திய கிரிமினல் சட்டமும், இந்து சிவில் லா சட்டமும் கூட மனுதர்ம (பார்ப்பன ஆதிக்க முறையை) சாஸ்திரத்தை அனுசரித்திருக்கின்றதையும் அவை மனித தர்மத்தை - சமதர்மத்தை சிறிதும் லட்சியம் செய்யப்படாமல் இருந்து வருவதையும் பார்த்தால் சாதாரணமாக யாவருக்கும் நாம் மேல் எடுத்துக் காட்டியதன் தத்துவம் விளங்கும்.
வெள்ளைக்கார ஆட்சி கூட வெள்ளைக்கார நாட்டில் இரண்டொன்று தவிர மற்றபடி அநேகமாய் மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட தாயிருந்தாலும் அவர்களால் நடத்தப்படும் இந்திய ஆட்சியானது மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதாயில்லை என்பதையும் நாம் சிறிதும் தயங்காமல் சொல்லுவோம். ஆனால் இந்தப்படியான ஆட்சிக் கொடுமை அதாவது மனித தர்மத்திற்கு விரோதமான - சமதர்மமற்ற ஆட்சிக் கொடுமைக்கு வெள்ளைக்காரர்களே பொறுப்பாளிகள் அல்லவென்பதையும் நாம் எங்கும் தைரியமாய்ச் சொல்லத் தயாராயிருக்கின்றோம்.
ஏனெனில் வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டில் தங்களது ஆட்சி என்றும் நிலைத்திருக்கவும், இந்த நாட்டுச் செல்வத்தைத் தாராளமாய் தங்கள் நாட்டுக்கு கொள்ளை கொண்டு செல்லவும் உத்தேசித்து இந்த நாட்டில் யாருடைய தயவு தங்களுக்கு இருந்தால் தங்களது மேற்படி எண்ணம் தாராளமாய் நிறைவேறுமோ அவர்களது தயவை பூரணமாய் சம்பாதிக்க வேண்டியே அவர்கள் மனித தர்ம ஆட்சி என்பதை அடியோடு மறந்து முழு வதையும் கைவிட்டு மனுதர்மப்படி (பார்ப்பன ஆதிக்கத்திற்கு தகுந்தபடி) ஆட்சி முறையை வகுத்து நடத்த வேண்டியவர்களானார்கள். இன்றைய தினமும் இந்த நாட்டின் ஆட்சிமுறை மனித தர்மப்படி நடக்க வேண்டுமானால் மனுதர்ம ஆட்சியை அடியோடு ஒழிப்பதற்கு இந்திய மக்கள் சம்மதப்பட்டால் ஒழிய ஒரு நாளும் இந்த நாட்டில் மனித தர்ம ஆட்சி சாத்தியப்படவே படாது என்பதை தைரியமாய்ச் சொல்லுவோம்.
ஆகவே அந்தப்படி மனுதர்மம் அழிபட பார்ப்பனர்கள் ஒரு நாளும் ஒப்ப மாட்டார்கள் . இந்தப் பார்ப்பனர்களை மீறி வெள்ளைக்காரர் ஏதாவது ஒரு நல்ல ஆட்சி முறையை ஏற்படுத்துவதாயிருந்தால் அவர்களை ஒழிப்பதற்கு நம் பார்ப்பனர்கள் முயலுவார்கள்.
ஆதலால் வெள்ளைக்கார ஆட்சி இந்த நாட்டை விட்டுப் போய் விடுவதாலேயோ அல்லது திரு.காந்தியே ஏக நாயகராக ஏற்பட்டு விடுவதாலேயோ மனித தர்ம ஆட்சியை இந்த நாட்டில் நிலை நிறுத்திவிட முடியும் என்று யாராவது சொல்ல வருவார்களானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை மூடர்களென்றோ அல்லாவிட்டால் மக்களை ஏமாற்றுகின்றதற்காக பேசும் பித்தலாட்டக்காரர்கள் என்றோ தான் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.
இன்னும் தைரியமாயும் வெளிப்படையாயும் சொல்ல வேண்டுமானால் இன்றைய வெள்ளைக்கார ஆக்ஷியோ ஆதிக்கமோ ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்றவர்களில் திரு.காந்தியவர்கள் உள்பட 100க்கு 90 பேர்களின் உள் எண்ணமெல்லாம் மனித தர்ம ஆக்ஷியை இந்த நாட்டில் தலைகாட்டச் செய்யாமல் செய்யவும் மனுதர்ம ஆக்ஷியை (இராம ராஜ்யத்தை) நிலை நிறுத்தவும் செய்யப்படும் முயற்சியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதை பாமர மக்கள் சரிவர உணராமல் மோசம் போய்க் கொண்டிருப்பதனால் இந்தநிலை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. உதாரணமாக மனுதர்மத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்ட இந்துமத பரிபாலன சட்டமும் தேவதாசிகள் ஒழிப்புச் சட்டமும் குழந்தை மணத் தடுப்பு (சாரதா) சட்டமும் செய்யப் புறப்பட்ட காலத்தில் அதற்கு எதிராய் ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்புகள் எல்லாம் இச்சட்டங்கள் செய்யப்படுவதே வெள்ளைக்கார ஆக்ஷியின் கொடுமை என்பதாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதும் மக்கள் அதை நம்பி அச்சட்டங்களுக்கு எதிராய் இருந்ததும் கடைசியாக “சர்க்கார் தாசர்கள்” “தேசத் துரோகிகள்” அரசாங்கத்தார் (வெள்ளைக்காரர்கள்) ஆகியவர்கள் தயவில் இச்சட்டங்கள் நிறைவேற்ற முடிந்ததும், முடிந்த பிறகும் சரியானபடி அமுலில் இல்லாததுமே போதிய காரணங்களாகும்.
மேலும் மற்றொரு உதாரணமும் அதாவது யாவருக்கும் சுலபத்தில் விளங்கும்படியானதாக எடுத்துக் காட்ட வேண்டுமானால் சமீப கராச்சி காங்கிரசில் “பூரண சுயராஜிய” கவர்ன்மெண்டில் திரு.காந்தி கூட்டத்தார் செய்யப்படப் போகும் ஆக்ஷியின் தன்மைகள் எப்படி இருக்கும் என்று எடுத்துக்காட்டி இருக்கும் 20 பிரிவுகளிலும் மற்றும் அதன் பல உட்பிரிவுகளிலும், சற்றேறக்குறைய 3, 4 பிரிவுகள் தவிர மற்றப் பிரிவுகளை இந்நாட்டில் நிறைவேற்றி வைக்க ஆnக்ஷபணையாய் - முட்டுக் கட்டையாய் இருப்பவர்கள் மனுதர்ம ஆக்ஷியைச் சேர்ந்த இந்தியர்களா, அல்லாதபடி அரசாங்கத்தார்களா? என்று யோசித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம்.
ஆகவே அன்னியன் ஆக்ஷியில் இருந்து கொண்டு இருந்தாலும் நாம் செய்யக்கூடிய சௌகரியம் உள்ளவைகளை செய்து கொள்ளாமலும் மற்றவர்கள் செய்ய வந்தாலும் அதைத் தடுத்துக் கொண்டும் இருக்கின்ற மக்கள் தாங்களே ஆக்ஷி நடத்தக்கூடிய எஜமானர்களாகி விட்டால் மற்றவர்கள் சமஉரிமை பெறவோ மனித தர்மம் நடைபெறவோ தகுந்த தான ஆக்ஷியை நடத்த சம்மதிப்பார்களா என்பது அறிஞர்கள் கவனிக்கத் தக்கதாகும்.
ஆகவே இந்தியாவுக்கு ஏதாவது அரசியல் மாறுதல் ஏற்படுத்த வேண்டுமானால் அதில் மனுதர்மக் கொள்கைகள் - வர்ணாச்சிரம கொள்கைகள் - பார்ப்பன ஆதிக்க கொள்கைகள் ஆகியவைகள் அல்லாத ஆக்ஷி ஏதாவது ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை சிறிதாவது இருந்தால்தான் இந்த ஆக்ஷியை மாற்ற முயற்சிக்கலாமே ஒழிய மற்றபடி செய்யப்படும் அரசியல் முயற்சிகள் பாமர மக்களின் தற்கொலை முயற்சிகளே யாகும் என்பதை ஒவ்வொரு மனிததர்மவாதியும் உணர வேண்டுமாய் விரும்புகின்றோம். இந்த இரகசியத்தை நமது மக்களில் பலர் அறிந்திருந்தும் கூட அவர்களில் பலரில் தற்கால நிலைமையானது மனு தர்மத்தை ஸ்தாபிக்கும் அரசியல் முயற்சியில் கலந்து கொள்ளவே தூண்டுகின்றது.
தற்கால நிலைமை என்றது என்னவென்றால், நமது பார்ப்பனர்கள் அதாவது சரீரப்பிரயாசைப்படாமல் சோம்பேரியாய் இருந்து காலம் கழிப்பதில் அநுபவப்பட்டவர்கள் - நமது நாட்டை அன்னியர்களுக்கு காட்டிக் கொடுத்து தங்களது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் வெகுகாலமாய் இருந்து வருபவர்கள் - பல உத்தியோகங்களையும் அவற்றிற்கு பெரும் பெரும் சம்பளங்களையும் மற்றும் பல சௌகரியங்களையும் அடையத் தக்கதான திட்டங்களை ஏற்படுத்தி அதை அனுபவிப்பதே தேசீயத் தொண்டு என்றும், மக்களை நம்பச் செய்து அதனாலேயே தேசபக்தர்கள் கடமை யென்றும், வெகுகாலமாகவே அனுபவத்தில் கொண்டு வந்து விட்டதால் எல்லோரும் சோம்பேரிப் பிழைப்பை விரும்பும் தேசபக்தர்கள் தேசீய வாதியாக முயற்சிக்க வேண்டியவர்களாகி விட்டார்கள்.
இந்த நிலையில் உள்ள நம் நாட்டில் இப்போது வரவர இந்த மாதிரியான தேச பக்தர்கள் - தேசீயவாதிகள் மற்ற வகுப்பிலும் அதிகரித்து விட்டார்கள். ஏனெனில் இப்போது கொஞ்ச காலமாக “வகுப்பு வாதங்கள்” ஏற்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும் தேசபக்தர்களும் தேசீய வாதிகளும் விகிதாசாரம் ஆவதற்கு புறப்பட்டு விட்டதால் சிறுவகுப்பாய் இருந்து பெரும்பங்கு பெற்ற “தேசீயவாதிகளுக்கும்,” “தேச பக்தர்களுக்கும்” தகுந்த அளவு “தேசீய வாதம்” செய்யவும் “தேசபக்தி” காட்டவும் இடமில்லாமல் போய்விட்டது. அன்றியும் தேசீயவாதிகளையும், தேசபக்தர்களையும் உற்பத்தி செய்யும் தொழில்சாலைகளாகிய பள்ளிக் கூடங்கள் மேலும் மேலும் அதிகமான “தேசீயவாதிகளையும்” “தேச பக்தர்களையும்” உற்பத்தி செய்து கொண்டு வரும் காரணத்தால் ஏற்கனவே இருந்து வந்த நியாயவாதி வேலைகளும், மோக்ஷவாதி வேலைகளும், தெய்வபக்தி வேலைகளும் இவர்களுக்கு போதுமானதல்லாமல் போய்விட்டதாலும் தேசீயவாதிகளுக்கு உடலில் வேலை செய்து பிழைப்பது அவமானம் என்று கருதும்படியான அளவுக்கு அவர்கள் சரீரத்தில் பலக்குறைவும் மனதில் சோம்பேரித்தனமும் பேராசையும் ஏற்பட்டு விட்டதால் இந்த மாதிரி தேசீயவாதி வேலைகளையும், தேசபக்த வேலை களையும் இவர்களில் ஒவ்வொரு நபரும் கைகொள்ள வேண்டியதாய் நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.
ஆகவே இந்த தேசீய வாதிகளுக்கும் தேசபக்தர்களுக்கும் உடலில் பாடுபடக்கூடிய ஒரு சக்தியோ, அல்லது பாடுபட்டு சாப்பிடுவது அவமானமல்ல என்கின்ற ஒரு எண்ணமோ, சோம்பேரியாக இருந்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பது அவமானம் என்கின்ற ஒரு உணர்ச்சியோ ஏற்படும்வரை இந்த தேசத்தில் ஏதாவது ஒரு வேஷத்தில் தேசீயக் கிளர்ச்சி என்பது இருந்து கொண்டு அநேக “தேசபக்தர்களையும், தேசீயவாதிகளையும்” ஆதரித்துக் கொண்டுதான் இருக்கும். இப்படிப்பட்ட கிளர்ச்சிகளுக்கு “மகாத்மா காந்தி” என்கின்ற ஒரு “அவதார புருஷரே” தான் வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. உதாரணமாக யார் மந்திரியாக வந்தாலும் வரவேற்க ஒரு கூட்டம் எங்கும் இருப்பது போல யார் தலைவராக வந்தாலும் பின்பற்றி “தேச பக்தியை” காட்டி தேசீயவாதிகளாவதற்கு ஒரு கூட்டம் காத்துக்கொண்டுதான் இருக்கும்.
ஆகவே இந்த அரசாங்கத்தினால் இந்த நாட்டின் தேசீயக் கிளர்ச்சி என்பதை சுலபத்தில் இனி நிறுத்திவிட முடியாது என்று தைரியமாய்ச் சொல்லுவோம். அந்தப்படி நிறுத்துவதும் இந்த மாதிரி ஆக்ஷிக்கு நன்மை அல்ல என்றும் சொல்லுவோம். நல்ல எண்ணம் கொண்ட அரசாங்கம் இந்நாட்டு நன்மையை உத்தேசித்து இவ்வித கிளர்ச்சிகளை நிறுத்த ஆசைப் பட்டால் முதலாவதாக கல்விச் சாலைகளை சோம்பேரியாக்கி தேசீயவாதியாக வேண்டிய நிர்பந்ததில் வைக்கும் படிப்பைக் கொடுக்காமலும் அதாவது தேசத்தைக் காட்டிக் கொடுத்தும் மக்களை ஏமாற்றி சோம்பேரியாய் இருந்து பிழைப்பதற்கு மட்டும் தகுதியான படிப்பாகிய “மேல் படிப்பைக்” (Higher Education) கொடுக்காமல் 3வது பாரத்தோடேயே பிள்ளைகளின் புஸ்தகப் படிப்பை நிறுத்தி அவர்களுக்கு சிறுவயதிலேயே பாடுபட்டுச் சாப்பிடும்படியான சரீர வலிமையையும், மன வலிமையையும் கொடுக்கும்படியானதுமான கல்வியைக் கொடுத்து வரவேண்டும்.
பிள்ளைகள் பள்ளியை விட்டு நின்றவுடன் தொழில் செய்யும்படியான தொழில் சாலைகளையும் விவசாயங்களையும் ஏராளமாய் சர்க்கார் தரப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த மாதிரி செய்தால் ஒழிய இன்றைய தேசபக்தியும், தேசீய வாதமும் இந்த நாட்டில் இனி ஒரு நாளும் குறைவுபடவே படாது.
இப்போதே பதினாயிரக்கணக்கான வாலிபர்கள் சோம்பேரி மனப்பான்மையுடன் ஆகாயக் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு கஞ்சிக்கு வகையில்லாமல் தங்கள் பெற்றோர்களால் படிக்க வைக்க ஏற்பட்ட செலவினால் குடும்பப் பொருள்களை இழந்தும், சிலர் கடன்களுடனும் திரிந்து கொண்டும் இருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் வயிற்றுப் பசிக் கொடுமை தீர வேண்டுமானால் தேசீயவாதி என்றோ, தேச பக்தர் என்றோ சொல்லிக் கொண்டு ஏதாவது ஒரு கிளர்ச்சியில் சேர்ந்து வயிறு வளர்ப்பதை விட வேறு என்ன வழியிருக்கின்றது? என்று அரசாங்கத்தாரை நாம் கேட்கின்றோம்.
இந்த தேசபக்தியும் தேசியவாதமும் அரசாங்கத்தாரை ஒன்றும் செய்து விட முடியாது என்கின்ற நம்பிக்கையுடன் அரசாங்கம் தைரியமாயிருந்தாலும் “சமாதானமாய் ராஜ பக்தியுடன் வாழும் குடி மக்களுக்கு” அதாவது பணக்காரர்களுக்கும் அரசியல் மூலம் பதவி பட்டம், பணம் பெற நினைத்துக் கொண்டிருக்கும் வக்கீல்கள் முதலியவர்களுக்கும், பெரிய விவசாயிகளுக்கும் எவ்வளவு தொல்லை விளைவித்து வருகின்றது, விளைவிக்கப் போகின்றது என்பதை அரசாங்கத்தார் உணர வேண்டியது முக்கிய கடமையாகும்.
சமீபத்தில் காலம் சென்ற சட்டமறுப்புக் கிளர்ச்சி இன்னும் தொடர்ந்து நடப்பதற்குப் பணமும், இன்னமும் தொடர்ந்து ஜெயிலுக்குப் போய் “மாபெரும் தியாகிகள்” ஆவதற்கு தேசியவாதிகளும், தேசபக்தர்களும் தாராளமாய் இருப்பதாக வீம்பு பேசிக் கொண்டிருந்தும் அது திடீரென்று நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன? சர்க்காருக்கு ஏற்பட்ட- ( இல்லை ) ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட கஷ்டங்களைவிட பொது ஜனங்களுக்கு (செல்வவான்களுக்கு - முதலாளிகளுக்கு) உண்மையில் ஏற்பட்ட கஷ்டமும் நெருக்கடியுமே தலைவர்களை மிரட்டி நிறுத்தச் செய்து விட்டது.
ஆகவே இனி எவ்வித சீர்திருத்தம் வந்தாலும் (காரியமான சீர்திருத்தம் ஒன்றுமே வரப் போவதில்லை) அச்சீர்திருத்தத்தில் இந்த மாதிரியாக மக்கள் தேசீயவாதிகளாகவும் தேசபக்தர்களாகவும் ஆய்த்தீர வேண்டிய கஷ்டத்திற்கு இடமில்லாமல் செய்தாலொழிய “தேசிய கிளர்ச்சி” ஒருக் காலமும் இந்த நாட்டில் இனி நிறுத்தப்படப் போவதில்லை. ஏனெனில் இக் கிளர்ச்சி ஒன்றேதான் இப்போதைய வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்கக் கூடியதாகி விட்டது. நிற்க
எது எப்படியிருந்த போதிலும் இம்மாதிரியான தேசபக்தர்களும் தேசியவாதிகளும் தாராளமாய் ஏற்படும் நிலை ஏற்படுவதானது நமது கொள்கைக்கு மிகவும் நன்மை என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு. எப்படி யெனில் இந்த தேசபக்தக் கூட்டம் இன்று சர்க்கார் பக்கத்தில் திரும்பி இருப்பதை மறந்து விட்டு மக்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்தால் வெகு சீக்கிரத்தில் சமதர்ம ஆட்சி ஏற்பட சௌகரியம் ஏற்பட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சமதர்ம ஆட்சி ஒரு நாட்டில் ஏற்பட வேண்டுமானால் மனுதர்மத்தால் மக்களுக்கு இருக்கும் அவமானம் விளங்கி வாலிபர்களுக்கு சாப்பாட்டுக்கு இன்னமும் சற்று அதிகமான கஷ்டம் ஏற்பட வேண்டும். அப்பொழுது தான் அவமானத்துடன் வாழ்ந்து - பட்டினி கிடந்து - உயிர் மாள்வதைவிட சமதர்மத்திற்கு உயிர்விடுவது மேல் என்கின்ற உணர்ச்சி நம் வாலிபர்களுக்கு உண்டாகும். ஆதலால் இக்கிளர்ச்சியும் நன்மைக்கே தான்.
(குடி அரசு - தலையங்கம் - 17.05.1931)