periyar maniammaiஈரோடு முனிசிபாலிட்டிக்கு புதிய சட்டப்படி நடக்க வேண்டிய தேர்தலுக்கு இம்மாதம் 4 ந் தேதி ஸ்லிப்பு வாங்க தேதி போட்டிருந்தபடி 4ந் தேதி 24 ஸ்தானங்களுக்கு சுமார் 50 அங்கத்தினர்கள் வரை போட்டி போட ஸ்லிப்பு கொடுத்திருந்தார்கள்.

இவற்றுள் திருவாளர்கள் ஆர்.கண்ணம்மாள் (ஈ.வெ.ராமசாமி சகோதரி) கே.எ.ஷேக்தாவுத் சாயபு இப்போதைய சேர்மென், எம்.கே.மகமது சுல்தான் சாயபு நெல்மிஷன், பி.சின்னுசாமி கவுண்டர் நெல்மிஷன், மாரிமுத்து பண்டாரம் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆகிய ஐவர்களுக்கு போட்டி ஸ்லிப்பே இல்லாமல் வெற்றி பெற்றார்கள். மற்றும் ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர் இப்போதைய கவுன்சிலர், எம். சிக்கய்ய நாயக்கர் இப்போதைய கவுன்சிலர், ஈ.வி. நஞ்சப்ப செட்டியார் இப்போதைய வைஸ்சேர்மன், ஈ.ஒ.சி. முத்துசாமி கவுண்டர் இப்போதைய கவுன்சிலர், கே.கே.குதரத்துல்லா சாயபு, இப்போதைய கவுன்சிலர், கே.எம்.சீனிவாசபிள்ளை இப்போதைய கவுன்சிலர், ஜ.ப. மகமட் சுல்தான் சாயபு சராப்புக்கடை, கே.அப்துல் ராஸக் சாயபு உப்பு மண்டி, காதர்சா குமாரர் சி.ரெங்கராஜ் செட்டியார் இப்போதைய கவுன்சிலர், எஸ்.வெங்கடாஜல முதலியார் ஜவுளி வியாபாரம், கேசவலால் சேட் மண்டி வியாபாரம் ஆகியவர்கள் தங்களுக்கு போட்டியாக ஸ்லிப் போட்டிருந்த கனவான்கள் அவர்கள் ஸ்லிப்பை (போட்டியை) வித்திட்றா செய்து கொண்டதால் இவர்களும் போட்டியில்லாமல் வெற்றி பெற்றவர் களாவார்கள்.

மற்றும் எட்டு ஸ்தானங்களுக்கு போட்டி பலமாக இருப்பதாக தெரிகின்றது. கருங்கல் பாளையத்தில் இரண்டு வார்டுகளுக்கு 5பேர்கள் போட்டி போடுகிறார்கள். அதாவது ஒரு வார்டுக்கு திருவாளர்கள் கே.பி. ஷண்முகபிள்ளையும், (மாஜி கௌன்சிலர்) டி.சீனிவாச முதலியாரும் (மாஜி சேர்மன்) ஒரு வார்டுக்கு மாரிமுத்து பிள்ளையும் (இப்போதைய கவுன்சிலர்) குழந்தை பிள்ளையும், மிராசுதார் ராஜுப்பிள்ளையும் (மாஜி முனிசிபல் உத்தியோகஸ்தர் & மிராசுதார்) ஒக்கிலியத்தெரு வார்டில் அப்பையாக் கவுண்டரும் (பேங்கர்) பாண்டிக் கவுண்டர் என்னும் சௌடப்பக் கவுண்டரும் (பேங்கர்) பார்ப்பனத் தெரு வார்டுக்கு வக்கீல் யூ.எஸ். சுப்பிரமணிய அய்யரும், வக்கீல் சி.பி.ராகவேந்திரராவும், வளையக்காரத் தெரு வார்டுக்கு இ.எஸ்.கோவிந்தசாமி நாயுடுவும் (கண்றாக்டர்) கருங்கல் பாளையம் மிராசுதார் தேவநாயகமும், ஒப்பணக்காரத் தெரு வார்டுக்கு இப்போதைய கவுன்சிலர் எம்.எஸ்.முத்துகருப்பஞ் செட்டியாரும், மாஜி கவுன்சிலர் வி.ஐ.டேவிட்டும், ஸ்டேஷன் பாக வார்டுக்கு இப்போதைய கவுன்சிலர் பட்டக்காரர் எம்.எல்.சி அவர்களும் , மாஜி கவுன்சிலர் ஆர்.எஸ். விசுவாசமும், ரெவரெண்ட் ஞானமுத்து, ஈ.ஒய்.சுல்தான் சாயபு (கண்றாக்டர்) ஆகியவர்களும் போட்டி போடுகிறார்கள் என்றாலும் இரண்டொரு வார்டுகள் தவிர மற்றவைகளின் போட்டி அவ்வளவு மும்முரமாக இருக்காதென்றே கருதுகின்றோம்.

தேர்தல் தேதி குறிப்பிட்ட உடன் ஈரோட்டில் ஏற்பட்ட தடபுடல்களும் கட்சிகளும் நெருக்கடிகளும் வெகு பலமாக இருந்து வந்தது. இதற்குக் காரணம் இப்போது இருக்கும் சேர்மென் ஜனாப் ஷேக்தாவுத் அவர்கள் மறுபடியும் தான் சேர்மெனாய் வருவதில்லை என்று சொல்லிவிட்டதால் பல கவுன்சிலர்கள் தான் தான் சேர்மெனாக வரவேண்டுமென்று கட்சி சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் பார்ப்பன பிரமுகர்களும் இரண்டொருவர் கலந்து தங்களுக்குப் பிடித்த கனவான்களை சேர்மனாக்க தந்திரம் செய்து கக்ஷி சேர்த்தார்கள். பல அபேக்ஷகர்களையும் நிறுத்தினார்கள்.

கடைசியாக திரு.இராமசாமி திருவாளர் பட்டக்காரர் முதலியவர்கள் ஜனாப் ஷேக்தாவுத்சாயபு அவர்களை மறுபடியும் சேர்மனாக இருந்தாக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தி சம்மதிக்கச் செய்த பின்பு தேர்தல் உணர்ச்சி வேறு விதமாய் மாறிற்று என்றாலும், போட்டிகள் மாத்திரம் வெகு பலமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் சேர்மன் ஷேக்தாவுது சாயபு அவர்கள் இப் போட்டி களுக்குள் நுழைந்து தன்னிடம் அன்புள்ளவர், வெறுப்புள்ளவர் என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாரிடமும் சென்று அலைந்து திரிந்து நாள் 1-க்கு 24 மணி நேரம் வீதம் வேலை செய்து மொத்தத்தில் 16 ஸ்தானங்களுக்குப் போட்டியில்லாமல் செய்துவிட்டார். இவ்விஷயத்தில் சேர்மென் அவர்களின் பிரயாசையும், வெற்றியும் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

புது சட்டப்படி கூட்டப்படும் இந்த நிர்வாகமும், ஜனாப் ஷேக்தாவுது அவர்கள் தலைமையில் ஒழுங்காகவும், வெற்றிகரமாகவும் நடைபெறு மென்பதில் ஆnக்ஷபணை இல்லை. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சேர்ம னுடன் ஒத்துழைத்து ஈரோடு முனிசிபாலிட்டிக்கு இப்போது ஏற்பட்டுவரும் நல்ல பெயரை விர்த்தி செய்வார்களாக.

(குடி அரசு - கட்டுரை - 08.11.1931)

Pin It