சாதி வெறியர்களால் துள்ளத் துடிக்க அந்த இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்தில் இன்னும் குருதிக் கறை கூட முழுதாய்ப் போயிருக்காது. அந்தப் பெண் கௌசல்யா இன்னும் மருத்துவமனையிலிருந்து திரும்பக் கூட இல்லை. கௌரவத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த இழிசெயலுக்கு எதிரான கண்டனக் குரல்கள் கூட இன்னும் ஓயவில்லை. அதற்குள் வெட்கமே இல்லாமல் விவாதிக்கிறார்கள் பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கான காரணங்கள் பற்றி! எப்படி முடிகிறது!...

anbumani ramadoss 360கேட்டால் இவர்கள் படித்தவர்களாம்! அதனால் படித்தவரான, இளைஞர் பார்வையோடும் சீரிய திட்டமிடலோடும் எல்லாவற்றையும் அணுகுகிறவரான அன்புமணிக்கு வாக்களிக்க விரும்புகிறார்களாம். தெரியாமல்தான் கேட்கிறேன், அப்படியானால் நம்மோடு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்ப் பாதுகாப்பு குறித்து உங்களுக்கெல்லாம் எந்த அக்கறையுமே கிடையாதா படித்த பெருமக்களே? தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மாற்று வேண்டும்தான்; அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆனால், அந்த மாற்று யார், அன்புமணி இராமதாசா? கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக இராசபக்சவைக் கொண்டு வந்து நிறுத்தினால் வாக்களிக்க முடியுமா என்ன?

அதற்காக நடந்த அந்தக் கொலையைப் பா.ம.க-வினர்தான் செய்தார்கள் என நான் சொல்லவில்லை. ஆனால், இந்தியாவின் வேறெந்த மாநிலத்தை விடவும் சாதிய மனப்பான்மை குறைந்த தமிழ் மண்ணில் இன்று சாதி ஆணவக் கொலைகளெல்லாம் இப்படிப் போகிற போக்கில் நடத்தப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம், பா.ம.க அப்படிப்பட்ட வழக்கத்துக்கு ஊக்கம் கொடுத்து உரமேற்றி வளர்த்ததுதான் என நான் சொன்னால் உங்களில் யாராவது அதை மறுக்க முடியுமா நண்பர்களே?

இப்பொழுது நடந்த சங்கர் கொலை ஒருபுறம் இருக்கட்டும். திவ்யா-இளவரசன் திருமணத்தை எதிர்த்து தருமபுரியில் இவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம் மறந்துவிட்டதா? அதையொட்டி நடந்த இளவரசன் கொலை, மரக்காணக் கலவரம் போன்றவைதாம் மறக்கக்கூடியவையா? அல்லது சித்திரை முழுநிலவுப் பெருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இவர்கள் விடுத்த வெளிப்படையான மிரட்டல்களைத்தாம் மறந்துவிட்டீர்களா?

நீங்கள் கேட்கலாம், “பா.ம.க மட்டும்தான் சாதிக் கட்சியா? இன்னும் எத்தனையோ சாதிக் கட்சிகள் நாட்டில் இல்லையா? அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்களை மட்டும் ஏன் இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள்?” என. உண்மை! நாட்டில் இன்னும் நிறையவே சாதிக் கட்சிகள் உள்ளன. ஆனால், இதுவரை எந்த சாதிக்கட்சித் தலைவனாவது தன்னை ‘சாதி வெறியன்’ எனப் பெருமையோடு அறிவித்துக் கொண்டு பார்த்திருக்கிறீர்களா? நடத்துவது சாதிக் கட்சியாகவே இருந்தாலும் பொதுவெளியில் யாருமே அப்படி ஒரு வாக்குமூலத்தைக் கொடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால், ஊரறிய உலகறிய “ஆம்! நான் மருத்துவனாக இருந்தபோதும் சரி, கட்சி தொடங்கியபோதும் சரி, எப்போதுமே நான் சாதி வெறியன்தான்!!” என வெளிப்படையாக அறிவித்தவர் இராமதாசு.

அது மட்டுமில்லை, மற்ற சாதிக்கட்சியினர் எல்லாம் அவரவர் சாதியினரைத் திரட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் (அதுவே இழிவானதுதான்). ஆனால், ஆதிக்க சாதியினர் அனைவரையுமே ஓரணியில் திரட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் ஓர் அமைப்பைக் கட்டமைப்பது என ஏதோ திரைப்படங்களில் வருவது போல வானளாவிய அளவுக்கு சாதியத்தைக் கொண்டு செல்லும் பேரபாயகரமான முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டிருப்பது பா.ம.க மட்டும்தான்.

மேலும், சாதியத் தாக்குதல் ஏதாவது நடந்தால், உள்ளத்தளவில் இல்லாவிட்டாலும் உதட்டளவுக்காவது, நாகரிகத்துக்காகவாவது அதைக் கண்டித்து அறிக்கை விடுவதுதான் இதுவரை மற்ற சாதிக் கட்சித் தலைவர்கள் கடைப்பிடித்து வரும் வழக்கம்.

ஆனால், செய்தியாளர்கள் “உடுமலையில் நடந்த கௌரவக் கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று அவர்களாகவே முன்வந்து கேள்வி எழுப்பியும் “இதுவரை எத்தனையோ முதன்மையான விதயங்கள் சொல்லியிருக்கிறேன். முதலில் அதைப் போடுங்கள்” என்று திமிராகச் சொல்லி விட்டு எழுந்து போனவர் இராமதாசு! இன்னும் இவரோ, இவர் மகனோ ஒருமுறை கூட முதல்வர் ஆகவில்லை. ஆளுங்கட்சியில் பங்குதான் வகித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்பொழுதே, அதுவும் தேர்தலை இவ்வளவு நெருக்கத்தில் வைத்துக் கொண்டே இவர்கள் சாதியையும் சாதி வெறியையும் இந்த அளவுக்குப் பச்சையாக ஊக்குவிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு அன்புமணி முதல்வராகவும் நாம் வாக்களித்தால்?...

இன்றைய நிலைமையிலேயே இவர்களால் ஆதிக்க சாதிகள் அனைத்தையும் இந்த அளவுக்கு ஒருங்கிணைக்க முடிகிறது என்றால், இவர்களே நாளை ஆட்சிக்கும் வந்து விட்டால்?...

இதுவரை இவர்கள் சாதி வளர்த்ததற்கே ஊர் பார்க்க உலகம் பார்க்க, படப்பிடிப்புக் கருவி பார்க்க ஒருவனை நடுத்தெருவில் போட்டு வெட்டிச் சாய்க்கிறார்கள் என்றால், இன்னும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இவர்கள் சாதி வளர்க்கத் தொடங்கினால்?... கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! காதலை எவனாவது, எவளாவது வாய் திறந்து சொல்ல முடியுமா?... பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஒருவராவது தெருவில் அச்சமின்றி நடக்க முடியுமா?...

இப்படி மண்டைக் கொழுப்பெடுத்துத் திரியும் ஒரு கொலைகாரக் கும்பலுக்கு வாக்களிக்கப் போவதாக வெட்கமில்லாமல் தொலைக்காட்சியில் வந்து சொல்லத்தான் நாம் படித்திருக்கிறோமா? போயும் போயும் சாதிப் பாகுபாடு என்பது என்னய்யா? உடல் ஊனம், ஏழ்மை, நிறம் போன்ற காரணங்களின் அடிப்படையில் ஒருவரை மட்டம் தட்டுவதோ மதிப்பிடுவதோ எந்த அளவுக்கு இழிவான செயலோ அதே போன்றதுதான் சாதி அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவதும், மட்டம் தட்டுவதும். இப்படிப்பட்ட கீழ்த்தரத்திலும் கீழ்த்தரமான நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது எப்படிப் படித்தவர்களின் செயலாக இருக்க முடியும்?...

தனிமனித அடிப்படை உரிமையான காதலை எதிர்ப்பது, சமூகப் பாகுபாட்டுக்குத் (Discrimination) தலையாய காரணியாக விளங்கும் சாதியத்தை ஆதரிப்பது போன்ற அருவெறுப்பான நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு கட்சி எப்படி நாகரிக இளைஞர்களின் தேர்வாக இருக்க முடியும்?...

தமிழ்ப் பண்பாட்டின் இரு கண்களுள் ஒன்று காதல். அதற்கு எதிராய் ஆயுதம் தாங்குகிற இவர்களுக்கு வாக்களிப்பவர் எப்படி உண்மையான தமிழராய் இருக்க முடியும்?...

வாழ வேண்டிய இளமனங்களை பிரித்து, கொன்று கூறு போடுகிற இரக்கமே இல்லாத செயலை இப்படிக் கூச்சமே இல்லாமல் ஊக்குவிக்கிற, மனிதநேயத்துக்கே எதிரான கட்சியினருக்கு மனிதராய்ப் பிறந்த ஒருவர் எப்படி வாக்களிக்க முடியும்?... அப்படிச் செய்தால், தமிழர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன; நல்லாட்சி கிடைத்தால் போதும் என இராசபக்சவுக்கு வாக்களிக்கும் சிங்களக் காடையர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?

ஏன் பா.ம.க-வுக்கு வாக்களிக்கக் கூடாது? சாதிக்கு அப்பாலும் சில காரணங்கள்

சரி, பா.ம.க மீது சாதி தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருக்கட்டும். அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலாவது பா.ம.க உண்மையிலேயே நல்ல கட்சிதானா?

பா.ம.க-வுக்கு வாக்களிக்கலாம் எனப் பரிந்துரைப்பவர்கள் அதற்குக் காட்டும் முதன்மையான காரணம், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்பது. அட அறிவுப் பழங்களே! அரசியலுக்கு வந்த புதிதில், இதே சென்னை, தேனாம்பேட்டை நாட்டுமுத்துத் தெருவில் அலுவலகம் - வீடு இரண்டையும் ஒரே கட்டடத்தில் நடத்திக் கொண்டிருந்த அன்றைய இராமதாசு எங்கே? இன்று தைலாபுரத்தில் பெரிய பண்ணை வீட்டில் அரச வாழ்வு வாழும் இராமதாசு எங்கே? எத்தனை இடங்களில் திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், எப்பேர்ப்பட்ட படாடோப வாழ்க்கை!... இவற்றுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது?

பயணச்சீட்டு வாங்கக் கூடக் காசில்லாமல் கள்ளத் தொடர்வண்டி ஏறிச் சென்னைக்கு வந்த கருணாநிதிக்கும், வெறும் திரைப்பட நடிகையாக இருந்த ஜெயலலிதாவுக்கும், பட்டியலிட்டால் படித்து மாளாத அளவுக்கு இவ்வளவு மலை மலையான சொத்துக்கள் எப்படி வந்தனவோ அதே வழியில்தான் இராமதாசுக் குடும்பத்துக்கும் இந்தச் சொத்துக்கள் வந்தன. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! இராமதாசு மீதோ அன்புமணி மீதோ ஊழல் வழக்கு ஏதும் இல்லாமல் இருக்கலாம். அதற்காக?... அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி மீது கூடத்தான் குற்றச்சாட்டு இல்லை. அதற்காக அதை அவர் செய்யவில்லை என ஆகி விடுமா?

அதை விடுங்கள்! மேலாண்மை (நிர்வாகம்) வசதிக்காகத் தமிழ்நாட்டையே இரண்டாகப் பிரிக்க வேண்டும் என வலியுறுத்துபவர் இராமதாசு. இப்படிச் செய்தால், வன்னியர்கள் மிகுதியாக வாழும் பகுதி மட்டும் தனி மாநிலமாகக் கிடைக்கும்; தாங்கள் எளிதில் ஆட்சிக்கு வரலாம்; அந்த மாநிலத்தில் நிரந்தரமாக ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது அவர் கணக்கு. தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஓர் ஆட்சி அமைய வேண்டி இவர்களுக்கு வாக்களித்தால் முதலில் அதுதான் நடக்கும். ஈழப் பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, மீத்தேன் திட்டம், அணு உலைத் திட்டம், நியூட்ரினோ திட்டம், முல்லைப் பெரியாறு பிரச்சினை எனத் தமிழ் இனத்தையே தடம் தெரியாமல் அழிக்கும் அளவுக்குச் சுற்றிலும் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் வேளையில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டை இரண்டாகக் கூறு போட்டால் அதை விடப் பெரிய பின்னடைவு வேறு இருக்க முடியுமா என்பதைச் சிந்தியுங்கள்!

தவிர, நாளுக்கு நாள் கடுமையாகி வரும் இந்தத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தாங்கள் செய்யப் போவது என்ன, இவை குறித்துத் தங்கள் நிலைப்பாடு என்ன என்பது பற்றிப் பா.ம.க-வின் வரைவுத் தேர்தல் அறிக்கையிலும் இல்லை; வண்டலூரில் நடந்த அவர்கள் கட்சி மாநில மாநாட்டில் புதுமைச் சொற்பொழிவு நடத்திய அன்புமணி இந்தப் பிரச்சினைகள் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவும் இல்லை. சொல்லப் போனால், பா.ம.க-வின் சாதியப் போக்குக் குறித்து எனக்குக் கடுமையான கருத்துக்கள் இருந்தாலும், அவர்களுடைய தமிழ் உணர்வு குறித்தோ தமிழினப் பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடு குறித்தோ இதுவரை எனக்கு எந்த ஐயமும் இருந்ததில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழர் பிரச்சினைகள் எது குறித்தும் அவர்கள் கண்டு கொள்ளாதிருப்பது எனக்கே வியப்பளிக்கிறது!

ஆக, இவர்கள் மீதுள்ள சாதி தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் இவர்களுக்கு வாக்களிப்பது எந்த விதத்திலும் நல்ல முடிவாகத் தெரியவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே!

இவர்களுக்கா உங்கள் வாக்கு?

இவரா உங்கள் அடுத்த முதல்வர்?

- இ.பு.ஞானப்பிரகாசன்