periyar 178சென்ற வார இதழில் சிங்கப்பூரில் இருந்து தமிழ் மகன் எழுதிய ஒரு கடிதம் ஒன்று பிரசுரித்திருந்தது வாசகர்கள் படித்திருக்கக் கூடும்.

அதாவது சிங்கப்பூர் முன்னேற்றம் பத்திரிகையில் கண்ட விஷயங்களுக்காக மலாய் நாட்டிலுள்ள சில நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சங்கடப்பட்டு முன்னேற்றம் பத்திரிக்கையை குறை கூறுவதாகவும் அதன் மீது நடவடிக்கை நடத்த முயற்சிப்பதாகவும் அக்கடிதத்தில் இருந்து தெரிய வருகின்றது.

நடவடிக்கை நடத்துவதில் யாரும் எவ்வித ஆக்ஷபணையும் சொல்வதில்லை. பத்திரிகாசிரியர்கள் எந்த அபிப்பிராயத்தை தெரிவிக்கு முன்னும் அதனால் ஏற்படக்கூடிய பலன்களுக்கெல்லாம் தயாராயிருந்து சந்தோஷமாய் வரவேற்கக் கூடியவர்களாகவே இருப்பார்களே தவிர, இம்மாதிரி சிறு மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்களாகவோ அல்லது தனது கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.

ஆதலால் அதற்காக நாம் ஒன்றும் சிபார்சுக்கு வரவில்லை. ஆனால் செல்வமும் செல்வாக்கும் உள்ளதும், தமிழ்நாட்டிற்கு பிரதானமான தென்பதுமான ஒரு சமூகம் சமூக வாழ்வில் இவ்வளவு மோசமான நிலையில் இருக்குமானால் தமிழ் மக்களின் அறிவிற்கும் மூட நம்பிக்கைக்கும் இதைத்தானே அளவு கருவியாக கருதப்படும் என்பதுதான் நமது கவலை.

இப்போது உலகத்தில் மேம்பாடும் நாகரீகமும் பெற்றிருக்கும் மக்கள் இந்தியர்களை எப்படி மதிக்கின்றார்கள் என்பது நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமல்ல.

இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்தை வளரச் செய்யும் முயற்சிகள் இருந்தவரை அதைத் தாங்கிக் கொண்டிருந்ததன் மூலம் நாட்டுக் கோட்டையர் சமூகமானது ஒரு பெரிய புகழுக்கும் கீர்த்திக்கும் உரிய சமூகமாகக் காணப்பட்டதையும், அந்தப்படி பார்ப்பனர்களால் பிரசாரம் செய்யப்பட்ட தையும், நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

இன்றைய தினம் அப்பார்ப்பனீயத்தை அடியோடு வீழ்த்த வேண்டிய முயர்ச்சி நடக்கும் போது அப்பார்ப்பனீயத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் நிலைமையெல்லாம் சற்று கஷ்டமாகத்தானிருக்கும் என்பதும் தானாகவே விளங்கும்.

அந்த நிலையில் நாட்டுக் கோட்டையர்களுடைய பழய கீர்த்தியும் புகழும் நிலை நிற்க முடியாததுடன் அப் பார்ப்பனீயத்தை வளர்க்கவும் நிலை நிறுத்தவும் செய்த முயர்ச்சிகளின் பலன்களை மற்றவர்களைப் போலவே இவர்களும் விகிதாச்சாரம் அடையக் கடமைப்பட்டவர்களுமாவார்கள்.

கர்மத்தின் பலனை அடைந்து தீரவேண்டியது யாராய் இருந்தாலும் இயற்கையேயாகும். அவ்வித இயற்கையில் இருந்து தப்ப வேண்டுமே யானால் அதற்குத் தகுந்த “பிராயச்சித்தங்கள்” செய்தாக வேண்டும்.

அப்படிக்கில்லாமல் “நான் முன் செய்தபடியே இன்னும் செய்து கொண்டிருப்பேன். ஆனால் அதன் கருமபலன்கள் என்னைத் தொடரக் கூடாது” என்று ஒருவர் சொல்வாரேயானால் அவருக்கு விஷய ஞானமும்; பகுத்தறிவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு இன்றைய தினம் மௌடீகத்திலும் அடிமை வாழ்விலும் இருப்பதற்கு முக்கிய காரணம் பண்டிதர்களும் நாட்டுக் கோட்டையர்களுந்தான் என்றால் அவர்கள் வாய் பேசாமல் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

ஏனெனில் பண்டிதர்கள், பார்ப்பனர்களின் நூல்களைப் படித்துவிட்டு (ஏனெனில் அதைத் தவிர அவர்களுக்குப் படிக்க வேறு நூல்கள் கிடையாததால்) அதில் உள்ள ஊழல்களும் புரட்டுகளும் சூட்சிகளும் தெரிந்திருந்தாலும், பார்ப்பனர்களுக்கு பயந்து அவற்றையே திருப்பித் திருப்பி பிரசாரம் செய்வித்ததாலும் நாட்டுக் கோட்டையர் சம்பாதித்ததைக் கொண்டு தங்களுக்கு புகழ் ஏற்படுவதற்கு பார்ப்பன உபதேசமும் அவர்கள் மூலமாயு மல்லாமல் வேறுவழி இல்லாததால் அவர்கள் கட்டளைப்படியே குட்டிச் சுவர்களாக இருந்த கோவில்களையெல்லாம் கற்கோட்டைகளாக்கி பார்ப்பனீயத்தை நிலைக்க வைத்து விட்டார்கள்.

ஆகவே இவ்விரு கூட்டமும் நேராகும்வரை அவர்களை எதிர்த்துப் போராட வேண்டியது இன்னாட்டின் மௌடீகத்தையும் அடிமைத்தனத்தையும் ஒழிக்கமுன் வருபவர்கள் வேலையாகும். ஆனால் இவ்வேலையில் சற்று கஷ்டம் உண்டு என்பதை நாம் மறைக்க முயலவில்லை.

எப்படியெனில் முன்னவர்கள் வாயாடிகளும் படிப்புத் திமிருடையவர்களுமாவார்கள். பின்னவர்கள் பிடிவாதமும் பணத் திமிருமுடையவர்களாவார்கள். இந்த நிலைமையுள்ளவர்களுடன், போராடி வாயாடித்தனத்தையும், படிப்புத் திமிரையும், பிடிவாதத்தையும், பணத் திமிரையும் நமக்கு அனுகூலமாய்ச் செய்து கொள்வதென்றால் அது லேசான காரியமல்ல. அதற்காக அவர்களால் பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து தான் ஆக வேண்டும். அதற்குத் தைரியமுள்ளவர்கள்தான் இவ்வேலையில் இரங்க வேண்டும்.

உதாரணமாக பண்டிதக் கூட்டத்தார்கள் பலர் இன்று சுயமரியாதை இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று பிரசாரம் செய்து வருவது இவ்வியக் கத்தாரை நாஸ்த்திகர் முன்னோர்களை வைது அவர்களது நூல்களை இகழ் பவர்கள் என்றும், சைவ சமயத்திற்கு ஆபத்து என்றும், மற்றும் பல விதமாய் கூச்சல் போட்டு மக்களைக் கிளப்புவதும், நாட்டுக் கோட்டையர்களில் சிலர் அதாவது சிவநேசன் திருக்கூட்டத்தார் என்பவர்கள் “சுயமரியாதை இயக்கத் தார், நமது சமயத்தைக் கெடுக்கின்றார்கள்; சாதியைக் கெடுக்கின்றார்கள்; சமூகக் கட்டுப்பாட்டை அழிக்கின்றார்கள்; இதற்கு கேள்வி இல்லையா? கேட்பாடு இல்லையா” என்று சத்தம் போடுவதும் இவ்வியக்கத்தில் சம்மந் தப்பட்ட மக்களை “காலிகள், போலிகள், சில்லரைகள், ஜட்கா வண்டிக் காரர்கள் (அதாவது பணமில்லாதவர்கள்)” என்பதும் மற்றும் தாருமாறாக பேசுவதும் எழுதுவதுமாயிருக்கின்றவைகளே போதுமான உதாரணமாகும்.

இச்சிவநேசர் யோக்கியதைக்கும் அவர்களது பணத்திமிருக்கும் மற்றும் ஒரு உதாரணம் கூறுவோம். அதென்னவெனில் நாம் 19 - 10 - 30 ம் தேதி குடிஅரசு தலையங்கத்தில் சிவநேசர் சிறுமை என்று தலையங்கமிட்டு எழுதிய 3 பக்கமுள்ள ஒரு வியாசத்திற்கு பதிலாக அச்சிவநேசர் திருக் கூட்டத்தார் சிவநேசர் திறமை என்னும் தலைப்பின் கீழ் எழுதிய ஒரு வெளி யீட்டில் குறிப்பிட்டது என்னவென்றால் “இச் செல்வச் சமூகத்தின் சிறுவர்களுக்கு தங் குலச் சிறுமிகளை கூட்டிக் கொடுத்து ... தன வணிகருக்கு சம்மந்தியாகிய இழி தகை பெரியார் ஈரோட்டு நாயக்கர்” என் கின்ற ஒரு வாக்கியமும் குடிஅரசு தலையங்கத்தில் “சிவநேயர் சிறுமை” என்னும் கட்டுரையில் கண்ட விஷயங்களை “ஒரு குடியைக் கெடுக்கும் கோடாரி காம்புதான் தகவல் கொடுத்திருக்க வேண்டுமென்றும்” எழுதிய தையே அவ்வளவு பெரிய வியாசத்திற்கு பதிலாக்கினார்களே அல்லாமல் 3 பக்கம் 12 கலம் கொண்ட பல விஷயங்களில் ஒன்றுக்காவது உண்டு, இல்லை. அல்லது அதற்கு வேறு தத்துவார்த்தம் என்று கூட எழுதவில்லை.

ஒவ்வொரு சமூகங்களிலும் இப்படிப்பட்ட பிற்போக்காளர்கள் உண்டு என்றாலும் நாட்டுக் கோட்டையார் சமூகத்தில் இருப்பது நாட்டுக்கு ஆபத்தானதாகும். ஏனெனில் பணமுள்ள கூட்டம் இந்தப்படி பிற்போக்கான முறையைத் தழுவி அதில் முனைந்திருப்பது நாட்டின் விடுதலைக்குத் தடை யாகும் என்ற காரணத்தால்தான்.

ஆனாலும் இப்போது பல பண்டிதர்களும் பல நாட்டுக் கோட்டையாரும் உண்மை வழிக்குத் திரும்பி உண்மையான தொண்டு செய்து உதவி புரிந்து வருகின்றார்களாதலால் அதிகமாக பயப் படவோ கவலைப்படவோ வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.12.1930)

Pin It