periyar 478தமிழ்நாட்டு சுயமரியாதைத் தொண்டர்கள் விஷேச மகாநாடு என்னும் பேரால் இம்மாதம் முதல் தேதி கோயமுத்தூரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் நான்கு தீர்மானங்கள் செய்ததாக நமக்கு செய்தி கிடைக்கின்ற விபரம் மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம்.

இதற்கு முக்கியமாய் இருந்த கனவான்கள் மூவரும் அதாவது தலைமை வகித்த திரு. ஜே. எஸ். கண்ணப்பர் அவர்களும், வரவேற்பு கழகத் தலைவராயிருந்த கொங்குரபாளையம் பொன்னம்பலம் அவர்களும், காரியங்கள் பொறுப்பேற்று நடத்திய திரு. அய்யாமுத்து அவர்களும் உண்மைச் சுயமரியாதை வீரர்கள், தொண்டர்கள் என்பதில் ஆக்ஷபனை இல்லை என்பதை நாம் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிலும் சில உண்மைத் தொண்டர்கள் இருந்திருப்பார்கள் என்பதையும் நாம் மறுக்க வரவில்லை.

ஆனால் அவர்களை எல்லாம் இம்மகாநாடு கூட்ட நிர்பந்தப் படுத்தியது தற்காலம் நடைபெறும் அரசியல் இயக்க நடவடிக்கைகளும் உணர்ச்சிகளும் தான் என்று நாம் கருதியிருக்கும் அபிப்பிராயத்தை வெளியிலெடுத்துச் சொல்லாமல் இருக்க நாம் ஆசைப்படவில்லை.

இதற்கு ஆதாரம் வேண்டுமானால் அம்மூன்று கனவான்களின் பிரசங்கங்களை படித்துப் பார்த்தாலே விளங்கி விடும். அரசியல் இயக்க கிளர்ச்சி சம்மந்தமாக நடந்த சம்பவங்களும் நடவடிக்கைகளும் அவற்றைப் பற்றி பத்திரிகைகள் பிரசாரங்கள் செய்த முறைகளும் அவற்றின் மூலம் சில வாலிபர்களுக்கும் ஏற்பட்ட உற்சாகங்களும் ஆகிய எல்லாம் சேர்ந்து சுயமரியாதை இயக்கத் தைச் சேர்ந்த சில வீரர்களுடையவும், தொண்டர்களுடையவும் மனதைக் கவர்ந்து விட்டது.

இந்த நமது அபிப்பிராயத்திற்கு அனுகூலமாக திரு. எஸ். ராமநாதன் அவர்கள் ³ மகாநாட்டுக்கு வர இயலாமை சிறிது எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதைக் குறிப்பிடுகிறோம்.

“தற்சமயம் காங்கிரஸ் இயக்கத்தின் எழுச்சியில் சுயமரியாதைத் தொண்டர்களும் இழுக்கப்பட்டதை நான் உணர்கிறேன்”என்று எழுதியிருக்கிறார்.

மக்களுக்கு ஒரு எழுச்சியையோ, உற்சாகத்தையோ, ஆத்திரத்தையோ உண்டாக்கி விட்டுவிட்டு அவர்களுக்கு தகுந்த வேலை கொடுத்துக் கொண்டிருக்காவிட்டால் அது தாறுமாறாகக் கண்ட கண்ட பக்கங்களில் எல்லாம் போய் முட்டச் செய்யும் என்பது இயற்கையேயாகும்.

இந்த இயற்கையிலிருந்து மேற்கண்ட மூன்று கனவான்களும் தப்ப முடியாததாலேயே அவர்கள் அரசியல் இயக்கக் கவர்ச்சியில் விழுந்து விட வேண்டியவர்களாகி விட்டார்கள்.

நம்மைப் பொறுத்தவரை நாம் சுயமரியாதை இயக்கத்திற்கும் அரசியல் சம்மந்தமான கிளர்ச்சிக்கும் மத்தியில் சரியான தடைச்சுவர் இருக்க வேண்டும் என்பது முடிவான அபிப்பிராயமாகும்.

இதற்கனுசரணையாக திரு. எஸ். ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கும்படி கடிதத்திலிருந்து மற்றும் ஒரு குறிப்பைக் குறிப்பிடு கின்றோம்.

“சுயமரியாதை இயக்கம் மனித வர்க்கத்தின் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது. காங்கிரஸ் இயக்கம் இந்திய மக்களின் தேச பக்தியை அடிப்படையாகக் கொண்டது. ஒன்றுக்கு அறிவே பிரதானம்; மற்ற துக்கு பக்தியே பிரதானம்” இதை உத்தேசித்தே சுயமரியாதை மகாநாடுகளில் எல்லாம் இது வலி உருத்தப்பட்டு வந்திருக்கின்றது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த அபிப்பிராயம் மாறுதலையடையாமல் இருக்க வேண்டு மென்றே நாம் விரும்பிக் கொண்டிருக்கின்றோம்.

இதற்கணுசரனையாகத் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் அனுப்பியிருக்கும் செய்திகளில் மற்றொன்றைக் குறிப்பிடுகின்றோம்.

“காங்கிரசில் சேர்ந்து பணியாற்றுங் காலையில் சுயமரியாதைக் கொள்கைகளை கை நழுவ விடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம்” என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

நாம் இப்படிச் சொல்லுவதாலேயே இன்றைய அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டும் அதனிடம் வாலாட்டிக் கொண்டு அடிமையாய் இருக்க வேண்டுமென்று நாம் சொல்ல வரவில்லை.

ராஜ விசுவாசம் என்பதும் ராஜ வாழ்த்து என்பதும் அடிமைக்கு அறிகுறி என்றும் எந்தக் கூட்டத்திலும் அது கூடாது என்றும் தீர்மானித்து இருப்பது இந்த தேசத்தில் சுயமரியாதை இயக்கமேயாகும்; கவர்னர்கள் பார்க்க விரும்பியும் நிர்வாக சபை காப்நெட் மெம்பர்கள் பார்க்க விரும்பியும் கலெக்டர்கள் சொல்லி அனுப்பியும் பார்க்க சவுகரியமில்லாமல் போனவர்கள் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களேயாகும்.

ஆதலால் சுயமரியாதை இயக்கம் இன்றைய அரசியல் இயக்கத்தை வெருப்பதாலேயே அதில் பங்கு கொள்ளாததாலேயே அதை அடிமை இயக்கமென்றோ அதிலுள்ளவர்கள் அடிமைகள் என்றோ சொல்லுவது அறியாமையாகுமே தவிர அது உண்மையாயிருக்க முடியாது.

அன்றியும் அரசியல் கலவரத்தினாலேயே ஒருவன் தன்னை மற்றவர் பேடி என்றோ, தேசத்துரோகியென்றோ சொல்லுவார்களே என்று பயப்பட்டு அதில் இறங்கி விடுவானேயானால் அவனும் ஒரு கோழையாவானே தவிர வீரனாகி விட மாட்டான்.

நம்மைப் பொறுத்தவரை நாம் திரு. எஸ். ராம நாதன் அவர்களை வைத்துக் கொண்டே திரு. காந்தியவர்களிடம் 1927 வருஷத்திலேயே “இந்தியா விடுதலையடைய வேண்டுமானால், சுய மரியாதை அடைய வேண்டுமானால் இந்து மதமும் காங்கிரசும் ஒழிந்தாக வேண்டும்” என்று சொல்லிவிட்டு வந்தவனாவோம் என்பதை இந்தச் சமயத்திலும் எடுத்துச் சொல்லுகின்றோம்.

அந்த நிமிஷமே இந்த செய்தியை திரு. காந்திக்கும் நமக்கும் 20 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த திரு. ராஜகோபாலாச்சாரியாரிடமும் சொல்லிவிட்டே வாசல் கடந்தோம். அது முதலே அந்தப் பிரசாரமும் செய்தோம்.

காங்கிரஸ் ஒழிய வேண்டும் என் கின்ற நம்முடைய அபிப்பிராயம் இன்றைய கிளர்ச்சியில் ஏற்பட்டதல்ல. 1920 வருஷத்திய கிளர்ச்சி அனுபவத்திலேயே ஏற்பட்டதாகும். இந்து மதம் என்பது அழிய வேண்டும் என்கின்ற அபிப்பிராயமும் நமக்குச் சுமார் 25. 30 வருஷத்திற்கு முன்னாலேயே ஏற்பட்டதாகும்.

5, 6 வருஷ காலமாகவே அரசியல் கிளர்ச்சியும், தியாகத்தின் பயனும், கஷ்டத்தின் பயனும் பாமர மக்களை - ஏழைகளை - தொழிலாளிகளை - கூலிகளை நசுக்கிப் பிழியவே உபயோகப்பட போகின்றது என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகம் இருந்ததில்லை.

இந்தியாவென்பது 100க்கு 93 பேர்கள் கொண்ட ஏழைகள் நாடேயொழிய 100க்கு 3, 4 அல்லது 5 பேர்கள் கொண்ட செல்வந்தர்கள் சூட்சிக்கார சோம்பேறிப் பிழைப்புக்காரர்கள் நாடல்ல என்பதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் இன்றைய அரசியல் கிளர்ச்சியில் இந்தியாவுக்கு ஏதாவது பலனுண்டாகுமா என்பது விளங்கும்.

ஜாதித் திமிறும், பணத் திமிறும், ஜாதிக் கொடுமையும், பணக்காரன் கொடுமையும் இந்த நாட்டில் இருந்து எடுபடுவது தான் இந்தியாவின் விடுதலையாகுமே யொழிய வெள்ளைக்காரனிடம் இருக்கும் அதிகாரத்தைப் பணக்காரனிடமும், சோம் பேறிகளிடமும் ஒப்புவிப்பது விடுதலையாகாது.

இந்தியாவுக்கு வெள்ளைக் கார ஆட்சி அதாவது முதலாளிகள் ஆட்சி கொண்டு வந்ததும் அதைக் காப்பாற்றி வளர்த்ததும், வளர்ப்பதும் ஜாதி ஆணவம் கொண்டவர்களும் பணத்திமிர் கொண்டவர்களுமேயாகும்.

ஆகவே அப்படிப்பட்ட அவர் களை இன்றும் கல்லுப்போல் வைத்துக் கொண்டு அவர்களை சிறிதுகூட அசைக்க முடியாமல் இருந்து கொண்டு வெள்ளைக்காரனைப் பற்றியே மாத்திரம் பேசுவதோ, அவனைக் குறைகூறுவதோ, எய்தவனை விட்டு விட்டு அம்பை நோகும் மூடர்களுக்கு சமமேயாகும். வருணாச்சிரமக் காரனும், பணக்காரனும் நம்மை வெள்ளைக்காரன் பக்கம்தான் திருப்பி விடுவான்.

நாம் உஷாராய் இருந்து பகுத்தறிவோடு பார்ப்போமானால் அம்பு யாரால் எய்யப்பட்டது - கொடுமை எங்கிருந்து வருகின்றது என்பது நமக்கு விளங்கும்.

உதாரணமாக தேசீயக் கிளர்ச்சியால் செய்யப்படும் கள்ளுக்கடை மறியலால் மக்களுக்கு ஏதாவது கடுகளவு லாபம் உண்டா என்றும் அதில் ஏதாவது உண்மை இருக்கின்றதா என்றும் யோசித்துப் பாருங்கள். நமது சகோதரர்களில் அநேகர் கள்ளு இலாக்கா சிப்பந்திகள் முதலியவர்கள்.

கள்ளு வரும்படியை நம்பியிருக்கிறார்கள். அந்த உத்தியோகத்தை நம்பி நாம் பிள்ளைகள் பெற்று வளர்த்து படிக்க வைத்து கள்ளு வியாபாரம் நடத் திக் கொடுக்க சர்க்காருக்கு ஒப்படைத்திருக்கின்றோம். இன்றைய வரையில் இதில் ஒருவராவது இந்தத் தொழில் வேண்டாமென்று விட்டு விட்டு வரவில்லை. இன்றும் வரவில்லை. 1922லும் வரவில்லை.

மற்றும் கள்ளு வரும்படியை நம்பி வைத்திருக்கும் பள்ளிக் கூடத்தில் நமது குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றோம். அதை நம்பி மரங்கள் வளர்த்து வைத்திருக்கின்றோம். அதற்காதாரமாக பல சாமிகளையும் வைத்திருக்கின்றோம். அந்த வரும்படியில் நடைபெறுகின்றது.

இவ்வளவும் போதாமல் அந்த இலாக்காவை நடத்திக் கொடுக்க ஒரு மந்திரியையும் நாம் ஏற்படுத்தி அதற்கு மாதம் 5333-5-4 சம்பளம் ஏற் படுத்தி அந்த உத்தியோகமும் வெள்ளைக்காரனுக்கோ, பார்ப்பானுக்கோ போகவிடாமல் நாம் தடுத்து நம்மவர்களான பார்ப்பனரல்லாத சகோதரர் கையில் ஒப்படைத்து இருக்கின்றோம்.

ஆகவே நமது சகோதரராகிய அந்த மந்திரியும் அந்த சிப்பந்திகளும் கள்ளு வியாபாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டளையும் கடமையுமுடையவர்கள். இந்த நிலையில் நாம் கள்ளு மறியல் செய்ய வேண்டிய தாயிருந்தால் கள்ளுக் கடையிலா, மந்திரிகள் சிப்பந்திகள் வீட்டிலா யோசித்துப் பாருங்கள். இந்த நிலையில் இந்தியர்கள் - தேசீயவாதிகள் மறியலில் ஏதாவது உண்மையோ, நாணயமோ இருக்கின்றதா என்பதை யோசித்துப் பாருங்கள்.

இப்படியே பல காரியங்களிலும் உண்மை தெரியாமல் வஞ்சகர் சூட்சிக்கும் அறியாமைக்கும் ஆளாகி அவஸ்தைப் படுகின்றோம். இது போலவே சுதேசிப் பொருள் பரதேசிப் பொருள் என்பதிலுமுள்ள புரட்டுகளை நாம் அறிவதில்லை.

இந்த நாட்டில் சுதேசிப் பொருள் ஆதரிக்க வேண்டும் என்பதின் பொருள் என்னவென்று சொல்லப் படுகிறதென்று பார்ப்போமானால் “சுதேசிப் பொருள்களை ஆதரித்தால் தொழில் கிடைக்கு மென்று சொல்லப்படுகின்றது” அந்த பேச்சில் சிறிது கூட நாணயம் இல்லவேயில்லை.

ஏனெனில் இந்த நாட்டில் தொழிலாளிக்கு ஒரு வித பாதுகாப்பும் கிடையாது. பணக்காரன் முதலாளி ஆகியவர்கள் அடையும் லாபத்திற்கு ஒரு கணக்கோ எல்லையோ கிடையவே கிடையாது.

100க்கு 100 லாபமடைந்தாலும். 100க்கு 250 லாபம் அடைந்தாலும் அது அவனது “யோகமாய்” “அதிர்ஷ்டமாய்” போய் விடுகிறது. இன்ன லாபத்திற்கு மேல் முதலாளி லாபமடையக்கூடாது என்கின்ற நிபந்தனையே கிடையாது.

ஆனால் தொழிலாளி வயிற்றுக்குப் போரவில்லை என்று வேலை நிறுத்தம் செய்தால் - கூலி போராது என்று கேட்டால் அவனை சர்க்காரிடம் சொல்லி துப்பாக்கியால் சுடச் செய்ய வேண்டியது, 10, 10 வருஷம் தண்டிக்கப்பட வேண்டியது அவர்களது வீடுகளில் நெருப்பு வைத்துக் கொளுத்த வேண்டியது ஆகிய காரியங்களே தொழிலாளிகளின் நிலை. இதற்குச் சமா தானம் “அவர்களது தலையெழுத்து” “துர் அதிர்ஷ்டவசம்” என்பதைத் தவிர வேறில்லை.

இந்த நிலையில் எதற்காக சுதேசிப் பொருளை ஆதரிப்பது? எதற்காக கள்ளுக்கடை மறியல் செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் ஏழை மக்களுக்கு எது சுலபமோ அதை வாங்கிக் கொள்ள அனுமதி கொடுக்க வேண்டியது தான் சமதர்மமாகுமென்பது நமது சொந்த அபிப்பிராயமாகும்.

முதலாளி நிலையும், தொழிலாளி நிலையும் வரையறுத்த பிறகுதான் சுதேசி பொருள் பேச்சும் பிரசாரமும் பயன்படுமே தவிர இந்த நிலையில் ஒன்றும் பயன்படாது. முதலாளிகள் கொள்ளை அடிக்கத்தான் சுதேசி பிரசாரம் உதவும். இன்னம் உதாரணம் வேண்டுமானால் கதரை எடுத்துக் கொள்ளுவோம்.

கதர் பிரசாரம் நாமே செய்தோம். கதர் கட்டாதவன் “தேசத் துரோகி” “நரகத்துக்குப் போவான்” என்றெல்லாம் சொன்னோம். கதர்சாலை ஏற்படுத்தினோம். ஏழைகளையும் பிச்சையெடுத்தாவது வயிற்றை வாயைக் கட்டியாவது கதர் கட்டும்படி பிரசாரம் செய்தோம். கதர் சம்பந்தமான அனேக காரியங்களுக்கு நாம் பொறுப்பாளி என்று சொல்லிக் கொள்ள நமக்கு பல உரிமைகள் உண்டு.

கடைசியாக என்ன பலன் ஏற்பட்டது. கோயம்புத்தூர் மால் மில்லின் நாலரை முழம் வேஷ்டி 4 வேஷ்டிகள் கொண்ட ஒரு தான் 1-12-0க்கு திரு. செங்கோட்டையா விற்கிறார். ஆனால் நாலரை முழம் கதர் வேஷ்டி 2 வேஷ்டிக்கு 1-12-0க்குக் கொடுத்து சுதேச கைத்தொழிலை ஆதரிக்க வாங்குகின்றோம். அதாவது 7 அணா வேஷ்டிக்கு 14 அணா கொடுத்து வாங்குகின்றோம்.

இப்படிப்பட்ட இந்த நிலையை ஆதரிப்பது தான் நம் சுதேசி கைத்தொழில் ஆதரிப்பு என்றால் கண்டிப்பாய் இந்த மாதிரி ஆதரிப்பு ஒழிந்து தானாக வேண்டும் என்று சொல்லுவோம். “இந்தப்படியாவது ஆதரிக்காவிட்டால் ஏழைகளுக்கு ஜீவனத்திற்கு மார்க்கமில்லை” என்று சொல்லுவார்களேயானால் அப்படி வேலையில்லாமல் இருக்கும் ஆட்கள் பட்டினி கிடந்து வேதனைப் பட்டு பணக்காரர்கள் மீது பாய்ந்து அவர்களது பணத்தை ஏழைகளுக்குப் பங்கீட்டுக் கொடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு வேண்டுமானாலும் போய் உட்கார்ந்து கொண்டு அங்கு ஏதோ தன்னாலான வேலையைச் செய்து விட்டு ஜெயில் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருப்பது மொத்த நாணையமும் பொது நலமுயற்சியும் கொண்ட யோக்கியமான வேலையுமாகும் என்று பதில் சொல்லுவோம்.

அந்தப்படிக்கு இல்லாமல் பம்பாய் ஆமதாபாத் மில் சொந்தக்காரர்களான முதலாளிகள் சுதேசி பிரசாரமும் மாதம் 100, 150, 200 சம்பளம் வாங்கும் கதர் இலாக்காகாரர்கள் கதர்ப் பிரசாரமும் சட்டசபைக்குப் போய்க் கள்ளை நிறுத்துகிறவர்கள் கள்ளு பிரசாரமும் செய்வதென்றால் இதில் என்ன நாணையம் இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.

பெரிய, பெரிய மிராசுதாரர்கள் ஆளுக்கு 1000, 2000, 5000 ஏக்கர் பூமி வைத்துக் கொண்டு உழுகின்ற ஆட்களுக்கு வயிரார சோறு கிடைக்காமல் படி நசுக்கிப் பிழிந்து விவசாயம் செய்யச் செய்து பலன் அனுபவித்து மேலும் மேலும் 100, 200, 500 ஏக்கர்கள் வருஷா வருஷம் வாங்கிப் பூமி சேர்த்துக் கொண்டு மற்றவனுக்கு ஒரு ஏக்கரா பூமி கூட இல்லாமல் கொள் முதல் செய்து விட்டு ஒரு 2-8-0ரூ போட்டு ஒரு ஜதை கதர் வேஷ்டியை வாங்கிக் கட்டிக் கொண்டு வெளியில் வந்து கூலிகளிடம் பெரிய அனுதாபி உள்ளவன் போல் “கனவான்களே கதர் கட்டுங்கள் ஏழைகள் பிழைப்பார்கள்” என்று கதர்ப் பிரசாரம் செய்து விட்டால் அவனை நாம் பெரிய தேசாபி மானி, ஏழைப் பங்காளன், தர்மப் பிரபு என்று மதித்து விடுகின்றோம்.

திரு. எஸ். சீனீவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, முத்தரங்க முதலியார் முதல் நாம் அநேகரை இப்படியே நம்பி ஏமாந்தோம். நம்மைப் பார்த்து நமது ஏழை களும் ஏமாந்தார்கள். நமது தொழிலாளிகளும் நாச மானார்கள்.

சென்னை மில்கள் தொழிலாளிகளும், நாகை ரயில்வே தொழிலாளிகளும் நாசமடைந்ததற்கு இன்றைய ‘தேசீயவாதிகள்’அல்லவா என்பதை சற்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் தேசீய இயக்கத்தின் யோக்கியதை விளங்கிவிடும்.

நிற்க, இன்றைய தினம் நம்மை ஆளுவதும் இந்த மாதிரி பணக்காரக் கொள்கை தானே தவிர வெள்ளைக்காரர் என்பதும் ஒரு அன்னியன் என்பதுமான கொள்கை ஆளவில்லை. இந்த வித்தியாசம் இன்னும் சற்று தெளிவாய் தெரிய வேண்டுமானால் சுதேச சமஸ்தானங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

என்ன கொள்கை அந்த நாட்டு மக்களை ஆளுகின்றது? எனவே ஜாதித் திமிரும், பணத்திமிரும் ஒழிக்கப்பட வேண்டியது தான். தேசீய இயக்கமானாலும். சுயமரியாதை இயக்கமானாலும், பூரண விடுதலை இயக்கமானாலும் அவை செய்ய வேண்டிய வேலைகளாகும். ஆகவே ஜாதித் திமிரும், பணத்திமிரும் ஒழிய மதமும் கடவுளும் ஒழிய வேண்டும்.

மதமும் கடவுளும் ஒழிக்கப்பட்ட நாட்டில்தான் ஜாதித் திமிரும், பணத் திமிரும் ஒழிந்து சமதர்மம் ஏற்பட்டு பணக்காரன் ஏழை என்கின்ற கொடுமை இல்லாமல் இருக்கின்றன என்பதை உணருங்கள். ருஷியாவை யாவது தள்ளி விடுங்கள். சைனா விடுதலையாகிக் கொண்டு வருகின்றதை பாருங்கள். கடவுள்களும் மதங்களும் முன்னால் ஒழிந்து கொண்டு வருவதும் பின்னால் சமதர்மம் வளர்ந்து கொண்டு வருவதும் பட்டப்பகல் போல் தெரிய வருகின்றது.

ஆகையால் காங்கிரசு காப்பாற்றப்பட வேண்டுமானால், அது விடுதலைக்கு ஏற்பட்டது என்று சொல்லப்பட வேண்டுமானால் சுயமரி யாதை இயக்கம் காங்கிரசில் போய் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமானால் காங்கிரசு இந்த நிபந்தனைக்கு உள்பட்டால் மாத்திரம் ராஜி பேசுவோம்.

அதாவது, “இந்தியா விடுதலை பெறுவதற்கு சமதர்மம் ஓங்குவதற்கு ஜாதியும், மதமும், கடவுள்களும் அழிக்கப்பட வேண்டியது முதன்மையான காரியம் என்பதை காங்கிரசு முக்கிய கொள்கையாய் கொள்ளுகின்றது.” என்று ஒப்புக் கொள்ளுமேயானால் அதில் சேருவோம். அதை உண்மையான தேசீயக்கிளர்ச்சி என்போம்.

அப்படிக்கில்லாமல் திரு. பாரதியார் அவர்கள் சொன்னது போல் ‘உப்பென்றும் சீனியென்றும் உள் நாட்டுச் சேலை என்றும் செப்பித்திரிவாரடி கிளியே செய்வதரியாரடி” என்று கொக்குபிடிக்கும் வித்தை போல் ‘காங்கிரஸ்’‘தேசீயம்’ ‘பொது எதிரி’ ‘அன்னியன்’ என்பன போன்ற வார்த்தைகள் பேசி காலங் கடத்துவது பாமர மக்களை ஏய்க்க உதவுமே அல்லாமல் அதில் காரியம் ஒன்றும் காண முடியாது.

ஆகையால் எந்தக் காரணம் கொண்டும் சுயமரியாதை இயக்க உண்மைத் தொண்டர்கள் இன்றைய அரசியல் கிளர்ச்சியில் சம்மந்தப்படக் கூடாதென்றே கருதுகின்றோம். பக்ஷாத்தாபமிருக்கின்றவர்கள் இளகிய மனசுக்காரர்கள் முதலியவர்கள் அதில் சேர்ந்து வேலை செய்வதை நாம் தடுக்கவில்லை, ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் மாத்திரம் வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

நிற்க, சுயமரியாதை இயக்கத்தார் எவ்வித சத்தியாக்கிரகமும் ஆரம் பிக்கவில்லை என்று ஒரு பெரிய பழி சொல்லப்படுவதற்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கின்றதை ஒப்புக் கொள்கின்றோம்.

நம்மைப் பொருத்த வரை நாம் அந்த முயர்ச்சியை விட்டு விட வில்லை. பல காரணங்கள் குறுக்கிட்டுக் கொண்டு வந்ததையும் பல அபிப்பி ராயங்களையும் மதிக்க வேண்டியிருந்தாலும் சற்று நிதானிக்க வேண்டியதாயிற்று.

ஆனாலும் அதற்கு அப்போது முன் வந்த அனேக தொண்டர்கள் இப்போதும் தயாராகவே இருக்கின்றார்கள். சமீபத்தில் துவக்கப்படும் என்றே நம்பி இருக்கின்றோம். ஆனால் காங்கிரசுடன் போட்டி போடுவதற் காக என்று ஏதாவது ஒரு காரியம் செய்தாக வேண்டுமென்பது நமக்கு உசிதமாய் தோன்றவில்லை.

இந்தியாவில் இன்று இருக்கும் ஆட்சி வெள்ளைக்கார ஆட்சியல்ல, ஜாதித்துவம், பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய மூன்று ஆட்சிதான் இந்தியாவை ஆட்சி செலுத்துகின்றது. இம்மூன்றையும் ஒழிக்க வெள்ளைக் கார ஆட்சி ஒழிப்பது என்பதையோ அன்னியன் ஆட்சியை ஒழிப்பது என்பதையோ ஆதாரமாய் கொண்ட காங்கிரஸ் அல்லது தேசீயம் என்ப தான அரசியல் கிளர்ச்சியால் முடியவே முடியாது! முடியவே முடியாது.

ஆனால் சுயமரியாதை தொண்டர் மகாநாட்டின் முதல் தீர்மான மானதும் திரு. அய்யாமுத்து அவர்களாலும் திரு. ஜி. வேலப்ப நாயுடு அவர்களாலும் பிரேரேபித்து ஆமோதிக்கப் பட்டதுமான, “ஜாதி மத பேதா பேதங்களும் முதலாளி தொழிலாளி என்ற பேதா பேதங்களும் ஏழை பணக்காரன் என்ற கொடுமையான சமூக நிலைமையும் மாறி உண்மையான சமதர்மம் ஏற்படுத்துவதே சுயமரியாதை இயக்கத்தின் முடிவான கொள்கை என்று இம்மகாநாடு ஊர்ஜிதம் செய்கின்றது” என்று தீர்மானித்த தீர்மானத்தை ஆதாரமாய்க் கொண்ட இயக்கமாகிய சுயமரியாதை இயக்கத்தால் தான் முடியும்.

ஆகையால் தான் நமது பொது நல உணர்ச்சியும், உர்ச்சாகத்தையும், ஊக்கத்தையும், தியாகத்தையும் வீண் காரியத்தில் செலவழித்து விடக் கூடாது என்று எச்சரிக்கை செய்யவே இதை எழுதுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 07.12.1930)

Pin It