periyar 352சகோதரி சகோதரர்களே!

நான் மகாநாட்டில் அதிகமாக பேசக் கூடாது என்று கருதியிருந்தேன். ஆகிலும் இந்தக் காரியத்தை நானே செய்ய வேண்டுமென்று நண்பர் சு.மு. ஷண்முகம் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தியதால் சில வார்த்தைகள் சொல்லி எனது கடமையைச் செய்கிறேன்.

இந்த மகாநாட்டை பிப்ரவரி மாதத்திலேயே நடத்தியிருக்க வேண்டியது. நானும் என் நண்பர்களும் மலேயா நாடு சுற்றுப் பிராயணஞ் சென்று இருந்ததால் அங்கிருந்து வந்த பிறகு போதிய சாவகாசத்தோடு இப்போது தான் நடத்த முடிந்தது.

மலேயா நாட்டிலிருந்து வந்ததும், மகாநாடு நடத்த எண்ணி மகாநாட்டுக்கு யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று நண்பர்களோடு கலந்து பேசுகிற போதே முதலில் திரு. ஜயக்கர் அவர்கள் பெயர்தான் மனதுக்குப்பட்டது. உடனே திரு. ஜயக்கர் அவர்களைக் கேட்டு சம்மதிக்கும்படிச் செய்யும் படியாக திரு. ஷண்முகம் அவர்கட்கு டில்லிக்கு தந்தி கொடுத்தேன்.

அதற்கு திரு. ஜயக்கர் அவர்கள் ஊருக்குப் போய் விட்டார். எழுதியிருக்கிறேன் என்று பதில் வந்தது. பிறகு திரு. ஷண்முகம் அவர்கள் கோவைக்கு வந்தபிறகு கோவையிலிருந்து திரு. ஜயக்கர் அவர்கள் சுயமரியாதை இயக்க சம்பந்தமான கொள்கைகளையும் அதன் சம்பந்தமான பிரசுரங்களையும் தெரிய ஆசைபடுவதாக தந்தி வந்தது.

வந்தவுடன் அதற்குப் பதிலாக சென்ற மகாநாட்டின் நடவடிக்கைகள் கொண்ட ரிவோல்ட்டு பத்திரிகை பிரதிகளில் சிலவற்றையனுப்பியதும், திரு. ஜயக்கர் அவர்கள் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டு, தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டார்.

அதற்குள்ளாக நண்பர்கள் பலர் இந்த நாஸ்திக இயக்கத்துக்கு திரு. ஜயக்கர் அவர்கள் தலைமை வகிக்க ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் வர மாட்டார் என்றும் இங்கிருந்தே சில விஷமக் கடிதங்கள் போயிருப்பதாகவும் பல நண்பர்கள் பேசிக் கொண்டார்கள்.

அவர் ஒப்புக் கொண்டதான சங்கதி பத்திரிகைகளில் வெளியானதும் இவ்விடமிருந்து நமது இயக்கத்தின் விரோதிகள் சிலர் திரு. ஜயக்கருக்கு அவரை வர வேண்டாமென்றும் வந்தால் கொல்லப்பட்டு விடுவார் என்றும் அவர் வருவதற்குள் கொட்டகையில் தீ வைக்கப்பட்டு விடுமென்றும் பல மாதிரியாகவெல்லாம் எழுதினார்கள். (இந்த மொட்டைக் கடிதம் ஈங்கூர் தபாலாபீசில் முத்திரையிடப்பட்டதாக திரு. ஜயக்கர் அவர்களால் காட்டப்பட்டது) இவ்வளவையும் பார்த்த பிறகு திரு. ஜயக்கர் அவர்கள் சற்றும் யோசியாமலும் தான் இது வரையிலும் போகாத ஒரு புது ஊருக்கும் அதுவும் முன்பின் கேட்டிராத ஒரு சிறு ஊருக்கு வரத் துணிந்ததென்றால் அது மிகவும் ஆச்சரியப் படத்தக்கதும் பாராட்டப்படத் தக்கதுமேயாகும்.

திரு. ஜயக்கர் அவர்கள் தனது முடிவுரையில் மொட்டைக் கடிதாசி களைப் பற்றியும் மிரட்டுதல் கடிதாசிகளைப் பற்றியும் சொல்லும் போது, இந்த கடிதங்களைப் பார்த்த பிறகுதான் தனக்கு இவ்வியக்கத்தின் பெருமை விளங்கிற்றென்றும் அப்படிப்பட்ட ஊருக்கு என்ன நேருவதாயிருந்தாலும் போய்விட்டுத் தான் வர வேண்டுமென்கின்ற எண்ணம் தனக்கு தோன்றிய தாகவும் சொன்னதிலிருந்து அம்மாதிரியான கடிதம் எழுதியவர்கட்கும் நம் மகாநாட்டின் சார்பாக முதலில் நன்றி கூறுவதற்குக் கடமை பட்டிருக்கிறோம்.

இரண்டாவதாக இவ்வளவுக்கும் துணிந்து வந்து மகாநாட்டை இவ்வளவு கௌரவமாய் நடத்திக் கொடுத்ததற்கு திரு. ஜயக்கர் அவர்கட்கு நமது என்றும் மறக்க முடியாத நன்றியறிதல் உரித்தாகுக.

சகோதரர்களே! திரு. ஜயக்கர் அவர்கள் மகாநாட்டிற்கு வந்து தலைமை வகித்து நடத்திக் கொடுத்தது மாத்திரமல்லாமல் அவர் நமது இயக்கத்தை பற்றியும், அதன் ஒவ்வொரு கொள்கையைப் பற்றியும், புகழ்ந்து பேசியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நாம் என்றும் மறக்கமுடியாததும், நமக்கு எவ்வளவோ பின்பலமானதுமான வார்த்தைகளுமாகும்.

அதோடு அவர் எத்தனை வித எதிரிகள் ஏற்படுவார்கள் என்றும் அவர்கள் எவ்வெவ்விதமான பழி வார்த்தைகளால் எதிர்ப் பிரசாரம் செய்வார்களென்றும் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் இந்த நாட்டிலே இருந்தவர் போல அவ்வளவு முன் யோசனையுடன் சொன்னது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. எல்லாவற்றையும் விட ஒன்றுக்கும் பயப்படாமல் தைரியத்துடனும் ஊக்கத்துடனும் தொடர்ந்து இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு போக வேண்டுமென்றும் எவ்வித எதிர்ப்பையும் லட்சியம் செய்யக் கூடாதென்றும் இதுதான் இந்தியாவுக்கு முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியமென்றும் அவர் எடுத்துச் சொன்னதிலிருந்து நமது மனம் எவ்வளவு உற்சாகத்தையடைந்திருக்கிற தென்பதையும் நம் எதிரிகள் மனம் எவ்வளவு வெட்கப்பட்டிருக்கும் என்பதையும் தங்கட்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் விட அவர் சொன்ன மற்றொரு விஷயத்தைப் பற்றி உங்கள் எல்லாரையும் விட நானே அதிகமாகப் பெருமை பாராட்டிக் கொள்ளுகிறேன்.

என்ன வென்றால், “இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு ஏடு ஏடாய் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்கின்ற வார்த்தைக்கு மேலானதாகவோ ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டு பிடிக்க முடியாது” என்று சொல்லியிருப்பதாகும்.

இந்த வார்த்தையானது நமது நண்பர்களிலேயே சிலர் “கொள்கைகளெல்லாம் நமக்குக் பிடிக்கின்றன. ஆனால் சுயமரியாதை என்கிற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை” என்று சொல்லுகிற மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கும் ஆரம்பத்தில் இப்படித்தான் சொன்னார்கள். ஆயினும் இப்பொழுது அதைத் தவிர வேறு பெயர் வைப்பது பொருந்தாதென்று அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள். அது போலவே தான் இந்தப் பெயரும் இப்பொழுது யாராருக்கு பிடிக்கவில்லையோ அவர்க ளெல்லாம் கூடிய சீக்கிரத்தில் இந்தப் பெயரைத் தங்களுடைய பிள்ளைகட்கும் வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த இயக்கமானது இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் வைத்து கொண்டு மூடப்பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டிக் கொண்டு மக்களைப் பரிகாசம் செய்து கொண்டிருப்பது போலவே என்றைக்கும் இருக்குமென்றோ அல்லது இவைகள் ஒழிந்தவுடன் இயக்கத்திற்கு வேலையில்லாமல் போய் விடுமென்றோ யாரும் கருதி விடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்சொன்னவைகளின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறது என்கின்ற தன்மையிருக்கும் வரையிலும் ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினிக்கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டு விட்டு வயிற்றைத் தடவிக் கொண்டு சாயுமான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற தன்மை இருக்கிற வரையிலும் ஒருவன் இடுப்புக்கு வேஷ்டி இல்லாமல் திண்டாடுவதும் மற்றொருவன் மூன்று வேஷ்டிப் போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதான தன்மை இருக்கின்ற வரையிலும், பணக் காரர்கள் எல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுய வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதி கொண்டிருக்கிற தன்மையிருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தே தான் தீரும். மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்வியக்கத்தையும் ஒழிக்க இந்த உலகத்தில் யாராலும் முடியாதென்பதே நமது உறுதி. ஆகையால் இதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

மற்றொரு எதிர்பாராத நன்மை என்னவென்றால் நல்ல கோடை காலத்தில் அதிலும் கோடை மூர்த்தண்யமான மத்திய காலமாகிய அக்கினி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கொடிய உஷ்ண காலத்தில் இந்த மகாநாடு இங்கு கூட்ட நேர்ந்தது பற்றி நான் வெகு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன், வருகிற ஜனங்கள் வெயிலின் கொடுமையினால் உஷ்ணந் தாங்காமல் கஷ்டப்படுவார்களென்றும் ஸ்நானஞ் செய்து கொள்வதற்குக் கூட வாய்க் காலில் தண்ணீரில்லாமல் சர்க்காரால் நிறுத்தப்பட்டு பெரிய கஷ்டம் ஏற்பட்டு விட்டதே என்றும் கவலைப்பட்டு தண்ணீர் சௌகரியத்திற்காக எவ்வளவோ கஷ்டமெடுத்துக் கொண்டிருந்தேன்.

அதற்காக சாமான்கள் எவ்வளவோ வாங்கிப் போட்டுமிருந்தேன். அப்படியிருக்க மகாநாடு நான்கு நாளிருக்கு முன் மழை ஆரம்பித்து இரவு பகலாய் ஒரு மணி நேரங்கூட சாவகாசமில்லாமல் பெய்து கொண்டிருந்ததைப் பார்த்து நான் மிகக் கவலைப்பட்டு விட்டேன்.

மழைப் பெய்வதைப் பார்த்து ஊரில் பலர் பரிதாபப்பட்டிருந்தாலும் அதாவது இவ்வளவு பெரிய முயற்சிகள் எடுத்துச் செய்கிற இந்தக் காரியம் நன்றாய் நடப்பதிற்கில்லாமல் போய் விடுகிறதே என்று பரிதாபப் பட்டிருந்தாலும் சிலர் சந்தோஷப்பட்டுக் கொண்டு “சாமியையும் மதத்தையும் பெரியார்களையும் வைதவர்கள் இதுவரையில் யாராவது உருப்படியாகியிருந் தாலல்லவா சுயமரியாதைக்காரர்கள் காரியமும் உருப்படியாகு”மென்றும் “மகா நாட்டை நடத்த விடாமற் செய்யவே கடவுள் இம்மாதிரி மழையைக் கொண்டு வந்து விட்டுவிட்டார்” என்றும் பல மாதிரி பேசினார்கள்.

இந்த வூரில் அநேகப் பெண்களும் இதை உண்மையென்றே நம்பி இதேப் பேச்சாக பேசிக்கொண்டுமிருந்தார்கள். ஆனால் நேற்று பகல் 11 மணியுடன் மழை நின்று ஈரோடு பட்டணத்தை நீலகிரி மலை போல் குளிர்ச்சியாக்கி வந்திருந்த ஜனங்கட்கெல்லாம் எத்தனை ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருந்தாலும் செய்ய முடியாத அவ்வளவு குளிர்ந்த காற்றையும் சௌகரியத்தையும் உண்டாக்கி விட்டது. தண்ணீர்க்காக கொண்டு வந்த பானைகள் அப்படியே கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கின்றன.

தண்ணீர் குழாய்களெல்லாம் மூடி வைக்க வேண்டிய வேலையே சரியாய் இருக்கின்றது. ஐஸ் கட்டிகள் எல்லாம் திரும்பிப் பார்ப்பாரற்று கரைகிறது. நமது எதிரிகள் சொல்வது போல் ஒரு சாமியே இருந்து அது இந்த மகாநாட்டையே நடக்க ஒட்டாமல் செய்ய வேண்டுமென்று கருதி மழையைப் பெய்யச் செய்திருக்குமேயானால் இன் றைய நிலையைப் பார்க்கிற போது அது ஒன்றா ஏமாந்து போயிருக்க வேண்டும் அல்லது அதற்கு புத்தி வந்து நாம் என்ன செய்தாலும் மகாநாடு நடந்து தான் தீரும் என்று கருதி நம்முடன் ஒத்துழைக்க முடிவு செய்து கொண்டிருக்க வேண்டும்.

பொதுவாக மழையினால் நமக்கேற்பட்ட நன்மை இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. தவிர அநேக காரியங்களில் வந்திருந்த பிரதிநிதிகளை சரியானபடி கவனிக்க முடியாமல் எவ்வளவோ குறைகள் ஏற்பட்டிருக்கலாம். (ஒன்றுமில்லை என்கிற சப்தம்) என்ன இருந்தாலும் மன்னித்துக் கொள்ள வேண்டும்.

திடீரென்று மகாநாட்டை பதினைந்து நாள் முன் கூட்டியே நடத்த வேண்டி நேர்ந்ததால் சரியானபடி விளம்பரமும் செய்யாததால் வேறு பல உத்சவம், பண்டிகை, கல்யாணம் ஆங்காங்கு நேர்ந்திருந்தாலும் எவ்வளவு ஜனங்கள் வரக்கூடுமென்று எதிர் பார்த்திருந்தோமோ அதற்கு இரட்டிப்பாகவே வந்து விட்டதால் எங்களால் சரியானபடி கவனிக்கப்பட்டிருக்க கூடுமென்ற நம்பிக்கையில்லை.

ஆனால் எங்களுடைய அன்பிலா வது, ஆசையிலாவது, கவலையிலாவது ஒரு சிறிதும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறோ மென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் மகாநாட்டுக்கு நன்கொடையளித் தவர்களுக்கும் நன்றியறிதலை செலுத்துகிறோம்.

இரண்டு மூன்று நாள்தான் வெளியில் வசூலுக்கு போனோமானாலும் போன இடங்களில் நாங்கள் எதிர்பார்த்த தொகைக்கு ஒரு சிறிதும் குறையாமல் எங்கட்கு தாராளமாகக் கிடைத்தது. முன்றே ஊர்களில் தான் நாங்கள் வசூல் செய்தோம். அவ்வளவும் உயர் திருவாளர்கள் சி.எஸ். இரத்தினசபாபதி அவர்களாலும் கே.ஏ. ஷேக் தாவூத் அவர்களாலும் பழனிச்சாமி அவர் களாலேயுமே வசூல் செய்யப்பட்டதாகும்.

சில இடங்கட்கு நாங்கள் வசூலுக்கு வரவில்லையென்று மனஸ்தாபப்பட்டு கொண்டதாகவும் கேள்விப்பட்டோம். இந்த காரியத்துக்கு எவ்வளவு போதுமென்று கருதினோமோ அவ்வளவுடன் நின்று கொண்டோம். திரு. பி. எஸ்.ஜி. அண்டு சன்ஸ் வெங்கட்டசாமி நாயுடு அவர்கள் நெற்றியில் பெரிய நாமத்தை போட்டுக் கொண்டு கொட்டகைக்குள் வரும் போது நீங்கள் எல்லோரும் அவரைப் பார்த்து சிரித்தீர்கள்.

அவர்கள் இந்த ஜில்லாவில் ஒரு பெரிய குடித்தனக்காரரும், மில் மானேஜரும் அதாவது நூல்யந்திர சாலை மானேஜருமாவார். அவர்கள் பல பள்ளிக் கூடங்களையும் தர்ம கைத் தொழிற் சாலைகளையும் அநாதை ஆசிரமங்களையும் வைத்து நிர்வகித்து வருகிறவர். நமது மகாநாட்டுச் செலவுக்கு வசூலுக்கு போனவுடன் என்ன தொகை கேட்டோமோ அதை யாதொரு பதிலும் சொல்லாமல் ரூ. 250க்கு கையெழுத்துப் போட்டு ரூபாயை கொடுத்து விட்டார்கள்.

நமது கொள்கைகளில் அனேக விஷயங்களில் மிகப் பற்று கொண்டவர். காரியத்திலும் நடத்திக் கொண்டு வருகிறார். சத்தியாக்கிரகம் முதலிய காரியங்கட்கு இன்னும் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள், இந்த ஜில்லாவில் இவர்களைப் போலவே இன்னும் அநேக கனவான்கள் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனதினால் பெரிய நாமத்தைப் பார்த்து அவர் ஏதோ அந்த நாமத்தால் ஏமாந்தவர் என்று கருதி விடாதீர்கள். உங்களை ஏமாற்றத்தான் அவர் அவ்வளவு பெரிய நாமம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முடிவாக இம் மகாநாட்டிற்கு உதவி செய்து பெரிதும் கஷ்டப் பட்டு உழைத்த பல பெரியார்களைப் பற்றியும் இந்த சமயத்தில் சில வார்த்தைகள் சொல்லி அவர்களுக்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

முதலாவதாக நமது இயக்க ஸ்தாபனத் தலைவராகிய உயர்திரு டபுளியூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் அவர்கள் இம்மகாநாடு விஷயத்தில் செய்த உதவிக்கும் அடிக்கடி இங்கு வந்து ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் அளித்த ஊக்கத்திற்கும் இயக்கத்தின் சார்பாக அவருக்கு நன்றியறிதல் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.

அது போலவே வரவேற்புத் தலைவர் திரு. ஆர்.கே. ஷண்முகம் அவர்களும் அடிக்கடி இங்கு வந்து விஷயங்களை கவனித்து அப்போதைக் கப்போது நமக்கு வேண்டிய யோசனைகளை சொல்லி வந்ததுடன் தலைவர் சம்பந்தமான காரியங்கள் கடிதப்போக்குவரத்துகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டு வரவேற்பு கமிட்டியை நடத்தி கொடுத்ததற்கு அவருக்கும் நமது நன்றியறிதல் உரியதாகும்.

பிறகு இம்மகாநாட்டுக்கு காரியதரிசிகளாய் இருக்க சம்மதித்து முழுப் பொறுப்பையும் தங்கள் மீது போட்டுக் கொண்ட உயர்திருவாளர்கள் கோவை சேர்மேன் ஊ.ளு. இரத்தினசபாபதி ஈரோடு சேர்மேன் கே. எ. ஷேக்தாவூது சாயபு ஆகியவர்களின் உதவிக்கு தக்க நன்றியறிதல் செலுத்த எனக்கு வார்த்தைகளே கிடைப்பது அருமையாயிருக்கின்றது.

சுருக்கமாகச் சொல்வதனால் இந்த மகாநாட்டைப் பொருத்த வரையில் அவ்விரு கனவான்களும் இல்லையானால் இந்த மகாநாடே இவ்வளவு வெற்றிகரமாய் நடந்திருக்காது என்றே சொல்ல வேண்டும். இதில் கொஞ்சங் கூட முகஸ்துதியோ கூட்டிச் சொல்வதோ இல்லை என்பதை நம்புங்கள்.

அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தையும் சொல்வதனால் சட்ட சபையில் கேள்விகள் சரமாரியாய் புறப்பட்டு விடும். ஆனால் அதற்கெல்லாம் இவ்விருவர்களும் பயந்தவர்கள் அல்ல. டிஸ்ட்ரிக்ட் போர்டு உதவி இன்ஜினியர் திரு. மகா வீரப்பா அவர்களும் ஓவர்சியர் திரு. விஸ்வநாதய்யர் அவர்களும் 15, 20 நாட்களாக தங்கள் ஒழிவு நேரங்களையெல்லாம் இரவும் பகலும் இக் கொட்டகைக்கே செலவிட்டார்கள்.

கொட்டகை விஷயத்தில் நான் சிறிது கூட கவலை எடுத்துக் கொள்ளவேயில்லை. அவர்கள் கைப்பட பந்தல் கால்கள் நட்டதும் மற்ற வேலைகள் செய்ததுமான காரியங்கள் எப்போதும் மறக்க முடியாததாகும்.

அது போலவே முனிசிபல் அதிகாரிகளும் செக்ரிடெரி திரு. ராமசாமி முதலியார், ஓவர்சியர் திரு. நாராயணசாமி முதலியார், பிட்டர் திரு. பொன்னுசாமி, சுகாதார இன்ஸ்பெக்டர்கள் திருவாளர்கள் ராமசாமி அய்யர் வேலுச்சாமி பிள்ளை ரோட்டு ஓவர்சியர் சேஷய்யங்கார் முதலியவர்களும் மற்றும் முனிசிபல் சிப்பந்திகளும் கழனியாயிருந்த இந்த இடத்தையும் மிக்க புதராயிருந்த பாதைகளையும் மிக்க ஆபாசமாயிருந்த அசிங்கங்களையும் இவ்வளவு தூரம் சிங்காரத் தோப்பு போல ஆக்கி வைத்ததுடன் ரோட் விஷயங்களிலும் சுகாதார விஷயங்களிலும் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் கவலைகளும் மிகவும் மிகவும் போற்றக் கூடியதாகும்.

மற்றபடி சாப்பாட்டு விஷயமாய் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு மிக்க திருப்திகரமாய் நடத்திக் கொடுத்த திருவாளர் எம்.எஸ். முத்துக் கருப்பஞ் செட்டியாரவர்கள் செய்த உதவியைப் பற்றி நான் உங்களுக்கு அதிகமாய் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

பிரதிநிதிகள் எல்லோரும் அவர்கள் பெயரையே புகழ்ந்து சொல்லிக் கொண்டிருப்பதை நான் காதாரக் கேட்டேன். மகாநாட்டு நடவடிக்கைகள் எப்படி இருந்தாலும் வந்த பிரதிநிதிகளுக்கு தக்க ஜாகையும் நல்ல சாப்பாடும் போட்டால் போதுமென்றுதான் நான் முதலில் நினைத்தேன்.

அந்த காரியம் அவர் ஒப்பு கொண்டதால் எனக்கு ஒருபெரிய விடுதலை ஏற்பட்டது. இந்த ஊரில் நடக்கும் எந்த காண்பரன்சிலும் கொள்கை அவருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சாப்பாட்டு வேலையை அவர் ஒப்புக் கொள்வதே வழக்கம்.

அதற்குத் தகுந்தபடி கஷ்டப்பட்டு அதை குறைவில்லாமல் நடத்திக் கொடுப்பதும் அவர்கள் வழக்கம். அதுபோலவே இந்த மகாநாட்டில் ஏற்பட்ட வேறு குறைகள் ஏதாவது இருந்திருந்தாலும் கூட அவைகளையெல்லாம் திரு. முத்துக் கருப்பஞ் செட்டியாருடையவும் இவரது நண்பர்களுடையவும் முயற்சி மறைத்து விட்டதென்றே சொல்லுவேன்.

ஆதலால் அவருக்கு நமது நன்றியறிதல் என்றும் உரியதாகுக. வாலண்டியர்கள் தொண்டர்கள் விஷயத்திலும் அது போலவே திரு. முத்து கருப்பஞ் செட்டியார் அவர்களின் தம்பி மு. ச. சுப்பண்ணன் அவர்கள் தொண்டர் இலாக்கா காரியதரிசியாகவும் திருவாளர்கள் வரதப்பன் ஆறுமுகம் தொண்டர் தலைவராகவும் இருந்து தொண்டர்களை அன்பாய் நடத்தினதும், தொண்டர்களும் அதற்கு கட்டுப்பட்டு சிறிதும் சோம்பலும் எவ்வித வேலையிலும் வெறுப்பில்லாமலும் நடந்து கொண்டதற்கு மிக மிக பாராட்டக்கூடியதாகும். இவ்விஷயத்தில் நான் எதிர்பார்த்ததற்கு மேல் பல வழிகளிலும் அதிகமான உதவிகளையே அவர்களிடமிருந்து அனுபவித் திருக்கிறோம்.

மற்றபடி பந்தல் சிங்காரிப்பு, லைட்டுகள், கண்காக்ஷி முதலியவை களின் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு நடத்திக் கொடுத்த திருவாளர்கள் மாயவரம் நடராஜன், சாமி சிதம்பரனார், ராமையா, சின்னைய்யா, லிங்கம், அழகிரிசாமி, காளியப்பன், பல்லடம் ராமசாமி, சிவானந்தம், செகப்பண்ணன், கேசவ ஐயா, சிக்கய்ய நாயக்கர், சூ. ராமசாமி நாயக்கர், முதலியவர்களின் உதவி குறிப்பிட்டு, இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாததாகும்.

திரு. அய்யாமுத்து, ளு. ராமநாதன் இவர்களின் உதவி தனியாக போற்றத்தக்கதாகும். சமையல் வேலைக்கென்று விருது நகரிலிருந்து உயர்திரு செந்தில்குமார நாடார், ஏ.ஏ. ராமசாமி, திருவண்ணாமலை ஆகிய வர்களால் அனுப்பிக் கொடுக்கப்பட்ட நாடார் சமையல்காரர்கள் செய்த சமையல் பெருமையும் ருசி பாகமும் நீங்களே நேரில் அறிந்ததாதலால் அதைப்பற்றி நான் பேசாமல் அச்சமையற் காரர்களுக்கு உங்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி செலுத்துகிறேன்.

சமையல் பரிமாறின பண்டாரங்கள், ஆதிதிராவிடர்கள், கிருஸ்துவ மகமதியர்களும், மாசிலாமணி, மாரிமுத்து நாடார், மாரிமுத்து செட்டியார் ஆகியவர்களுக்கும் நமது நன்றி உரியதாகுக. மற்றும் மகாநாட்டிற்கு தங்கள் மனைவியார்களை அழைத்துக் கொண்டு வந்த கனவான்களுக்கும் நன்றி செலுத்துகின்றேன்.   

கடைசியாக நமது இயக்கத் தையும் இதன் உணர்ச்சிகளையும் நேரில் இருந்து பார்த்த திரு. ஜயகர் அவர்கள் இதை வெளி மாகாணங்களிலும் பரவ முயற்சிப்பார்கள் என்று உங்கள் சார்பாய் வேண்டிக் கொண்டு என் வார்த்தையை முடிக்கின்றேன்.

குறிப்பு: 11.05.1930 இல் ஈரோடு சுயமரியாதை மாநாட்டு நிறைவு நன்றியறிதல் உரை.

(குடி அரசு - சொற்பொழிவு - 01.06.1930)

Pin It