Periyar 235திருச்சியில் இம்மாதம் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நீலாவதி- ராமசுப்பிரமணியம் திருமணத்தின் போது ஒரு கேள்வி பிறந்தது. அதாவது “ஒரு மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா?” என்று கூட்டத்தில் ஒருவர் எழுந்து கேட்டார்.

அதற்கு அப்போதே பதில் சொல்லப்பட்டதானாலும், இந்த விஷயத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவருக் குள்ளாகவே பலருக்கு அம்மாதிரி மறுமணம் செய்து கொள்வது தவறு என்கிற அபிப்பிராயமும், சந்தேகமும் இருப்பதாலும் பொது ஜனங்களிலும் பலர், “மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்வது சீர்திருத்தக் கொள்கைக்கு விரோதம்” என்று கருதுவதாலும், இதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை இவ்வாரம் தலையங்கமாக எழுதலாம் என்று கருதி தொடங்குகின்றோம்.

முதலாவது இந்தக் கேள்வியைப் பற்றிக் கவனிக்கும் முன்பு மணம் என்பது என்ன? என்பதை முதலில் விளக்கிக் கொள்ள வேண்டும். மணம் என்பதை நாம் மணமக்கள் சௌகரியத்திற்காக என்று செய்து கொள்ளப்படும் ஒரு ஒப்பந்த ஏற்பாடு என்றுதான் கருதுகின்றோம்.

அதில் இருவர்களுடைய சுயேட்சையும் சேர்ந்தோ அல்லது தனித்தனியோ கட்டுப்படுத்தும் எவ்வித கொள்கைகளும் இருக்கக் கூடாது என்றும் கருதுகின்றோம். இம்மாதிரி கருதுவது சரியா, தப்பா என்று முடிவு செய்வதிலிருந்தே மேற்கண்ட கேள்விக்குச் சிறிது சமாதானமும் கிடைத்துவிடும்.

நிற்க, இன்று உலகத்தில் இயற்கை உணர்ச்சியிலும், அநுபவத்திலும் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கையின் கீழும் மறுமணம் என்பது எங்காவது தடுக்கப்பட்டிருக்கின்றதா என்பதை நம்மால் அறியமுடியவில்லை. அது மாத்திரமல்லாமல் மண விஷயமாய் ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களிலும், எந்த மத விஷயமான கொள்கைகளிலும் மறுமணம் என்பது தடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.

இந்து மதத்தில் அறுபதினாயிரம் பெண்கள் வரையிலும் மகமதிய மதத்தில் சுமார் 10 பெண்கள் வரையிலும், கிறிஸ்தவ மதத்தில் அளவு குறிப்பிடாமல் எவ்வளவு பெண்களை மணம் செய்து கொள்ள நேர்ந்தாலும் அதுவரையிலும் மணம் செய்து கொள்ள இடமிருக்கின்றது.

இவற்றுள் கிறிஸ்து மதத்தில் மாத்திரம் திருமணத்தை ரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்ளலாம் என்பதாகவும், அந்தப்படி ரத்து செய்து கொள்வதிலும் இன்னின்ன நிபந்தனைகளின்படிதான் செய்து கொள்ளலாம் என்றும் காணப்படுகின்றது.

அதாவது சமுதாய சம்மந்தமான ஒரு பந்தோபஸ்தை உத்தேசித்து மாத்திரமே அல்லாமல் கொள்கைக்காக அல்ல என்று புரியும் படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இவ்வளவுதான் மறுமண விஷயத்தில் மற்ற மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள வித்தியாசம்.

எனவே ஒன்றுக்கொன்று நிபந்தனைகளிலும் திட்டங்களிலும் தான் வித்தியாசமே தவிர மற்றபடி மறுமணக்கொள்கையை மதங்களின் படி பார்த்தால் எந்த மதமும் ஆட்சேபித்திருப்பதாய் தெரியவில்லை.

அன்றியும் இந்து மதத்தில் கடவுள்களே பல மணங்கள் செய்து கொண்டதாகவும் மற்றும் வைப்பாட்டிகளை வைத்திருப்பதாகவும், மத ஆதாரங்களில் காணப்படுவதுடன் அக்கடவுள்களை அந்தப்படியே அதாவது பல மனைவிகள், வைப்பாட்டிகள் ஆகியவைகளுடன் பூசை உற்சவம் முதலியவைகள் செய்தும் வருகின்றார்கள்.

மகமதிய மதத்திலும் திரு. மகமது நபி அவர்களே பல மனைவிகளுடன் இருந்ததாக ஒப்புக் கொள்ளப்படுகின்றன. ஆகவே இதை மறுப்பவர்களோ இம்மாதிரி கடவுள்களையோ, திரு. நபிகளையோ குற்றம் சொல்லுகின்றவர்களோ ஒருக்காலும் தங்கள் மதத்தின் பேரால், மத சம்மந்தமான கட்டளைகளின் பேரால் மறுக்கின்றோம் என்று சொல்லிக் கொள்ள முடியாது.

அந்தப்படி யாராவது ஒருவர் தன்னை இந்துவென்று சொல்லிக் கொண்டு இம்மாதிரி அதாவது ஒரு மனிதன் மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்பாரேயானால் அப்படிப்பட்டவரை நாம் மதத்தை விட தன்னுடைய பகுத்தறிவையோ அல்லது அநுபவ சவுகரியத்தையோ அல்லது வேரேதாவது ஒரு கொள்கையோ முக்கியமாகக் கருதிக் கொண்டு இம்மாதிரி கேள்வி கேட்க வந்திருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும்.

ஆகவே அக்கேள்விக்காரர் தன்னை இந்து என்று கருதிக் கொண்டு கேள்வி கேட்பதை விடப் பகுத்தறிவுக்காரர் என்றோ அநுபவக் கொள்கைக்காரர் என்றோ கருதிக் கொண்டு கேள்வி கேட்கிறார் என்று அறிந்தோமானால் அது விஷயத்தில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன் அவருக்கு நியாயம் மெய்ப்பிக்கும் விஷயத்தில் நமக்குச் சிறிதும் கஷ்டமில்லை என்றே எண்ணுகின்றோம்.

நிற்க, பொதுவாக ஒரு மனிதனுக்கு தன் முதல் பெண்சாதி

(1) செத்துப் போன காலத்திலும்,

(2) மற்றொரு கணவனிடம் ஆசை கொண்டு வெளிப்பட்டு விட்ட காலத்திலும் மறுமணம் செய்து கொள்ளுவதை யாரும் குற்றம் சொல்லுவதில்லை. அதுபோலவே

(3) தீராத கொடிய வியாதிக்காரியாயிருக்கும் காலத்திலும் மறுமணம் செய்து கொள்ளுவதை யாரும் ஆட்சேபனை செய்வதில்லை

(4) பயித்தியகாரியாய் புத்தி சுவாதீனமில்லாமல் போய் விட்ட காலத்திலும் யாரும் ஆட்சேபனை செய்வதில்லை.

ஆகவே பகுத்தறிவுக்காரரும் அனுபவக் கொள்கைக்காரர்களும் மேற்கண்ட முதலாவது தவிர மற்ற 3 சந்தர்ப்பங்களில் மனைவியிருக்க மறுமணம் செய்யப்படுவதை ஆட்சேபிக்க மாட்டார்கள். இனி ஐந்தாவது, ஆறாவது முதலியவைகளாகப் பல விஷயங்களைக் கவனிப்போம்.

(5) மனைவி அறியாமையாலோ, முரட்டுத்தனமான சுபாவத்தாலோ புருஷனை லட்சியம் செய்யாமல் ஏறுமாறாய் நடந்து கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம்.

(6) புருஷன் பெண்ணின் மனத்திற்குத் திருப்திப்படாததாலோ அல்லது எந்தக் காரணத்தாலோ புருஷனிடம் பெண்ணுக்கு அன்பும் காதலும் இல்லாமல் வெறுப்பாயிருப்பதாக வைத்துக் கொள்வோம்.

(7) மேற்கண்ட குணங்களுடன் அடிக்கடி தாய் வீட்டுக்குப் போய் விடுவதாக வைத்துக் கொள்ளுவோம்.

(8) புருஷனுடைய கொள்கைக்கு நேர் மாற்றமான கொள்கையுடன் புருஷன் மனம் சதா சங்கடப்படும்படி பிடிவாதமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர் என்று வைத்துக் கொள்ளுவோம்.

(9) செல்வச் செருக்கால் புருஷனைப் பற்றிய லக்ஷியமோ கவலையோ இல்லாமல் நடந்து கொள்ளுகிறவள் என்று வைத்துக் கொள்ளுவோம். இவைகள் மாத்திரமல்லாமல் மற்றும் இது போன்ற குணங்கள் உள்ள மனைவியிடம் அகப்பட்டுக்கொண்ட கணவன் கதியென்ன ஆவது? என்பதைக் கவனிக்க வேண்டியது கேள்வி கேட்பவர்கள்(அதாவது அனுபவ கொள்கைக்காரர்கள் என்பவர்களின்) முக்கியக் கடமையாகும்.

இவை தவிர புருஷனுக்கு 12 வயதிலும் பெண்ணுக்கு 10 வயதிலும் மற்றும் மணமக்களுக்கு இதிலும் கீழான வயதிலும் பெற்றோர்களாலோ, மற்றோர்களாலோ திருமணம் செய்யப்பட்டிருப்பதால் அவைகள் மணமக்கள் அனுசரிக்க வேண்டிய தர்மங்களுக்கு கட்டுப்பட்ட மணங்களாகுமா? அல்லது திருமணங்கள் செய்து வைத்தவர்கள் அநுசரிக்க வேண்டிய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவைகளாகுமா? என்ப தும் கேள்வி கேட்கின்றவர்கள் அதாவது பகுத்தறிவுகாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.

இந்தக் காரணங்கள் தவிர மற்றும் எது எப்படி இருந்தாலும் மனதுக்குப் பிடிக்கவில்லை, அன்புக்குச் சிறிதும் பாத்திரமில்லை, காதலுக்குச் சிறிதும் இஷ்டமில்லை, வாழ்க்கைத் திருப்திக்கும் இன்பத்திற்கும் சிறிதும் பயன்படவில்லை என்று மணமகன் முடிவு செய்து கொள்ளத் தகுந்த மணமகளாய் அமைந்து விட்டால் அப்போது மணமகளின் கடமை என்ன? என்பதை மதக்கட்டுப்பாட்டுக்காரரும், அநுபவக் கொள்கைக்காரரும், பகுத்தறிவுக்காரரும், பாமர பொது ஜனங்களும் சேர்ந்து கவனித்துப் பார்க்க வேண்டிய காரியமாகும்.

கடைசியாக இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, இவைகளைப் பற்றிய யோசனையே சிறிதுமின்றி மற்றொரு புறம் “எப்படி இருந்தாலும் பொருத்துக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் தான் வேண்டும், ஒருக் காலமும் மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்ளக்கூடாது” என்று ஒருவர் சொல்லுவாரானால் அப்படிச் சொல்லுகின்றவர் எந்தக் கொள்கையின் மீது அல்லது என்ன அவசியத்தைக் கோரி அல்லது என்ன நியாயத்தை உத்தேசித்து எவ்வித அநுபவத்தை அனுசரித்து அல்லது எந்தப் பகுத்தறிவைக் கொண்டு இப்படிச் சொல்லுகின்றார்கள் அல்லது எதிர்பார்க்கின்றார்கள் என்பது விளக்கப்படவேண்டும்.

ஏனெனில் அப்பொழுதுதான் அது கவனிக்கப்படத்தக்கதாகும். ஏனெனில் சாதாரணமாகப் பேசுவோமானால் வெகு சாதாரண பாமர மக்கள் என்பவர்களும் கூட இக்காலத்தில் ஒரு விஷ யத்தைப் பற்றிப் பேசும் போது அது “சுருதி, யுக்தி, அநுபவம் ஆகிய மூன் றிற்கும் பொருத்தமாயிருக்கின்றதா” என்று கேட்பது எங்கும் சகஜமாயிருப்பதைப் பார்க்கின்றோம்.

அன்றியும் அம்மூன்று வார்த்தைகளின் அமைப்பும் முதலில் குறிப்பிட்ட சுருதிப்படி (அதாவது நமக்கு முந்தி இருந்த அநுபவசாலிகளின் அபிப்பிராயங்கள் என்கின்ற முறையில் கவனிக்க வேண்டும் என்கின்ற தத்துவம் கொண்டதானாலும் அப்படிப்பட்ட அநுபவசாலிகளின் அபிப்பிராயம் எவ்வளவு) சரியானதென்று சொல்லப்பட்டாலும் கூட மற்றும் அவ்விஷயமானது யுக்திக்கு (அதாவது நமது பகுத்தறிவுக்கு)ம் ஒத்ததாயிருக்கின்றதாவென்று கவனிக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தையே கொண்டு யுக்தி என்பதை இரண்டாவதாக வைக்கப் பட்டிருக்கின்றதையும் பார்க்கின்றோம்.

அப்படியும் அதாவது யுக்திக்கும் பொருத்தமானதாகயிருந்து விட்டதாகச் சொல்லப்படுவதானாலும் அது அநுபவத்திற்கு (அதாவது நடைமுறையில் கொண்டு செலுத்த ஏற்றதாயிருக்கின்றதா? என்று கவனித்துப் பார்க்க வேண்டும் என்கிற தத்துவத்தை வைத்தே அநுபவம் என்பதை முடிவில் மூன்றாவதாக வைக்கப் பட்டிருக்கின்றது என்பது யாவருக்கும் விளங்கும்.

ஆகவே ஒரு மனிதன் “ஒரு மனைவி இருக்கும்போது மறுமணம் செய்து கொள்ளக் கூடாது” என்பது இந்த மேற்கண்ட மூன்று பரீட்சைகளில் எந்த பரீட்சைக்கு விரோதமானது என்று கேட்கின்றோம். நிற்க, திருமணத்தில் மணமகனுக்கு மணமகளை வாழ்க்கைத் துணையென்று கருதுகின்றோம்.

இன்னிலையில் மேலே ஆரம்பத்தில் சொல்லப்பட்ட 9 - வகையில் பட்ட குற்றமான குணங்கள் அமைந்த மணமகள் ஒரு மணமகனுக்கு அமையப்பட்டு விட்டால் அது வாழ்க்கைத்துணையா அல்லது வாழ்க்கைத் தொல்லையா என்பதை முதலில் கண்டிப்பாய்க் கவனிக்க வேண்டும்.

வேடிக்கையாக வெளியிலிருந்து பேசுகின்றவர்களை உண்மையறியாமல் நிலையறியாமல் சிறிதும் பொறுப்பற்ற முறையில் பாமர மக்களின் ஞானமற்ற தன்மையை தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாய் குற்றம் சொல்லக் கருதிக் கொண்டு “மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா” என்று யார் வேண்டுமானாலும் பேசிவிடலாம்.

அதாவது “மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்வது அக்கிரமம், அயோக்கியத்தனம்” என்பதாகச் சொல்லி விடலாம். ஆனால் அந்தப்படி செய்து கொண்டது தப்பா, அல்லது இந்தப் படி சொன்னது தப்பா என்பதையும் பகுத்தறிவைக் கொண்டாவது அநுபவத்தன்மையைக் கொண்டாவது இந்தப்படி பேசுகின்றோமா, நினைக்கின்றோமா- இவ் விஷயத்தில் நாம் பிரவேசிக்கின்றோமா என்று நினைத்துப் பார்த்தால் கடுகளவு அறிவுடையவனுக்கும் ஒருக்காலமும் உண்மை விளங்காமற் போகாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

கடைசியாக ஒன்று சொல்லுகின்றோம். ஒரு மனிதன் ஒரு விஷயம் தனக்கு இஷ்டமில்லை என்றோ அல்லது இஷ்டமாயிருக்கின்றதென்றோ இன்ன காரியம் செய்ய தனக்கு உரிமை இருக்க வேண்டுமென்றோ உரிமை இருக்கக்கூடாது என்றோ கருதுவதற்கு அருகதை உடையவன்தானா அல்லது மற்றவர்களா என்பதும் இம்மாதிரி விஷயங்களில் முடிவான அபிப்பிராயத்திற்கு வர அவனவனுக்கு உரிமை இல்லையா என்பதையும் கவனிக்க வேண்டியது உண்மையான விடுதலையும் சுதந்திரம் கோருகின்றவர்களின் கடமையுமாகும்.

நிற்க, வாஸ்தவத்திலேயே அன்பும், காதலும் இல்லாத அல்லது தனக்கு ஏற்படாத ஒரு இடத்தில் மனிதன் எப்படி வாழ்வது? மக்களுடைய அன்புக்கும், காதலுக்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் தான் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணும் சேர்ந்து மணம் (வாழ்க்கை ஒப்பந்தம்) செய்து கொள்வதா? அல்லது மணம் செய்து கொண்டதற்காக என்று அன்பையும், காதலையும், இன்பத்தையும், திருப்தியையும் தியாகம் செய்வதா? என்பதை ஜீவசுபாவமுடைய ஒவ்வொரு வரையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

உலகில் உள்ள மூடப்பழக்கவழக்கங்களில், அர்த்தமற்ற கட்டுப்பாடுகளில் - சிக்கிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பது என்பது சுலபமான காரியமல்லவானாலும் அவ்விதக் கட்டுப்பாடுகளையும், கஷ்டங் களையும் ஒழிக்கவென்றே ஏற்பட்ட ஸ்தாபன நடவடிக்கைகளையே மூடப் பழக்க வழக்கப்படியும் குருட்டு நம்பிக்கைப்படியும் செய்யவில்லை என்று குற்றம் சொன்னால் சொல்லுபவர்களுக்கு அறிவு என்பது ஏதாவது இருக்கின்றதாவென்று தான் கருத வேண்டியிருக்கின்றது.

ஏனெனில் இவ்வியக்கம் அதற்காகவே ஏற்பட்டிருக்கும்போது அதன் நடவடிக்கை கள் வேறு எப்படி இருக்க முடியும். ஆகையால் இவ்வித யுக்திக்கும் அனுபவத்திற்கும், மனித சுதந்திரத்திற்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் விரோதமான கொள்கைகள் எதற்காக காப்பாற்றப்பட வேண்டும் என்னும் விஷயங்களை அன்பர்கள் நடுநிலையில் இருந்து நேர்வழியில் சிந்தித்துப் பார்ப்பார்களாக.

நிற்க, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளாகவே மறுமண விஷயத்தில் உள்ள அதிர்ப்தியைப் பற்றிச் சற்றுக் கவனிப்போம்.

சுயமரியாதை இயக்கத்தில் கலியாண ரத்து என்பதும் ஒரு திட்டமாகும். அந்தப்படியே செங்கற்பட்டு மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஈரோடு மகாநாட்டில் அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே மணம் செய்து கொண்ட மணமக்கள் அந்தப்படியே கணவன் மனைவியையோ, மனைவி, கணவனையோ கலியாண பந்தத்திலிருந்து நீக்கிவிட அல்லது நீங்கிக் கொள்ள உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டாய்விட்டது.

இந்தப்படி ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கை அமுலில் கொண்டு வரச் சட்ட சம்பந்தமான இடையூறு யாருக்காவது எந்த மதத்திற்காவது இருக்குமானால் அதற்காக சட்டத்தை யுத்தேசித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா? அல்லது சட்டங்களைக் கவனிக்காமல் நியாயம் என்று தோன்றிய படி நடந்து கொள்ளுவதா? என்பதைக் கவனித்துப் பார்த்தால் அவர்களது அதிர்ப்திக்குச் சிறிதும் இடமிருக்காது என்றே கருதுகின்றோம்.

உதாரணமாக சுயமரியாதைக் கொள்கைப்படி செய்யப்படும் திரு மணங்களிலும் சில சட்டப்படி செல்லக் கூடாதவைகளாகயிருந்தாலுமிருக்கலாம். அதாவது:-

“மணமக்கள் இருவரும் வேறு வேறு ஜாதிகள்” என்று சொல்லப்படும் கலப்பு மணங்களும், மூடப் பழக்க வழக்கங்களும் அர்த்தமற்றதும் அவசியமற்றதுமான சடங்குகள் செய்யப்படாத சில திருமணங்களும் செல்லுபடியற்றதாகவானாலும் ஆகலாம் என்று சட்ட வல்லவர்கள் சொல்லுவதாகக் கேள்விப்படுகின்றோம்.

அப்படியிருந்தாலும் கொள்கையிலிருக்கும் அவாவை உத்தேசித்து சட்டத்தைக் கவனியாமலும், அதனால் ஏற்படக் கூடிய பலன்களை லட்சியம் செய்யாமலும், எல்லாவற்றிற்கும் துணிந்து பலர் மணம் செய்து கொள்ளுவதை நாம் பார்க்கின்றோம். ஆகவே மறுமண விஷயத்தில் முதல் “மனைவி”யை சட்டப்படி கலியாண ரத்து செய்ய முடியாமல் போய்விட்டதால் “கல்யாண ரத்து செய்யாமல் மறுமணம் நடத்தப் பட்டது” என்று சொல்லப்படுவதை விட இம்மாதிரி திருமணங்களில் சுயமரியாதைக் காரர்களுக்கு கொள்கைப் பிசகோ நியாயப் பிசகோ இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

தவிரவும், முதல் மனைவி மணமகனுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும்போது கூட மறுமணம் செய்து கொள்ளப்படுவதையும் சுய மரியாதைக் கொள்கை ஆதரிக்கின்றது என்பதைப் பற்றியும் சற்று கவனிப்போம். மக்களின் அன்பும் காதலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்ன விதமாக இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

ஏனெனில் காதல் என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும்.

அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும் அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடையதாயும் இருக்க வேண்டுமென்றும் அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக் கொள்ளுகின்ற மக்கள் அன்பு ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்; காதல் ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முன் வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம். ஆனால் அநுபவத்தில் உள்ள சில சவுகரிய அசவுகரியங்களை உத்தேசித்து அன்பும் காதலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க வேண்டியதாக ஏற்படலாம் என்பதை நாம் மறுக்க வரவில்லை.

அன்றியும் ஒப்பந்தங்களினால் கட்டுப் பட வேண்டியதாகவும் காதல் பெருக்கால் தானாகவே கட்டுப்பட்டு விட்டதாகவும் போனாலும் போகலாம். அம்மாதிரி நிலைமைகளில் இம்மாதிரிக் கேள்விக்கே இடமில்லை. ஆதலால் அப்படிப்பட்ட காரியங்களை அவரவர்கள் இஷ்டத்திற்கே விட்டு விட வேண்டியது அவசியமாகும். முடிவாக ஒன்று சொல்லி இதை இப்போது முடிக்கின்றோம். அதாவது:-

இம்மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் ஒரேயடியாய் அடியோடு இடம் இல்லாமல் போக வேண்டுமானால், பொதுவாகப் பெண்கள் நிலைமை மாறியாக வேண்டும். ஏனெனில் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்படுவதற்குப் பெரிதும் அஸ்திவாரமாயிருக்கும் காரணமெல்லாம் “இப்படிச் செய்து விட்டால் முன் மணம் செய்து கொண்ட பெண்ணின் கதியென்ன ஆவது?” என்கின்ற கவலை கொண்டேதான் கேள்வி கேட்கப்படுகின்றது.

எந்தெந்தக் காரணத்தால் புருஷனுக்குப் பெண் பிடிக்கவில்லையோ - ஒத்து வரவில்லையோ அந்தந்தக் காரணங்களால் பெண்ணுக்குப் புருஷன் பிடிக்காத போது இப்போது புருஷனுக்கு இருக்கவேண்டுமென்று சொல்லப் படும் சுதந்திரமும் சவுகரியமும் போல பெண்களுக்கும் ஏற்பட்டு விடுமானால் பிறகு இந்த மாதிரியான அநுதாபமும் கவலையும் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட இடமேயிருக்காது என்பது தான்.

நம்மைப் பொருத்த வரை ஆண்களுக்குச் சொன்ன விஷயங்கள் எல்லாம் பெண்ணுக்கும் பொருந்துமென்றும், அவர்களுக்கும் ஆண்களைப் போலவே ஏற்பட வேண்டுமென்றும் அம்மாதிரியே அவர்களும் நடந்து கொள்ள வேண்டுமென்றும் அப்பொழுதுதான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் ஏற்பட்டதாகும் என்பதோடு உண்மையான திருப்திகரமான இன்பத்தையும் காதலையும் அடையமுடியுமென்றும் கருதுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 12.10.1930)

Pin It