சென்னை ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் சென்ற மாதம் 30-ந் தேதியன்று சனாதன தர்மிகள் மகாநாடு என்பதாக சுயநல வெறியர்கள் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட விஷயத்தை யாவரும் தெரிந்திருக்கலாம்.
அதில் முக்கியமாய் மனு தர்ம சாஸ்திரத்தை நிலைநாட்டுவதையே கவலையாகக் கொண்டு அதற்கு வேண்டிய முயற்சிகளும் செய்யப்பட்டு அதை அனுசரித்த பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.
இதை நினைக்கும் போது இன்றைய தினம் நாம் வெள்ளைக்காரர்களுடைய அரசாட்சியிலும் அவர்களுடைய ராணுவக் காப்பிலும் இருப்பதற்கு நம்மை நாமே பாராட்டிக் கொள்ள கடமைப் பட்டவர்கள் ஆவோம்.
இந்தப்படி நாம் சொல்லுவதைப் பற்றி பொறுப்பும் கவலையுமற்ற சிலர் நம்மீது ஆத்திரப்பட்டாலும் படுவார்கள். ஆனால், உண்மையிலேயே துணிந்தவர்கள் யாரோ சில பொறுப்பற்றவர்களுடைய ஆத்திரத்துக்குப் பயப்படுவார்களேயானால் அது முன்னுக்குப் பின் முரணாகத்தான் முடியும்.
ஆகையால், அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நிற்க; மேற்படி மகாநாட்டுக்குத் தலைமை வகித்த கல்கத்தாவிலுள்ள ஒரு “தேசியவாதி” யாகிய திரு.சியாம்சந்திர சக்கரவர்த்தி என்னும் ஒரு வங்காளத்துப் பார்ப்பனர் செய்திருக்கும் அக்கிராசனப் பிரசங்கத்தைப் பார்த்தால் இந்தியப் பார்ப்பனர்களுடைய யோக்கியதையும், அவர்களது மதபக்தி தேசியம் என்பதான சுயநல வெறியும் தாராளமாய் விளங்கிவிடும். ஆதலால் அவற்றை முதலில் சுருக்கமாக எழுதி பிறகு தீர்மான சுருக்கத்தையும் எழுதி பிறகு அதைப் பற்றிக் கவனிப்போம்.
அக்கிராசனர் உபந்நியாசமாவது
“மதம் கெட்டுப்போய்விட்டது! நமது பழைய சனாதன தர்மத்தை மறுபடியும் நிலை நிறுத்த வேண்டும். ஒரு உண்மையான ஹிந்து என்பவனுக்கு அடையாளம் சனாதன தர்மத்தை நம்புவதேயாகும்.
வேதத்தை நம்பி அதன்படி நடப்பதுதான் ஆஸ்திகனுக்கு அறிகுறியாகும். நமக்கு வேதமே ஆதாரமானது.
வேதத்தின் தத்துவமும், உள்பொருளுமே மனுதர்ம சாஸ்திரமாகும். மனுதர்ம சாஸ்திரம் பகவானால் சொல்லப்பட்டதாகும்.
கடவுள் உண்டாக்கிய சட்டம்தான் மனுதர்ம சாஸ்திரமென்பது.
விஞ்ஞான சாஸ்திரமும் இயந்திர சக்திகளும் மனித சமூகத்திற்கு மிகவும் கேடானது. மேல்நாட்டு கொள்கை நமக்கு உதவாது.
சாரதா சட்டம் சோதனை காலமாகும். அதை ஒழித்தாக வேண்டும்.
சிறு வயதில் கல்யாணம் செய்தால் தான் பெண்கள் ஆண்களுக்கு வணங்கிக் கட்டுப்பட்டிருப்பார்கள்.
அதனால்தான் சாஸ்திரங்களில் பாலிய விவாகம் வற்புறுத்தப் பட்டிருக்கிறது. பெண்கள் பூப்பு ஆனபிறகு அவர்கள் உடனே கருத்தரிப்பதை தடுத்தால் அது சிசுக் கொலைக்கு சமானமாகும்” என்று பேசி இருக்கிறார்.
தீர்மானங்கள்
1. சாரதா சட்டத்தை ஒழித்துவிட வேண்டும்.
2. அதற்காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும்.
3. சனாதான தர்மத்திற்காக ஒரு பத்திரிகை நடத்த வேண்டும்.
4. மதத்தில் அரசாங்கமாவது அரசியல் ஸ்தாபனங்களாவது பிரவேசிக்கக் கூடாது.
5. சட்டசபையில் வர்ணாச்சிரம தர்மத்திற்கு விரோதமாகவும் எவ்வித சட்டமும் செய்யக் கூடாது.
6. மனுதர்மத்தைக் காப்பாற்றுகிறதாக வாக்களிப்பவர்களுக்கே சட்ட சபைக்கு ஓட்டுக் கொடுக்க வேண்டும்.
7. கலப்பு விவாக சட்டத்தையும் சம்மத வயது சட்டத்தையும் கண்டிப்ப தோடு சட்டங்களையும் மாற்றிவிட வேண்டும்.
8. விவாகங்களை ரத்து செய்யக் கூடாது.
என்பவை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மகா நாட்டில் இருந்தவர்கள் திருவாளர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, கோவை சி.வி.வெங் கட்டரமணய்யங்கார், டி. ஆர். ராமசந்திர அய்யர், வி.வி. ஸ்ரீனிவாசய்யங்கார் முதலிய “தேசியவாதி”களாவார்கள்.
இந்த இருபதாவது நூற்றாண்டில் இந்திய தேசத்தில் மாத்திரம் இந்திய ஜனத் தொகையில் 100-க்கு 3வீதம் ஜனத் தொகையுள்ள ஒரு சிறு கூட்டத்தாரர்கள் இவ்வளவு தைரியமாக சுமார் 2000 - வருடத்திற்கு முன் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் கொள்கைகளை இன்றைய தினம் புதுப்பித்து மக்களின் மீது சுமத்தி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பார்களேயானால் அவர்களது மூடத்தனத்திற்கும் பேராசைக்கும் வெட்கம் கெட்டதனத்திற்கும் எதை உதாரணமாய்ச் சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
மேல்கண்ட நூற்றுக்கு மூன்று பேர் கொண்ட பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்திற்கு மாத்திரம் எந்த விதமான கொள்கைகளையோ சாத்திரங்களையோ மதங்களையோ வைத்துக் கொள்ளுவதானால் நமக்கு அதைப்பற்றி சிறிதும் கவலை இல்லை, அப்படிக்கில்லாமல் எங்கோ நாடோடிகளாகவும், மிலேச்சர்களாகவும் காட்டு மிராண்டிகளாகவும் மலைச் சார்பில் வரன் முறை இல்லாமல், லம்பாடிகள் போல் திரிந்து கொண்டிருந்த ஒரு சிறு கூட்டத்தார்கள் வயிறு வளர்ப்பதற்காக நமது நாட்டிற்குள் வந்து குடியேறி இந்நாட்டு மக்களை ஏமாற்றி மதம் என்றும், வேதம் என்றும், சாஸ்திரம் என்றும், தர்மம் என்றும், தங்கள் ஆதிக்கத்திற்கும் சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக்கும் ஏற்றபடி என்ன என்னமோ ஏற்பாடுகளை செய்து கொண்டு அவைகளுக் கெல்லாம் தாங்களே அதிகாரிகள் என்றும், தங்களுக்குத்தான் அவ்வித யோக்கியதை உண்டென்றும், ஆதலால் தாங்கள் மேன்மையான ஜாதியார்கள் என்றும், மற்றவர்கள் இழிவான ஜாதியார்கள் என்றும், தங்களுடைய வாழ்வுக் காகவே உலகத்தில் மற்றவர்கள் அடிமைகளாக சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றார்களென்றும், இவை அனைத்தும் கடவுள் கட்டளை, கடவுள் செயல் என்றும் சொல்லிக் கொண்டு வாழ்ந்து வந்ததல்லாமல், இனியும் அந்தப்படியே இருக்க வேண்டு மென்பதாகவும் முயற்சி செய்வதென்றால், கடுகளவு சுயமரியாதையோ, அறிவோ உள்ள மக்கள் இதை சகித்துக் கொண்டிருக்க முடியுமாவென்று கேட்கின்றோம்.
முதலாவது, மதம் என்பதில் இந்து மதம் என்றால் என்ன என்கின்ற கேள்விக்கு ஒரு சனாதன தர்மியாவது, சாஸ்திரியாவது பதில் சொன்னவர்களே அல்ல எனவே, அஸ்திவாரத்திலேயே அடியோடு வெறுமையாய் இருக்கின்ற மதத்தைச் சொல்லி ஏமாற்றுவதல்லாமல் அந்த மதத்திற்கு ஆதாரம் வேதம் என்று ஒரு ஆபாசக் களஞ்சியத்தை சொல்லிக் கொண்டு அதை அவர்களை (அந்தப் பார்ப்பனர்களை) தவிர மற்றவர்கள் பார்க்கவோ, படிக்கவோ, கேட்கவோ கூடாதென்று சொல்லிக் கொண்டு இருப்பதுடன் அதை எவன் நம்புகின்றானோ எவன் ஒப்புக் கொள்கின்றானோ அவன்தான் இந்துவென்றும், அப்படிப்பட்ட இந்துவுக்கு ஏற்பட்ட கொள்கைகளே சனாதன தர்மமென்றும், அச்சனாதன தர்மமே மனுதர்ம சாஸ்திரமென்றும், அம்மனுதர்ம சாஸ்திரமே வேதத்தின் தத்துவமும் உள் பொருளுமாகு மென்றும் சொல்லி அதற்கு 20 கோடி மக்களை கட்டுப்படுத்தி அதில் 6 கோடி மக்களை கண்ணில் காணக்கூடாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள், தீண்டாதவர்கள் என்கின்ற கொடுமைக்கு உள்ளாக்கி மீதி 14 கோடியில் 13 கோடி மக்களை சூத்திரர்கள் என்று அதாவது, பார்ப்பானின் தாசி மகன், பரம்பரை அடிமை, படிக்கக் கூடாதவன், சொத்து வைத்திருக்க கூடாதவன்.
பார்ப்பனர்களின் எச்சிலை சாப்பிட்டுக் கொண்டு அவன் கிழித்து கழித்த கந்தலை கட்டிக் கொண்டிருக்க வேண்டியவன் என்பதாக இழிவு படுத்தி வைத்துக் கொண்டு இருப்பதுடன் இந்தக் கொள்கையை நிலை நிறுத்த இன்றையதினம் மகாநாடு கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றுவதென்றால் இந்த நாட்டில் கடுகளவு சுயமரியாதை உடையவர்கள் கூட ஒருவரும் இல்லையென்று தானே பொருளாகின்றது.
இவ்வளவு கொடுமையுள்ள மக்கள் ருஷியா போன்ற நாட்டில் இருப்பார்களேயானால் சாலை மரங்களில் கழுத்துக்கு சுருக்கு போட்டு தொங்கவிட்டு உயிருடன் கழுகுகளும் காக்கைகளும் கொத்தி, கொத்தி தின்னும் படியாக அல்லவா செய்யப்பட்டிருப்பார்கள் என்பதில் சிறிதாவது சந்தேகம் கொள்ள முடியுமா? என்று கேட்கின்றோம்.
மனுதர்ம சாஸ்திரம்தான் வேதம் என்றும், வேதம் தான் இந்து மதத்திற்கு ஆதாரம் என்றும், இப்போது இந்துக்கள் என்று சொல்லப்படும் 20 கோடி மக்களில் தங்களைத் தவிர பாக்கி 19 கோடி மக்களும் மனுதர்ம சாஸ்திரப்படிக்கு தான் நடக்க வேண்டும் என்றும் இந்த படிக்கே சட்டமும் ஆட்சியும் இருக்க வேண்டுமென்றும் கோரு கின்ற ஒரு கூட்டத்தார்களைவிட உலகில் அயோக்கியர்களும் கொள்ளைக் கூட்டத்தார்களும் கொலைபாதகர்களும் வேறு யாராவது இருக்க முடியுமா என்பதை யோசித்தால் சனாதன மகாநாட்டின் யோக்கியதை இன்னதென்று தெளிவாய் விளங்கும்.
இந்து மதத்தின் அயோக்கியத்தனமான கொள்கைகள் இப்பார்ப்பனர்களால் இந்நாட்டில் அமுல்படுத்தாமல் இருந்திருக்குமானால் இந்துக்களில் பார்ப்பனர்களில் மாத்திரம் 100க்கு 22 1/4 பேர்கள் ஆங்கில பாஷை கற்றவர்களாகவும், பார்ப்பனரல்லாதவர்களில் 100க்கு 3/4 பேர்கள் மாத்திரம் ஆங்கிலம் கற்றவர்களுமாக இருக்க முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.
அதுபோலவே இந்து மதம் இந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லாதார்களை எவ்வளவு இழிவுத் தன்மையிலும் ஈன ஸ்திதியிலும் வைத்திருக்கின்றது என்பதை மற்ற இந்நாட்டு பொது மக்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்த்தால் விளங்காமல் போகாது. சனாதன தர்மம் அழிவுப்பட்டதற்கு காரணம் விஞ்ஞான அறிவும் (அதாவது, சைன்ஸ் அறிவும்) இயந்திர சக்தி தொழிலுமே காரணம் என்றும் அவைகளை வளரச் செய்யக் கூடாதென்றும், தலைவர் சொல்லுவ தென்றால் அக்கூட்டத்தின் வஞ்சக தனத்திற்கும் கெடுதல் புத்திக்கும் நாம் வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
விஞ்ஞான சாஸ்திரமும் இயந்திர சக்தி தொழில்முறையும் உள்ள அமெரிக்கா தேசத்தி லுள்ள ஜனங்கள் சராசரி நபர் ஒன்றுக்கு வருஷம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வீதம் வரும்படி சம்பாதிக்கின்றார்கள். அதாவது, நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு 166 ரூபாய் வீதம் சம்பாதிக்கின்றார்கள்.
சனாதன தர்மம் தோன்றிய இந்த நாட்டில் வருஷம் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு சராசரி 72 ரூபாய் அதாவது மாதம் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 6 ரூபாய் வீதம்தான் சம்பாதிக்கின்றார்கள். மற்றும் உயர்ந்த தத்துவங் களும் பகவானால் வேத கட்டளைகளும் மனுதர்ம சாஸ்திரங்களும் உண்டான இந்த நாட்டில் 100-க்கு 7 பேர்களே படித்திருக்கின்றார்கள். ஆனால் “நீச்ச நாடாகிய” மேல் நாட்டில் நூற்றுக்கு நூறுபேரும் படித்து நமது நாட்டிலும் சிலர் படிக்க மேல் நாட்டார்ப் பணமும் முயற்சியும் மதமும் வேலை செய்கின்றது. அன்றியும், அங்கு மக்களின் சராசரி ஜீவிய வயது 52ஆக இருக்கின்றது.
பகவான் தர்மத்தை நேரில் வந்து உபதேசித்த இந்த நாட்டில் சராசரி ஜீவிய வயது 25 ஆக இருந்து வருகின்றது. எனவே, பகவானின் சனாதன தர்மம் உள்ள இந்திய நாட்டிற்கும் அதில்லாத மேல் நாட்டிற்கும் கல்வியிலும் செல்வத்திலும் ஜீவவாழ்விலும் மாத்திரம் இவ்வளவு வித்தியாசமிருக்குமானால் மற்றவைகளைப் பற்றி நாம் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம். ஆகவே, இவ்வித வித்தியாசத்திற்கு இச்சனாதன தர்மிகள் என்ன காரணம் சொல்லுகின்றார்கள் என்பதே நமது முக்கிய கேள்வியாகும்.
ஒரு பகவானும் ஒரு மதமும் ஒரு தர்மமும் அப்பகவானையும் தர்மத்தையும் மதத்தையும் சேர்ந்த எல்லா மக்களுக்கும் ஒன்று போன்ற கொள்கையையோ, நீதியையோ, பலனையோ கொடுக்கவில்லையானால், அப்பகவானும் மதமும் தர்மமும் யோக்கியமானதா அல்லது அயோக்கிய மானதா என்பதைப் பற்றி வாசகர்களே அறிந்து கொள்ளவிட்டு விடுகின்றோம். அன்றியும் அப்பகவானையும், மதத்தையும், தர்மத்தையும் அடியோடு அழிக்க வேண்டியதா அல்லது ஒருசிறு வேளையாவது விட்டுவைக்க வேண்டியதா என்பதையும் முடிவு செய்யும் பொறுப்பையும் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.
இனி அம்மகா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பற்றி சிறிது கவனிப்போம்.
முதலாவதாக சாரதா சட்டம் ஒழிக்கப்படவேண்டுமாம். அதாவது பெண்கள் புருஷர்களுக்கு அடங்கி நடப்பதற்காகவே சிறுவயதில் குழந்தைப் பருவத்திலேயே கல்யாணம் செய்யும் வழக்கத்தை பெரியோர்கள் ஏற்படுத்தினார்களாம். ஏனெனில், பெரிய பெண்களான பிறகு கல்யாணம் செய்தால் புருஷர்களுக்கு அடங்கி நடக்க மாட்டார்களாம்.
ஆகவே பெண்களை ஆண்கள் அடிமை கொள்ளவே இம்மாதிரியான சாஸ்திரங்களை எழுதி வைத்துக் கொண்டு அவைகளை “பகவான் சொன்னார்” “ரிஷிகள் கேட்டுக் கொண்டிருந் தார்கள்” “பாராசர் பரப்பினார்” என்று சொல்லி இதுவரை மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பது இப்போதாவது மக்களுக்கு விளங்கி இருக்கும்.
இந்த சூதை எப்படியோ தன்னை அறியாமல் தலைவர் கக்கிவிட்டார் என்றாலும் பாலியவிவாகம் கூடாது என்பதற்கு காரணமாக தவிர பெண்கள் பக்குவமானவுடன் புணர்ச்சிக்கு அனுமதிக்காவிட்டால் அதனால் அநேக குழந்தைகள் உற்பத்தியாவது தடுக்கப்பட்டு சிசுக் கொலையாகிவிடுமாம்.
ஒரு பெண் 14 வயதில் பூப்பு எய்தி 45 வது வயதில் சாந்தி முகூர்த்தமாவதற்குள் குழந்தை பிறப்பது தடைப்படுவதால் சிசுக் கொலை ஏற்படுமானால் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள விதவைகள் என்னும் பேரால் பத்து லட்சக்கணக்கான பெண்களை கர்ப்பமுண்டாகாமல் தடுப்பதாலும் தப்பித் தவறி தெரியாமல் கர்ப்பமுண்டாகி விட்டால் ஒரு மாதம் முதல் பத்து மாதம் வரை அக்கர்ப்பங் களை அப்பெண்களும் தாய் தகப்பன்மார்களும் அழிப்பதாலும் பெற்ற குழந்தைகளை கழுத்தை திருகுவதினாலும் எத்தனை சிசுக் கொலை ஏற்படுகின்றது என்பதை உலகம் அறியாதா? என்று கேட்கின்றோம்.
தவிர, சனாதன தர்மத்திற்கு சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்றும், பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கின்றார்கள். இவ்விரண்டையும் நாம் மேள தாளத்துடன் வரவேற்கின்றோம். ஏனெனில், நாம் இதைதான் சொல்லி வந்திருக்கின்றோம்.
அதாவது, பெண்களுக்கு உண்மையான விடுதலை ஏற்பட வேண்டுமானால் பாலிய விவாகம் கூடாது என்பதும். பெண்ணுக்கும் ஆணுக்கும் அதிக வயது வித்தியாசம் கூடாது என்பதுமேயாகும். சனாதன தர்மத்தை நாம் பத்து வருஷத்தில் ஒழிப்பதானால் பார்ப்பனர்கள் சத்தியாக்கிரகமும் பத்திரிகையும், நடத்துவதினால் சனாதன தர்மம் ஐந்து வருஷத்திலேயே ஒழிந்து போகும் என்கின்ற தைரியம் நமக்கு இருக்கின்றது.
தவிர மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரிக்கின்றதாக வாக்குக்கொடுக்கின்றவர்களுக்கே சட்டசபை ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்கின்ற தீர்மானமும் நமக்கு மகிழ்ச்சியையே கொடுக்கின்றது.
ஏனெனில், சுயராஜ்யம் என்பதும் தேசியம் என்பதும் பார்ப்பன ராஜியம் தான் என்றும், அதுவும் மனுதர்ம ராஜியம்தான் என்றும் நாம் சொல்லி வந்ததின் உண்மை இந்த சனாதன மகாநாட்டின் இந்த தீர்மானத்தால் வெளியானதற்கு யாரால்தான் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்? அன்றியும் தீவிர தேசியவாதியும் பூரண சுயேச்சைவாதியும் “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என்ற கொள்கையுடையவருமான திரு.சத்தியமூர்த்தி அவர்களின் சுயராஜ்ஜியமும் தேசியமும் பூரண சுயேச்சையும் பிறப்புரிமையும் இன்னதுதான் என்றும், அவரை சட்டசபைக்கு தெரிந்தெடுத்தனுப்பும் யோக்கியர்களின் கருத்து இன்னதுதான் என்றும் நன்றாய் விளங்க சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.
தவிரவும், மனுதர்மவாத தேசீயவாதிகளே சட்டசபைக்கு போகும் படியான ஒரு காலம் வருமானால் அந்த சந்தர்ப்பமானது ஒரு ஐந்து வருஷத்திற்குள் நம் நாட்டிற்கு பொது உடைமைக் கொள்கையும் அபேதவாதக் கொள்கையையும் சம சொத்துக் கொள்கையையும் கொண்டு வந்து விட்டு விடவோ, அல்லது இராணுவ ஆட்சியை கொண்டு வந்து விடவோதான் செய்யுமே ஒழிய, ஒருக்காலமும் நமது நாட்டில் மனுதர்ம ஆட்சி ஒரு ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாது என்று தைரியமாய் உறுதி கூறுவோம்.
கடைசியாக நமது நாட்டிற்கு சுயமரியாதை இயக்கம் எவ்வளவு அவசி யம் என்பதும் வேதங்களும், மனுதர்ம சாஸ்திரங்களும் அவைகளை மக்களுக்குக் கொடுத்த பகவான்களும் அழிந்து தீரவேண்டியது எவ்வளவு அவசிய மென்றும் பொதுமக்கள் உணர ஒரு அருமையான சந்தர்ப்பத்தைக் கொடுத்த சுயநல வெறியர்கள் மகாநாடான சனாதன தரும மகாநாட்டிற்கு நமது நன்றி யறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 08.12.1929)