சமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவைகளில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் மாத்திரம் அதிகமான விவாதத்திற்குக் காரணமாயிருந்தன.
“ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சரிசமானமான ஒழுக்க முறைகள் ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. “கலியாணமானப் பெண்கள் தகுந்த காரணமிருப்பின் தங்களுக்கிஷ்டமான போது தங்கள் விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம்” என்பது இரண்டு.
இந்த இரண்டு தீர்மானங்களும் பெரிய படித்த மனிதர்கள் என்பவர்களையும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுகிறவர்கள் என்பவர்களையும் சரியான பரீட்சை பார்த்துவிட்டது என்றே சொல்வோம். நமது தென்னிந்தியாவிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் “விவாகரத்து” தீர்மானத்தை கண்டித்துவிட்டன.
இத்தீர்மானம் சம்பந்தமாக பத்திரிகைகளில் நடந்த வாக்குவாதங்களும், மறுப்புகளும், கண்டனங்களும் அவைகளுக்கு எழுதப்பட்ட பதில்களும் நமது வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். வயது சென்ற ஸ்திரீகள் என்று சொல்லக்கூடியவர்களில் சிலர் தீர்மானத்தின் உண்மையை உணராமல் இதை எதிர்த்த விஷயம் நமக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.
ஸ்திரீகள் மகாநாடு நடைபெற்ற அன்றைய தினமே, இவ்விதமான தீர்மானங்கள் கொண்டு வருவது தனக்கு இஷ்டமில்லையென்று சொல்லி, அக்கி ராசனர் ஸ்ரீமதி சீனிவாசய்யங்கார் அவர்கள் தன்னுடைய அக்கிராசனப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்கள்.
பிறகு வேறு ஒருவருடைய அக்கிராசனத்தில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு மேற்சொன்ன தீர்மானங்களும் இன்னும் இதர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பிறகு இது சம்பந்தமாக பிரபல ஸ்திரீகள் சிலருக்குள் அபிப்பிராய பேதம் ஏற்பட்டு பத்திரிகைகள் மூலியமாக இரு சாரார்களுடைய அபிப்பிராயங்களையும் வெளியிட்டு வந்தார்கள்.
இன்னும் அத்தீர்மானங்களின் சம்பந்தமான அபிப்பிராயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆதலால்தான் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி நமது அபிப்பிராயத்தையும் வெளியிட விரும்புகிறோம்.
மேலும் சென்னை மாகாணத்தின் முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட இதே இரண்டு தீர்மானங் களுக்கு இப்போதிருக்கும் எதிர்ப்புக்களைவிட பலமான எதிர்ப்புகள் தோன்றியதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
அந்த சந்தர்ப்பத்தில் இதைவிட “வேகமானதும்” “புரட்சியானதும்” என்று பிறரால் அநாவசியமாக தூற்றப்பட்ட சில இதர தீர்மானங்களைப் பற்றி நாம் எழுத வேண்டியதாயிருந்ததால், ஸ்திரீகளைப் பற்றி மேற்கண்ட இரண்டு தீர்மானங்களைப் பற்றி அதிகமாக விவரித்து எழுத அவகாசமில்லாது போயிற்று. ஆகையால் இந்த சந்தர்ப்பத்திலாவது இது சம்பந்தமாக நமது கருத்தை விளக்கிவிட வேண்டு மென்று எண்ணுகிறோம்.
முதலாவதாக, ஆண், பெண், இருபாலாருக்கும் சமமான ஒழுக்க முறைகள் இருக்க வேண்டுமென்பது, இது விஷயமாக அபிப்பிராய பேதமே இருக்காது என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதில்கூட படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட மாறுபாடான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் நமக்கு, பெரிய அதிசயமாகவே இருந்தது.
உதாரணமாக பார்ப்பனரல்லாதாருக்காக உழைக்கும் “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் ஆண், பெண்ணுக்கு சமமான சட்டம் இருக்க வேண்டு மென்று சென்னை ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியிருந்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம் ஏழை மக்களுக்காகவும், நியாயத்திற்காகவும், சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் உழைப்பதாகச் சொல்லும் “ஜஸ்டிஸ்” பத்திரி கையானது சாஸ்திரங்களை உதாரணமாகக் காட்டி இத்தீர்மானத்தை கண்டித்த தானது நாம் என்றும் எதிர்பாராததும், ஏமாற்றமுமான விஷயமேயாகும்.
பகுத்தறிவுக்கு ஏற்றதான காரணங்களைச் சொல்லாமல் “ஜஸ்டிஸ்” பத்திரிகையானது, “பொதுவாகவே பெண்கள் இயக்கம் சரிவர நடத்தப்படுவ தில்லை”என்ற பெரும் குற்றத்தைச் சுமத்துகிறது. இந்த அபிப்பிராயம் உண்மையா? இல்லையா என்பதைப் பற்றி நமக்கு அதிகக் கவலையில்லை. ஆனால், நமக்கு வேண்டியதெல்லாம் இது மாதிரி விஷயங்களில் பெண் பாலருடைய முடிவான அபிப்பிராயம் என்னவென்பதே.
ஏனெனில், பெண்கள் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி ஆண்கள் முடிவு செய்வதை விட பெண்களது அபிப்பிராயத்தையே பின்பற்றுவதுதான் முறையான வழியாகும். இன்று நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் பெண்கள் நிலைமை சற்று தாழ்மை யாகவே இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதிகள் சட்டதிட்டங்களெல்லாம் பெண்மக்கள் படித்திராத காலத்தில் ஆண் மக்களால் ஏற்படுத்தப்பட்டதால் தான்.
பார்ப்பனரல்லாதார் படிக்காத காலத் தில் எப்படி நம்மைப் பற்றி தூஷித்து நம்மை ‘அடிமைகள்’ என்பது புராணம் முதலானவைகள் எழுதி வைத்தார்களோ அதே மாதிரியாகத்தான் ஆண் மக்களும் தங்களுக்கு ஏற்றவாறு பாரபட்சமான சட்ட திட்டங்களை ஏற்படுத்தினார்கள்.
உதாரணமாக புருஷன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டுமென்ற கட்டாயத்திற்கு பெண்கள் சம்மதித்திருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். அப்படி சம்மதித்திருந்தாலும் அதே மாதிரி மனைவி இறந்த புருஷனையும் உடன்கட்டை ஏற்ற வேண்டு மென்றாவது கேட்டிருக்க மாட்டார்களா என்பதும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயமாகும்.
ஆகவே, இம்மாதிரியாக பலவழிகளிலும் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்கு ஆண்களுடைய சுயநலமே காரணம் என்பது “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகளுக்கு இன்னும் இவை தெரியாமலா இருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை, ஒழுக்கம் முதலிய விஷயங்களில் சமமான சட்டங்கள் இருத்தலே அவசியம் என்பதை “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகள் மறைத்தாலும் அல்லது எதிர்த்தாலும் நமது நாட்டுப் பெண்கள் ஆயிரக் கணக்காய்ப் படிக்க ஆரம்பித்து விட்ட இக்காலத்தில் ஆண் மக்களது சுயநல அபிப்பிராயங்களுக்கு எவ்வித செல்வாக்கும் மதிப்பும் இருக்காது என்பது நமக்கு நன்றாக தெரியும்.
ஆகவே இந்த அடிப்படையான முக்கிய கொள்கையிலேயே நமது சகோதரப் பத்திரிகையின் அபிப்பிரா யத்துக்கு நாம் மாறுபட வேண்டியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை.
இரண்டாவதாக உள்ள “விவாகரத்து” விஷயந்தான் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமாகும். இது சம்பந்தமாக செங்கற்பட்டு சுய மரியாதை மகாநாட்டிலும் சென்னை ஸ்திரீகள் மகாநாட்டிலும் நிறைவேற்றப் பட்ட தீர்மானமானது பொறுப்பற்றவர்களால் செய்யப்பட்டதல்லவென்பது வாசகர்களுக்குத் தெரியும்.
ஆண் மக்களே நூற்றுக்கு 95க்கு மேல் கூடி யிருந்த செங்கற்பட்டு மகாநாடும், பெண்மக்களே நூற்றுக்கு நூறு கூடியிருந்த சென்னை ஸ்திரீகள் மகாநாடும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றியிருக் கின்றனவென்றால் இதில் ஏதாவது தவறு இருப்பதற்கு மார்க்கமிருக்கிறதா என்று கேட்கின்றோம்.
இதைப் பற்றி ஆராய்வதற்கு முன்பு இது சம்பந்தமாக அநேக தப்ப பிப்பிராயம் கொண்டுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டியது அவசியமா கின்றது. “விவாகரத்து” சட்டமானால் உடனே எல்லாப் பெண்களும் தங்கள் கணவர்களை விட்டு ஓடிப்போவார்கள் என்றும், “கற்புநிலை” அடியோடு கெட்டுப் போகுமென்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பிற்கும், அவசியத்திற்கும் ஒரு சட்டம் செய்தால் ஜனங்கள் எல்லோரும் அதே வேலையாயிருப்பார்களென்பதே நியதியல்ல. அவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான் ஜனங்கள் அதனைக் கையாளுவார்கள்.
ஏனெனில், அதனால் ஏற்படக்கூடிய கஷ்டநஷ்டங்களுக்கு தாங்களே பாத்தியப்பட்டவர் கள் என்பது அநுபவத்தினால் மக்களுக்கு நாளடைவில் விளங்கிவிடும். ஆகவே “விவாகரத்து” அனுமதிக்கப்படுமானால் ஏதோ ஆபத்து வந்துவிடு மென்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களது சுயநலத்தினால் ஏற்படக்கூடிய பயம் என்றுதான் சொல்லுவோம்.
“விவாகரத்து” சட்டமாவது பெண்கள் சமூகத்திற்கு ஒரு இன்றியமையாத பாதுகாப்புக்கருவி என்பது நமது முடிவான அபிப்பிராயம். புருஷனுக்கும் மனைவிக்கும் பரஸ்பர அன்பும் சமமான வாழ்க்கையும் ஏற்படவேண்டுமானால் இருவருக்கும் தனித்தனியாக உரிமையிருந்தால்தான் முடியும். இப்போதிருக்கும் “இந்திய” சமூகத்திலுள்ள மண வாழ்க்கையானது பல வழிகளிலும் பெண் மக்களுக்கு பாதகமான முறையிலேயே நடைபெற்று வருகிறது.
ஒரு புருஷன் தனக்குத் தேவையில்லாதபோது தனது மனைவி அளித்திருக்கும் நமது சட்டமானது, பெண்களுக்கு அதே உரிமையைக் கொடுக்காமலிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும். இந்த உரிமை மனிதனுக்கு இருப்பதால், எல்லாப் புருஷர்களும், இதே வேலையாகவா இருக்கிறார்கள் என்று தான் கேட்கிறோம்.
ஆகவே, இதே உரிமையை பெண் மக்களுக்கும் அளிக்கவேண்டியது நியாயமும் சமமும் ஆகும் என்பதை இன்னும் ஏன் ஆண்மக்களில் சிலர் அறியவில்லை என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.
இந்த விவாகரத்துத் தீர்மானத்தை வைதீகப் பத்திரிகைகள் தான் கண்டித்தனவென்றால், நமது “ஜனநாயக”த் தினசரியான “ஜஸ்டிஸ்” பத்திரிகையும் கண்டித்ததுதான் நமக்கு விளங்கவில்லை.
எது எப்படியாயினும், இந்தத் தீர்மானத்தின் அவ சியத்தை நமது சுயமரியாதை இயக்கத்து அன்பர்கள் நன்கு அறிவார்களாகையால், இம்மாதிரி சமத்துவமான நோக்கமுடைய விஷயங்களில் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், அதற்காக நாமோ அல்லது நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ எங்கள் கடமையினின்றும் பின்வாங்க மாட்டோம் என்பதை மாத்திரம் உறுதி கூறுகிறோம்.
கடைசியாக “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு ஒன்று கூற விரும்புகிறோம். பொது மக்களின் உணர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட அப்பத்திரிகையானது இனியாகிலும் மக்களின் அபிப்பிராயத்தை ஒட்டி சீர்த்திருத்தத்தில் முன்னணியில் நின்று தனது பழைய குருட்டு நம்பிக்கைகள் ஏதேனும் மிஞ்சி இருக்குமானால் அவைகளை உடனே ஒழித்து சமூகத் தொண்டையே பிரதானமாகக் கொண்டு வேலை செய்யும் என்று எதிர்பார்க் கிறோம். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுசம்பந்தமாக இன்னும் விவரமாக எழுதுவோம்.
( சா.கு.)
(குடி அரசு - தலையங்கம் - 29.12.1929)