periyar 234சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு “க்ஷேத்திர” ஸ்தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40-வது மயிலில் உள்ள நாகர்கோயிலுக்கு 2, 3 மயில் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாக்குமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது.

அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோட்டுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொது ஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும்.

அந்த ரோட்டுகளுள்ள திருவாங்கூர் ராஜியமானது ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபஸ்வாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோட்டில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும் அந்த பத்பநாபசாமியின் பக்தர்களுமேயாவார்கள்.

மற்றபடி அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும் இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருஸ்தவர்களுக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆக்ஷேபணையும், தடங்கலும் சிறிது கூட கிடையாது.

இது தவிர மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமூகத்தாரைத் தவிர மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜெந்துவும் மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப் போகலாம்.

அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம் தான் அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம் தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20 வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் காரியத்திற்காகவே அதாவது அதுபோன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923 ம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்ய வேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

அந்த சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பலதடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடையதாக ஆக்கப்பட்டது.

இப்போதும் அதுபோலவே இந்த சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக் கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இது வரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும் இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்ப தாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித் திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

அதற்கேற்றாப்போல் அந்த ராஜ்ஜியம் இது சமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும் பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிப்பிடித்தவருமான ஒரு திவானின் ஆக்ஷியிலும் அந்த குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட் ரேட் ஆட்சியிலும் ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்பிரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்கு பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கி விடுவதாகச் சொல்லி அரசாங்கத்தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆக்ஷி செய்தவர்.

இவர் காலத்தில் தான் தொண்டர்களை அடித்தல் குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீச்சத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற்கெல்லாம் வெளிப்படுத்தினவர்.

அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார் அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

நிற்க, எது எப்படி ஆன போதிலும் சத்தியாக்கிரகம் வெற்றியான போதிலும் தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத் தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை.

ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.

தவிரவும் ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும்.

அக்கமிட்டியும் அதே சமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும் அதுவும் முதலில் தெருவு, குளம், பள்ளிகூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித் திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம்.

ஏனெனில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத் தான் செய்யக் கூடியதே தவிர மற்றபடி கோவிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும் எல்லோரும் கோயிலுக்கு போகலாம் என்றும் ஏற்பட்டு விட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல் கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தே தான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதை அநுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடாமல் உபயோகப்படுத்திக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இதிலும் வெள்ளைக்கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிரகத்தை விட ஒரு ஹிந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நமது நாட்டு முன்னேற்றத்திற்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக் காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கி விடுவதுடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கி விடும்.

ஆகையால் இதை சத்தியாக்கிரக கமிட்டியார் தயவு செய்து ஆதரித்து அதைமேல் போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இன்றைய தினம் “சுசீந்திரத்தில்” தெருவில் நடக்கத் தடைப்படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரீகம் முதலியவைகளில் முன்னணியில் நிற்கின்றவர்களுமான ஈழுவ சமுதாய மக்களுமாவார்கள்.

அவர்களோடு ஆசாரிகள் நாடார்கள் முதலிய பல கைத்தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப்பட்ட ஓர் பெரும் செல்வாக்கும் நாகரீகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத் தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆக்ஷேபணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை இந்த இழிவை நிவர்த்தித்து இந்த கொடுமையிலிருந்து இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும் கருத்து முள்ள பேச்சாகாது.

ஆகையால் சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டி யார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர்கோவிலிலாவது திருநெல்வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால் வழி நடை சுதந்தரம் ஒன்று. பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று. ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றி பெற்றவர்களாவோம்.

இந்த சத்தியாக்கிரகமானது 1925-வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப்பட்டதாகும்.

அவ்வாக்குறுதி ஏமாற்றப் பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப் படுகின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்பு பலம் இருக்க நியாயமிருக்கின்றது.

அன்றியும் பொது ஜன ஆதரவும் அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்களிலும், பொது சத்திரங்களிலும் பொது நீர்த் துரைகளிலும் சமஸ்தானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது.

ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆக்ஷி இந்திய ஆக்ஷியா? பிரிட்டிஷ் ஆக்ஷியா? என்பதும் விளங்கிவிடும்.

ஆகையால் சுயமரியாதை தொண்டர்களே! சமதர்ம தேசீயவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவை தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பாருங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 01.06.1930)

Pin It