உத்திரப்பிரதேசத்தில் மிகப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி  யோகி ஆதித்யாநாத்  சாமியார் தலைமையில் ஆட்சி அமைத்தபின் உ.பி யில்  அதிகப் படியான ஜாதிக்கலவரங்கள் நடைபெறுகின்றன. அதைக் கண்டித்து ராஜ் பப்பர் என்ற மாநில காங்கிரஸ்  தலைவர் அறிக்கை வெளியிட்டதையும்,   சஹரான்புரில் நடைபெற்ற மிகப்பெரிய ஜாதியத் தாக்குதலைக் கண்டித்தும் டில்லியில் தலித் மக்கள் போராடியதையும் செய்தி ஏடுகள் வழியாக அறிகிறோம்.

அது உ.பி யில் மட்டும் நடைபெறும் அவலமல்ல. மோடியின் மோடிமஸ்தான் வேலையால் வட நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும்  பா.ஜ.க வே  வெற்றி பெறுகிறது என்ற செய்தி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் மத வெறியர்களுக்கு இணையாக  ஜாதி வெறியர்களும்  ஆனந்தக் கூத்தாடி ஜாதி,  மதக் கலவரங்களைத்  திட்டமிட்டு நடத்தி வருவதும் நம்மைக் கவலை கொள்ளச் செய்கிறது.

இந்த நிலையில், சிவன், முருகன், விநாயகன், வள்ளி, தெய்வானை, மீனாட்சி, இலட்சுமி, விசாலாட்சி போன்றவை  பார்ப்பனக் கடவுள்கள், கோவில்கள் என்றும்  மாரியம்மன், காளியம்மன், மங்கயம்மன், துர்க்கையம்மன், பட்டத்தரசி அம்மன், வீரமாத்தி அம்மன், அங்காளம்மன் இவை யெல்லாம் பார்ப்பனர்களுக்கு எதிரான கடவுள்கள் என்றும் தரம் பிரித்து, ஜாதியைப் பாதுக்காக்கும் பணியை  தமிழகத்திலுள்ள  தமிழ்த் தேசியக்  கம்பெனிகளும் பொதுவுடமை இயக்கங்களும் செவ்வனே செய்து வருகின்றன.

பெரியாரின் பேருழைப்பால் பார்ப்பனக் கோவில்களில் ஒட்டுமொத்தப் பார்ப்பன அல்லாத மக்களும் கருவறை நீங்கலாக உள்நுழைய உரிமை பெற்றார்கள்.   அந்தக் கோவில்களில் எல்லாம் கருவறை அருகில் வரை சென்று வழிபடலாம். ஆனால் தமிழர்களின் வம்சாவழி  தெய்வங்கள் என்று கூறிக்கொள்ளும் மாரியம்மன், காளியம்மன் உள்பட சிறுதெய்வ, நாட்டார் தெய்வக் கோவில்களில் தலித் மக்கள் உள் நுழைந்து வழிபட  உரிமை உள்ளதா என்றால், 100 சதவிகிதம் இல்லை என்பதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து நாம் அறிய முடிகிறது.

தேநீர்க்கடைகளிலும்,  முடிதிருத்தகங்களிலும் பொதுவீதிகளிலும், சுடுகாடுகளிலும் உரிமை வேண்டிப் போராடும் தலித்மக்களும் - கிராமக்கோவில்களில் நுழைய  வேண்டும் என்ற உணர்வில்லாமல் - இது நம்ம தலைவிதி, பூர்வஜென்ம பாவம்  என்றும் நமக்காகத் தனியாகக் கோவில் உள்ளது, அவர்களின் கோவில்களில்  நுழையக் கூடாது, மீறி  நுழைந்தால் சாமிக் குத்தமாகிவிடும் என்றும் மூளைக்கு இட்ட விலங்கால்  முடங்கிக் கிடக்கிறார்கள். இங்குதான் பார்ப்பனியம் இந்துத்துவாவின் வெற்றியே உள்ளது.

பார்ப்பனக் கடவுள்களின் கோவில்களில் கருவறைக்கு மட்டும் செல்ல முடிய வில்லை. அங்கு பிற்படுத்தப்பட்டவரும், தாழ்த்தப்பட்டவரும் ஒரே நிலைதான். ஆனால், சிறுதெய்வ, நாட்டார் தெய்வங்களின் கோவில்களில் தலித் மக்கள் அவற்றின் சுற்றுச் சுவரைக்கூட  நெருங்க முடியாத  நிலைதான் உள்ளது. தமிழர் பண்பாடு, பாரம்பரியம் என்று கூறப்படும் சிறுதெய்வ, நாட்டார் தெய்வக்கோவில்கள் பிற்படுத்தப்பட்டவருக்கு அடிமைச்சேவகம் செய்யும் நிலையில் தாழ்த்தப்பட்டவரைக் கொண்டு நிறுத்தும் களங்களாகவே இயங்குகின்றன.

சிறுதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக்கோவில்களிலும், அதற்காக கொண்டாடப்படும் திருவிழாக்களிலும் தான் ஜாதிமுறை அப்படியே நிலைநிறுத்தப்படுகிறது. சிவன், விஷ்ணு, பிரம்மா போன்ற பார்ப்பனக்கடவுள்களாலும், மாரியம்மன் காளியம்மன் பகவதியம்மன்  வஞ்சியம்மன், மங்கையம்மன், போன்ற சிறுதெய்வங்களானாலும் அவை அனைத்தும் அளித்து ஒழிக்கப்பட வேண்டியவையே. ஜாதிகள் ஒழிய வேண்டுமானால் முதலில் நடக்கவேண்டிய புரட்சி எதுவென்றால், கிராமத்து தெய்வங்களையும் கோவில்களையும், சிறுதெய்வங்களையும், நாட்டார் தெய்வங் களையும் அழித்து ஒழிப்பதே ஆகும்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத சிறுதெய்வ - நாட்டார் தெய்வ - கிராம தெய்வங்களின் பொதுக் கோவில்களின் பட்டியல்.

1.சாலைப்புதூர் காளியம்மன் கோவில்

2.சாலைப்புதூர் பகவதி அம்மன் கோவில்

சாலைப்புதூர் விநாயகர் கோவில் (இங்கு அருந்ததியர்களுக்கு  அனுமதி  இல்லை, பள்ளர்களுக்கு அனுமதி உண்டு)

3.புது அத்திக்கோம்பை காளியம்மன் கோவில்

4.கே. அத்திக்கோம்பை காளியம்மன் கோவில்

5.கே. அத்திக்கோம்பை மாரியம்மன் கோவில்

6.பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோவில்

7.ஒட்டன்சத்திரம் காந்தி நகர் காளியம்மன் கோவில்

8.ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகவதி அம்மன் கோவில்

9.தும்மிச்சம்பட்டி  முத்தாளம்மன் கோவில் (ஒட்டன்சத்திரம் நகரம் )

 10.நாகணம்பட்டி காளியம்மன் (ஒட்டன்சத்திரம் நகரம் )

11.ஒட்டன்சத்திரம் நகரம் ஏ .பி .பி. நகர்  அரசு வீட்டு வசதிக்குடியிருப்பு விநாயகர் கோவில்

12.விருப்பாட்சி காளியம்மன் கோவில்

13.விருப்பாட்சி மாரியம்மன் கோவில்

14.சத்திரப்பட்டி காளியம்மன் கோவில்

15.கணக்கன்பட்டி காளியம்மன் கோவில்

16.கணக்கன்பட்டி மாரியம்மன் கோவில்

17.புதுச்சத்திரம் காளியம்மன் கோவில்

18.செம்மட்டைப்பட்டி காளியம்மன் கோவில்

19.கள்ளிமந்தையம் காளியம்மன் கோவில்

20.கள்ளிமந்தையம் துக்கையம்மன் 

21.கரியாம்பட்டி அங்காள ஈஸ்வரி கோவில்

22.பொருளுர் மங்கையம்மன் கோவில்

23.பொருளூர் காளியம்மன் கோவில்

24.கொ. கீரனுர் மல்லிஸ்வரன் கோவில்

25.வல்லக்குண்டாபுரம் மாரியம்மன் கோவில்

26.தொப்பம்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவில்

27.வாகரை ஈஸ்வரன் கோவில்

28.வாகரை பெருமாள் கோவில்

29.வாகரை துக்கையம்மன் கோவில்

30.வாகரை பாப்பம்மாள் கோவில்

31.கூத்தம்பூண்டி ஈஸ்வரன் கோவில்

32.கூத்தம்பூண்டி அத்தனுர் அம்மன் கோவில்

33.அப்பிபாளையம் அங்காளம்மன் கோவில்

34.தங்கச்சியம்மாபட்டி காளியம்மன் கோவில்

35.தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் கோவில்

36.ஐ.வாடிப்பட்டி காளியம்மன் கோவில்

37.ஐ.வாடிப்பட்டி விநாயகர் கோவில்

38.பருத்தியூர் அம்மன் கோவில் (அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது)

39.புளியம்பட்டி காளியம்மன் கோவில்

40.அம்பிளிக்கை செளடம்மன் .காளியம்மன் கோவில்

41.அம்பிளிகை விநாயகர் கோவில்

42.முத்தனம்பட்டி காளியம்மன் கோவில் 

Pin It