periyar 34நாம் இவ்வாரம் மலாய் நாடு போகும் விஷயம் பத்திரிகைகள் மூலம் வெளிவந்திருப்பதை வாசகர்கள் அறியலாம்.

மலாய் நாட்டிலுள்ள சுயமரியாதை இயக்கத்திலீடுபட்ட அன்பர்களும் தொண்டர்களும் வெகு நாட்களாக விரும்பியதற்கும் நாமும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள் உலகிலுள்ள எல்லா மக்களிடையிலும் பரவி நன்மை பயக்க வேண்டுமென எதிர்பார்த்திருந்ததற்கும் ஏற்ப, நாம் மலாய் நாடு செல்கிறோம்.

நாம் இப்போது அங்கே போவது நமது நாட்டிலுள்ள வேலைகளையெல்லாம் நாம் முடித்து விட்டோம் என்ற கருத்திலல்ல. பின் என்னவெனில், இந்த 5, 6 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கத்தின் மூலமாய், மக்களிடையிலிருக்கின்ற புரட்டுகளையும் மூடநம்பிக்கைகளையும் எப்படி இங்கு எடுத்துரைத்தோமோ அதே போல், மலாய் நாட்டில் குடியேறியுள்ள தமிழ் மக்களிடத்திலும் நமது இயக்கத்தின் கொள்கைகளை நேரில் எடுத்துச் சொல்ல வேண்டுமென்னும் ஆசையினால்தான் நாம் இப்போது மலாய் நாடு செல்கின்றோம்.

தாய் நாட்டி லிருந்து இதர இடங்களாகிய மலேயா, தென் ஆப்பிரிக்கா முதலான அயல் நாடுகளுக்கு ஜீவனத்திற்காகக் குடியேறிய நமது ஏழை மக்களோடு கூடவே பார்ப்பனீயமும் குடியேறியிருக்கிறது என்பதை வாசகர்கள் ஞாபகத்தில் வைக்கும்படி கோருகிறோம்.

தேக உழைப்பினால் பாடுபட்டு சம்பாதித்தும் பாமர மக்களுடைய ஊதியத்தை மதம், கடவுள், வேதம், சாஸ்திரம், புராணம் என்ற பெயர்களினால் கொள்ளையடித்து நகத்தில் அழுக்குப்படாமல் ஏமாற்றி வயிறு வளர்க்கக் கூடிய பார்ப்பனர்கள் நமது நாட்டில் எவ்வளவு தீங்குகளை இழைத்திருக்கின்றார்களோ அதேமாதிரி ஏனைய நாடுகளில் குடியேறிய மக்களையும் முன்னேறவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கிறார்களென்பதை நாம் நன்கு அறிவோம்.

உதாரணமாக, நாம் இப்போது போகக்கூடிய மலேயா நாடுகளில் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக பார்ப்பனர்கள் செய்துவரும் இடைஞ்சல்களை நாம் அடிக்கடி கடிதங்கள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் தெளிவாய் அறிந்திருக்கிறோம்.

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களையும் அதன் முற்போக்கான கருத்துக்களையும் மக்கள் நன்குணர்ந்து அதன் படி நல்லறிவு பெற்று மூடநம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்கங்களையும் கொஞ்சங்கொஞ்சமாய் ஒழித்து சகல சாதி மக்களும் ஒற்றுமைப்பட்டு வருவதைப் பொறாத பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் சில மாதங்களாக தவறான முறைகளிலெல்லாம் சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்க ஆரம்பித் திருக்கிறார்கள்.

உதாரணமாக, பார்ப்பனீயமும் புரோகிதமும், அர்த்தமற்ற சடங்கு களும் இல்லாமல் சுயமரியாதை இயக்கத்தின் முறைப்படி நடக்கும் எண்ணிறந்த திருமணங்கள் சட்டப்படி சொல்லாதவைகள் என்று ருசுப்படுத்துவதற்கும் தங்களுடைய ஆதிக்கத்தை எப்போதும் போல மக்களிடத்தில் நிலை நாட்டுவதற்கும் பார்ப்பனர்கள் செய்துவரும் முயற்சிகள் கொஞ்சமல்ல; அவர்களுடைய முயற்சிகள் பலன் பெறலாம் என்று எதிர்பார்த்த நாட்களெல்லாம் போய் மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதால், இத்தகைய சூழ்ச்சிகளை மக்களே எதிர்த்துப் போராடி வென்று விடுவார்கள் என்ற பூரண நம்பிக்கை நமக்குண்டு.

ஏனெனில், வெகு நாட்களாக ஏமாற்றிக் கொண்டே வந்த ஒருவன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னுங் கூட, மேலும் ஏமாறிக் கொண்டே, இருப்பதற்கு அவனது அறிவு இடங்கொடாது என்பது நமக்குத் தெரியும்.

இந்த மாதிரி சூழ்ச்சிகள் ஒரு பக்கமிருக்க, சுயமரியாதை இயக்கத்தை அழிப்பதற்கென்றே சில “இந்துமத சங்கங்கள்” எனப்படுபவைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றனவென்றால் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு தூரம் மலாய் நாட்டுப் பார்ப்பனர்களையும் அவர்களது கூலிகளையும் பாதித்திருக்கிறது என்பதை நன்கு உணரலாம்.

இதர தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகளை விட மிகவும் அதிகமாக நமது “குடிஅரசு” மலாய் நாடுகளில் பரவியிருந்தாலும்கூட, அது மாத்திரம் போதாமல் அவ்விடத்திலேயே “முன்னேற்றம்” போன்ற பத்திரிகைகளை நமது அன்பர்கள் ஆரம்பித்து, அவைகளும் ஏற்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே ஆயிரக்கணக்காய் பரவ ஆரம்பித்திருக்கின்றன வென்றால், சுயமரியாதை உணர்ச்சி மக்களிடத்தில் எவ்வளவு தூரம் செலாவணி ஆகியிருக்கிறது என்பதை வாசகர்களே ஊகித்துக் கொள்ளலாம்.

நமது இயக்கத்திற்கு இத்தகைய எதிர்ப்புகள் வருவதால் நமக்கு சற்றும் கவலையில்லை. அவைகளினுடைய கதி என்னவாகும் என்பது நமது நாட்டில் செவ்வாய்க்கிழமை தாலிகட்டி புதனன்று அறுத்துப் போன “ஆஸ்திக சங்கத்”தை உணர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

செங்கற்பட்டில் கூடிய முதலா வது சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்களையும் அவைகளை நடை முறையில் நடத்தி ஆதரவளித்த எண்ணிறந்த மக்களையும் பார்த்துத் திகில டைந்த பார்ப்பனர்கள் சில கூலிகளைப் பிடித்து “ஆஸ்திக சங்கம்” என்பதாக ஒன்று ஸ்தாபித்து அவர்களது கைகள் ஓயும் வரையும் நம்மையும் நமது அன்பர்களையும் கண்டவாறெல்லாம் தூஷித்தும், தூற்றியும் பார்த்து ஒருவாறாக அடங்கி ஒடுங்கி அமிழ்ந்துவிட்டார்கள்.

“கடவுள்” உண்டு என்பதை ஸ்தாபிப்பதற்காக ஏற்படுத்தபட்ட ஒரு சங்கத்தின் நிலைமை இவ்வாறு ஆயிருக்கிறது என்பதை வாசகர்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்குமாறு விரும்பு கிறோம். இதே மாதிரியாகத்தான் மலாய் நாட்டிலும் “இந்து மதம்” என்பதைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சங்கங்களைப் பற்றியோ அவைகளின் கர்த்தாக்களைப் பற்றியோ நமக்குச் சற்றேனும் கவலையில்லை.

ஏனெனில், ‘இந்துமதம்’ யாருக்காக ஏற்பட்டது, யார் ஏற்படுத்தியது, எப்போது எந்தக் கருத்தினால் ஏற்படுத்தப்பட்டதென்பதை நமது மக்கள் வெட்ட வெளிச்சமாக அறிந்து விட்டார்களாதலால், “மதம் போச்சு” என்ற பொய்க் கூச்சலின் மூலியமாய் இனி மக்களை ஏமாற்றவோ அடிமைப் படுத்தவோ ஒருவராலும் முடியாது என்ற உறுதியான நம்பிக்கை நமக்குண்டு.

பராசர ஸ்மிருதி, மனுஸ்மிருதி முதலியவைகளிலும் “இந்து மதத்திற்கு” ஆதார மான வேதங்களிலும் தற்காலத்திற்கு ஏலாததும், மனிதனது பகுத்தறிவுக்கு முரண்பட்டதுமான கருத்துக்களே அடங்கி யிருக்கின்றன என்பதை நிச்சயமாய் அறிந்து கொண்ட நமது மக்களிடம் “இந்து மதம்” என்ற பூச்சாண்டியைக் காண்பித்து இனியும் ஏமாற்றலாம் என்று யாராவது எண்ணியிருப்பார்களானால், அவர்களுக்காக நாம் பெரிதும் இரங்குகின்றோம்.

“இந்து மதம்” என்பதற்கு அடிப்படையாகச் சொல்லப்படுகின்ற வேதங்கள், ஸ்மிருதிகள் இவைகளின் நிலைமையே தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, அவைகளின் மேற்கட்டிட மாகிய “இந்து மதத்”தின் கதி என்னவாகுமென்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆகையால் இந்து மதத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கப் புறப்பட்டிருக்கும் கூட்டத்தார்கள் இனியாகிலும் காலதேச வர்த்தமானத்தை உணர்ந்து, யோக்கியமான முறைகளில் உழைத்து தங்கள் வாழ்க்கையைப் பரிசுத்தமான வழிகளில் நடத்தத் தவறுவார்களானால், மக்களுக்குள் அனாவசியமான வேறுபாடுகளும் மதப் பூசல்களும் சாதிச் சண்டைகளும் உண்டாகி அதனால் மனித சமூகத்தின் முன்னேற்றமும் தடைப்படும் என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.

கடைசியாக, நமது மலாய் நாட்டுப் பிரயாணத்தைப் பற்றிய விஷமப் பிரசாரங்களைப் பற்றியும் சிறிது உறுதியாய்க் கூற விரும்புகிறோம். நாம் மலாய் நாடு போவதாலும் அவ்விடத்தில் நமது இயக்கத்தின் கொள்கைகளை எடுத்து மக்களுக்குச் சொல்வதாலும் சில சுய நலக் கூட்டத்தாருக்கு ஏற்படக் கூடிய கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த சிலர் தங்களுடைய ஆதிக்கத்திற்கு அழிவு காலம் கிட்டிவிட்டதென்று பயந்து நம்மை அவ்விடம் வர வொட்டாது தடுக்க வேண்டிய முயற்சிகளை பல வழிகளிலும் செய்யத் தொடங்கியிருப்பதாகவும் அறிகிறோம்.

இந்த நாட்டிலுள்ளது போலவே அங்கும் சர்க்காருக்கு உள் உளவாயிருக்கின்ற பார்ப்பனர்கள் சர்க்கார் மூலமாக நம்மைப் பற்றி பொய்யும் புரட்டும் சொல்லி நம்மை தடுப்பதற்கு வேண்டிய சூழ்ச்சிகளெல்லாம் செய்து வருகிறார்களென்றும் கேள்விப்படுகின்றோம்.

இவைகளெல்லாம் உண்மையா யிருக்குமாயின், இத்தகைய வீண் மிரட்டல்களால் நமது இயக்கத்தின் லட்சியங்களை நாம் சொல்லாமலோ, அல்லது அதன் நன்மைகளை மக்களுக்கு விளக்காமலோ இருக்க போவதில்லை என்பதை மாத்திரம் உறுதியாய்க் கூறுவோம்.

ஆனால், நாம் வெகு நாட்களாகச் சொல்லிவந்தபடி அரசியலைவிட சமூக மத விஷயங்களையே பிரதானமாகக் கொண்டு நமது சுற்றுப் பிரயாணத்தை முடித்து வருவதாக நாம் உத்தேசித்திருக்கிறோம். அரசியல் சம்பந்தமான பிரச்சினைகளைப் பற்றி நமக்குத் தற்போது அதிகக் கவலையில்லையாதலால் அது சம்பந்தமாக நாம் ஒன்றும் பேசப் போவதும் இல்லை.

ஆனால் சமூக மத சீர்திருத்தங்கள் சம்பந்தமாக செய்யப்போகும் நமது பிரசாரத்திற்கு மாத்திரம் பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு மலேயா கவர்ன்மெண்டார் ஏதேனும் முட்டுக்கட்டையாக இருக்க முயலுவார்களேயானால், அதற்காக நாம் நமது வேலையில் சற்றேனும் பின்வாங்கப் போவதில்லையென்பதை மாத்திரம் நிச்சயமாய்க் கூறுவதோடு அதனால் ஏற்படக் கூடிய எவ்வித கஷ்ட நஷ்டங்களுக்கும் நாம் தயராகவே இருக்கின்றோம் என்பதையும் வாசகர்களுக்கு வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 15.12.1929)

Pin It