ஜாதி மறுப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதியருக்கு2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் அரசு  கலப்பு திருமணங்களை ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கான தொகை 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக ஒடிஷா அரசு உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சன்மானம் 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ரூ.2.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

இதற்காக sumangal.odisha.gov.in என்ற பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப் பட்டவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இது எஸ்.டி மற்றும் எஸ்.சி மேம்பாடு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமணங்கள் சமூக நல்லிணக்கத்தை பேணும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதில்,  இந்து மேல் சாதி மற்றும்இந்து தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையில் திருமணம் நடைபெற வேண்டும். இந்தத் திருமணம் இந்து திருமணச் சட்டம் 1955இன் படி செல்லுபடியாக வேண்டும். இந்தப் பரிசு திருமணமான தம்பதிக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

முதல்முறை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே அரசின் தொகை கிடைக்கும். கணவன் இறந்து விதவையான மனைவி அல்லது மனைவி இறந்து தனிமையில் வாழும் கணவன் மறுமணம் செய்து கொண்டால் இத்தகைய நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                      **********

ஜே.இ.இ.’ தேர்வில் முதலிடம் பெற்றவர் நடத்திய மோசடி அம்பலமானது

அய்.அய்.டி. போன்ற தொழில்நுட்பக் கல்லூரிக்கான ‘ஜே.இ.இ.’ நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் ஆள் மாறாட்டம் செய்து எழுதியது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேஇஇ மெயின் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் அசாமில் மாணவர், அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜேஇஇ மெயின் தேர்வை 6.35 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

தேர்வு முடிவுகள் செப்டம்பர்11 நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தனர்.ஜேஇஇ மெயின் தேர்வில் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படிக்க முடியும்.

இந்நிலையில், அசாமில் ஆள்மாறாட்டம் செய்து ஜேஇஇ மெயின் தேர்வில் 99.8 சதவீத மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படும் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மித்ரதேவ் சர்மா என்பவர்  காவல்துறையிடம் அளித்த புகாரில்  கவுகாத்தி தேர்வு மையத்தில் சம்பந்தப்பட்ட தேர்வருக்குப் பதிலாக செப்டம்பர் 5 அன்று வேறொரு மாணவர் வந்து தேர்வெழுதியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்குத் தேர்வு மையத்தில் உள்ள அதிகாரியும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகக் காவல்துறை, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விசாரணையில் தேர்வரின் தந்தையும் (மருத்துவர்) 3 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வர், தான் செய்த மோசடியை நண்பர் ஒருவரிடம் போனில் பகிர்ந்துள்ள ஆடியோ கிடைத்துள்ளது.இந்த மோசடியில் கவுகாத்தியில் உள்ள தனியார் பயிற்சி மையத்துக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It