அந்த நாளில்
ஓராண்டாய்த் தொடர்ந்த
காற்றழுத்தத் தாழ்வுநிலை
ஓயாமல் சுழன்றடித்து
மூர்க்கமாய்க் கரையேறியது
தேர்வு முடிவுகளாய்

காற்றின்
கோரத்தாண்டவத்தில்
முகமுடைந்து நெஞ்சழிந்து
வாழ்வை
வினாக்குறிகளால் நிமிர்த்தியபடி
மாணவர்கள் பலர்

இணைய மையங்கள் தோறும்
மதிப்பெண்களைப்
பொறுக்கியபடி
பெற்றோர்களும் மாணவர்களும்

தூக்கி எறியப்பட்ட
மேற்கூரைகளாய்ப்
பாடப்புத்தங்கள்

வழியெங்கும்
நொறுக்கி வீசப்பட்ட
கேள்வி பதில்களும்
சூத்திரங்களும்
வரைபடங்களுமாக
மிதிபட்டுக் கிடந்தன
இளைஞர் கனவுகள்

காற்று மழையின்
கவலையில்
பட்டினி கிடந்த
தங்களின்
அகோரப் பசிக்குப்
பிள்ளைகள் வாயில்
திணிக்கப்படும் கவளங்களாய்
மதிப்பெண்கள்

புயல் ஓய்ந்த
திருநாளில்

புயலின் சுவடுகள் துடைத்து
புதுப்பொலிவை
எதிர்நோக்கி
காத்திருக்கும்
எங்கள் எதிர்கால நம்பிக்கைகள்.

Comments

2 comments

2
Kaarunyan, Palladam
நன்று இளங்கோ. ஆனால் மதிப்பெண்ணை த்தவிர வேறு எதைக்கொண்டு மாணவனின் தரத்தை நிர்ணயிப்பது? இதாவது இருக்கிறது ஏழை மாணவனுக்கு நம்பிக்கை கொடுக்க. இல்லையெனில் சூத்திரதாரிகள் சூழ்ந்த இந்த தேசத்திற்க்கு எத்தனை பெரியார்கள் தேவைப்படுமோ?
சோமா
நல்ல சொல்லாடலோடு நவீன கல்விமுறையை கவிதையில் படம் பிடித்திருக்கிறீர்கள்...நன்று நா.இளங்கோ.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.