யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்,

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

மகாகவி பாரதி கவிச்சக்கரவர்த்திக் கம்பனைத் தமிழ்நாட்டின் அடையாளம் என்று சிறப்பிக்கின்றான். அதிலும் கல்வியில் மேம்பட்ட தமிழகம் என்பதற்குச் சான்றாகப் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்கிறான். தமிழில் பன்னிரண்டு ஆயிரம் பாடல்களால் உலகம் போற்றும் ஓர் உன்னதக் காவியத்தைப் படைத்த தனிப்பெரும் புலவன் என்ற பொருளில் “கல்வி சிறந்த தமிழ்நாடு -புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று மகாகவி பாரதி தமிழ்நாட்டினைப் புகழ்ந்துரைக்கின்றான். தமிழின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் அளவற்ற காதல் கொண்டிருந்தவன் கம்பன் என்பதற்கு அவன் படைத்த இராமகாதையே மிகப்பெரிய சான்று. வான்மீகமே கம்பனின் இராமகாதைக்கு மூலநூல் என்றாலும் கம்பன் அப்படியே ஒரு மொழிபெயர்ப்பாகத் தமது காவியத்தைப் படைக்கவில்லை. வான்மீகத்தில் இடம்பெற்றிருந்த அத்துணைக் கதை மாந்தர்களின் பெயர்களையும் அழகான தமிழில் மொழிபெயர்த்துத் தமது காவியத்தில் பயன்படுத்துகின்றான். என்றுமுள தென்தமிழ் என்று தமிழைக் கொண்டாடுகிறான். தேவைப்படும் இடங்களில் தமிழ் மரபுக்கும் பண்பாட்டிற்கும் ஏற்பக் கதை நிகழ்ச்சிகளில் மாற்றங்களைச் செய்கிறான். அதனால்தான் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு எனக் கம்பனையும் தமிழ்நாட்டினையும் சேர்ந்தே புகழ்ந்துரைக்கிறான் பாரதி.

தமிழ்க் கவிஞர் பல்லாயிரவரில் கம்பனுக்கு மட்டும் அப்படியென்ன தனிப்பெருமை என்பதற்கும் பாரதியே தமது சுயசரிதையில் பதிலளிக்கிறான். கம்பனுக்கு பாரதி தரும் மிகப்பெரிய விருது, கம்பன் என்றொரு மானுடன் என்பதாகும். திரையிடு மணலினும் பலராக வாழ்ந்து மறைந்த மக்கள் கூட்டத்தில் மானுடன் என்ற பெருமையைக் கம்பனுக்குச் சூட்டி மகிழ்ந்தானே பாரதி, அதற்கு என்ன காரணம்?. மானுட குலத்தின் மேன்மையை அதன் முழுமையை நன்றாக உணர்ந்தவன் கம்பன் என்று மகாகவி பாரதி உறுதியாக நம்புகிறான். அதனால்தான் கம்பனை மானுடன் என்கிறான்.

கம்பனும் மானுட மேன்மையும்: கம்பன் காவியம் படைக்க எடுத்துக் கொண்ட கதை அவதார நாயகனின் பெரும்புகழைப் பேசும் கதை. இக்கதை தொன்ம, புராணக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட இதிகாசம் என்றாலும் இக்கதையில் பல்வேறு இடங்களில் இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் சித்தரிக்கப் படுகின்றன என்றாலும் கம்பனின் நோக்கம் மானுடம் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளில் உறுதியாக இருந்தது. அதனால்தான் பழங்குடி மனிதர்களோடும் விலங்குகளோடும் அரக்கர்களோடும் கதைத் தலைவன் இராமன் சகோதரத்துவம் பூண்டான் எனக் காவியம் படைக்கின்றான். கம்பனின் குறிக்கோள் மானுடத்தின் மேன்மை அதாவது சமத்துவம் சகோதரத்துவம் அதனோடு கூடிய உயிர் இரக்கம்

இனக்குழுக்களின் காலம் தொடங்கி, சிற்றரசுகளின் காலம், பேரரசுகளின் காலம், நவ நாகரீக மக்களாட்சிக் காலம் வரையிலும் மனிதகுலத்துக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்கள் பலவற்றிலும் முதன்மையானது போர்களே. இயற்கைச் சீற்றங்களைத் தவிர்த்து மனிதகுலத்துக்கு மிகப்பெரிய பேரழிவை உண்டாக்க வல்லவை போர்களே.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம்-76)

என்பார் சங்கப் புலவர் இடைக் குன்றூர்க் கிழார். மானுடம் போற்றும் மகத்தான மாமனிதர்கள், சிந்தனையாளர்கள், பேரறிஞர்கள், படைப்பாளிகள் அனைவருமே போரின் பெருந்தீமைகள் குறித்துக் காலம் காலமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். போரில்லாத புதிய உலகத்தைப் படைத்து விட்டால் மானுடம் மேன்மை பெறும். மானுடன் போற்றும் மகாகவி கம்பனுக்கு இந்தச் சிந்தனையில் ஒரு கனவு இருந்தது.

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்றார் பாவேந்தர். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து அழித்துவிட்டுப் புதியதோர் உலகத்தைச் செய்து கொள்ள வேண்டும் என்பதே பாவேந்தரின் விழைவு. இது எப்படிச் சாத்தியமாகும்? அடுத்தடுத்த அடிகளில் அதற்கு விடை தருகிறார் கவிஞர்

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்

இதயமெலாம் அன்பு நதியில் நனைப்போம்

இதுஎனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்

பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும். அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும். இது என்னுடையது என்று பொருள் சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன். எல்லோர்க்கும் எல்லாம் என்றிருப்பதான பொதுவுடைமைச் சமூகத்தில் தனிவுடைமைகள் இல்லாது போகும். எல்லாம் பொது என்பதனால் மேலும் மேலும் பொருளைச் சேர்க்க வேண்டும் என்ற பேராசைக்கு அங்கே இடமில்லை. அதனால் போட்டி இல்லை, பொறாமை இல்லை, இகல் இல்லை, பகை இல்லை. பகையற்ற சமூகத்தில், தேசத்தில் போருக்கு அவசியமே இல்லை. அதனால் போரிடும் உலகம் இல்லாது அழிந்தொழியும் என்பது பாவேந்தரின் தீர்க்கமான முடிவு.

பாவேந்தரின் இந்தக் கனவுக்குப் பாதை சமைத்துத் தந்தவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவர் காண விரும்பிய நாடு ஒரு சமத்துவ நாடு. அங்கே ஏழைகளும் இல்லை, பணக்காரர்களும் இல்லை.

வண்மை இல்லை, ஓர்வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர்செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய்உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல்கேள்வி மேவலால். (கம்பர்- 84)

கம்பன் வருணிக்கும் கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால் கொடைக்கு அங்கே இடமில்லை, நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை, பொய்ம்மொழி இல்லாமையால் மெய்ம்மை தனித்து விளங்கவில்லை, பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் வெள்ளறிவாகிய அறியாமை இல்லை.

வறுமையில்லை கொடையாளியும் இல்லை என்றதனால் கம்பன் காட்டும் கோசல நாடு ஒரு சமத்துவ நாடு. அதாவது பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்டொழுகும் நாடு என நாம் உய்த்துணர்ந்து கொள்ள முடியும். உண்மையில் கம்பன் சொல்வது போல் மன்னராட்சிக் காலங்களில் தனியுடைமைகளை ஒழித்துப் பொதுவடைமையைப் பின்பற்றுகின்ற தேசங்கள் இருந்தனவா? என்றால். தேசங்கள் இப்படிச் சமத்துவ தேசமாக விளங்க வேண்டும் என்பது கம்பனின் விழைவு. அதாவது அவன் கனவு, அந்தக் கனவைக் கோசல நாட்டின் மீதேற்றிப் பாடுகிறான். வண்மை இல்லை ஓர்வறுமை இன்மையால் என்று பாடிய அதே பாடலின் அடுத்த அடியில் திண்மை இல்லை ஓர்செறுநர் இன்மையால் என்கிறார். அதாவது பகை இல்லாததால் அங்கே பலசாலிகளும் இல்லை என்கிறார். எப்படிப் பகை இல்லாமல் போயிற்று என்று யோசித்தால் முதல் அடியில் அவர் சொன்ன சமத்துவம்தான் பகை இல்லாமல் போனதற்குக் காரணம் என்பது விளங்கும். ஆக, பாவேந்தன் சொன்ன பொதுவடைமைக் கொள்கையைத் திசையெட்டும் கொண்டு சேர்க்கவல்ல புதியதோர் உலகத்தை உருவாக்கினால் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்த்துப் போரற்ற உலகை உருவாக்க முடியும் என்பது விளங்குகிறது.

போருக்கும் போர் அழிவுகளுக்கும் முதன்மைக் காரணம் இகல் என்னும் பகைமை உணர்ச்சி. திருவள்ளுவர் பகைமை உணர்ச்சியாகிய இகல் என்பதனை ஒரு நோய் என்றே குறிப்பிடுகின்றார்.

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும். (குறள் -853)

பகைமை உணர்ச்சி என்னும் துன்பம் தரும் நோயை ஒருவன் தன்மனத்திலிருந்து நீக்கினாலே போதும் அது அவனுக்கு அழிவில்லாத நிலைத்த புகழைக் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர். யாரோடும் எவ்விடத்திலும் எக்காலத்திலும் ஒருவன் பகைமை உணர்ச்சி கொள்ளவில்லை என்றால் போரும் அதனால் ஏற்படும் அழிவும் துன்பமும் இல்லாமல் போய்விடும் என்பதோடு மட்டுமல்லாமல் அந்த உயர்ந்த பண்பே அவனுக்கு அழிவற்ற நிலையான புகழையும் தரும் என்ற இச்சிந்தனையின் மறுஆக்கம்தான் பின்வரும் கம்பனின் பாடல்.

யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்,

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்

தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,

வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ (கம்பர் -1419)

ஒருவன் யாரொடும் எக்காலத்தும் பகைகொள்ளாமல் இருந்தால் போர் இல்லாமல் போகும் அவனது புகழ் பெருகும்; அவனது படை அழியாது வளரும். எனவே அவனைப் பகைக்கப் பிறர் நினைக்கினும் அது செய்யார்; அதனால், பகையே இல்லாது ஒழியும்.

இப்பாடல் இராமகாதை அயோத்தியா காண்டத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் உள்ள பாடலாகும். இராமனுக்கு முடிசூட்ட விரும்பிய தயரதன் தம் குலகுரு வசிட்டரை அழைத்து முடிசூட்டிக் கொள்ளப்போகும் இராமனுக்குச் சிறந்த அறவுரைகளைக் கூறுவீராக என்று வேண்டிக் கொள்கிறான். மன்னன் தயரதனின் வேண்டுகோளுக்கு இணங்க வசிட்டன் இராமனுக்குச் சில அறவுரைகளை அறிவுரைகளாகச் சொல்லத் தொடங்குகிறான். கம்பன் வசிட்டருடைய அறவுரைகளைப் பதினைந்து பாடல்களாக ஆக்கித் தந்துள்ளார். அப்பாடல்களில் ஒன்றுதான் மேலே சுட்டிக்காட்டப்பட்ட யாரோடும் பகை கொள்ளலன் எனத் தொடங்கும் பாடல்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு. (குறள்-734)

என்பார் திருவள்ளுவர். பசி, பிணி, பகை என்ற மூன்றும் இல்லாதொழிந்த நாடே சிறந்த நாடு என்பது குறளாசானின் விளக்கம். பசியையும் பிணியையும் நலத்திட்டங்களின் மூலம் ஒழித்துவிட முடியும். ஆனால் பகையை ஒழிப்பது அத்துணை எளிதான காரியமன்று.

குலகுரு வசிட்டரின் அறவுரைகளில் முதல் நான்கு பாடல்கள் அந்தணர்களின் மேன்மையை அறிவுறுத்துகின்றன. இந்த நான்கு பாடல்களின் சமூக அரசியல் என்பது தனிவிவாதத்திற்கு உரியது. முதல் நான்கு பாடல்களைத் தவிர்த்து மீதமுள்ள பதினொரு பாடல்களில் கம்பனின் மானுட மேன்மைச் சிந்தனைகள் பெரிதும் பொதிந்து கிடக்கின்றன. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற மோசிகீரனாரின் பழைய சிந்தனைக்கு மாற்றாக மக்கள்தாம் உயிர் அவ் உயிரைத் தாங்கும் உடலே அரசன் என்ற புதிய சிந்தனை வசிட்டர் வாயிலாக முன்மொழியப் படுகிறது. அப்பாடல் இதோ,

வையம் மன்னுயிர் ஆகஅம் மன்னுயிர்

உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு,

ஐயம் இன்றி, அறங்கடவாது, அருள்

மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? (கம்பர் -1423)

மக்கள்தாம் உயிர் அவ்வுயிரைத் தாங்கும் உடல்தான் நாம் என்ற தெளிவு மன்னனுக்கு இருக்குமானால் அவன் அறத்திற்கு மாறுபடாமல் மக்களிடத்தில் அருளுடையவனாக நடந்து கொள்வான். அத்தகு அரசாட்சி வேதியர்கள் இயற்றும் வேள்வியைவிட மேலானது என்கிறான் கமபன்.

கம்பன் விரும்பிய போரற்ற உலகத்திற்கு யாரோடும் பகைமை பாராட்ட மாட்டேன் என்ற உயர்ந்த சிந்தனை மன்னர்களுக்கு வேண்டும். மக்களை முதன்மைப் படுத்தும் கம்பனின் விழைவை நடைமுறைப் படுத்தும் அரசாட்சியில் பகை இருக்காது. பகை இல்லையென்றால், அந்த நாட்டில் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது. கம்பன் போற்றும் மானுட மேன்மை இதுதான்.

தமிழ்ச் சமூகத்தில் போரும் பூசலும் நிரந்தரமானவை. மானுட மேன்மையை விழையும் சிந்தனையாளர்கள் காலந்தோறும் போருக்கு எதிரான கண்டனங்களைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வந்துள்ளனர். சங்க இலக்கியங்களில் அரசுகளுக்கு இடையேயான போரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட புலவர்களாகக் கருங்குழல் ஆதனார், ஔவையார், கபிலர், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், புல்லாற்ற்றூர் எயிற்றியனார், உறையூர் ஏணிச்சோரி முடமோசியார் போன்ற புலவர்களைப் பட்டியலிடலாம். இந்தப் புலவர்கள் எல்லாம் மன்னர்களை அணுகிப் போரின் அழிவுகளைச் சுட்டிக்காட்டி மக்களைக் கொன்றொழிக்கும் அவர்களின் உறுப்புகளைச் சிதைக்கும் நாட்டின் பொருளாதார வளத்தைப் பாழாக்கும் போரைத் தடுத்துள்ளனர். போர் மூண்டபின்பு போரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதைவிட போரே வராமல் தடுக்க வேண்டும் என்று கம்பன் விரும்புகின்றான். அதற்கான தீர்வுதான்

யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்,

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது;

என்ற சிந்தனை. மானுட மேன்மைக்குக் கம்பன் வழங்கிய மகத்தான சிந்தனையாக இதனை நாம் பதிவு செய்துகொள்ளுதல் வேண்டும். இருபதாம் நூற்றாண்டு கண்ட இருபெரும் உலகப் போர்களின் பேரழிவுக்குப் பின்னர் கம்பனின் போர் எதிர்ப்புக் குரலுக்கு அழுத்தம் கூடியுள்ளது. அதிலும் ஆதிக்க தேசங்களின் அணு ஆயுதப் பெருக்கத்தின் காரணமாக மீண்டும் ஒரு பெரும்போரை உலகம் சந்திக்க நேர்ந்தால் உலக உயிர்க்குலங்களே முற்றாக அழிந்துவிடக் கூடிய அபாயம் சூழ்ந்துள்ள இன்றைய நெருக்கடியான சூழலில் யாரோடும் பகை கொள்ளலன் என்ற கம்பனின் சிந்தனைக்குப் புதிய பரிமாணம் கிடைத்துள்ளது.

வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா என்று மானுடத்தின் வெற்றியைக் கொண்டாடும் மாகவிஞன் கம்பனைக் கம்பன் என்றொரு மானுடன் என்று மகாகவி பாரதி போற்றிப் புகழ்ந்தமை சாலப் பொருத்தமே என்பதனை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. கம்பனின் குறிக்கோள் மானுடத்தின் மேன்மை அதாவது போர்கள் அற்ற, சமத்துவம், சகோதரத்துவம் பேணுகின்ற மானுட மேன்மையே.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி -605008

Pin It