இரண்டாயிரம் ஆண்டு காலப் போராட்டத்தில் சமீபத்திய ஐம்பது ஆண்டுகாலமாக பள்ளிக்குள் நுழைந்த பெண்கள் மீண்டும் அடுப்படி பக்கம் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
காவல்துறை தொடங்கி கல்வித்துறை வரை இன்று பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்கள் பொது வெளியில் வெளிப்படும் போது தான் குறுகிய காலத்திற்குப் பெண்கள் மீதான பாதுகாப்பைப் பற்றி நாம் பேசத் தொடங்குகிறோம்.
கல்வியில் மிகப் பெரிய அளவில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளின் மத்தியில் இந்தியாவில் இன்னமும் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது எதிர்காலத்தில் பெண்களுக்குக் கல்வி என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதுபோன்ற பள்ளியில் ஆசிரியர்களால் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு யார் தான் காரணம்? குற்றமிழைத்த ஆசிரியர் தான் என நாம் கடந்துவிட முடியாது.
இருபது ஆண்டுகளாக வேலை செய்யும் ஆசிரியரின் குற்றப் பின்னணிகள் இன்றுதான் வெளிவருகிறது என்றால், இருபது ஆண்டுகளாகப் பள்ளி நிர்வாகமும், அதில் படித்த மாணவர்களும், மற்ற சக ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதை கவனிக்கத் தவறியது ஏன்?
தற்போதைய ஊரடங்கு சூழலில் அனைவரும் வீட்டிலிருந்தே தான் பணி செய்கிறார்கள். அப்படியிருக்க மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் ஆசிரியர் வந்து பாடம் நடத்துவதை வீட்டிலேயே இருக்கும் பெற்றோர்கள் அன்றே கவனிக்காதது ஏன்?
பெற்றோர்கள் பிள்ளைகளுடனான கலந்துரையாடல் இல்லாமல் போனதே இவ்வளவு துயரங்களுக்கும் காரணம்.
பத்து வயதுக் குழந்தை ஒன்று தனது ஒரு நாள் முழுவதுமான பள்ளி அனுபவத்தைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசையாய் சுமந்து வருகிறது. அதனால்தான் பள்ளி முடிந்தவுடன் பறவையாகப் பறந்து வருகிறார்கள் மாணவர்கள். ஆனால், அதை கவனிக்கவும் கொஞ்ச நேரம் கேட்கவும் பெற்றோர்களுக்கு போதிய நேரம் இருப்பதில்லை…
பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கப் பயணப்படும் பெற்றோர்கள். வாழ்வின் இனிமையான தருணங்களை தங்கள் பிள்ளைகளுடன் கொண்டாட மறந்து விடுகிறார்கள்.
பெரியவர்கள் எல்லாம் ஏங்கிக் கொள்ளும் ஒரு விஷயம் மீண்டும் குழந்தையாக மாட்டோமா? என்று. ஆனால், அந்த அனுபவத்தைக் குழந்தைகளுடன் கலந்துரையாடல் செய்தாலே கிடைக்கும் என்பதை மறந்து ஏங்கிக் கொள்கிறார்கள்.
உங்கள் குழந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒரு ரகசியம் அந்த குழந்தையின் நண்பனுக்கு தெரியும். எப்படி ஒரு வீட்டில் தன் உறவுகளுடன் பகிரப்படாத ஒரு ரகசியம் தனது சக நண்பர்களுடன் ஒரு குழந்தை பகிர்ந்து கொள்கிறது. பெற்றோர்கள் ஏற்படுத்தி வைத்த அச்சம் தான் காரணம்.
அப்பாவிடம் இதைச் சொன்னால் திட்டுவார். அம்மாவிடம் இதைச் சொன்னால் அடிப்பார். என்கிற அச்ச பிம்பத்தைப் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் உங்களைக் கவனித்து வளர்கிறார்கள். நீங்கள் அவர்களைக் கற்பிதங்களின் வாயிலாக வழிநடத்த முற்படுகிறீர்கள். அது ஒரு முள் வேலி போன்ற அமைப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு எல்லா விஷயங்களையும் நாம் கற்றுத் தர வேண்டியதில்லை அவர்கள் கற்றுக் கொள்பவர்கள். முதலில் எல்லாத்தையும் கற்றுத் தருவதற்கு நமக்கே தெரியாது என்பது தான் முழுமையான உண்மை.
குழந்தைகளுடனான உரையாடலைப் பழக்கமாகவே தொடருங்கள். இன்று நாம் கவனிக்க மறந்த விஷயங்களில் இது முக்கியமானது. உங்கள் வீட்டிலேயே ஆன்லைன் வழியாக நடந்த அபத்தம் நீங்கள் அறியாது இருப்பது பெற்றோர்கள் குழந்தைகளைக் கவனிக்கிறார்களா? என்கிற கேள்வியை இந்த சமுதாயத்தில் பெருமளவு ஏற்படுத்தியுள்ளது.
செல்போனால் கெட்டு வருகிறார்கள், தொலைக்காட்சியால் கெட்டு விடுகிறார்கள், நண்பர்களுடன் சேர்வதால் கெட்டு விடுகிறார்கள் என்று தொடர்ந்து காரணங்களை உருவாக்கும் நீங்கள், அவர்களுடன் கலந்துரையாடலை உருவாக்குவதில்லை.
ஒவ்வொரு நிலையிலும் பெற்றோர்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்தவே பார்க்கிறார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும். ஒரு அப்பர்ட்மெண்டில் பாலியல் குற்றம் நடந்த பின்பு அங்கே இருக்கும் குழந்தைகள் ஒன்றாக விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு பள்ளியில் பாலியல் குற்றம் நடந்த பின்பு அந்த பள்ளியில் படிக்கும் பல மாணவிகளின் பள்ளிப் படிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது.
இதெல்லாம் குற்றங்களைத் தடுப்பதற்கான வழியா? என்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை என வெளிப்படையாகவே தெரிகிறது. ஏற்கனவே மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் மேலும் சிறகொடிந்து சிறை வைக்கப் படுகிறார்கள்.
உங்கள் குழந்தைகளைப் பேச விடுங்கள். கலந்துரையாடலில் நீங்கள் எந்த சிந்தனையையும் போதிக்க வேண்டாம். எந்த நற்பண்புகளையும் கூற வேண்டாம். எந்த அறத்தையும் உரைக்க வேண்டாம். முதலில் உங்கள் குழந்தைகள் பேசுவதைக் கவனியுங்கள். அவர்களைப் பேசவிட்டு நீங்கள் கவனியுங்கள். அவர்கள் உள்வாங்கியதை வெளிக்கொண்டுவர நீங்கள் வழி விடுங்கள்..
என்று எல்லா குழந்தைகளும் நட்பு ரீதியாக வளர்க்கப்படுகிறார்களோ அன்று தான் குழந்தைகள் மீதான குற்றங்கள் நடந்த அன்றே வெளிப்பட்டு, தடுக்கப்படும். காலங்கள் கடந்து இழப்புகளும், துயரங்களும் நிச்சயம் எஞ்சிய பின்பு ஏற்படும் மாற்றம் எதற்கானது?
இது போன்று மாணவர்கள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஏற்படுத்தும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் அச்சம் ஏற்படும் வகையில்
குற்றவாளிகளுக்குச் சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பல பட்டங்கள் படித்து ஆசிரியர் என மார்தட்டிக் கொள்ளும் அந்தக் குற்றவாளியின் பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி
பட்டங்களை எல்லாம் பல்கலைக்கழகங்களும் அரசு திரும்பப் பெற வேண்டும்.
எண்ணிக்கையில் குறைவான சதவீதத்தில் இருக்கும் ஆண்களால் நடத்தப்படுத்தப்படும் இந்த சமூகம் பெண்களுக்கான அந்த முப்பத்து மூன்று சதவீதம் கூட இன்னும் முழுமையாக அளிக்கவில்லை என்பதுதான் இன்றைய கவலை கரமான நிலைமையாக உள்ளது.
என்று பெண்களுக்கான சமத்துவம் நிலைநாட்டப் படுகிறதோ அன்றுதான் உலகம் எங்கும் பெண்களுக்குச் சுதந்திரம்.
காட்டுப் பறவைகளைச் சிறை வைக்கும் வேட்டைக்காரன் ஒரு நாள் கொத்தி வீழ்த்தப்படுவான்…
- மு தனஞ்செழியன்