சிறப்புடை மரபிற் போரில் வென்றவர்
திறத்துடன் அரசைக் காப்பதும் வளர்ப்பதும்
அறவழிச் செல்வோர் மட்டும் அன்றி
மறவழி மாக்களின் பாதையும் அதுவே
புரட்சியின் வழியில் அரிதாய்த் தோன்றிய
மருத்துவ வீரனாம் சே குவாரா
வென்ற இடத்தில் கொண்ட ஞானம்
வேண்டிய இடத்தில் கொண்டு செல்ல
சுரண்டும் கூட்டம் குலைகள் நடுங்கி
இரக்கம் இன்றிக் கொன்ற பின்னும்
உறக்கம் இன்றி நாளும் தவிப்பது
சிறப்பாய் மக்கள் நினைக்கும் பொழுதெலாம்
 
(போரில் வென்றவர்கள் (தாங்கள் அமைக்கும்) அரசைக் காப்பதும் வளர்ப்பதும் சிறப்பான மரபே ஆகும். அறவழியில் செல்வோர் மட்டுமல்லாது (அறத்திற்கு மாறான) மற வழியில் செல்லும் கயவர்கள் பின்பற்றும் பாதையும் இது தான். (ஆனால்) புரட்சிப் பாதையில் அரிதாகத் தோன்றிய மருத்துவரான சே குவாரா என்ற வீரரோ, வென்ற இடத்தில் (ஆட்சியில் அமராமல், புரட்சியைப் பற்றித்) தான் பெற்ற அறிவை  (புரட்சி) தேவைப்படும் பிற இடங்களுக்குக் கொண்டு சென்றார். (இதைக் கண்டு) குலை நடுங்கிப் போன சுரண்டும் கூட்டத்தினர் (சதித் திட்டம் தீட்டி) இரக்கம் இன்றிக் கொன்று விட்டனர். அப்படிக் கொன்று விட்ட பிறகும், மக்கள் (அவ்வீரரை) நினைப்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம் தூக்கம் இன்றி நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர்.)
 
- இராமியா

Pin It