தேசிய இன விடுதலையை நிகழ்ச்சி நிரலில் வைக்கும் எந்தப் போரணியும் அதற்கே உரித்தான செயல் திட்டத்தை முன் வைப்பது முதன்மையானது. அச் செயல்திட்டத்தின் வேர்கள் அது ஏற்றுக் கொள்கிற மெய்யியல் தளங்களில் ஊன்றியிருக்கும்.

தூக்கத்தில் முளைத்து கனவுகளில் வேர் பிடித்து அடர்ந்த இருளில் புறப்படும் அரசியல் ஏதும் தேசிய இன அரசியலாக அமைய முடியாது. உலகெங்கும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் ஒரு தேசமாக உருக் கொள்வதாக அவர்கள் தாங்கியிருந்த அடக்குமுறைக் காயங்களுக்கு முதன்மைப் பங்குண்டு.

சொந்த நிலம் மீதான பற்றுதலில் ஊன்றி வளர்ந்த பாலஸ்தீனத்திற்கும், இந்தக் கூற்று பொருந் தலாம். முதலாளித் துவம் நவீனத் தேசங் களைப் பெற்றெடுத்த ஐரோப்பிய மாதிரிகள் தவிர மற்றெல்லா தேசப் பிறப்பும் ஏறத் தாழ இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளவே வேண்டியுள்ளது.

எதிர் காலத்தை நோக்கியதான நகர்வும், நிகழ்கால அடிமைத் தனத்தை முடிவுறச் செய்கிற வேட்கையும் இருபதாம் நூற்றாண்டு தேசிய இன விடுதலை அரசியலின் அடிக்கற்கள்.

தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை தேசிய இயக்கங்களின் பிறப்பு தேசியப் போராட்டங்கள் புதிய தேசத்தின் பிறப்பு என்ற இந்த எளிமையான படிநிலைகளில் ஒரு முக்கிய விடுபாடு உண்டு. அது தேசிய எழுச்சியின் ஆன்மாவைக் கட்டியெழுப்புகிற தேசியப் பெருமிதம். அடக்குகிற தேசத்தின் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கிற நோக்கும் நகர்வும் தேசியப் போராட்டங்களுக்கு தீராத உக்கிரத்தை வழங்க வல்லவை. ஆனால், அது முதிர்ந்த தேசிய விடுதலை இயக்கங்களில் தேசநீர்க் கசப்பு போல மிதமாகவே இருப்பதை நாம் கண்டுணரலாம்.

தேசிய உருவாக்கத்தில் தமிழகம் இன்னும் முதிர்ந்தபாடில்லை என்பது நமது மிகத் தாழ்மையான கருத்து. இல்லையெனில் ஒரு மொழி இலக்கணப் புலவரான தொல்காப்பியரின் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் என மொழி எல்லை வகுத்துச் சொன்னதை தேச வரம்புரைத்த மேதையின் கண்டுபிடிப்பைப் போலக் கூறி இறும்பூதெய்திட தமிழர்கள் தவிர வேறு யாரால் முடியும்?

நவீனத் தேச உருவாக்கம் இரு கூறுகளைக் கோருகிறது.

ஒன்று நிகழ்கால தேச ஒடுக்குமுறைகளை உணர்தலும் அவற்றுக்கெதிராகக் கிளர்தலும்.

இரண்டு பாம்பு தன் சட்டையை காலம் தவறாது உரித்து வீசுவதைப் போல் எதிர்காலத் திற்குக் கிஞ்சித்தும் பொருந்தாத நிகழ் காலத்தை சற்றும் மனக் கூச்சமற்று விட்டு விடுதலையாகி நடைபோடுவது.

மூடித்திரையிடப் பட்டு இருட்டறை யில் கிடத்தப்பட்டி ருக்கும் அல்ஜீரியப் பெண் சமூகத்தை உதட்டுச் சாயமும் முட்டி தெரிய ஐரோப் பிய உடைகளுமாக அலையவிடும் துணிவும் தெளிவும் அல்ஜீரிய விடுதலை இயக்கத்தின் ஊடாக தலைவர் பிரான்ஸ் ஃபனானுக்கு வாய்த்தது.

தழையத்தழைய கட்டப்படும் தமிழ்ப் பெண்ணின் சேலையும் ஆண்மை(!) மிக்க தமிழ்ஆணின் வேட்டியும் நம் நினைவிற்கு வந்து தொலைக்கின்றன. கற்பு, பத்தினி, ஒருவனுக்கு ஒருத்தி, தமிழரின் தொல் பழங்கால நாகரிக மதமதப்பு எல்லாம் வழியெல்லாம் இரைந்து கிடக்கின்றன. அனைத்தையும் ஏறி, மிதித்து, நசுக்கிக் கடக்க வேண்டியது தமிழ்த் தேச விடுதலை அரசியலின் வரலாற்றுக் கடமை என்பதை நாம் உணர்ந்தே ஆக வேண்டிய காலமே இது.

 அரசதிகாரதிமிருக்கெதிராக கிளர்ந்த கண்ணகியின் எழுச்சி, வீரம், துணிவு அனைத்தையும் பத்தினித் தெய்வம், கற்புக்கரசி என நாகரிக சமூகம் கேட்கவும் கூசுகிற சொற்களில் மூடி மறைக்கும் தமிழ் அடிப்படை வாதம் ஒரு வரலாற்றுப் பிழை என்பதை கூர்ந்த தமிழ்த் தேச விடுதலையாளர்கள் உணர்ந்தாக வேண்டும். இல்லையெனில், பழைய பண்ணையார்களின், அதிகாரமிழந்த குறுநில மன்னர்களின் ஆதங்கமாக மாறி அழிந்து போகிற வரலாற்றுக் கேடு தமிழ்தேசிய விடுதலை அரசியலுக்கும் நேர்ந்திட நாம் வாய்ப்பளித்தவர்களாவோம்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி (பாஷை) என்றார் பெரியார். பெரியார் மேல் நமக்கு இதில் பெருங்கோபம். காட்டுமிராண்டிகள் போர்க்குண மிக்கவர்கள். காட்டு மிராண்டிகள் எந்தத் தமிழ்ப் பண்பாட்டு இழிவுகளுக்கும் இடம் கொடாதவர்கள். வரலாற்றின் குப்பை மேட்டில் தொன்மைச் சாயத்தோடு சுமந்து செல்ல காட்டுமிராண்டிகளிடம் எந்த "கற்பும்' "சாதியும்' இருப்பதில்லை.

இந்தியாவுக்கெதிரான போரில் சீக்கியர்கள் ஐந்து இலட்சம் பேர் இறந்து போனதையும் இந்திராவின் ஆதிக்கத் திமிரால் பொற்கோவிலுக்குள் நுழைந்து சீக்கியர்களைக் கொன்று வீசிய நிகழ்வையும் எண்ணிப் பார்க்கையில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிவகங்கைச் சீமான் ப. சிதம்பரத்தை நோக்கி செருப்பு வீசிய சீக்கிய இதழா ளரின் போர்க் குணத் தை ஒப்பிடுகையில் தமிழ் ஈழத்தில் மன் மோகனும், சோனி யாவும், சிதம்பரமும் நடத்திய இந்தியா வின் படுகொலைப் பேயாட்டத்திற்கு எதிர்வினை ஏதும் ஆற்றவக்கில்லாத நம் அடிமைத் தமிழகத்தின் குருதியில் இந்திய எதிர்ப்பு என்பது சற்றும் இல்லைதானே.

நாகலாந்து மக்களின் வில்லும் அம்பும் தமிழ் தேச ஒலிப் பெருக்கிகளைவிட உன்னதமானவை. இந்தியாவின் ஆயுதச் சிறப்புச் சட்டத்தை எதிர்த்து பத்தாண்டுகளாக மணிப்பூர் வீராங்கனை ஐரோம் சார்மிளா நடத்தி வருகிற சமரசத்திற்கிடமற்ற உண்ணாநிலைப் போர் முன் நம் ஈழ ஆதரவு உண்ணா நோன்புக் கூத்துக்கள் தமிழர்கள் எத்தகையவர்கள் என்பதை ஓவியமாக வரைந்து காட்டுகிறது.

நம் தமிழ்த் தேசியத்தின் ஒற்றைப் பெரும் பகையான, இந்தியாவின் மீது எச்சில் துப்பவும் செருப்பு வீசவும் கல்லெறியவும் கூட வக்கற்றுப் போன வர் நாம் ஏன் வக்கற்றுப் போனோம்? இந்தியாவை நாம் பகையாக உணரவேயில்லை. இந்தியாவின் காலடியில் மிதிபட்டு ஒடுக்கப்படுகிற இனங்கள் எவற்றோடும் நம்மால் ஒன்றிணைய வழி தெரியாமலும் ஒன்றிணை வதின் தேவைபுரியாமலும் போனதே அதன் அடிக்காரணம்.

எதிர்காலம் நோக்கிய எந்த விடுதலை அரசியலும் பகையைத் துல்லியமாக அடையாளம் கண்டாக வேண்டும். தன் நண்பர்களை இனங்கண்டாக வேண்டும். நாகலாந்தும் மணிப்பூரும் அசாமும் பஞ்சாபும் காசுமீரமும் நம் நெஞ்சில் நிறைந்து கருத்தில் கலக்க வேண்டும்.

இந்திய நிழலில் எந்தப் புல் பூண்டும் முளைக்காது என்பதை நாம் அறிந்தாக வேண்டும். திசையெட்டும் அடக்குமுறை கால் பரப்பி நிற்கிற இந்திய வல்லாதிக் கப் பூதத்தை ஊத்தைப் பெருமிதத்தால் எதிர்த்து ஊதிவிட முடியாது. தமிழர்கள் தொன்மையானவர்கள் எனும் போதே நம் அடிமைத்தனமும் தொன்மை யானது என்கிற அறிவு சற்றேனும் நினைவில் வர வேண்டும். நம் அடிமைப் புத்திக்கு தொன்மைச் சந்தனம் பூசிக் கொள்ள நாம் அறவே விரும்பவில்லை.

இந்தியா ஒரு போர்க்களத்திற்கு தமிழ்த் தேசத்தை அழைக்கிறது. அதில் அரிதாரங்கள் இல்லாத, வெற்றுப் பசப்பல் இல்லாத, போர்க்குணம் குறையாத, ஒரு போதும் அடி பணியாத போரணி ஒன்று தேவை. அப்போரணிக்கு முதலும் கடைசியு மான தகுதி இந்திய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு மட்டுமே.

நமது விடுதலைப் பயணத்தில் சுமைகளைக் குறைத்துக் கொள்வோம். தாங்க முடியாத பண்பாட்டுச் சுமைகள் கனக்கின்ற தோள்களில் எளிமையும் வலிமையும் பொருந்திய நவீனத்தேச உருவாக்க முயற்சிகளை தமிழ்த்தேச அரசியலாக ஏந்திக் கொள்வோம். இந்தியாவிற்கு பேரழிவு தரத்தக்க அந்த அரசியல் நம்மிடம் இருக்கின்றதா என்பதை திரும்பத் திரும்பச் சரிபார்த்துக் கொள்வோம்.

புண்ணுக்குப் புனுகு பூசுகிற சமாதானங்கள் எல்லாம் காலம் கடந்தவையாகட்டும். நாம் அடிமைகள், நாம் அடிமைகள் திரும்பவும் சொல்வோம் நாம் இந்தியாவின் அடிமைகள். அதுவே நவீனத் தமிழ்த் தேசத்தின் எழுச்சிக்கான உணர்தலாக அமையட்டும்.

பழம் பேரினப் பெருமிதங்களை ஒரு கனவைப் போலக் கலைத்து சாதி மத பெண்ணடிமை இழிவுகளை ஒடுக்கு முறைகளை சவக்குழிக்கு அனுப்பி வைக்கும் ஒரு நவீனத் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழும் வேட்கை தீயாய்க் கிளம்பட்டும். நவீனத்தமிழ்த் தேசம் நிகழ்காலத் தமிழக மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கானது என்பதை உணர்ந்து முன்னேறுவோம்.

Pin It