இஸ்ரேலின் ஆக்கிரமிப்புச் சிறைச் சாலைகளில் பாலஸ்தீன ஆண் - பெண் கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணித்து வருகிறோம் என்கிற பெயரில் அவர்களை மன - உடல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்.

இச்சிறையிலுள்ள பெண் கைதிகளிடம் மொபைல் போன் இருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த வாரம் அத்துமீறி நடந்திருக்கிறது இஸ்ரேலியப் படை.

சோதனை என்ற பெயரில் நான்கு பாலஸ்தீனப் பெண்கள் தனித்தனியே நிர்வாணப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சோதனையின்போது 10 பெண் காவலர்களும், 5 ஆண் காவலர்களும், இஸ்ரேலியப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையினரும் இருந்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகளுக்கு முரணாக நாங்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம் எனக் குமுறியுள்ள பெண் கைதிகள். அவர்களை சோதனையிட்டபின், தொழுகைக்கு அணியும் ஆடைகள் மட்டும் அணிவிக்கப்பட்டு அங்கிருந்த இன்னொரு விசாரணை அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, ஆக்கிரமிப்புச் சிறைக் காவலர்களால் மீண்டும் இன்ச் பை இன்ச்சாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

சுமார் ஆறு மணி நேரம் எடுத் துக் கொண்டு, நான்கு பெண் கைதிகளையும் சோதனையிட்டும் அவர்களிடமிருந்து மொபைல் போனோ, வேறு பொருளோ கிடைக்கவில்லை.

பாலஸ்தீன ஆண்களைப் போலவே பாலஸ்தீனப் பெண்கள் இஸ்ரேலியப் படையினரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இவர்களை மனரீதியாக பலவீனப்படுத்த இதுபோன்ற உடலியல் துன்புறுத்தல்களை அரங்கேற்றி வருகிறது இஸ்ரேலிய இராணுவம்.

நான்கு பாலஸ்தீனப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் துன்புறுத்தல்கள் காட்டுமிரண்டித்தனமாகும். மனித உரிமைகளை இஸ்ரேலிய இராணுவம் பின்பற்றவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளது அஹ்ரார் என்ற அரசு சாரா அமைப்பு.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பாலஸ்தீன ஆண், பெண் சிறுவர், சிறுமியர் என வயது வித்தியாசமின்றி பலர் அடைக்கப்பட்டுள்ளனர். அடிப்படையற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலும், விசாரணைக்கு அழைத்துச் செல்லாமலும் நீண்ட காலமாக சிறைச்சாலையில் அடைத்து வைத்து அவமானப்படுத்தியும், சித்திரவதை செய்தும் வருகிறது இஸ்ரேலியப் படை.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இந்த சித்திரவதைகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு மனித உரிமை மீறலையாவது தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தலையங்கம் எழுதுகின்றன அரபுலக ஏடுகள்.

- ஹிதாயா

Pin It