சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டில், மனித உரிமைகளை சிறப்பாகப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகிறோம் என்று, நவம்பர் 10ம் தேதி மாலை 7.00 மணியளவில், ஐ.நா மனித உரிமை மன்றத்தில் (Human Rights Council) நடைபெறும் உலகளாவிய காலமுறை மீளாய்விற்காக முன்கூட்டிய சமர்பிக்கப்பட்ட இந்திய அரசின் அறிக்கையின் தொடக்க வரியில் குறிப்பிடுகிறது. ஆம்,இந்தியாவில் தலைத்தோங்குவதாக சொல்லப்படும் மனித உரிமையின் நிலை, உண்மையா, பொய்யா என்பது நடைபெற உள்ள உலகளாவிய மீளாய்வுக் கூட்டத்தில் (UPR) வெளிப்படுமா?
ஐ.நா + மனித உரிமை
மனிதகுல வரலாற்றில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, சொல்ல முடியா துயரங்களோடு முடிவிற்கு வந்ததுதான் இரண்டாம் உலகப்போர். இதன்பின்பு நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை அமைதியான முறையில் பேசித் தீர்ப்பதற்காக 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஐ.நா சபை. உலக அளவில் மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் 1948ம் ஆண்டு ஐ.நா மன்றம் மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது.
மனித உரிமைகளைப் பாதுகாக்க, வளர்த்தெடுக்க பல நடவடிக்கைகளை ஐ.நா எடுத்து வருகிறது. குறிப்பாக "பாரிஸ் கொள்கையின்" (Paris principles) அடிப்படையில், ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியனாவில் 1993ம் ஆண்டு நடைபெற்ற உலகளாவிய மனித உரிமை இரண்டாவது மாநாட்டில், மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் செயல்படும் நாடுகளோடுதான் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் வர்த்த உடன்படிக்கை வைத்துக் கொள்ளும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் அடிப்படையில்தான் 1994ம் ஆண்டு முன்தேதியிட்டு இந்தியாவில் மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. சட்டத்தை நடைமுறைப்படுத்தவே பல்வேறு மனித உரிமை ஆணையங்களும் உருவாக்கப்பட்டன.
உலகளாவிய காலமுறை மீளாய்வு (Universal Periodic Review)
நாடுகளால் உருவாக்கப்பட்டது தான் ஐ.நா சபை. தற்போது 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தங்கள் நாடுகளில் நிலவும் மனித உரிமை நிலை குறித்து அடுத்தவர்கள் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, உறுப்பு நாடுகளுகிடையே மீளாய்வு (Reviw) செய்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் உலகளாவிய காலமுறை மீளாய்வு பணிக்குழு.
ஐ.நா சபையில் உள்ள மனித உரிமைக் கவுன்சிலில், நான்கரை ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகளாவிய காலமுறை மீளாய்வு நடைபெறும். இந்தியாவிற்கு முதல் உலகளாவிய காலமுறை மீளாய்வு 2008 ஆம் ஆண்டு நடைபெற்று. அதன்பின் 2012, 2017, தற்போது (கொரோனா காரணத்தால் ஐந்து ஆண்டு கடந்து) நவம்பர் 10ம் தேதி மாலை 7.00 மணியளவில் நான்காவது உலகளாவிய காலமுறை மீளாய்வு நடைபெற்று உள்ளது.
அறிக்கை தயாரித்தல்
உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் நாடுகளில் நிலவும் மனித உரிமை நிலை குறித்து அரசு சார்பில் அறிக்கை தயாரிக்கும். இதேபோல் மனித உரிமை பற்றி அறிவும் திறனும் பெற்ற வல்லுனர் குழுக்கள், இத்துடன் ஐக்கிய நாட்டவையின் சிறப்பு நடைமுறைகள், மனித உரிமைகள் உடன்படிக்கை அமைப்புகள், ஐக்கிய நாட்டவையின் பிற அமைப்புகள் உலக சுகாதார மையம் (WHO) ஐ.நாவின் சிறுவர் நிதியம் (UNICEF) போன்ற அமைப்புகள் அறிக்கை தயாரிக்கும். தேசிய மனித உரிமை அமைப்புகள் இத்துடன் சிவில் சமூக அமைப்புகள் அறிக்கை தயாரிக்கும். இப்படி தயாரிக்கப்படும் அறிக்கைகள் மீளாய்வு நடைபெறுவதற்கு முன்பாகவே மனித உரிமைக் கவுன்சிலில் சமர்பிக்கப்பட வேண்டும். உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து மனித உரிமைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும், சக நாடுகளின் காணப்படும் மனித உரிமைகளின் உண்மை நிலையை முழுமையாகக் கண்டறிந்து முறையாக ஆய்வு செய்கின்றன.
மனித உரிமைக் கவுன்சிலில் செயல்படும் உயர்மட்ட ஆணையகம் அறிக்கைகளை ஒன்றாகத் தொகுக்கும். இப்படி தொகுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் முதல் 40 நிமிடங்களில் இந்தியா தனது நாட்டில் நிலவும் மனித உரிமை நிலை குறித்து பதிவு செய்யும். இதன் பின்புதான் உலக நாடுகளும் பரிந்துரைகளை முன்வைக்கும். குறிப்பாக, இதுவரை இந்தியாவிற்குப் பரிந்துரை சொல்ல 132 நாடுகள் முன்பதிவு செய்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாடும் 54 நொடிகளில் மூன்று பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.
திரையிடல் (Screening)
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகளாவிய காலமுறை மீளாய்வில், உறுப்பு நாடுகளால் கொடுக்கப்பட்ட 152 பரிந்துரைகளுக்கு இந்தியா எடுத்துக் கொண்ட முயற்சிகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து தற்போது இந்தியா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால் நடைபெற உள்ள நான்காவது உலகளாவிய காலமுறை மீளாய்வின்போது, இந்தியாவில் நிலவும் மனித உரிமை நிலையின் தரத்தை அறிய மக்கள் பார்வையிடல் மூலம் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும் உறுப்பு நாடுகள் முன்வைக்கும் பரிந்துரைகள், இந்தியாவுடனான வர்த்தக தேவைக்காகவா அல்லது மனித உரிமையின் மீதான அக்கறையா என்கிற சர்வதேச அரசியலும் மக்களுக்கு புலப்படும்.
ஒரு நாட்டின் மனித உரிமை நிலை குறித்து விவாதத்தில் பங்கேற்கவும், அரசு, தேசிய மனித உரிமை நிறுவனங்களுக்கு இணையான பங்கேற்பாளராக சிவில் சமூகத்தை உள்ளடக்கி இருப்பதை, உலகளாவிய காலமுறை மீளாய்வின் தனித்துவ சிறப்பு அம்சத்தை கடைசி மனிதனும் அறிய வைக்க நேரலை திரையிடலை அதிகரிப்போம்.
- இ.ஆசீர், மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு